இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும் – இந்திய அமைச்சர் எல்.முருகன்

அபிவிருத்திக் குறிக்கோளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும். அயல் நாட்டுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் தெரிவித்தார்.

இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்.கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (11) சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ். கலாசார மத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. இந்நிலையமானது மக்கள் மத்தியில் கலை , கலாசார வளர்ச்சியில் பெரும் பங்கினை வகிக்கும். எனது இந்த விஜயத்தின் போது இலங்கை மக்கள் மீதான இந்தியாவின் பரந்துபட்ட அர்ப்பணிப்பை மாகாணங்களில் தெளிவாக அவதானிக்க முடிந்தது. துரையப்பா மைதானம் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய புனர்நிர்மாணம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘அயல் நாட்டுக்கு முதலிடம்’ கொள்கையின் கீழ் இலங்கை முக்கியத்துவம் பெறுவது இயற்கையானது. ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்ற திருக்குறளுக்கமைய நட்பு நாடாக இந்தியா கடந்த 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 4 பில்லியன் டொலர் கடன் உள்ளிட்ட ஏனைய உதவிகளை வழங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதார முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுத்து மூலமாக நிதி உத்தரவாதத்தை வழங்கிய முதல் நாடு இந்தியா என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். கொவிட் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளிலும் இந்தியா அதன் உதவிகளை முன்னின்று வழங்கியுள்ளது. இவ்வழியாக இரு நாட்டு தலைமைகளினதும் வழிகாட்டலில் எமது ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்துவோம் என்று உறுதியளிக்கின்றேன்.

யாழ் – சென்னை நேரடி விமான சேவை இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக பரிமாற்றங்களை விரைவுபடுத்தும். அது வர்த்தகம் மாத்திரமின்றி சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இது உந்துகோலாக அமையும். அதேபோன்று உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் உட்பட இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவையை புதுப்பிக்கவும் நாம் பணியாற்றி வருகின்றோம். இது எம்மிரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி பொருளாதார, கலாசார ஈடுபாடுகளை ஆழப்படுத்தும் என்பதை உறுதியாக நம்புகின்றோம்.

அபிவிருத்தி குறிக்கோளுடன் இலங்கையும் பயணித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய அபிவிருத்தி பயணத்தில் இந்தியா தனது நட்பு நாடுகளை குறிப்பாக இலங்கையையும் அரவணைத்து முன்னேற்றிச் செல்லும் என்று உறுதியளிக்கின்றோம். இவ்வளர்ச்சி இரு நாடுகளுக்குமானதாக மாத்திரமின்றி மக்களுக்கானதாகவும் இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் சிகிச்சை பயணின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளானதில், தலைக் கவசம் கழன்றமையினால் தலையில் பலத்த காயத்திற்கு இலக்காகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

இந்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை திருக்கேதீச்சரத்தில் வழிபாடு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நேற்று புதன்கிழமை (9) வருகை தந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் இன்றைய தினம் வியாழக்கிழமை (10) காலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற் கொண்டனர்.

இன்று காலை 11 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தனர்.

இதன் போது இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோருடன் யாழ்ப்பாண – இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெய பாஸ்கர் ஆ கலந்து கொண்டார்.

இதன் போது விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதோடு, இந்திய அரசின் நிதி உதவியுடன் முன் னெடுக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டதோடு, ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து மன்னாரில் இடம் பெற்ற இலங்கை – இந்தியா நட்புறவு நாடுகளின் தூதரக ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம்.ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உள்ள குறைபாடுகளை பரிசீலித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க இடமளிக்கப்போவதில்லை – அத்துரலிய ரத்ன தேரர்

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க இடமளிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராகி வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்டே வடக்கு, கிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக்களை கூறுகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் எந்த வகையிலும் அவ்வாறான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தேர்தலை திட்டமிட்டபடி முன்னெடுக்க நீதிமன்றம் பணிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அண்மையில், ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் இந்த தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

“நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தப் பயனும் ஏற்படாது” என சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்தலை தடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதிக்காது நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தாக்கல் செய்த மனுக்களும், உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரால் ஒரு மனுவும், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரால் மற்றைய மனுவும் தாக்கல் செய்யப்பட்டன

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு தைரியம் கிடையாது – ஹிருணிகா

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தைரியம் கிடையாது.

நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகவே அவர் தற்போது இவ்விடயம் தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தைரியம் கிடையாது.

13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்ட போது நாட்டில் ஏற்பட்ட கலவரங்களின் போது அமைச்சராகக் காணப்பட்ட இவர் தற்போது இதனைப் பற்றி பேசுவது நகைப்பிற்குரியது.

நாட்டில் தற்போது நிலவும் உண்மையாக பொருளாதார நெருக்கடிகளை திசை திருப்புவதற்காகவே அவர் தற்போது 13 குறித்து பேசிக் கொண்டிருக்கின்றார்.

13க்கு எதிராக வீதிக்கிறங்கி போராடியதைப் போன்று நாட்டின் ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வு கோரியும் போராடுமாறு தலை வணங்களி பௌத்த தேரர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

13 என்பது ஒரு பிரிவினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட பிரச்சினையாகும். எனவே அனைத்து மக்களினதும் பிரச்சினையாகக் காணப்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக போராடுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

13ஆவது திருத்தம் புதிதாகக் கொண்டு வரப்பட்டதல்ல. அது ஏற்கனவே நடைமுறையிலுள்ள திருத்தமாகும். முதலில் இதிலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் பின்னர் 13 பிளஸ் பற்றி கவனம் செலுத்தலாம் என்றார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் ஜனதிபதியும் அழிந்துபோவார் – உதய கம்மன்பில

அதிகார பகிர்வு என்ற தற்கொலை அங்கியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அணிந்துள்ளார். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் ஜனதிபதியும் அழிவார், நாடும் அழிவடையும். அதிகார பகிர்வு என்ற தீ பந்தை ஜனாதிபதி கையில் எடுத்துள்ளார்.

வெகுவிரைவில் பதவி பறிபோகும். நாட்டை இரத்த வெள்ளக்காடாக்கும் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக சர்வகட்சி கூட்டத்தில் கூறியிருந்தார்.

தனது பாராளுமன்ற சிம்மாசன உரையில் இது தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார். சர்வக்கட்சி அரசாங்கத்தில் அன்று சிங்கம் போன்று கூறினாலும் சிம்மாசன உரையின் போது சிறிய கொக்கரிப்பு மட்டுமே இருந்தது.

நாங்கள் மேற்கொண்ட எதிர்ப்புகளை அவர் புரிந்துகொண்டுள்ளார் என்று நாங்கள் கருதுகின்றோம். அதன்படி அவர் புரிந்துகொண்டு தொடர்ந்தும் செயற்பாடுவார் என்று எண்ணுகிறோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் காணி விடயத்தில் அது தொடர்பான ஆணைக்குழுவை அமைப்பதே எஞ்சியுள்ளது.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கை ஒன்றிணைத்த தனியான மாகாண சபையை அமைத்தல் ஆகியனவும் எஞ்சியுள்ளன.

1987 ஆம் ஆண்டில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவசரகால சட்டத்தின் ஊடாகவே வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு நடந்தது.

அந்த சட்டம் நிறைவடைந்ததும் அந்த இணைப்பு செல்லுபடியற்றதாகியது. ஆனாலும் அந்த விடயம் அரசியலமைப்பில் இருக்கும் வரையில் அந்த இரண்டு மாகாணங்களும் ஒன்றிணையும் வாய்ப்பு உள்ளது. இதற்கு இணங்குகின்றீர்களா? என்று ரவூப் ஹக்கீம் போன்றோரை கேட்கின்றேன்.

வடக்கு மற்றும் கிழக்கில் தொல்பொருள் விடயத்தை ஒப்படைப்பதையும் அனுமதிக்க முடியாது. அது நரியிடம் கோழியை ஒப்படைப்பது போன்றது.

இதேவேளை பொலிஸ் அதிகாரங்கள் விடயத்தில் 7 ஜனாதிபதிகள் பதவி வகித்த காலத்திலும் சில காரணங்களுக்காக அந்த அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை.

ஏற்கனவே நாடு கடந்த தமிழ் ஈழம் இருக்கின்றது. நிலப்பரப்பு இல்லாவிட்டாலும் திபேத் போன்று இதனை வைத்திருப்பதற்கு திட்டமிடுகின்றனர்.

அன்று விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு நாடுகள் திருட்டுத் தனமாக ஆயுதங்களை வழங்கியிருந்தன. இவ்வாறான நிலைமையில் வடக்கிற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் மீண்டும் இந்த நாடு இரத்த காடாகும் நிலைமை ஏற்படும்.

எம்மைப் போன்ற சிறிய நாட்டில் 10 பொலிஸ் பிரிவுகளை ஏற்படுத்தினால் நாட்டில் குற்றங்களை கட்டுப்படுத்தவும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் முடியாது போகும்.

அதேபோன்று அதிகார பகிர்வு தொடர்பாக கதைத்துக்கொண்டு சென்றால் இறுதியில் ஜனாதிபதி பதவிக்கே பாதிப்பாக அமையும். அதேபோன்று 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்த எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என்பதனையும் நாங்கள் கூறிக்கொள்கின்றோம்.

நாட்டில் பிரிவினைவாதம் காணப்படும் நிலையில் வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் போராட்டம் தோற்றம் பெறும்.

13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் விக்னேஷ்வரன் போன்ற பிரிவினைவாத கொள்கையுடையவர்கள் வடக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்படலாம்.

வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் இராணுவத்திற்கும், வடக்கு மாகாண பொலிஸ் தரப்பிற்கும் இடையில் முரண்பாடு தோற்றம் பெறும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த்தை முழுமையாக செயற்படுத்த 1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த எந்த அரச தலைவர்களும் அவதானம் செலுத்தவில்லை.

பாரதூர தன்மையை விளங்கிக் கொள்ளாமல் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தால் அவரும் அழிய நேரிடும், அவருடன் சேர்ந்து நாடும் அழிவடையும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2001 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் அதிகார பகிர்வு தொடர்பில் அவதானம் செலுத்தினார்.

பெறுபேறு இரண்டரை வருட காலத்திற்குள் பதவி துறந்தார். 2015 ஆம் ஆண்டும் அதே தன்மை தொடர்ந்தது. அதிகார பகிர்வு என்ற விடயத்தை தோளில் சுமந்ததால் பிரதமர் பதவியை முழுமைப்படுத்தாமல் பதவி விலக நேரிட்டது. ஒரு தவறை தொடர்ந்து தொடர்ந்து செய்தால் அந்த நபரை பைத்தியம் என கருத வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பைத்தியம் பிடித்தால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் அதிகார பகிர்வு என்ற தீ பந்தை ஜனாதிபதி கையில் எடுத்துள்ளார், ஆகவே பதவி விலக நேரிடும். நாட்டை இரத்த வெள்ளக்காடாக்கும் 13 ஆவது திருத்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ல எவரும் முழுமையக நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாது என்றார்.

பிக்குக்களை பகைத்து 13 ஐ முழுமையாக அமுல்படுத்த முடியாது – மைத்திரி சவால்

சமஸ்டி ஆட்சி முறைமையை சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் கடுமையாக எதிர்க்கிறார்கள். சமஸ்டி வெறுப்பை தோற்றுவிக்கும்.

நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். சிங்கள மக்களையும், பௌத்த பிக்குகளையும் பகைத்துக் கொண்டு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாது.

அதற்கான வாய்ப்பு இல்லை. நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலை அடைந்துள்ள போது 13 ஆவது திருத்தம் என்ற இருப்பக்கமும் பற்றி எரியும் பந்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் கையில் எடுத்துள்ளார். என்பதை அறியவில்லை.

13 ஆவது திருத்தத்திற்கு சிங்களவர்கள் இடமளிக்க மாட்டார்கள் என்பதால் 1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் எவரும் 13 ஆவது திருத்தத்திற்கு கைவைக்கவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற யோசனையை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முதலில் முன்வைத்தது.

சகல அரசியல் கட்சிகளை ஒன்றிணைந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் முயற்சியை ஆளும் தரப்பினரே பலவீனப்படுத்தினார்கள், அதனை அனைவரும் நன்கு அறிவார்கள். சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தால் அதற்கு முழுமையாக ஆதரவு வழங்குவோம் என்பதை மீண்டும் குறிப்பிடுகிறோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை உரையில் குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தம் தற்போதைய பிரதான பேசுபொருளாக உள்ளது. 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தம், அரசியலமப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவை ஒன்றுடன் ஒன்றுத் தொடர்புப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் வடக்கு மக்களுக்கு அரசியல் ரீதியில் பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவ சிதம்பரம் 1987 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கைக்கு எதிரான பாரதூரமான விடயங்களை இந்தியாவிடம் குறிப்பிட்டார்.

அதிகார பகிர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு அவர் இந்தியாவிடம் வலியுறுத்தினார்.

சிவ சிதம்பரத்தின் யோசனைகளை செயற்படுத்தியிருந்தால் 1987 ஆம் ஆண்டுக்கு முன்னரே இலங்கையில் யுத்தம் தோற்றம் பெற்றிருக்கும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரம் தொடர்பில் இந்தியா மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தையின் காரணமாக 1987 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன முழு நாட்டிற்கும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டார்.

இக்காலப்பகுதியில் விடுதலை புலிகள் தாக்கம் தீவிரமடையும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் கலவரம் தோற்றம் பெறும் என புலனாய்வு தகவல் கிடைக்கப் பெற்றும் ஜே.ஆர் ஜயவர்தன கடும் அழுத்தத்திற்கு மத்தியில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இக்காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அமர்தலிங்கம் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் மக்களுக்கு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

இலங்கை இவ்வாறான பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டது. இதன் விளைவாகவே பிற்பட்ட காலப்பகுதியில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றன.

சமஷ்டி ஆட்சி முறையில் அதிகார பகிர்வு அவசியம் என  வடக்கு தலைமைகள் குறிப்பிடுகிறார்கள். சமஷ்டிக்கு சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். சமஷ்டி என்றால் வெறுப்புக்கள் தோற்றம் பெறும். 13 பிளஸ் என மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசத்திற்கு குறிப்பிட்ட காரணத்தினால் தற்போது சிக்கல் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

மாகாண சபை தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட போது உயர்நீதிமன்றம் ஒருசில திருத்தங்களை முன்வைத்தது.13 ஆவது திருத்தத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட்டால் நாடு பிளவுப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவ்வாறன பின்னணில் எவ்வாறு 13 ஆவது திருத்தத்ததை முழுமையாக அமுல்படுத்துவது.

1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும், அரச தலைவர்களும் 13 ஆவது திருத்தம் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.

மாகாண சபை நிர்வாக கட்டமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும்.  இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் ஜே.ஆர் ஜயவர்தன மாவட்ட அபிவிருத்தி சபை என்ற யோசனையை கொண்டு வந்தார். தேர்தலும் இடம்பெற்றது, பின்னர் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை இரத்து செய்யப்பட்டது.

நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வு காண வேண்டும். நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் காணப்படும் போது இருபுறமும் பற்றி எரியும் விளக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் கையில் எடுத்துள்ளார் என்பதை அறியவில்லை.

ஜே.ஆர்.ஜயவர்தன 13 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து ஜனாதிபதிகளாக பதவி வகித்த எவரும் 13 ஆவது திருத்தத்தில் கை வைக்க செல்லவில்லை.

எனது ஆட்சி காலத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

சிங்கள பௌத்த மக்களை பகைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியாது, ஆகவே நாட்டின் இன அடிப்படையில் பிளவுப்படாமல்  அனைவரும் வாழ வேண்டும். நாட்டின் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போது 13 ஆவது திருத்தம் ஊடாக பிறிதொரு பிரச்சினை தோற்றம் பெற இடமளிக்க முடியாது.

மாவட்ட அபிவிருத்தி சபை ஸ்தாகிப்பப்பட வேண்டும். உலக நாடுகளில் சமஸ்டி ஆட்சி உள்ள போது இலங்கையில் ஏன் சமஸ்டி ஆட்சி முறைமையை அமுல்படுத்த முடியாது என தமிழ் அரசியல் தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள். பிற நாடுகளை போல் சமஷ்டி ஆட்சியை அமுல்படுத்தும் தன்மை இலங்கையில் தற்போது இல்லை என்றார்.

Posted in Uncategorized

இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குழுவினர் யாழ் வந்தடைந்தனர்

இந்தியாவின் மீன்வள மத்திய இணை அமைச்சர் அடங்கிய குழுவினர் பலாலி சர்வதேச விமானத்தை வந்தடைந்தனர்.

இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசின் உயர்மட்ட குழுவினர் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்திய துணைத் தூதுவர், சிவசேனை அமைப்பின் தலைவர், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டவர்கள் இந்திய குழுவினை மாலை அணிவித்து,பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இந்திய அரசின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் சனிக்கிழமை இந்திய மத்திய இணை அமைச்சர் கலந்து கொள்வார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்வார்.

இந்திய அமைச்சர் குழுவினருக்கு இன்று மதியம் வடக்கு மாகாண ஆளுநர் மதிய விருந்துபசாரமளித்தார்.

அதன் பின்னர் யாழ். பொது நூலகத்தில் இடம்பெறுகின்ற உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்ள உள்ளார்.

அதன் பின்னர் காங்கேசன்துறைக்கு செல்ல உள்ள அமைச்சர் காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

நாளைய தினம் இந்திய அரசின் நிதி பங்களிப்பில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்ல உள்ளதாக இந்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை வெள்ளிக்கிழமை மாலை, கொக்குவில் பொக்ஸ் விடுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிற்கு இந்திய குழுவினர் இரவு விருந்துபசாரமளிக்கின்றனர்.