சீன ஆராய்ச்சிக் கப்பல் நவம்பரில் இலங்கை வருவதற்கு அனுமதி – அலி சப்ரி

சீன கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கைக்கு வருகைதருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார  அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் சீன கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனினும் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வரமுடியாது ஆனால் நவம்பர் மாதத்திலேயே சீன கப்பல் இலங்கை வரமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

சீன கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கை வரமுடியும் என்பது குறித்து அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இது வெறுமனே ஒரு விஜயம் மாத்திரம் இல்லை கப்பல் இலங்கையில் தரித்துநிற்க்கும் நாட்களில் அதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் உள்விவகாரங்களை கருத்தில் கொண்ட பின்னர் கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கான திகதியை வழங்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சீனாவுடனான இருதரப்பு உறவுகள்  மிகவும் அவசியமானவை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறைகள் எதையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – அலி சப்றி

மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வை காண்பது தொடர்பில் இலங்கை எந்தவொரு வெளிபொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரிஇராஜதந்திர சமூகத்தினருக்கு மீண்டும் தெளிவாக தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவையின் அமர்வு அடுத்தமாதம் இடம்பெறவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் குறித்;த அலுவலகம் மூலமும் ஏனைய அமைப்புகள் மூலமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நான் தெளிவுபடுத்தியுள்ளேன் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து கொழும்பை தளமாக கொண்ட இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்தும்தெளிவுபடுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தராதங்களிற்கு ஏற்ற பயங்கரவாத தடைச்சட்டம் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஆதரித்த நாடுகளின் முக்கிய வேண்டுகோளாக காணப்படுகின்றது.

பொருளாதாரமீட்சி மற்றும் கடன்மறுசீரமைப்பு தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும்அவர் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை தனது அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டுமாயின் நல்லிணக்கம் மிக அவசியம் அலி சப்றி

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல பிரிவினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்குமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மாத்திரமே அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்த அமைச்சர், சட்டம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவிற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் பணிகளை நிறைவேற்றுவதற்காக சர்வதேச மட்டத்தில் பல விரிவுரைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இடைக்கால செயலகம் அமைக்க ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக ஆணைக்குழுவின் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான அடித்தளத்தைத் தயார்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்துவதற்காக புதன்கிழமை (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் அவசியத்தையும் அதனை ஸ்தாபிப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் விளக்கிய அமைச்சர், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களையும் மேற்கொள்வதாகவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, மூன்று தசாப்த கால யுத்தத்தினால் இன, மத வேறுபாடின்றி அனைவரும் பாரிய சேதங்களை சந்திக்க நேரிட்டது என்று தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை நாட்டிற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் எழுந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்காக ஸ்தாபிக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்கள் முன்வைத்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் பொறிமுறைகளை ஆராய்ந்து இலங்கைக்குப் பொருத்தமான பொறிமுறையை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாவிட்டால் நாடு மீண்டும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும். எனவே சமூகத்தை தெளிவுபடுத்தி இதனைச் செயற்படுத்துவதற்கான ஆதரவைப் பெற வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

சுதந்திரம் பெற்று 20 வருடங்கள் நிறைவடையும் போது நல்லிணக்கத்தின் ஊடாக சிங்கப்பூர் அபிவிருத்தியடைந்த நாடாக மாறியுள்ளதாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அசங்க குணவன்ச தெரிவித்தார்.

இலங்கை தனது அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டுமாயின் நல்லிணக்கம் மிகஅவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் துரதிர்ஷ்டவசமான யுகம் மீண்டும் ஏற்படாத சூழலை உருவாக்க முடியும் என சுட்டிக்காட்டிய அசங்க குணவன்ச, உள்நாட்டில் வெற்றிகரமான மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொறிமுறையை உருவாக்கத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காகவே இடைக்கால செயலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சட்டம் ,கொள்கைப் பிரிவு மற்றும் மக்கள் தொடர்பாடல் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் உரையாற்றிய வண.தம்பர அமில தேரர், கடந்த தேர்தலில் மதவாதமும், இனவாதமும் பாரியளவில் தலைதூக்கியதால், அந்த அனுபவத்தை மக்கள் மறக்க முன் இந்த செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு கோரிக்கைவிடுத்தார்.

ஜனாதிபதி தற்போது துணிச்சலான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வாறே மீண்டும் இவ்வாறான சம்பவம் இடம்பெறாதிருக்க தேவையான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தம்பர அமில தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்ப தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து, ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடாத்திய அலி சப்றி

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் குறித்து தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சு முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், இம்முயற்சிகளுக்கு தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் விசேட ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றன.

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அவசியமான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை தென்னாபிரிக்காவும், இந்த ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்கான ஒத்துழைப்புக்களை சுவிற்ஸர்லாந்தும், இதற்குரிய நிதி உதவியை ஜப்பானும் வழங்குவதாக அறியமுடிகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஸுகொஷி ஹிடேகி, இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபக்ளெர் மற்றும் இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சன்டைல் எட்வின் ஸ்கால்க் ஆகியோருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (11) வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இவ்வனைத்து தரப்புக்களும் மிக நெருக்கமாக பணியாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், இந்த இலக்கை அடைந்துகொள்வதில் இலங்கைக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சீனா இலங்கையை கடன்பொறிக்குள் தள்ளவில்லை – அலி சப்ரி

அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் சீனா அதிகளவான முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், பரஸ்பர நன்மை பயக்கும் பங்காளித்துவத்தை விரிவுபடுத்துவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் இடமபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், சீனாவுடனான நாட்டின் உறவு மற்றும் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு அது எவ்வாறு உதவியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி இலங்கையை கடன் பொறிக்குள் தள்ளியுள்ளது என்ற மேற்கத்திய ஊடக அறிக்கைகாலை முற்றாக நிராகரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கும் சீன முதலீடு மிகவும் முக்கியமானது எனவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்து வருவதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் சீனாவின் முதலீடு மிகவும் முக்கியமானது என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னேற்றத்தில் சீனா நம்பகமான நண்பராகவும், பங்காளியாகவும் இருந்து வருகிறது என்றும், தொடர்ந்தும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சீனா இலங்கையின் மிகச்சிறந்த நண்பன் முக்கியமான அபிவிருத்தி சகா – அலிசப்ரி

சீனா இலங்கையின் மிகச்சிறந்த நண்பன் முக்கியமான அபிவிருத்தி சகா என எனவும் இலங்கை எப்போதும் ஒரு சீன கொள்கையை உறுதியாக ஆதரிக்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சீனாவில் சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கையின் மிகச்சிறந்த நண்பன் முக்கியமான அபிவிருத்தி சகா என தெரிவித்துள்ள அலி சப்ரி சீனாவின் தன்னலமற்ற உதவியை இலங்கை பாராட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

சீன நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

இலங்கையும் சீனாவும் ஒருவரையொருவர் எப்போதும் ஒருவரையொருவர் மதித்துள்ளன ஆதரித்துள்ளன என தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் சகவாழ்வு பரஸ்பரம்நன்மைக்குரிய ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான உதாரணமாக திகழ்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தைகளுக்காக அலி சப்றி சீனா பயணம்

சீன அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் நாளைய தினம் சீனா செல்லும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அங்கு தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியுதவி செயற்திட்டத்தின்கீழ் சுமார் 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, நாணய நிதியத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றான கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்கவேண்டிய கடப்பாட்டுக்கு இலங்கை உள்ளாகியிருக்கின்றது.

அதன்படி கடன்மறுசீரமைப்பு குறித்து முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர் நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளையும் தற்போது முன்னெடுத்துவருகின்றது.

அதனை முன்னிறுத்தி இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குழுவொன்றை உருவாக்கியுள்ளன.

நாட்டின் மிகமுக்கிய இருதரப்புக் கடன்வழங்குனரான சீனா பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் கண்காணிப்பாளராக பங்கெடுத்துவருகின்றது.

எனவே சீனாவில் எதிர்வரும் 25 – 28 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்குப் பயணமாகும் அமைச்சர் அலி சப்ரி, அங்கு முக்கிய உயர்மட்ட அதிகாரிகள் பலருடனும் கடன்மறுசீரமைப்பு தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளார்.

அத்தோடு, சீன அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின்போது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தல் குறித்தும் அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும், இருநாடுகளினதும் அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விரிவாக இதன்போது கலந்துரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் பயணங்களுக்காக 5 கோடி ரூபாய் செலவிட்டமையை அலி சப்ரி மறுப்பு

வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 5 கோடி ரூபாய்களை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் கணக்கான ரூபாவை செலவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அமைச்சர் இந்த பணத்தை 7 வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த தகவல் தவறானது என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட ஐந்து உத்தியோகபூர்வ தேசிய தூதுக்குழு பயணங்களுக்கும், அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்குமான இரு தரப்பு பயணங்களின் மொத்த செலவாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயணங்களின்போது தாம் தூதுக்குழுக்களுக்கு தலைமை ஏற்றுச் சென்றதாக தெரிவித்துள்ள அலி சப்ரி, தம்மை தவிர மேலும் 22 அதிகாரிகள் இந்த பயணங்களில் இணைந்திருந்ததாகவும் ட்விட் செய்துள்ளார்.

Posted in Uncategorized

ராஜீவ் காந்தியை கொலைசெய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன் அழித்தோம்! – அலி சப்ரி பெருமிதம்

32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அழித்தது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட தினத்தை குறிக்கும் விதத்தில் டுவிட்டரில் அலி சப்ரி இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.

32 வருடங்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அவர்களின் நிதிதிரட்டும்  சர்வதேச வலையமைப்பினர் அரசியல் ஆதரவாளர்கள் புலனாய்வாளர்கள் இணைந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் முன்னாள் பிரதமரை கொலை செய்தனர் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத இயக்கத்தை 14 வருடங்களிற்கு அழித்தது, இலங்கையில் அமைதி சமாதானத்தை ஏற்படுத்தியது என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கம்

மூன்று கட்டங்கள் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இணக்கப்பாட்டுக்கு வருவதே குழுவின் முதற்கட்ட நடவடிக்கை என அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப கொண்டுவருவது இரண்டாவது நடவடிக்கை என கூறினார்.

இதேநேரம் பொறுப்புக்கூறல் நடவடிக்கைக்காக உண்மையைக் கண்டறியும் உள்ளக பொறிமுறையை நிறுவுவதே உபகுழுவின் மூன்றாவது படி என்றும் அலி சப்ரி குறிப்பிட்டார்.

இன நல்லிணக்க செயற்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி அதனூடாக அபிவிருத்தி அடைவதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.