ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை தடை விதித்தமை தொடர்பில் சீனா கடும் அதிருப்தி

ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை தடைவிதித்துள்ளமை குறித்து சீனா தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனவரி மூன்றாம் திகதி முதல் சீன ஆராய்ச்சிகப்பல்கள் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தடைவிதித்துள்ளமை குறித்தே சீனா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு ஆராய்;ச்சிக்கப்பல்கள் இவ்வாறான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு  இலங்கை ஒருவருடகால தடையை விதித்துள்ளது.

சீனாவின் ஜியாங் யாங் கொங் 3 என்ற ஆராய்ச்சி கப்பல் தென் இந்திய கடற்பரப்பில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையிலேயே இலங்கை இந்த தடையை அறிவித்தது.

குறிப்பிட்ட கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சிற்கு உரியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது அயலில் ஆராய்ச்சிகள் இடம்பெறுவது குறித்த பாதுகாப்புகரிசனையை இந்;தியா வெளியிட்ட நிலையிலேயே இலங்கை இந்த தடையை விதித்திருந்தது.

இந்திய ஊடகங்கள் இதனை சீனாவிற்கு விழுந்த அடி என குறிப்பிட்டிருந்தன .

எனினும் சீன அதிகாரிகள் இலங்கையின் இந்த முடிவால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்,இன்னுமொரு நாட்டின் அழுத்தத்தினால் இலங்கை இவ்வாறான முடிவை எடுத்தமை குறித்து தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் போராட்டம்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கி பயணிக்கும் துச்சக்கர வண்டி பயணம் கடந்த 19ஆம் திகதி பெல்ஜியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக ,பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுடன் இணைந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதித் தீர்வு என்பதை வலியுறுத்தியும் மோசமான காலநிலையினையும் பெருமளவானோர் இப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் அரசியற் சந்திப்பும் நடைபெற்றது.

அச்சந்திப்பில் தாயகத்தில் தொடரும் இனவழிப்புஇஅடக்குமுறை மற்றும் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கான அனைத்துலக நீதி பற்றிய தேவையினையும் எடுத்துக்கூறப்பட்டதோடுஇ எமது நிலைப்பாடு சார்ந்த மனுவும் போராட்டகாரர்களால் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிதிநிகிகளிடம் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து மக்கள் பங்களிப்போடு துச்சக்கர வண்டி பயணம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களுக்காக இந்தியப் பிரதமர் மோடியிடம் தனிநாடு கோரிய மதுரை ஆதீனம்

இலங்கைத் தமிழர்களுக்கு தனிநாடு உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென இந்திய பிரதமரிடம், மதுரை ஆதீனம் நேரில் கோரிக்கை விடுத்தர். நேற்று (27) தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்ட மோடி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்காக சென்ற போது, அவரிடம் மதுரை ஆதீனம் நேரில் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பின்னர் மதுரைக்கு ஹெலிகொப்டர் மூலம் மாலை வந்தார்.

மதுரை வீரபாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளியில் நடைபெற்ற சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டார்.

பின்பு அங்கிருந்து கிளம்பி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தமிழரின் பாரம்பரிய உடையில் வருகை தந்தார்.

கோயிலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது, அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராசன் வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாக மீனாட்சியம்மன் சந்நிதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர், சுந்தரேஸ்வரர் சந்நிதியில் தரிசனம் செய்தார். பொற்றாமரை குளத்தை பார்வையிட்டு வணங்கினார்.

சுவாமி தரிசனம் முடிந்து கோயிலிலிருந்து வாகனத்தில் புறப்பட்டவர் கிழக்கு கோபுர வாசல் அருகே நின்றுகொண்டிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்து கும்பிட்டபடி சென்றார்.

இதனைத்தொடர்ந்து சாலையோரத்தில் நின்ற பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார் பிரதமர். 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த நிலையில் இரண்டாவது முறையாக தரிசனம் செய்துள்ளார்.

இரவு பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கினார். ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன்’ என பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அம்மன் சன்னதி வாசல் வழியாக பிரதமர் மோடி வந்துகொண்டிருந்தபோது அவரை வரவேற்க மதுரை ஆதீனம் நின்றுகொண்டிருந்தார். மடத்தின் முன்பாக பொதுமக்களுடன் மதுரை ஆதீனம் நின்றுகொண்டிருந்தார். பிரதமரின் வாகனம் முன்னே செல்லும் போது அவரால் பாதுகாப்பு கெடுபிடிகளால் முன் செல்ல முடியவில்லை. எனினும் பிரதமர் மோடி அவரை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி மதுரை ஆதீனத்தை அழைத்தார். பிரதமர் அழைத்ததை கவனிக்காத பாதுகாப்பு அதிகாரிகள் அவரை முன் நகரவிடாமல் தொடர்ந்து தடுத்தனர். பின்னர் பிரதமர் மோடி அழைத்ததை சொன்ன பிறகு தான் அனுமதிதனர். காருக்கு அருகில் சென்று பிரதமர் மோடிக்கு, மதுரை ஆதீனம் பொன்னாடை அணிவித்தார். பின்னர், அங்கிருந்து மோடி புறப்பட்டுச் சென்றார்.

இதன் பின்னர் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “பிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கச்சத்தீவு மீட்க வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார். மோடி மீண்டும் பிரதமராக என்னுடைய ஆதரவும், ஆசீர்வாதமும் என்றென்றும் உண்டு” என்றார்.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தாமதமாகி வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள்

விமானங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள் தாமதமாகி வருவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 7 விமானங்களை வாங்குவதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பெறுவதற்கு நிதிப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நேற்று (27) கூறியுள்ளார்.

மேலும், நேற்றைய தினம் 7 விமானங்களில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஆனால் இரத்து செய்யப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

26 ஆம் திகதி மூன்று விமானங்கள் இரத்து செய்யப்படுவதாக பயணிகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 27 விமானங்கள் தேவைப்படும் பட்சத்தில், தற்போது 20 விமானங்கள் மட்டுமே உள்ளதாக விமான நிலைய சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ரணில் ஜனாதிபதி வேட்பாளர் என்பது பொதுஜன பெரமுன கட்சியின் கருத்து அல்ல – நாமல் ராஜபக்ச

எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளைப் பெற்ற தற்போதைய அமைச்சர்கள் குழுவொன்று கருத்து தெரிவித்த போதிலும் அது கட்சியின் கருத்து அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கன்ஹுவரனெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யார் என்ன சொன்னாலும் அடுத்த அதிபர் பொதுஜன பெரமுன தலைமையிலான பரந்த கூட்டணியில் இருந்து பிறப்பார்.

அதிபருடன் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் எமது எம்.பிக்களும், இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிப்பவர்களும் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். மற்றவர்கள் வேறு பெயர்களை வழங்குகிறார்கள்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தமது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைப்பதற்கு தமது கட்சிக்கு சுதந்திரம் உள்ளதாகவும்,

ஏனைய கட்சிகள் இவ்வாறு எதிர் கருத்துக்களை முன்வைத்தால் கட்சி உறுப்புரிமை கூட தடைசெய்யப்படும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதாக எதிர்க்கட்சிகள் கவலைப்பட்டாலும், அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளதாகவும், பிரச்சினை ஏற்பட்டால் சபாநாயகருடன் கலந்துரையாடி முடிவெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை திரும்ப இருந்த நிலையில் சாந்தன் மாரடைப்பால் காலமானார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28) காலை காலமானார்.

கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார்.

இன்று இரவு இலங்கைக்கு அழைத்து செல்லப்படவிருந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டார். இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதையடுத்து உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சாந்தன் மறைவு குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான தேரணி ராஜன் கூறுகையில், “சாந்தன் திருச்சி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சென்னை – ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் செயலிழப்பு காரணமாக அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த துறையின் தலைவரும், மருத்துவருமான பிரேம்குமார் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சித்தோம். அதன் காரணமாக பயாப்சி சோதனை மேற்கொள்ள முயன்றோம். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

கிரிப்டோஜெனிக் சிரோசிஸ் பாதிப்பு காரணமாக சில சமயங்களில் சுயநினைவு குன்றி, இயல்பு நிலைக்கு திரும்புவார். அதன் காரணமாக தீவிர கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு நேற்று இரவு உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. சுயநினைவை இழந்தார். செயற்கை சுவாசம் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்” என்றார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையிலுள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி உருக்கத்துடன் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் அவர் நாடு திரும்ப அண்மையில் மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. அதற்குள் அவரது உயிர் பிரிந்துள்ளது.

தென்னக்கோனின் நியமனத்தை அரசியலமைப்பு சபை ஏற்கவில்லை – சஜித் பிரேமதாச

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சபை (CC) அனுமதி வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“ஆதரவாக நான்கு வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் இருந்தன மேலும் இருவர் வாக்களிக்கவில்லை. தீர்மானத்தை மேற்கொள்ள குறைந்தது 5 வாக்குகளாவது தேவை. வாக்குகள் சமனாக இருந்தால் மட்டுமே சபாநாயகர் வாக்களிக்கலாம். வாக்குகள் சமனாகவும் இல்லை.

எனவே அரசியலமைப்பு இரண்டாவது முறையாக அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.

நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்ய அரசாங்கம் சூழ்ச்சி – ஐக்கிய மக்கள் சக்தி

நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் திட்டமாகும். அதற்கு ஒருபோதும் ஐக்கிய மக்கள் இடமளிக்காது. சர்வசன வாக்கெடுப்பிற்கான அரசாங்கத்தின் சூழ்ச்சியை நாம் தோற்கடிப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளன. தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்பதை அரசாங்கத்துக்கு கூறிக் கொள்கின்றோம். ஜனாதிபதி முறைமையை நீக்குதல் என்று பாரிய பதாதையை காட்சிப்படுத்திக் கொண்டிருப்பதே தற்போது அரசாங்கம் பின்பற்றும் தந்திரமாகும்.

இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றி அதன் பின்னர் சர்வசன வாக்கெடுப்புக்கு செல்வதே அரசாங்கத்தின் திட்டமாகும். இந்த தந்திரத்தின் ஊடாக மேலும் ஒரு வருடத்துக்கு தேர்தலைக் காலம் தாழ்த்துவதே அரசாங்கத்தின் சூழ்ச்சியாகும்.

அதற்கமைய இவ்வருடம் செப்டெம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே இவர்களின் திட்டமாகும். இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை ஒரு நாள் கூட நீடிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரினால் அதனை தோற்கடிப்பதற்கும், சர்வசன வாக்கெடுப்பினை நடத்த முற்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பின்கதவால் ஓடிய போதே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை சூனியமாகிவிட்டது.

எனவே இதனைக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினாலும் எதையும் சாதிக்க முடியாது. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நிறைவேற்றதிகார பிரதமர் முறைமையாக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.

மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட கடற்படையினர் தடை

யாழ்ப்பாணம் – மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்தொழிலாளர்களுக்கு கடற்படையினர் தடை விதித்த நிலையில் , அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , அப்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட கடற்படையினர் அனுமதித்தனர்.

இந்நிலையில் தற்போது அப்பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி , விகாரையின் பின் பகுதிகளில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவித்துள்ளார்.

அத்துடன் அப்பகுதிக்கு அருகில் கடற்தொழிலாளர்கள் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் கடற்படையினர் அவர்களை அவ்விடத்தில் இருந்து துரத்தி வருகின்றனர் என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுஜன பெரமுன கட்சியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நடிகர் உத்திக பிரேமரத்ன அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.