ஜனாதிபதியின் சர்வகட்சி கலந்துரையாடல் மூலமாக தீர்வு முயற்சியை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சிறுபான்மையின பிரதிநிதிகள் ஒன்றாக கலந்துரையாடி இனப்பிரச்சினை விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களில் ஒரு பாதை வரைபடத்தை தயாரியுங்கள். பின்னர் ஒவ்வொரு விவகாரமாக முன்வைத்து, அவற்றை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுங்கள். அவற்றை பெற்றுக்கொள்ள அமெரிக்காவும் முழுமையாக ஓத்துழைப்பை வழங்கும்.
இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களிற்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட், சிறுபான்மையின கட்சிகளின் பிரதிநிதிகளிற்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டிற்குள் ஜனாதிபதி தேர்தல் நடக்குமென விக்டோரியா நுலாண்ட் சூசகமாக தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், பொறுப்புக்கூறல் விவகாரத்திற்கு இது தருணமல்ல என்றும் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (1) இந்த கலந்துரையாடல் நடந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் த.சித்தார்த்தன், தமிழ் முற்போக்கு முன்னணியின் மனோ கணேசன், இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் ஆபிரகாம் சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ரவூப் ஹக்கீம், அதில இலங்கை மக்கள் காங்கிரஜின் ரிசாட் பதியுதீன் ஆதியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதியின் சர்வகட்சி கூட்டம் பற்றி, விக்டோரியா நுலாண்ட் கேட்டறிந்தார்.
தற்போது ஜனாதிபதிக்கு பின்னணி பலம் இல்லையென்றும், பொதுஜன பெரமுனவில் தங்கியுள்ள ஜனாதிபதியினால் இனப்பிரச்சினை தீர்வு அரசியலமைப்பு மாற்றம், காணி விடுவிப்பு, 13வது திருத்தம் நடைமுறைப்படுத்துவது போன்றவற்றை நிறைவேற்ற முடியாது என கட்சிகள் தெரிவித்தன.
18வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தை ஆதரித்தாலும், 13வது இருத்தம் தமது நிலைப்பாடல்ல, சமஷ்டி அடிப்படையிலான தீர்வே, தமது இலக்கென தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
13வது திருத்தம் மற்றும் அரசியலமைப்பு திருத்தங்களை ஆதரிப்பதாக மனோ கணேசனும் குறிப்பிட்டார்.
தற்போது ஜனாதிபதி அரசியல் பலமில்லாதவரை போல தென்பட்டாலும், படிப்படியாக பல விடயங்களை நிறைவேற்ற முடியுமென விக்டோரியா நுலாண்ட் தெரிவித்தார்.
சிறுபான்மையின கட்சிகள் ஒன்றாக கலந்துரையாடு, எந்ததெந்த விவகாரங்களை பெறுவது என்பது தொடர்பில் வழி வரைபடமொன்றை தயாரித்து, ஒவ்வொரு விவகாரமாக எடுத்து, அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டுமென விக்டோரியா ஆலோசனை வழங்கினார்.
அவற்றை பெற்றுக்கொள்ள அமெரிக்காவும் துணை நிற்கும் என்றார்.
ரணில் விக்கிரமசிங்க விரைவில் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வார் என்பதையும் விக்டோரியா நுலாண்ட் சூசகமாக வெளிப்படுத்தினார். அனேகமாக அது அடுத்த வருடமாக இருக்கலாமென்றும், புதிய அரசியலமைப்பு விவகாரம் நடைபெறும் என்றும், அது ஜனாதிபதி தேர்தலின் முன்னரா அல்லது பின்னரா என்பது தனக்கு தெரியவில்லையென்றும் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி நிச்சயமாக இலங்கைக்கு கிடைக்கும், விரைவில் இடைக்கும் என்றார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின் மூலம், இலங்கை தொடர்பான நம்பிக்கை உருவாகி, மேலும் பல நாடுகள் இலங்கைக்கு உதவி மற்றும் முதலீடு செய்யும் என்றார். அமெரிக்காவும் மேலும் உதவும் என நம்புகிறேன் என்றார்.
இந்த சந்திப்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொறுப்புக்கூறல் பொறிமுறையை கைவிட முடியாதென்றும், அமெரிக்கா அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
“தற்போதைய சூழலில் பொறுப்புக்கூறலை கையிலெடுப்பது, தமிழர் பிரச்சனையை தீர்க்க ஒரு உபாயமாகவும் அமையும். பொறுப்புக்கூறல் விவகாரம் மஹிந்த ராஜபக்ச கரப்பிற்கு அழுத்தமாக அமையும். அவர்கள் அதிலிருந்து தப்பிக்க, ரணில் விக்கிரமசிங்கவின் இர்வு முயற்சிக்கு ஆதரித்து, மற்றைய சிக்கல்களை நீர்க்க முயற்சிப்பார்கள்” என கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.
எனினும், விக்டோரியா நுலாண்ட் இந்த கோரிக்கையை நாகூக்காக தவிர்த்து விட்டார். பொறுப்புக்கூறலை வலியுறுத்துவது தேவையான, நல்ல விடயம். ஆனால் பொறுப்புக்கூறலை வலியுறுத்த இது உகந்த தருணமல்ல. இப்போது பொறுப்புக்கூறலை வலியுறுத்த ஆரம்பித்தால் ஏனைய விடயங்கள் சிக்கலாகி விடலாம். அதனால் பொறுப்புக்கூறல் விவகாரத்தை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற சாரப்பட குறிப்பிட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவின் அரசை நம்புங்கள், அதை ஆதரியுங்கள் என்பதே அமெரிக்க விக்டோரியா நுலாண்டின் இன்றைய சந்திப்பின் மறைமுக செய்தியென, சந்திப்பில் கலந்து கொண்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.