மலையகத்திற்கான வீட்டு திட்டத்தினை மீள செயற்படுத்த உடன்படிக்கை கைச்சாத்து

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில்  ஒரு வீட்டுக்கு 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு சுமார் 28 லட்சம் ரூபாய் அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 4 ஆயிரம் தனி வீட்டு திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக, அந்த திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகளை புதிய மதிப்பீட்டு விலையின்கீழ் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை இன்று (திங்கட்கிழமை) கைச்சாத்திடப்பட்டது.

இதற்கான நிகழ்வு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் இந்திய உயர்ஸ்தானிகர் இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

“2020 ஆம் ஆண்டில் நான் இராஜாங்க அமைச்சராக பதவியேற்கும்போது இந்தியாவின் 4 ஆயிரம் வீட்டு திட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்தது. 699 வீடுகளே முழுமைப்படுத்தப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

சுமார் 2 ஆயிரம் வீடுகளில் மின்சாரம், நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கவில்லை. அவற்றை முழுமைப்படுத்தி பயனாளிகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன்.

இதற்கிடையில் கொரோனா அதன்பின்னர் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இந்திய வீட்டு திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இக்கால கட்டத்தில் 3 ஆயிரம் ரூபாய் வரை சீமெந்து விலை அதிகரிக்கப்பட்டது. அன்று ஒரு வீட்டுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் 28 லட்சம் ரூபாய் அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விலையின்கீழ் எஞ்சியுள்ள வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இது முழுமைப்படுத்தப்பட்ட பின்னர் 10 ஆயிரம் வீட்டு திட்டமும் வெகுவிரைவில் அமுல்படுத்தப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தேவைக்காக எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு தமது நிறுவனம் தயாராக இருப்பதாக சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்காக, தற்போதுள்ள முறைமைக்கு அமைவாக தமது நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்த குறித்த நிறுவன்த்தின் பிரதிநிதிகள், அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ள  ஹம்பாந்தோட்டையில் பிரதான வலுசக்தி மையத்தை, சுத்திகரிப்பு நிலையத்துடன், நிர்மாணிக்கத் தேவையான முழு முதலீட்டையும் தமது நிறுவனம் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் நாட்டின் அபிலாஷைகளின் அடிப்படையில் உரிய அழைப்புகளுக்குப் பங்கேற்க தமது நிறுவனம் தயாராக இருப்பதாகவும் பிரதிநிதிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விநியோகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள், அது குறித்து தமது ஆலோசனைகளையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் பின்னர், இலங்கை துரித அபிவிருத்தியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வர்த்தகங்களை எதிர்காலத்தில் ஊக்குவிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது கற்பனை கதை

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதை என சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்று முடிவு செய்யவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மக்கள் கொந்தளிப்பை சமாளிக்கவும், மக்களை ஏமாற்றவும் இந்த கட்டுக்கதை பயப்படுவதாக கூறியுள்ளார்.

அத்தோடு நாடு அபிவிருத்தி அடைந்து வருகின்றது என்றும் தற்போதைய அரசாங்கத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் கூட கட்டுக்கதைகள் பயப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய வங்கி முடிவுகளை எடுப்பதில்லை என்றும் இதிலும் அரசாங்கத்தின் உந்துதல் காணப்படுவதாகவும் சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணம் போதுமானதா? என பரிசீலிக்க கோரிக்கை

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணம் போதுமானதா என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலிக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இந்த நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேர்தல் முக்கியமா? மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

காற்றாலை திட்டத்தினை 160MW ஆல் அதிகரிக்க அதானி குழுமம் கோரிக்கை

இலங்கையில் 340 மெகாவட் காற்றாலை மின் திட்டங்களை தொடங்க அனுமதி பெற்றுள்ள அதானி குழுமம், அதன் திறனை 500 மெகாவட்டாக உயர்த்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த முன்மொழிவு குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

அத்தோடு அனுராதபுரத்தில் இருந்து மதுரை வரை செல்லக்கூடிய மின்சாரம் கடத்தும் பாதை திட்டம் ஒன்றை நிர்மாணிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

இலங்கையில் குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது என்றும் அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

தேர்தலை நடத்தினால் IMF நிபந்தனைகளை செயற்படுத்த முடியாது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அத்தோடு மீண்டும் அத்தியாவசிய சேவை விநியோக கட்டமைப்பில் நெருக்கடி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்படும் என கூறினார்.

நாட்டில் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் என்ற ரீதியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முதுகெலும்பு இருந்தால் பதவிகளை துறந்து பொதுத்தேர்தலுக்கு இடமளியுங்கள் – கர்தினால்

அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்து புதிய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று தெரிவித்துள்ளார்.

“இன்று நாட்டை ஆள்பவர்கள் தேசம் கவலைகொள்ளும் ஒரு பரிதாபமான நிலையை உருவாக்கியுள்ளனர். எனவே அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் முதுகெலும்பு இருந்தால் பதவியை இராஜினாமா செய்து ஒரு புதிய நிர்வாகத்தை மக்கள் தெரிவு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்” என்று கர்தினால் ரஞ்சித் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும், நீதித்துறையின் அதிகாரத்தை இழிவுபடுத்துவதில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்தினால் கேட்டுக் கொண்டார்.

“உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. உயர் நீதிமன்றம் மார்ச் 3, 2023 அன்று வழங்கிய தீர்ப்பு ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தை சமமாக கட்டுப்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. எனவே, அவர்கள் எடுத்த முடிவை உண்மையாக பின்பற்ற வேண்டும். இல்லையேல் அவர்கள் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து ஜனநாயகத்தின் அடிப்படையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவார்கள்” என்று கர்தினால் கூறினார்.

“உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியதாக செய்திகள் வெளியாகின. பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவை நீதிமன்றத்தால் தங்கள் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகக் கூறினர். இந்த விடயம் மிகுந்த அக்கறையுடன் பார்க்கப்பட வேண்டியதாகும். இரண்டு எம்.பி.க்களின் இந்தக் கோரிக்கை உயர் நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் சுதந்திரத்துக்குப் பொருந்தாதது மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீதித்துறை சுதந்திரம் பேணப்படுவதை உறுதி செய்ய இந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்“ என்றார்.

உள்ளூராட்சித் தேர்தல் இலங்கைக்கு தற்போது அவசியம் – அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie Chung) தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட சம்மேளனத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

நிமல் புஞ்சிஹேவா மீண்டும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு விண்ணப்பம்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான விண்ணப்பம் அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தற்போதைய தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டம் தொடர்பாக தாம் உள்ளிட்ட தற்போதைய ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட பல சட்டமூலங்களை நிறைவேற்றும் நடவடிக்கைக்காக குறித்த விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிமல் புஞ்சிஹேவா நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.

அத்துடன், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு மீண்டும் விண்ணப்பிக்குமாறு பல சிவில் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்திருந்தார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அங்கத்துவத்திற்காகவும் தாம் விண்ணப்பித்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டிருந்தார்.

நிதி அமைச்சு பதிலளிக்காமையால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்படவில்லை

இதுவரை நிதி கிடைக்காத காரணத்தினால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 07 இலட்சம் தபால் மூல வாக்குச்சீட்டுகளில் 75 வீத வாக்குச்சீட்டுகளே இதுவரை அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை உரிய முறையில் வழங்குமாறு கோரி நிதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த நிதி உரிய நேரத்தில் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர், வாக்குச்சீட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்க முடியாது எனவும் அரச அச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உரிய நேரத்தில் நிதி கிடைத்தால் 30 நாட்களுக்குள் வாக்குச்சீட்டுகள் முழுவதையும் அச்சடித்து வழங்க முடியும் என அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாக்குச்சீட்டு அச்சிடும் சரியான திகதியை 03 நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கும் பட்சத்திலேயே, பாதுகாப்பினை வழங்க முடியும் என அரச அச்சகத்திற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் 533 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அரச அச்சகம் கூறியுள்ளது.

எனினும், 40 மில்லியன் ரூபாவே இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized