தேர்தலுக்கு மதிப்பளித்து முக்கிய அபிவிருத்திகளை மக்கள் மயப்படுத்துவதை பின்தள்ளியுள்ளோம் – தவிசாளர் நிரோஷ்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் கடந்த காலப்பகுதியில் எம்மால் அடிக்கல்லிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட  பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றுக்கு தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளித்து தற்போது திறப்பு விழாக்களை நடத்த முடியாதுள்ள போதும் அத்திட்டங்கள் பின்னரான திகதியில் மக்கள் மயப்படுத்தப்படும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி- கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்தூரில் 15 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட மீன்சந்தைக் கட்டுமாணம் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு திறந்துவைக்கப்படும் நிலையில் உள்ளது. இதற்கு மேலதிகமாக அங்கு 20 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு மரக்கறிச்சந்தை மற்றும் இறைச்சிக்கடைத் தொகுதிக்கான ஆரம்ப கட்ட பணிகள் இடம்பெறுகின்றன.

அதுபோன்று  நீர்வேலியில் வலிகாமம் கிழக்கிற்கான பொது சிறுவர் பூங்காவிற்குரிய வேலைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. நீர்வேலி கந்தசாமி தேவஸ்தானத்தினால் வழங்கப்பட்ட நிலத்தில் கட்டுமாணப்பணிகள் 3.4 மில்லியன்களில் பணிகளை தற்போது பூர்த்தி செய்துள்ளோம். அப் பூங்காவிற்குரிய  விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவுக்கான நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மேலும், பிரதேச சபையின் கோப்பாய் உப அலுவலகத்திற்காக 7 மில்லியனில் சபை நிதியில் எம்மால் கொள்வனவு செய்யப்பட்ட காணி கட்டிடத்தில் 7 மில்லியன்களுக்கு மேலதிகமாக செலவிடப்பட்டு மேலதிக அலுவல வசதிப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

ஏற்கனவே அச்சுவேலி சந்தையில் மரக்கறிச்சந்தை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிலையில் தற்போது 9 மில்லியன்கள் செலவில் அமைக்கப்பட்ட மீன்சந்தைக் கட்டுமானமும் வேலைகளும் பூர்த்தி நிலையினை அடைந்துள்ளன.

மேற்படி திட்டங்கள் யாவும் வலிகாமம் கிழக்குப் பிரதேச மக்களின் வரிப்பணம், சோலைவரி, தண்டப்பணம், சர்வதேச மானிய உதவிகள் என பல்வேறுபட்ட நிதி மூலங்களில்  மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளாகும்.  இவற்றை நாம் தேர்தல்களின் பின் கடந்த 13 ஆம் திகதி மக்கள் மயப்படுத்த சபையில் தீர்மானித்திருந்தோம்.

அதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளையும் பெற்றிருந்தோம். எனினும் தேர்தல்கள் கடந்த 9 ஆம் திகதி நடைபெறாது மீளவும் ஒத்திவைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியமையினால் தேர்தல் ஒழுங்குகளுக்கு அமைய திட்டங்களை மக்கள் மயப்படுத்தவில்லை. எனவே பின்னரான திகதி ஒன்றில் மேற்படி திட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்படும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க உதவுமாறு மாகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவையும் மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களையும்  குறைத்து, சமூகத்தில் நிலவும் அமைதியின்மையை சீர்செய்ய கொள்கை ரீதியான உரிய பொறிமுறையை தயாரிக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

மகாநாயக்க தேரர்கள் கூட்டாக இந்த விடயத்தை வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன், ஜனாதிபதிக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொண்டு, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை குறைத்து மக்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்கு மக்கள் நேய கொள்கையினை நடைமுறைப்படுத்த  அரசாங்கம் உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமிக்க  தருணத்தில் நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் தங்களின் கடமைகளை பொறுப்புணர்ந்து  நிறைவேற்ற  வேண்டும் என்பதை வலுவாக நம்புவதாக மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதென்பது  சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் ஊடாக மக்களின் இறைமையை உறுதிப்படுத்துவதாகும் என வலியுறுத்தியுள்ள மகாநாயக்கத் தேர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய முறையில் நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Posted in Uncategorized

வாக்குசீட்டு அச்சிட பணம் கோரி அரச அச்சகம் மீண்டும் திறைசேரிக்கு கடிதம்

தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்காக பணம் வழங்குமாறு கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதாக அரச அச்சகம் அறிவித்துள்ளது.

திறைசேரியின் நடவடிக்கை  பிரிவிற்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்தார்.

அந்த கடிதத்தின் பிரதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.

அச்சு நடவடிக்கைகளுக்கான பணத்தை பெற்றுத்தருமாறு கோரி இதற்கு முன்னர் நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய போதிலும், அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அரச அச்சகர் தெரிவித்தார்.

தொழிற்சங்க நடவடிக்கை நாளை காலையுடன் நிறைவு

தங்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதால், நாளை (16) காலை 8 மணியுடன் தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்யவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது.

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இதனை குறிப்பிட்டது.

ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் தமது தொழிற்சங்க கூட்டமைப்பிலுள்ள அனைத்து சங்கங்களுடனும் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் டொக்டர் வாசன் இரத்னசிங்கம் குறிப்பிட்டார்.

மாகாண கல்வி அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் இருந்து மீட்டெடுக்கும் போராட்டம் தொடரும் – கலாநிதி சர்வேஸ்வரன்

மாகாண பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் எண்ணத்திலிருந்து அரசாங்கம் சற்று பின்வாங்கியுள்ள நிலையில் முழுமையாக அத்திட்டத்தினை கைவிடும் வரை நீதிமன்ற சட்டப் போராட்டம் தொடரும் என முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (12.03.2023) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட கல்வி அதிகாரங்களைச் சட்ட விரோதமான முறையில் மத்திய அரசாங்கம் பறித்ததுக்கு எதிராக நான் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்குத் தொடுத்தேன்.

இலங்கை அரசியல் அமைப்பில் வழங்கப்பட்ட 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளின் பல அதிகாரங்களை மத்திய அரசாங்கம் சட்ட விரோதமான முறையில் பறித்துள்ளது. கல்வி, விவசாயம், சுகாதாரம் ஆகிய துறைகள் சார்ந்து மாகாணத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் மாகாண நியதி சட்டங்களையும் மீறும் வகையில் பல விடயங்களை மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

குறிப்பாக மாகாண கல்வி அமைச்சை எடுத்துக் கொண்டால் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் தேசிய பாடசாலைகள் ஆயுதப் படைகளின் பிள்ளைகள் கற்கும் பாடசாலைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மாகாண பாடசாலைகளாக வரையறுக்கப்பட்டது.

வடக்கு கல்வி அமைச்சில் 19 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக இருந்த நிலையில் மாகாண கல்வி அமைச்சின் கீழே இருந்த மூன்று பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டு 22 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டது.

கடந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் இலங்கையில் ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் திட்டத்தின் கீழ் வடக்கில் 51 பாடசாலைகளைத் தேசிய பாடசாலையாக்கும் முயற்சிகள் இடம்பெற்றது.

மாகாண பாடசாலைகளைப் பறிக்கும் முயற்சிக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தின்பால் பயணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உரிய அக்கறை காட்டாத நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தேன்.

கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அரச தரப்பு சார்ந்து 16 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டது . வழகானது கடந்த 8 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சகலருக்கும் நீதிமன்றம் ஆணை அனுப்பியது.

இந்த சூழ்நிலையில், அரசாங்கம் தேசிய பாடசாலைகளாக்கும் வேலைத் திட்டத்தினை சற்று பின்வாங்கியதாக தெரியவரும் நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் அதனை ஒப்புக் கொள்ளும் வரை சட்டப் போராட்டம் தொடரும்.

ஆகவே, வழக்கின் முடிவுகள் ஏதுவாக இருந்தாலும் மாகாண அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பறித்தல் ,தமக்கு ஏற்ற வகையில் வியாக்கியானம் செய்தல், சில நிர்வாக நடைமுறைகள் ஊடாக பறித்தல் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் தகுந்த பதிலை வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இந்துக்களின் புனித பாறையை இடிக்க அரசாங்கம் அனுமதி

வன்னியில் வாழும் இந்துக்களால் வழிபடப்பட்ட பாறையை இடித்தழிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாறையில் (சிறிய மலை) வெளிநபர் ஒருவருக்குக் கருங்கல் அகழ்விற்குப் பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாகப் பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாறையில் முன்னெடுக்கப்படவுள்ள கருங்கல் அகழ்வை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள கிராம மக்கள், இந்த மலை பல ஆண்டுகளாக மத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனர்.

அந்தப் பாறையின் உச்சியில் அப்பகுதி மக்கள் ஆதிகாலம் முதலே பிள்ளையாரை வழிபட்டு வருவதாகப் பிராந்திய ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடைக்குப் பின்னர் கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பாறையின் உச்சியில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு வவுனியா பிரதேச செயலாளர் ஞா.கமலதாசன் மற்றும் பிரதேச சபைத் தலைவர் த.யோகராஜா ஆகியோர் மார்ச் 8ஆம் திகதி அவ்விடத்திற்கான கண்காணிப்பு பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த இடத்தில் பழங்காலத்திலிருந்தே வழிபட்டு வந்த கல் தூண் தற்போது இல்லாமல் போயுள்ளதாகவும், எனினும் அண்மையில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாறை ஒரு வழிபாட்டுத்தலம் என்பதை அறிந்த பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்களம் மற்றும் சுற்றாடல் அதிகார சபையுடன் கலந்துரையாடி இது தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பிரதேச வாசிகளுக்கு அறிவிப்பதாக உறுதியளித்ததாகப் பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அதிகாரசபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு திணைக்களங்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளைப் பலவந்தமாகக் கையகப்படுத்துவதாகத் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இதுவரைக்காலமும் பறிமுதல் செய்யப்பட்ட 102 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்குள் இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது மூன்றாவது தடவையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

இதுபோன்று இடம்பெறும் சம்பவங்கள் ஏழை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கிறது என்றும் அவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்திய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்துகின்றபோதும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரச வருமானங்கள் அதிகரிப்பின் மக்களுக்கு மானியங்கள் – பந்துல குணவர்தன

வரி சீர்திருத்தங்களினால் அரச வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் மானியங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அரச ஊழியர்களில் நூற்றுக்கு 10 வீதமானவர்கள் மாத்திரமே புதிய வரிசீர்த்திருத்தத்திற்கு உள்வாங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

புதிய வரிச்சீர்த்திருத்தத்தில் அரசாங்கத்திற்கு வருமானம் அதிகரித்தால், அனைத்து அரச ஊழியர்களுக்கும் மானியம் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாகர்கோவில் பகுதியில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் பெண்கள் சிறுவர்கள் மீது தடியடி

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது.

துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டு , அப்பகுதிகளில் துப்பாக்கி சன்னங்களின் வெற்றுக்கோதுகள் காணப்படுகின்ற போதிலும் , பொலிஸார் தாம் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என தெரிவித்துள்ளனர்.

அவ்வாறாயின் யார் துப்பாக்கி சூடு நடத்தியது எனவும் ? பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினரை விட வேறு நபர்களிடம் துப்பாக்கி உள்ளனவா என்ற சந்தேகம் எழுத்துள்ளதாகவும் , அதனால் தாம் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அதேவேளை அப்பகுதியில் உள்ள முருக மூர்த்தி ஆலய சப்பர கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டதில் , கொட்டகை முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாகர்கோவில் பகுதியில் மயானம் ஒன்றினை சுற்றி மதில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற இருந்தது.

அந்நிலையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) , மதில் கட்டுவது தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு , மதில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த புலம்பெயர்ந்து வாழும் நபர் ஒருவர் மீது ஊரில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விசாரணைக்காக சென்ற பொலிஸ் குழுவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அது பின்னர் கைக்கலப்பாக மாறியுள்ளது.

அதன் போது பொலிஸார் பெண்கள் சிறுவர்கள் என பேதம் பார்க்காமல் அனைவரும் மீதும் கடுமையான தடியடி மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் போது துப்பாக்கி சூடுகளும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் தாம் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என பொலிஸ் தரப்பு மறுத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மயான மதில் அமைப்பதில் முரண்பட்ட தரப்பினரை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் அழைத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்துங்கள்: மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகள் கூட்டாக வலியுறுத்தல்!

உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகான தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் விபரம் வருமாறு-

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், பொதுமக்களின் துன்பங்களைக் குறைக்கவும், சமூக அமைதியின்மையைப் போக்க முறையான கொள்கைப் பொறிமுறையைத் தயாரிக்கவும். <br>

நாட்டில் நிலவும் கடுமையான, பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரமற்ற தன்மையைப் போக்கி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மகா சங்கம் என்ற வகையில் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவ்வாறாயினும், பொருளாதாரச் சுருக்கம், பணவீக்கம், மோசமான அரசாங்க நிர்வாகம், தற்போதைய உயர் மின் கட்டணங்கள், தண்ணீர்க் கட்டணம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுப்படியாகாத அதிகரிப்பு போன்றவற்றால் எழுந்துள்ள சமூக அழுத்தத்தையும் ஜனாதிபதி அறிந்திருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.

வளர்ந்து வரும் பொருளாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும், மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் ஜனரஞ்சகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் அனைத்து தரப்பினரும் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் புரிந்து கொண்டு நாட்டை பொருளாதார ரீதியாக ஸ்திரப்படுத்துவதற்கு உழைக்க வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதற்காக கடந்த காலகட்டம் முழுவதிலும் தொடர்ச்சியான நடைமுறை நிலையான கொள்கைகளை முன்வைக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். கட்சி அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் நலன் கருதி தேசிய கொள்கைகளின் அடிப்படையில் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மக்கள்தொகை வீழ்ச்சியுடன் ஏற்படும் சமூகச் சிதைவு மற்றும் அராஜகம் பற்றி இலக்கிய குடதந்த சூத்திரம் மற்றும் சக்கவட்டி சிஹானதா சூத்திரம் போன்ற பௌத்த சூத்திரங்களில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் பொதுமக்கள் மீது சுமத்தாமல், பொது நிதியை முறையாக நிர்வகிப்பது, ஊழல் மற்றும் பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது, மக்கள் பிரதிநிதிகள் அனுபவிக்கும் வரம்பற்ற சலுகைகளை அகற்றுவது போன்ற நடைமுறைத் தீர்வுகளின் மூலம் பொதுமக்களின் துன்பத்தைக் குறைக்க அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மேலும், உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது பொதுமக்களிடையே சற்று கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் மூலம் மக்களின் இறையாண்மையை உறுதிப்படுத்துவது என்பது ஜனநாயகத் தலைவராக அங்கீகரிக்கப்பட்ட உங்களுக்கும் நன்றாகத் தெரியும்.

எனவே, உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவது அரசின் பொறுப்பு.

‘நாட்டில் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக மக்கள் நடத்தும் போராட்டங்கள் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறுதியற்ற தன்மையை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படக்கூடாது.

மேலும், நாட்டின் சட்ட எல்லைகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை பொதுமக்களுக்கு இருக்க வேண்டும்.

எனவே, அரசாங்கம் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி, சட்டத்தின் மேலாதிக்கத்தைப் பெற்று மக்களின் வாழ்க்கையை படிப்படியாக மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.