புதிய இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ நியமனம்

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதேவேளை விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்திருந்த நிலையிலேயே தற்போது அந்த இராஜாங்க அமைச்சுப் பதவியை ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் முதுகெலும்பு இருந்தால் தேர்தலில் மக்கள் முன் வாருங்கள்” – சஜித் சவால்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முதுகெலும்பு இருந்தால் தேர்தலை நடத்தி மக்கள் முன் வருமாறு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (30) கொழும்பில் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது;

“இன்று ஒரு வரலாற்று தருணம். இந்த நாட்டை அழித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அகற்றிய மாபெரும் ஜனநாயகப் புரட்சியை ஆரம்பித்தவர்கள் நாங்கள். இப்போது நாட்டை ஆளும் ரணில் ராஜபக்ச அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்க முடியாது. இந்த அரசாங்கம் மக்களைக் கொல்லாமல் மக்களைக் கொன்று மிக மனிதாபிமானமற்ற அழுத்தத்தை மக்கள் மீது செலுத்தி நாட்டில் உள்ள இருநூற்றி இருபது இலட்சம் பேரை பட்டினியில் இடும் கேவலமான அரசாகும்.

உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் வாக்களித்து மக்கள் முன் வாருங்கள் – ஜனாதிபதி ரணிலுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ‘மாற்றத்தை ஏற்படுத்தும் ஓர் ஆண்டு’. அத்துடன் நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு பயப்படவில்லை என்று கூறுகிறோம். இது வெறும் ஆரம்பம் தான். எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம், எங்களுக்கு தேர்தல் வேண்டும். நாங்கள் மக்களின் ஆசியுடன் ஆட்சிக்கு வருகிறோம், தலைகளை மாற்றும் விளையாட்டினாலோ அல்லது முரட்டு ராஜபக்சவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அல்ல. மக்களின் ஆசியால் ஆட்சிக்கு வருகிறோம். இன்று இந்த அரசாங்கம் மக்களை கண்டு அஞ்சுகிறது. இது வெறும் ஆரம்பம் தான். இன்று காலை இந்த அரசாங்கத்தின் குண்டர்கள் சென்று தடை உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் நாங்கள் சட்டத்தை மீறவில்லை. இன்று இந்த இடத்திற்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகளை இந்த அரசாங்கம் அப்பட்டமாக மீறியது.

நான் ரணிலுக்கும் மகிந்தவுக்கும் சொல்கிறேன் உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் முன்வாருங்கள். இந்த நாட்டை வங்குரோத்து செய்தவர்கள் எமது அரசாங்கத்தில் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறுகின்றோம். மக்களுக்கு நீதி வழங்குவோம். நாட்டை திவாலாக்கியது யார் என்பதை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரச அதிகாரம் பெறுவதற்கு முன்னரே அந்த முடிவை எடுத்தோம். அந்த முடிவின் மூலம் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களிடமிருந்து இழப்பீடு பெறுவதற்கு தேவையான சட்ட ஆதரவை வழங்கி எங்கள் கடமையை நிறைவேற்றுவோம்.

இன்றைய தாக்குதல் சட்டவிரோதமானது என்று பொலிஸாரிடம் கூறுகின்றோம். இன்று இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியவர்கள் தயாராக இருக்க வேண்டும். நாங்கள் நிச்சயமாக உங்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வோம் நாங்கள் அரசியல் அயோக்கியர்கள் அல்ல. எமது வலது பாதத்தை முன் வைத்து மக்கள் சக்தியால் ஒவ்வொரு கிராமத்தையும் பலப்படுத்தி இந்த சட்டவிரோத அரசை வீட்டுக்கு அனுப்புவோம். இன்று ரணிலை நினைத்து வெட்கப்படுகிறோம். தடை உத்தரவு போடுவது நமக்கு வெட்கமாக இல்லையா? இன்று நான் சொல்கிறேன், நமது அரசாங்கத்தின் கீழ், இந்த மாளிகைகள் அனைத்தும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்”. என மேலும் தெரிவித்தார்.

ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் – மனோகணேசன்

ராஜபக்ஷர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்ஷர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம். கோட்டாபய ராஜபக்ஷ போனாலும், அவரது பாவத்தின் நிழல் போகவில்லை. சட்டப்படி கோட்டாபய ராஜபக்ஷ 16 ஆம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இந்த அரசு நடக்கிறது. அந்த பாவத்தில் எமக்கு பங்கு வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

நாட்டில் உருவாகிவரும் புதிய கூட்டணிகளிடமிருந்து தமது அணியை நோக்கி வரும் அழைப்புகள் பற்றி, தென்கொழும்பு கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

நேற்று முதல் நாள் அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணி நண்பர்கள் என்னுடன் பேசிய போது தெளிவாக ஒன்றை சொன்னேன். ஒரு கையால் ராஜபக்ஷர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம் என்று சொன்னேன். நாம் இன்று இருக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற இடத்தில் நாம் செளக்கியமாகவே இருக்கிறோம் எனவும் சொன்னேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணி நினைத்து இருந்தால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகிய அடுத்த நாளே அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால், அதை நாம் செய்யவில்லை. ஏனென்றால் பேரினவாதம், ஊழல் ஆகிய இரண்டு பேரழிவுகளுக்கும் ஏகபோக உரிமையாளர்களான ராஜபக்ஷர்களுடன் கலப்பு கல்யாணம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் இல்லை. எங்கள் இந்த கொள்கை நிலைப்பாடு காரணமாகத்தான் நாம் இன்று ராஜபக்ஷ ஆதரவு ரணில் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை.

இன்று இந்த ராஜபக்ஷ ஆதரவு ரணில் அரசில் அங்கம் வகிப்பவர்கள், தாம் ஏதோ வெட்டி முறித்து விட்டதாக தப்பு கணக்கு போட்டு விடக்கூடாது. நாம் அங்கே கொள்கை நிலைப்பாடு காரணமாக இல்லை. ஆகவேதான் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். அதுதான் உண்மை. சட்டப்படி கோட்டாபய ராஜபக்ஷ 16ம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இன்றுவரை இந்த அரசு தொடர்கிறது. அந்த பாவத்தின் நிழலில் அங்கமான உங்களுக்கு பாவத்தின் சம்பளம் அடுத்த தேர்தலில் கிடைக்கும்.

16ம் திகதி நவம்பர் 2019 முதல் இன்றுவரை, நான்கு வருடங்கள், இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. கடந்த நான்கு வருடங்களாக இந்த அரசாங்கத்தின் பதவிகளில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளிடம், நீங்கள் இதுவரை வெட்டி முறித்த சாதனைகளை முடியுமானால் பட்டியல் இடுங்கள் என பகிரங்க சவால் விடுகிறேன். அபிவிருத்தி செய்ய நிதி இல்லை என்பீர்கள். சரி, அபிவிருத்தியை விடுங்கள். அரச நிர்வாகரீதியாக தமிழ் மக்கள் தொடர்பில் நீங்கள் அமைச்சர்களாக, துணை அமைச்சர்களாக, அரசாங்க எம்பிகளாக இதுவரை என்ன செய்து கிழித்துள்ளீர்கள் என பகிரங்கமாக சொல்லுங்கள்? வேண்டுமானால், நாம் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளையும், இன்று நீங்கள் இந்த நான்கு ஆண்டுகளில் செய்ய தவறிய சீர்கேடுகளையும் நான் பகிரங்கமாக பட்டியல் இடுகிறேன்.

எனவேதான், இந்த புதிய, பழைய பாவங்களின் கூட்டணியில் நாம் இல்லை. நாங்கள் சோரமும் போகவில்லை. பாவமும் செய்யவில்லை. ஆகவே இந்த பாவத்தின் சம்பளம் எமக்கு கிடையாது. எனவே தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற முற்போக்கு அரசியல் இயக்கம், அடுத்து வரும் புதிய அரசாங்கத்தில், புதிய பலத்துடன், நேர்மையாக அங்கம் வகிக்கும் என்றார்.

எதிர்காலத்தில் சஜித் கோட்டாபய போன்று செயற்படக் கூடும் – சரத்பொன்சேகா

முன்னாள் இராணுவதளபதி ஜெனரல் தயாரத்நாயக்காவின் ஆலோசனைகளை பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதை கடுமையா விமர்சித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா எதிர்காலத்தில் சஜித்பிரேமதாச கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவையும் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் நான் கைதுசெய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாகஇருந்தவர்களில் ஒருவர் தயா ரத்நாயக்க என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தயாரத்நாயக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய விசுவாசி அவரின் நம்பிக்கைக்குரியவர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படலாம் எனவும் விமர்சித்துள்ளார்.

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் – வைகோ

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில் தெற்கிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசாங்கம் உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.

செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்

இந்த நாள் சோகமயமான நாள். 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள் இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள். தேசப் பிதா உத்தமர் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்.

எங்கள் மாநிலத்திற்கு ஒரு ஆளுநர் வந்திருக்கிறார். எதையாவது உளறிக்கொண்டிருப்பதே அவருக்கு வழக்கம். அண்மையில் சொன்னார். இந்திய சுதந்திரம் காந்தியாரால் கிடைக்கவில்லை. நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அவர்களால்தான் இந்திய சுதந்திரம் கிடைத்தது என்று ஆர்.என்.ரவி கூறினார்.

நான் நேதாஜியை மிகவும் நேசிப்பவன். கல்கத்தாவிற்கு இரண்டு முறை சென்று நேதாஜி கடைசியாக வாழ்ந்த அந்த வீட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நேதாஜியின் பெருமைகளைப் பேசியிருக்கிறேன். நேதாஜி சிங்கப்பூர் மைதானத்திலிருந்து

“ஓ! தேசப் பிதாவே! காந்தியடிகள் அவர்களே இந்தியாவிற்கு விடுதலை கிடைப்பதற்கு இங்கே நானும் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் வெற்றிபெற வேண்டும் என்று ஆசி கூறுங்கள்” என்று வானொலியில் பேசிய நேதாஜி மகாத்மா காந்தி அவர்களை தேசப் பிதா என்று முதன் முதலில் அழைத்தவர்.

ஆளுநரே அப்படி பேசவில்லை என்று மறுத்துவிட்டாரே என்றார் பிரகலாத் ஜோசி.

வைகோ: அனைத்துப் பத்திரிகைகளிலும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நான் கூறியது செய்தியாக வந்திருக்கிறது. அமைச்சர் பத்திரிகைகள் படிப்பதில்லை போலும்.

இந்திய ஜனநாயகத்திற்குப் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே மொழி; ஒரே மதம் என்று இந்துத்துவா சக்திகள் சொல்கின்றன. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் இந்தியாவின் ஜனநாயகம் அழிந்துவிடும்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நாள்தோறும் தாக்கப்படுகின்றனர். அவர்களைப் படகுகளோடு கைது செய்து இலங்கை அரசு சிறையில் அடைக்கிறது. அவர்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இப்பொழுது மற்றொரு ஆபத்து நம்மைச் சுற்றி வளைத்துள்ளது. செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது. ஹம்பன்தோட்டா துறைமுகத்தையும் அமைத்துவிட்டது. நமக்கு சீனாவிடமிருந்து ஆபத்து முதலில் தெற்கே இருந்துதான் வரும். ஒன்றிய அரசு இந்த ஆபத்தை உணர வேண்டும்.

இலங்கையில் பூர்வீகத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டுவிட்டார்கள். இதை நினைத்து இலங்கைப் பிரச்சினையை ஒன்றிய அரசு கையாள வேண்டும்.

லொஹான் ரத்வத்த இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்பு

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

சாந்தனுக்கு கல்லீரல் செயலிழப்பு – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கல்லீரல் செயலிழப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை என்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தாா். இலங்கை தமிழரான சாந்தனுக்கு ஜன.24-ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயா் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்ட அவா், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், அதேவேளையில் பிற பாதிப்புகளுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார் ஜெனரல் தயா ரத்நாயக்க

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) இணைந்துள்ளார்.

இன்று எதிர்க்கட்சி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்திக்குக்கு தனது ஆதரவை வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது, எதிர்க்கட்சி தலைவர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொது கொள்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக தயா ரத்நாயக்கவை நியமித்தார்.

தயா ரத்நாயக்க இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

நாட்டினை வங்குரோத்து செய்தோரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க

இலங்கையில் பலம் மிக்க அரசியல் மாற்றம் ஒன்று உருவாக அனைத்து விடயங்களும் தயார் நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் பலம் பொருந்திய அரசியல் மாற்றம் ஒன்று உருவாவதை யாராலும் தடுக்க முடியாது.

நாட்டினை வங்குரோத்து செய்தோரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர்.

தரத்துடன் கூடிய பாரியளவிலான பல கோணங்களுடன் ஒரு அரசியல் கூட்டணி நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து சிறந்த ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க உள்ளோம்.

அதே போன்று சிறந்த தேர்ச்சியான வேட்பாளர் குழுவினை பொதுத் தேர்தலிலும் களமிறக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீன்பிடிப் படகு சீஷெல்ஸ் கடற்படையால் மீட்பு

இலங்கை மீன்பிடிப் படகான லோரன்சோ புத்தா சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை சீஷெல்ஸ் தூதரகம் உறுதிப்படுத்தியதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி தனது கன்னிப் பயணத்தில் இணைந்த இந்த மீன்பிடிப் படகு கடந்த சனிக்கிழமை 6 மீனவர்களுடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது.

குறித்த படகிலிருந்த 6 மீனவர்களும் சீஷெல்ஸ் கடலோர காவல் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.