தேர்தலை நடத்தினால் IMF நிபந்தனைகளை செயற்படுத்த முடியாது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அத்தோடு மீண்டும் அத்தியாவசிய சேவை விநியோக கட்டமைப்பில் நெருக்கடி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்படும் என கூறினார்.

நாட்டில் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் என்ற ரீதியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முதுகெலும்பு இருந்தால் பதவிகளை துறந்து பொதுத்தேர்தலுக்கு இடமளியுங்கள் – கர்தினால்

அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்து புதிய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று தெரிவித்துள்ளார்.

“இன்று நாட்டை ஆள்பவர்கள் தேசம் கவலைகொள்ளும் ஒரு பரிதாபமான நிலையை உருவாக்கியுள்ளனர். எனவே அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் முதுகெலும்பு இருந்தால் பதவியை இராஜினாமா செய்து ஒரு புதிய நிர்வாகத்தை மக்கள் தெரிவு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்” என்று கர்தினால் ரஞ்சித் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும், நீதித்துறையின் அதிகாரத்தை இழிவுபடுத்துவதில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்தினால் கேட்டுக் கொண்டார்.

“உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. உயர் நீதிமன்றம் மார்ச் 3, 2023 அன்று வழங்கிய தீர்ப்பு ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தை சமமாக கட்டுப்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. எனவே, அவர்கள் எடுத்த முடிவை உண்மையாக பின்பற்ற வேண்டும். இல்லையேல் அவர்கள் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து ஜனநாயகத்தின் அடிப்படையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவார்கள்” என்று கர்தினால் கூறினார்.

“உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியதாக செய்திகள் வெளியாகின. பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவை நீதிமன்றத்தால் தங்கள் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகக் கூறினர். இந்த விடயம் மிகுந்த அக்கறையுடன் பார்க்கப்பட வேண்டியதாகும். இரண்டு எம்.பி.க்களின் இந்தக் கோரிக்கை உயர் நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் சுதந்திரத்துக்குப் பொருந்தாதது மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீதித்துறை சுதந்திரம் பேணப்படுவதை உறுதி செய்ய இந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்“ என்றார்.

உள்ளூராட்சித் தேர்தல் இலங்கைக்கு தற்போது அவசியம் – அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie Chung) தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட சம்மேளனத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

நிமல் புஞ்சிஹேவா மீண்டும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு விண்ணப்பம்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான விண்ணப்பம் அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தற்போதைய தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டம் தொடர்பாக தாம் உள்ளிட்ட தற்போதைய ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட பல சட்டமூலங்களை நிறைவேற்றும் நடவடிக்கைக்காக குறித்த விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிமல் புஞ்சிஹேவா நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.

அத்துடன், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு மீண்டும் விண்ணப்பிக்குமாறு பல சிவில் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்திருந்தார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அங்கத்துவத்திற்காகவும் தாம் விண்ணப்பித்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டிருந்தார்.

Posted in Uncategorized

நிதி அமைச்சு பதிலளிக்காமையால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்படவில்லை

இதுவரை நிதி கிடைக்காத காரணத்தினால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 07 இலட்சம் தபால் மூல வாக்குச்சீட்டுகளில் 75 வீத வாக்குச்சீட்டுகளே இதுவரை அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை உரிய முறையில் வழங்குமாறு கோரி நிதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த நிதி உரிய நேரத்தில் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர், வாக்குச்சீட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்க முடியாது எனவும் அரச அச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உரிய நேரத்தில் நிதி கிடைத்தால் 30 நாட்களுக்குள் வாக்குச்சீட்டுகள் முழுவதையும் அச்சடித்து வழங்க முடியும் என அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாக்குச்சீட்டு அச்சிடும் சரியான திகதியை 03 நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கும் பட்சத்திலேயே, பாதுகாப்பினை வழங்க முடியும் என அரச அச்சகத்திற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் 533 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அரச அச்சகம் கூறியுள்ளது.

எனினும், 40 மில்லியன் ரூபாவே இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் அவசியம்: ஸ்ரிவ் ஹங் வலியுறுத்தல்

நீண்ட கால கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு இலங்கையில் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

வளர்ச்சியடையும்  சந்தைகளில் நாணய கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருபவரும், ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Johns Hopkins University) பிரயோக பொருளியல் பேராசிரியருமான ஸ்ரிவ் ஹங் (Steve Hanke) சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான விதிமுறைகள் மாற்றப்படாத பட்சத்தில், அந்த நிறுவனங்கள் நீண்ட காலமாக ஒரே நிலையிலேயே காணப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் உயர்மட்ட அதிகாரத்தில் பதவி வகிக்கப்பவர்கள், நீண்ட காலமாக ஒரே நிலையில் இருப்பதால் எந்தவொரு விடயத்திலும் மாற்றம் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகனின் பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்டுள்ள ஸ்ரிவ் ஹங் (Steve Hanke), சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இலங்கைக்கு நீண்ட கால அடிப்படையில் உதவியாக இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை 1965 ஆம் ஆண்டு முதல் 16  தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுள்ள போதிலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தற்காலிக உதவியாக இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் அவை பயனளிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்கள் இலங்கை மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை எனவும் பேராசிரியர்  ஸ்ரிவ் ஹங் (Steve Hanke) குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சிறைத்தண்டனை: மிரட்டும் ஐ.தே.க தேசியப்பட்டியல் உறுப்பினர்

அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் (1979 ஆம் ஆண்டு இலக்கம் 61) குற்றமிழைக்கும் ஒவ்வொரு நபரின் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்து, விசாரணையின் மூலம் தண்டிக்கப்பட்ட ஒரு நபருக்கு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் கடூழிய சிறைத்தண்டனை அல்லது 2000 ரூபாய்க்குக் குறையாத ஐயாயிரம் ரூபாவுக்கு மிகாத அபராதம் அல்லது சிறைத்தண்டனை மற்றும் அந்த அபராதம் ஆகிய இரண்டும் விதிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

குறித்த குற்றத்தை செய்பவர் பணிபுரியும் உரிமையை இழக்க நேரிடும் எனவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரிவு 6 மற்றும் 7ஐ மேற்கோள் காட்டி வஜிர அபேவர்தன குறிப்பிடுகையில், “இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்திற்காக ஒரு நபருக்கு எதிராக ஒரு குற்றவியல் வழக்கு தொடங்கப்பட்டால், அவர் ஒரு தொழிற்சங்கத்தால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தத்தை மேற்கொள்வதில் அவர் இணைந்தார் என்பது ஒரு மன்னிப்பிற்கான காரணமாக அமையாது” என்றார்.

தொழிற்சங்க சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை எதுவாக இருந்தாலும், அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் விதிகளுக்கும் அத்தகைய பிற எழுதப்பட்ட சட்டத்தின் விதிகளுக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு அல்லது பிற முரண்பாடுகள் ஏற்பட்டால், அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் விதிகள் மேலோங்கும் என தெரிவித்தார்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டுள்ளதாக வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

வர்த்தமானி அறிவிப்பில் கையொப்பமிட்டு, ஜனாதிபதி பொது போக்குவரத்து சேவைகளை பயணிகள் அல்லது பொருட்கள், இறக்குதல், வண்டி, இறக்குதல், சேமிப்பு, விநியோகம் மற்றும் உணவு மற்றும் குளிர்பான பொருட்கள் அல்லது நிலக்கரி, எண்ணெய், எரிபொருளை எந்தவொரு துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து அகற்றுவதற்கு பொது போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாறியுள்ளதாக அபேவர்தன குறிப்பிட்டார்.

சுங்கச் சட்டத்தின் நோக்கங்களுக்காக சாலை, பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் இரயில்கள், வான்வழி போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அத்தியாவசிய சேவைகளாக வரையறுக்கப்பட்டுள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வஜிர அபேவர்த்தன மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார். எனினும், ரணில் விக்கிரமசிங்கவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமானதை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினராகினார்.

தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளிற்கும் தீர்வு காணப்படும் வரை போராடுவோம்: யாழில் வசந்த முதலிகே

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்குமாகிய விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இதன் பொழுது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முன்னிலைபடுத்திய போராட்டம் மற்றும் எதிர்காலத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என்று கோரிக்கை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சின என்பது தனியே எரிவாயு அடுப்பு,மின்சாரம் என்பனவற்றுக்குள் எமது கோரிக்கைகள் உள்ளடங்கவில்லை மாறாக பயங்கரவாத தடைச் சட்டம் என்பதும் எமது தமிழ்மக்களின் பிரச்சினைகளில் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. வசந்த முதலிகே ஆறுமாத காலம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பின்னர்தான் இது குறித்து ஆழமாக நீங்கள் பார்க்கின்றீர்கள் ஆனால் எமது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் காணாமலாக்கப்பட்டும் சுட்டுபடுகொலையும் செய்யபட்டுள்ளார்கள். ஆக போராட்டம் என்பது எமக்கு புதிதல்ல குட்டிமணி தங்கதுரை பயங்கரவாத தடைச் சட்டம் சிங்களவருக்கும் எதிராக திசைமாறும் போது சிங்களவர்கள் புரிவார்கள் என்று அன்று கூறியது இன்று நிச்சயமாகியுள்ளது.

ஆக எமது பிரச்சினைகளை தெற்கிற்கு கொண்டு சென்று இனி போராட்டங்களின் போது இதனை முன்னிலைபடுத்துகின்ற பொழுது எமது நிலைப்பாடுகள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான உறுவுநிலைகளை ஆரோக்கியமாக்கும் என தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் எமது தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பல்கலைக்கழக மாணவர்களிடையே தெளிவுபடுத்தல்களை மேற்கொள்வதற்கும்சிங்கள நகரங்களில் சிங்கள மக்கள் மத்தியில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எதிர்காலத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அனைத்தா பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்து புரிதலை ஏற்படுத்தவேண்டும் எனவும் இதே நிலையில் இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு யுத்தமே பொருளாதார நெருக்கடிக்கு காரணமா எனவினவிய பொழுது அது பிரதான காரணியாக தாம் ஆமோதிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த எமது பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையை தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து புரிதலை ஏற்படுத்தும் செயற்திட்டத்தை வரவேற்கின்றோம் இதே நேரம் முறைமையான கலந்துரையாடல் ஒன்றை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக எடுத்து அதன் பின்னர் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அபிலாசைகளை அடிப்படை பிரச்சிகனைகளுக்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குரல் கொடுக்கின்ற பொழுது அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று எனவும் மாணவர்களுக்கூடாகவே நாட்டின் பிரச்சினைகளை தீர்கமுடியும் அந்த அடிப்படையில் சிங்கள மாணவர்களின் லெளிவுபடுத்தலுக்காக பின்வரும் விடயமும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு கையளிக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக கடந்த 70 வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடினர். தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தினை பயங்கரவாதமாக தெற்கில் சிங்கள மக்களிடத்திலும், சர்வதேசத்தின் மத்தியிலும் சித்தரித்த சிறிலங்கா அரசானது இலட்சக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்து, கொடுங்கோல் அடக்குமுறை இராணுவத்தினால் தமிழர் தாயகம் எங்கும் ஆக்கிரமித்து உள்ளனர்.

இலங்கைத் தீவு பிரித்தானியாவின் காலனித்துவத்திலிருந்து விடுதலை அடைந்த காலம் முதல், ஈழத் தமிழர்களாகிய நாங்கள் எமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி சாத்வீக முறை போராட்டங்களை மேற்கொண்டு வந்தோம். இப்போராட்டங்கள் வன்முறையினூடாக அடக்கப்பட்டதினால், ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம். தமிழ் மக்களின் தேசிய ஆயுதப் போராட்டம் சிறிலங்கா பேரினவாத அரசினால் கொடுங்கரம் கொண்டு மிகப்பெரும் மனிதப் பேரழிப்பினூடாக முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது. இந்த இறுதியுத்தத்தின் போது இறுதி ஆறு மாதங்களில் மட்டும் எழுபதினாயிரத்துக்கு (70,000) மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டதை ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக்குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையில் தெரிவித்துள்ளார். கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது (ITJP), தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” கையாளப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட “பாலியல் வன்முறை முகாங்கள்” பற்றிய விபரங்களை ஐ.நா விடம் கையளித்தது. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் 2013 சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, தமிழர் தாயகத்தில் 90,000 க்கும் மேற்பட்ட யுத்தமூல விதவைகள் உள்ளனர். இவ்வாறு நீண்ட நெடிய காலமாக இனவழிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் எமதினதிற்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது.

யுத்தம் நிறைவடைந்து கடந்த பதினொரு ஆண்டுகளில் வடக்கு-கிழக்கை இராணுவ மயமாக்கிவரும் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசார, பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு-கிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி, தமிழ்த் தேசியத்தைச் சிதைவடையச் செய்து, அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நிலவள திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை சிறிலங்கா அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது. வடக்கு-கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் ஆலயங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறன. அத்துடன் தமிழர் தாயகம் எங்கிலும் பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டும், தொடர்ந்தும் அமைக்கப்படுவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இன்று பொருளாதார பிரச்சனையாலும், சிறிலங்கா அரசின் அடக்குமுறையாலும் பாதிக்கப்பட்டுள்ள தென்பகுதி சிங்கள தரப்பினர், தற்போது வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அணுகத்தொடங்கி உள்ளார். அவ்வாறு அணுகும் எந்த தரப்பினரும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையின் அடிப்படைகளை புரிந்துகொள்ளவதுடன் பின்வரும் விடயங்களில் தமது உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும்.

1. வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் தனித்துவமான மொழி, மதம், கலாச்சார அடையாளங்களை கொண்ட தனித்துவமான தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. ஒன்றிணைத்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய மரபுவழி தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

3. தமிழினம் தன்னாட்சிக்கு உரித்துடையவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4. தேசிய இனத்துக்குரிய சுயநிர்ணயம், தமிழினமும் உரித்துடையது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், அதன்வழி தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையும் அவர்களுக்குண்டு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

5. தமிழினம் தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்க, சர்வதேசத்தினால் நடாத்தி கண்காணிக்கப்படும் சர்வஜன வாக்கெடுப்பினுடாக சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

6. தமிழினத்தின் மீது காலகாலமாக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு, இனப்டுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி பொறிமுறையினுடாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

7. தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் உடனடியாக வெளியேற்றப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

8. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழரின் நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

9. சிறிலங்கா அரசியல் அமைப்பின் 6ம் திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசையை வெளிப்படுத்தும் அரசியல் வெளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

10. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, நீண்டகாலம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுவிக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்படி விடையங்கள் தீர்க்கமான வெளிப்படுத்தலை வெளியிடும் இடத்தேதான் இனப்பிரச்சனைக்கு நிரந்திர தீர்வையும் அதன்வழி பொருளாதார பிரச்சனைக்கு ஓர் தீர்வையும் எட்ட முடியும்.

இதன் பொழுது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார்,யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ஜெல்சின் ,திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் றிபாத், தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் திலான்,ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அசான்,ஜெயவர்த்தனபுர,கொழும்பு,இணைப்பாளர் பிரசாந், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்தள விமான நிலையத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான நிலையத்தையும் வெளிநாட்டு முதலீட்டாளரிடம் கையளிக்க முன்மொழிவுகள் கோரப்படுவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

விமான நிலையத்தின் நிர்வாக விவகாரங்களை முதலீட்டாளரிடம் எவ்வாறு ஒப்படைப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகள் 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

மின்சாரசபையை விற்பனை செய்ய முயன்றால் தொழிற்சங்க நடவடிக்கை

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் சாக்குப்போக்கில் இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கவோ அல்லது விற்பனை செய்யவோ நடவடிக்கை எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு பல நிறுவனங்கள் உதவி வழங்க முன்வந்துள்ளதாகவும், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்னேற்றம் குறித்து பல தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID மற்றும் JICA ஆகியவை இந்த செயல்முறைக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்து தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கூறினார்.

இதற்கான வழிமுறைகள் மற்றும் காலக்கெடு விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

இறுதிச் சட்டத்திற்கு முன்னர் அமுல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்கள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.