நேற்று பௌத்த பிக்குகள் எரித்தது 13ஐ அல்ல, ஒட்டுமொத்த நாட்டை எரித்துள்ளார்கள்

நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் எரித்தது 13வது திருத்தத்தை அல்ல, அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையே எரிக்கின்றார்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதியின் நேற்றைய அக்கிராசன உரை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒட்டுமொத்தமான ஜனாதிபதியின் அக்கிராசன உரையிலே அதிகாரங்களைப் பரவலாக்கி புறையோடிப்போயுள்ள இந்த இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வைக்காண வேண்டும் என்ற அடிப்படையில் அவர் உரையாற்றி இருந்தாலும், பொலிஸ் அதிகாரமற்ற அதிகாரப் பரவலாக்கல், ஒற்றையாட்சிக்குள்ளே அதிகாரப் பரவலாக்கல் என்பதை எங்களால் எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கையின் 75வது சுதந்திர தினம் இந்த வாரம் கொண்டாடப்பட்டிருக்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்ததோ என்னவோ ஆனால் தமிழ் மக்களுக்கான சுதந்திரம் இல்லாமலே இருக்கின்றோம். ஒரு சொட்டு இரத்தமும் சிந்தாமல் சுதந்திரம் அடைந்தது இந்த நாடு. சுதந்திரம் அடைந்த போது இந்த நாட்டின் பொருளாதாரம் ஜப்பானின் பொருளாதாரத்திற்கு நிகராக இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் தற்போது பொருளாதார ரீதியிலே ஜப்பான் எங்கிருக்கின்றது, இலங்கை எங்கிருக்கின்றது என்பதை நாங்கள் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

இந்தியாவைப் பொருத்தமட்டில் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் போரடி சுதந்திரம் அடைந்த போது பாகிஸ்தான், பங்காளதேசம் போன்றன ஒன்றாகவே இருந்தன. பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்தாலும் பாகிஸ்தானை விட அதிகமான முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்வது மாத்திரமல்லாமல் அவர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், வளமாகவும் கூட இருந்து கொண்டிருக்கின்றார்கள். அங்கெல்லாம் முஸ்லீம்கள் வாழும் பிரசேங்களிலே இந்துக் கோயில்களோ இந்துக்கள் வாழும் பிரதேசங்களிலே பள்ளிவாசல்களோ அடாத்தாகவோ பலாத்காரமாக அமைக்கப்படுவதில்லை.

ஆனால், இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ் மக்கள் தமிழ் பேசும் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கை சுதந்திரமடைந்த 1948ல் இருந்து முப்பது ஆண்டுகள் தமிழ் மக்கள் அகிம்சை ரீதியாகவும், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆயுத ரீதியாகவும் போராடி வந்திருக்கின்றார்கள். 1949ம் ஆண்டு இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா கிழக்கு மாகாணத்தைக் கபளீகரம் செய்வதற்காகவும், அங்குள்ள தமிழ், தமிழ் பேசும் மக்களை சிறுபான்மையினராக மாற்றுவதற்குமான வேலைத்திட்டத்தை கல்லோயாக் குடியேற்றம் மூலம் ஆரம்பித்தார்.

1921ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெறுமனே 0.5 வீதம் சிங்கள மக்கள் வாழ்ந்த வரலாறு இருக்கும் போது இன்று 24 வீதமாக அவர்கள் உயர்ந்திருக்கின்றார்கள் என்றால் கல்லோய தொடக்கம், சேருவில, கந்தளாய் வரை குடியேற்றங்களை ஆரம்பித்தது மாத்திரமல்லாமல், அம்பாறை, சேருவில போன்ற தனித் தேர்தல் தெகுதிகளையும் உருவாக்கி இன்று 24 வீதமாக மாற்றியிருக்கின்றீர்கள்.

1956ம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்தீர்கள், ஸ்ரீ யைக் கொண்டு வந்தீர்கள். அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ பிரச்சனைகள் இங்கு நடந்து வந்திருக்கின்றன. 1958, 1978, 1983 ஆகிய ஆண்டுகளிலே பாரிய இனக்கலவரங்களை உண்டுபண்ணியது மாத்திரமல்லாமல் 1983ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் மூலமாக தெற்கிலிருந்து வடகிழக்கிற்குக் கூடத் தமிழர்கள் செல்லமுடியாமல் கடல்வழியாக அனுப்பிய வரலாறுகளும் இருக்கின்றன. அதுமாத்திரமல்லாமல் வெலிகடை வெஞ்சிறையில் 53 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். தமிழ் ஆயுதப் போராட்டத்தை முதல் முதலில் தொடக்கிய தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களான குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் மிகவும் கொடூரமாகக் கொல்லப்பட்டர்கள்.

குட்டிமணி அவர்கள் நீதிமன்றத்திலே உரையாற்றும் போது எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்படுகின்றது. அந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால் நான் ஒரு குட்டிமணி இறப்பேன். ஆனால் அதன் பின் ஆயிரம் ஆயிரம் குட்டிமணிகள் இந்த நாட்டிலே வடகிழக்கிலே உருவாகுவார்கள். அவர்கள் மூலமாக தமிழீழம் மலரும். மலரும் தமிழீழத்தை எனது கண்களால் நான் பார்க்க வேண்டும். எனவே என்னுடைய கண்களை ஒரு பார்வையற்ற தமிழனுக்கு வழங்க வேண்டும் என்று கூறியதற்காக அவரைக் கொன்றதோடு மாத்திரமல்லாமல், அவரது கண்களைத் தோண்டி சப்பாத்துக் கால்களில் மிதித்த வரலாறுகள் கூட இருக்கின்றது.

1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்தே ஆயுதப்போராட்டம் வீறுகொண்டதை அனைவரும் அறிவோம்;. வடகிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தார்கள். மிகவும் உக்கிரமாக இந்த நாட்டிலே போர் நடந்த வரலாறுகள் இருக்கின்றன. 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் எற்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் நாங்கள் தனி ஈழம்பெற்றிருப்போம், தனிநாடு மலர்ந்திருக்கும் என்று இன்றும் தமிழர்கள் கூறுகின்றார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமாக ஏற்பட்ட 13வது திருத்தச் சட்டம் அரசியலமைப்பில் ஒரு அங்கமாக இருக்கும் போது அந்த அரசியலமைப்பை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் நிறைவேற்றாமல் இருப்பதென்பது அரசாங்கமே அரசியலமைப்பை மீறுவதாகவே அமையும்.

எனக்கு முன் உரையாற்றிய உதயகம்மன்பில அவர்கள் 13வது திருத்தத்தின் பின்னர் இந்த நாட்டை 7 ஜனாதிபதிகள் ஆட்சி செய்திருந்தார்கள் யாருமே பொலிஸ் அதிகாரத்தை அமுலாக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதிலிருந்து நீங்களே அரசியலமைப்பை மீறிக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதே தெளிவாகின்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உரையாற்றும் போது இந்த நாடு பௌத்த நாடு பௌத்த பிக்குகளை எதிர்த்துக் கொண்டு எதனையும் செய்ய முடியது அவர்களைப் பகைத்துக் கொண்டு இந்த நாட்டிலே ஒரு தீர்வைத் தர முடியாது என்ற கோணத்திலே உரையாற்றியிருந்தார்.

நான் அவருக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் 2015ல் அவரை ஜனாதிபதி ஆக்கியது சிறுபான்மை மக்கள். ஆனால் இன்று அந்த மக்களது கருத்தைக் கூட கருத்தில் எடுக்காமல் அவர் இந்த உரையை ஆற்றியிருப்பதையிட்டு அவர் குறித்தும், அவருக்காக வடகிழக்கு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டேன் என்ற அடிப்படையிலும் நான் வெட்கப்படுகின்றேன்.

ஆயுதப் போராட்டம் ஏற்பட்டதன் காரணாகவே 13வது திருத்தச் சட்டம் உருவானது 13வது திருத்தம் என்பது தமிழ் மக்களுடைய ஒரு அரசியற் தீர்வல்ல. தமிழ் மக்களின் அரசியற் தீர்வுக்கு இதனை ஒரு ஆரம்பப் புள்ளியாகவே கருதுகின்றோம். எனவே எங்களுக்குத் தேவை மீளப்பெறமுடியாத ஒரு சமஸ்டி என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். ஏனெனில் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களையே மீளப்பெற்ற வரலாறுகளே இருக்கின்றன.

நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் 13வது திருத்தத்தை எரிக்கின்றார்கள். நீங்கள் எரித்தது 13வது திருத்தத்தை அல்ல, ஒட்டுமொத்த நாட்டையே எரிக்;கின்றீர்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். பண்டா செல்வா ஒப்பந்தம் ஏற்பட்ட போது கொழும்பில் இருந்து கண்டிக்கு யாத்திரை சென்றது எதற்காக? அன்று அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்றால் இந்த நாடு அழிவுப் பாதைக்குச் சென்றிருக்காது என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

முறையற்ற வரி விதிப்பிற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகள், பல்கலைக்கழகங்கள், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

முறையற்ற வரி விதிப்பினூடாக அரசாங்கம் பொதுமக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளமைக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்ட தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40-க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து  எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இதற்கு இணையாக அரச, தனியார் துறை வைத்தியர்கள் 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒரு பிரிவான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகவும் வாகன போக்குவரத்திற்கு  தடை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதனிடையே, புதிய வரிக்கொள்கைக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள், கொழும்பு கோட்டை மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் கொழும்பு கோட்டையின் பல்வேறு வீதிகளில் முன்னெடுக்கப்படுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு அமைவாக அமைதியான போராட்டங்கள் மற்றும் பேரணியினை முன்னெடுக்க முடியும் என கோட்டை நீதவான் திலின கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் யாராவது செயற்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைய செயற்படுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பின் பல்வேறு வீதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்ட பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பௌத்தாலோக மாவத்தை, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, தேர்ஸ்டன் வீதி, ஏனர்ஸ்ட் டி சில்வா மாவத்தை உள்ளிட்ட வீதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவானிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை நிராகரித்த கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ், பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய செயற்படுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அநீதியான வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பினால் நாட்டின் பல வைத்தியசாலைகளின் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

கொழும்பு – ஹைட்பார்க்கில் பிரதான எதிர்ப்பு நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றது.

அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மொட்டுக்கு முரண்பாடு அல்ல – மஹிந்த ராஜபக்ஷ

ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கொள்கை பிரகடன உரையாற்றிய போது, ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூறினார்.

இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் மஹிந்தவிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

கோட்டாபயவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் 3 மணிநேர வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபாய் பணம் தொடர்பிலேயே இதன்போது வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானிலுள்ள இல்லத்திற்குச் சென்று வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விசேட அபிவிருத்தித் திட்டம்

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “காங்கேசந்துறை துறைமுகம் நவீனமயப்படுத்தப்படும். விரிவாக்கப்படும். திருகோணமலையை நவீன சர்வதேச நகரமாக அபிவிருத்தி செய்யப்படும்.

மோதல்களுக்கு அகப்பட்டு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்னடைந்த கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

நேரடி வரிகளை அதிகரித்து வரிச்சுமையை குறைக்க முடியும்; ஜனாதிபதி ரணில்

நேரடி வரிகளை அதிகரிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வரிச்சுமையை குறைக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது ஆற்றிக்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலை தொடர்ந்தால் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடியும் எனவும், இந்த ஆண்டு இறுதியில் வட்டி விகிதங்களை குறைக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் தான் பிரபலமடைவதற்காக இந்த பதவியை பெறவில்லை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீள கட்டியெழுப்ப செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்காக இந்த வருட இறுதிக்குள் பணவீக்க வீதத்தை ஒற்றை இலக்கமாக குறைக்கும் இலக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத தீர்மானம் என்றாலும் நாட்டைக் கட்டியெழுப்ப அத்தகைய தீர்மானங்களை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பலன்களை எதிர்வரும் 2-3 ஆண்டுகளில் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு – ஜனாதிபதி

ஒற்றையாட்சி முறைக்குள் அதிகப்பட்ச அதிகாரங்களோடு பல காலமாக இருக்கும் இனப் பிரசினைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இருப்பினும் பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் துரிதமாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்ட விதிகள் மற்றும் சட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை

புதிய சட்ட விதிகள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘புதிய சட்ட விதிகள் மற்றும் சட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

  • பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுச் சட்டம்
  • ஆண் பெண் பாலின சமத்துவ சட்டம்
  • பெண்களை வலுவூட்டும் சட்டம்
  • சிறுவர் பாதுகாப்பு சட்டம்
  • இளைஞர் நாடாளுமன்ற மறுசீரமைப்புச் சட்டம்
  • போதைப்பொருள் தடுப்பு கட்டளையிடும் தலைமையக சட்டம்
  • உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு
  • பயங்கரவாத தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம்
  • தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பிரசித்த நாட்டிய கட்டுப்பாட்டுச் சட்டம் இல்லாதொழிக்கப்படும். அரசியலமைப்பில் உள்ள கருத்து தெரிவிக்கும் உரிமையினை அடிப்படையாகக் கொண்டு கலைப் படைப்புக்களை வகைப்படுத்தும் சட்டம் தயாரிக்கப்படும்.

எமது நாடு காலநிலை மாற்றங்களுக்கு உட்படும் வலயத்தில் அமைந்துள்ளது. ஆகவே தான் நாம் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். அது தொடர்பில் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டால் எமக்கு பசுமை ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகிறது.

அவை அனைத்தையும் கவனத்திற் கொண்டு நாம் இந்த சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

  • காலநிலை மாற்றச் சட்டம்
  • சமூக நீதிக்காக ஆணைக்குழுச் சட்டம்
  • மீள் காடு வளர்ப்பு மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டம்
  • உயிரோட்ட முறைமை சட்டம் – மகாவலி கங்கை, சிங்கராஜ வனம், சிவனொலிபாத பிரதேசம் மற்றும், வனச் சிகரம்
  • ஹோட்டன் சமவெளி, நக்கில்ஸ், ஆதமின் பாலம் ஆகியன இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
  • கடல் வள ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவ சட்டம்.
  • முத்துராஜவெல பாதுகாப்புச் சட்டம்.

பொருளாதாரம் தொடர்பாகவும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அரச செலவு முகாமைத்துவத்துக்காக ஸீரோ பட்ஜட் அல்லது பூச்சியத்தை அடிப்படையாக கொண்ட வரவு செலவுச் செயன்முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.

  • வருமான அதிகாரச் சட்டம்
  • வெளிநாட்டு கடன் முகாமைத்துவச் சட்டம்
  • உணவுப் பாதுகாப்புச் சட்டம்
  • அரச சொத்து முகாமைத்துவச் சட்டம்
  • பொருளாதார ஸ்திரத்தன்மை சட்டம்
  • தேசிய ஓய்வூதிய பங்களிப்புச் சட்டம்
  • புதிய மதுவரிச் சட்டம்
  • அந்நிய செலாவணிச் சட்ட திருத்தம்
  • புன்வத் சட்டம்
  • வெளிநாட்டு வியாபார மற்றும் முதலீட்டு சட்டம்
  • டிஜிட்டல் தொழில்நுட்ப சட்டம்
  • கறுவா அபிவிருத்தி திணைக்களச் சட்டம்
  • பரஸ்பர இணக்கப்பாட்டின் கீழான விவாகரத்துச் சட்டம்

இவ்வாறான பொருளாதார சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை வெற்றியடையச் செய்ய வேண்டுமாயின் சரியான விடையங்களின் அடிப்படையில் மக்களுக்கு அறிவூட்டுதல் ஓர் அத்தியாவசியமான விடயமாக காணப்படுகிறது. “ எனத் தெரிவித்துள்ளார்

ரணிலின் கொள்கை விளக்க உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வினை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் டளஸ் அழகப்பெரும தலைமையிலான தரப்பினரும் விமல் வீரவன்ச தரப்பினரும் இந்த நிகழ்வை புறக்கணித்திருந்தனர்.

இதேவேளை இன்றைய சம்பிரதாய நிகழ்வில் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் கலந்துகொள்ளவில்லை.

இருப்பினும் சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

13 ஐ அமுல்படுத்த வேண்டாம் – தீவிர தேசியவாத பௌத்த பிக்குகள் போராட்டம்

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் தீர்மானத்திற்கு எதிராக பிக்குகளினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பௌத்த பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தீவிர தேசியவாத பௌத்த மதகுருமார்களின் குழுவினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பெளத்த தேரர்களின் பங்கேற்போடு இடம்பெற்ற இந்த பேரணியானது நாடாளுமன்ற வீதியை செல்லும்போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதையை பொலிஸார் மறித்ததையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த போராட்டத்தின் போது 13வது அரசியலமைப்பு திருத்த பிரதியை பிக்குக்கள் தீ வைத்து எரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.