இலங்கையில் தனது முதலீடுகள் தொடர்பில் கௌதம் அதானி ஆராய்வு

இலங்கையில் தனது முதலீடுகளின் தற்போதைய நிலை குறித்து கௌதம் அதானி ஆராய்ந்துள்ளார்.

இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட குஜராத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கௌதம் அதானியை சந்தித்துள்ளார்.

அஹமதாபாத் சாந்திகிராமில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை தூதுவரை சந்தித்த அதானி அதன் பின்னர் இலங்கையில் தனது முதலீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் துறைமுக துறையில் அவரது குழுமம் ஏற்கனவே முதலீடு செய்துள்ளது இது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

13 ஐ முழுமையாக அமுல்படுத்தி தேர்தலை நடாத்துவது முக்கியமானது – இந்திய வெளிவிவகார அமைச்சர்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியிருந்தார்.

இந்தியாவுடனான கூட்டாண்மை, நாட்டின் பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாட ஜனாதிபதி விக்ரமசிங்கவை விரைவில் இந்தியாவிற்கு வருமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தை கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா, இலங்கையின் நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி மற்றும் இலங்கைக்கு தேவை ஏற்படும்போது, எந்த தொலைவுக்கு செல்ல தயாராக உள்ள ஒரு நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது இலங்கைப் பயணம், பிரதமர் மோடியின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கை என வலியுறுத்திய ஜெய்சங்கர், தேவைப்படும் நேரத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருகோணமலையை ஒரு வலுசக்தி மையமாக மேம்படுத்தும் திறன் இலங்கைக்கு உள்ளது. அத்தகைய முயற்சிகளுக்கு நம்பகமான பங்காளியாக, இந்தியா தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்துழைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும், புதுப்பிக்கத்தக்க சக்தி கட்டமைப்புக்கு, கொள்கை அடிப்படையில் இன்று இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும் – இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இணைந்துகொண்ட இந்த சந்திப்பின் போது, இந்தியாவுடனான கூட்டாண்மை, நாட்டை பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாட ஜனாதிபதி விக்ரமசிங்கவை விரைவில் இந்தியாவிற்கு வருமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தை ஜெய்சங்கர் கையளித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“இந்தியா (இலங்கையின்) நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி மற்றும் இலங்கைக்கு தேவை ஏற்படும்போது, எந்த தொலைவுக்கு செல்ல தயாராக உள்ள ஒரு நாடு” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனது இலங்கைப் பயணம், பிரதமர் மோடியின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கை என்று வலியுறுத்திய ஜெய்சங்கர், இந்த தேவைப்படும் நேரத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்றார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் – இ.தொ.கா சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நிர்மாணிக்க இருக்கும் பத்தாயிரம் இந்திய வீட்டுத்திட்டத்தை விரைவுப்படுத்த மாற்று பொறிமுறை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்ததோடு, இதனால் மலையக மக்கள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைக்காக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மலையகத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான புதிய திட்டங்களை இந்தியா அறிமுகப்படுத்த வேண்டும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். இவ்விரண்டு கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்,பொதுச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன்,இ.தொ.காவின சட்ட பிரிவு பொறுப்பாளர் மாரிமுத்து,இ.தொ.காவின் ஆலோசகர் மதியுகராஜா, சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இக்கலந்துறையாடலில் இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் – இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி துரிதப்படுத்துவதற்காக முதலீடுகளை அதிகரிப்பதற்கான எங்களின் அர்ப்பணிப்பை வெளியிட்டேன் என ஜெய்சங்கர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று வியாழக்கிழமை (19) மாலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், பிரதித்தலைவர்களான பி. திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன். எம்.பிக்களான எம். உதயகுமார், வேலுக்குமார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் நன்றிகளை தெரிவித்ததுடன் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்ததாவது;

இந்திய வெளிவிவகார அமைச்சரை நாம் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை ந டத்தினோம். இதன்போது மலையகத்துக்கு இந்திய வம்சாவளித்தமிழர்கள் வந்து 200ஆவது ஆண்டு நிறைவு பெறுவது தொடர்பில் எடுத்துரைத்தோம்.

இந்த நிறைவை முன்னிட்டு மலையகத்தில் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரிய பயிற்சி கலாசாலை, தாதியர் பயிற்சி கல்லூரி என்பவற்றை இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்திய அரசாங்கம் நிறுவவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தோம்.

அத்துடன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், என்பவற்றை பயில்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டுமென்றும் அதற்காக இந்தியாவிலிருந்து பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் வரவழைக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் நாம் வலியுறுத்தினோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் மலையக கட்சிகளுடன் பேசுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை தொடர்பிலும் நாம் எடுத்துக்கூறினோம்.

ஜனாதிபதியை சந்திக்கும் போது இந்த விடயத்தை வலியுறுத்துமாறும் நாம் எடுத்துக்கூறியுள்ளோம். 200ஆவது வருட நிறைவை முன்னிட்டு மலையகத்தில் மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் தொடர்பில் தமிழக அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளமை தொடர்பிலும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். எனத் தெரிவித்தார்.

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கையை வந்தடைந்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ´இலங்கையை கடனில் இருந்து மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளில் வெற்றிகரமான நடவடிக்கையாக அவரது வருகை இருக்கப்போகிறது´ என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிப்பதாக இந்தியா ஐ.எம்.எப் இற்கு தெரிவிப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் கடன் உதவியை பெறுவதற்கான தீவிர முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதி உதவியை பெறுவதற்கு இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கிய இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இலங்கையானது, இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டொலர் கடன்களை வழங்கவேண்டியுள்ளது.

இதுவும் கடன் மறுசீரமைப்பின் கீழ் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கடந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு துரித உதவியாக 4 பில்லியன் டொலர்களை வழங்கியது.

எவ்வாறாயினும், இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும், இதுதொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை உயர் ஸ்தானிகர் இடையே சந்திப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளின் பரஸ்பர உறவை பேணுதல், மீட்டெடுத்தல் மற்றும் ஒத்துழைப்பு வழங்குதல் குறித்து இந்த கலந்துரையாடப்பட்டது.

இது இந்தியா- இலங்கை இடையே நடைபெறும் வழக்கமான உரையாடலின் ஒரு பகுதி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வார இறுதியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த சந்திப்பு நடந்துள்ளது.

எனினும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பயணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இலங்கை வரவுள்ளார்

அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி அவர், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறுதியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.