அமெரிக்க இந்திய தூதுவர்கள் திருகோணமலை விஜயம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோர், இராஜதந்திர பணியாளர்களுடன் திருகோணமலை லங்கா ஐஓசி முனையத்துக்கு சென்றுள்ளனர்.

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பிற்கு பங்களிக்கும் அதன் செயற்பாடுகள் குறித்து இரண்டு இராஜதந்திரிகளுக்கும் லங்கா ஐஓசி பணியாளர்கள் விளக்கமளித்ததாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை திருகோணமலை முனையத்தில் இருந்து இலங்கை சந்தைக்கான, லங்கா சுப்பர் டீசலின் முதலாவது விநியோகத்தையும் இந்திய உயர்ஸ்தானிகர், இதன்போது கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.

அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவரிடம் கையளிப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் “அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள தூதரகத்தில் யாழ். இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்து  கலந்துரையாடினர்.

அதன்பின்னர் இப் பிரகடனத்தை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம் கையளித்தனர்.

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதே போல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர்கள் எங்கே என்று நீதிபதிகள் கேட்டனர். இந்த வழக்கில் மத்திய அரசின் கருத்தை அரிய வேண்டியதில்லை என்றும் ஏற்கனவே இதே வழக்கில் தொடர்புடையவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். மேலும் நீதிமன்றத்தை நாடியுள்ள மனுதாரர்கள் அனைவரும, கிட்டதட்ட 30 ஆண்டுகள் சிறையில் உள்ளதையும், அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதை கணக்கில் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதை தான் உச்சநீதிமன்றம் பேரறிவளான் விவகாரத்தில் கருத்தில் கொண்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து பேரறிவாளன் போலவே நிவாரணம் பெற இவர்கள் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

மேற்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் கட்டுமான பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்காக 700 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BOT முறையின் ஊடாக இந்தியாவின் அதானி நிறுவனம், அதன் உள்நாட்டு பங்குதாரர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவை BOT முறையின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன

இலங்கை கப்பல்கள் சீனாவின் போர்க்கப்பல்களிற்கு எரிபொருள் வழங்குகின்றன – இந்தியா அதிருப்தி

சீனாவின் போர்க்கப்பல்களிற்கு இலங்கை நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவது குறித்து இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்த போதிலும் சீனாவின் ஏவுகணை கண்காணிப்பு கப்பலான வாங் யுவாங் 5 அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரிப்பதற்கு இலங்கை அனுமதி வழங்கியதை தொடர்ந்து இலங்கை தனது துறைமுகத்தில் போர் மூலோபாய கண்காணிப்பு கப்பல்களிற்கு அனுமதி வழங்கக்கூடாது என இந்தியாவும் அமெரிக்காவும் தெளிவாக தெரிவித்துள்ளன.

சீனா குத்தகைக்கு எடுத்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து எரிபொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் எரிபொருட் கப்பல்கள் சீனாhவின் போர்க்கப்பல்களிற்கு நடுக்கடலில் வைத்து மறைமுகமாக எரிபொருட்களை நிரப்புகின்றன என இ;ந்தியா தெரிவித்துள்ளதுடன் இது குறித்து இலங்கையிடம் கடும் கரிசனை வெளியிட்டுள்ளது.

கப்பல்களை தனது துறைமுகத்திற்குள் அனுமதிப்பது மற்றும் அவற்றிற்கு எரிபொருள் நிரப்புவது போன்ற விடயங்களில் வெளிப்படையான தராதர நடைமுறையை பின்பற்றவேண்டும் என இலங்கை இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் போர்க்கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தி;ல் மீள எரிபொருளை நிரப்புவதற்கும் அனுமதிக்கவேண்டாம் என இந்தியா இலங்கையிடம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையிலிருந்து எரிபொருளுடன் செல்லும் இலங்கை கப்பல்கள் இந்திய அமெரிக்க கரிசனைகளை புறக்கணித்து சீன போர்க்கப்பல்களிற்கு எரிபொருளை வழங்குகின்றன என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆபிரிக்க கடலோர பகுதியில் கடற்கொள்ளையர்களிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சீன கப்பல்களை தவிர தற்போது இந்து சமுத்திரத்தில் எந்த சீன கப்பல்களும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

சீன போர்க்கப்பல்கள் தொடர்ந்தும் கிழக்கு ஆபிரிக்க கடலோரம் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன ஆனால் அந்த பகுதியில் கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகள் எதுவுமில்லை. துறைமுகத்தை கைப்பற்றுவதற்காக கடற்கொள்ளையர்களிற்கு எதிரான நடவடிக்கை என சீனா சாக்குப்போக்கு சொல்கின்றது என சீனாவை அவதானிப்பவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மத மேம்பாட்டுக்கு இந்தியா 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

இந்திய அரசினால் நன்கொடை அடிப்படையிலான உதவித்திட்டத்தின் கீழ் அமுலாக்கப்படும் பௌத்த மத மேம்பாட்டுக்கான 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி மற்றும் யாழ்ப்பாணக் கலாசார நிலைய செயற்பாடுகள் ஆகியவற்றின் அமுலாக்கம் குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்ரமநாயக்கவும் , இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இருவேறு பிரத்தியேக சந்திப்புகளை நேற்றுமுன்தினம் மேற்கொண்டிருந்தார்.

2020 செப்டெம்பர் 26 ஆம் திகதி இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின்போது பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கான விசேட நன்கொடையாக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவித் திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்ததுடன் அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையானது வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின்போது கடந்த மார்ச் 28 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தமை நினைவில் கொள்ளப்பட்டவேண்டியதாகும்.

பௌத்த மதத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்களின் அடிப்படையில் கூட்டாக அடையாளப்படுத்தப்பட்ட முன்னுரிமைத் திட்டங்களை துரிதமாக அமுலாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென உயர் ஸ்தானிகரும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவும் இச்சந்திப்பின்போது இணங்கியிருந்தனர்.

அத்துடன் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள வணக்கஸ்தலங்கள் மற்றும் பிரிவேனாக்களில் சூரியக்கல மின் வசதிகளை அமைத்தல் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்தும் இப்பேச்சுக்களின்போது அடையாளம் காணப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணக் கலாசார நிலையம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, நவீன வசதிகளுடனான இக்கலாசார நிலையத்தினை மக்கள் பாவனைக்காக அனுமதிப்பது குறித்த கூட்டு கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

11 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய நன்கொடை உதவித்திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த கலாசார நிலையம் இந்திய இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பினை பிரதிபலிக்கும் சிறந்த உதாரணமாக உள்ளதுடன் இதில் இரு தள நூதனசாலை, 600க்கும் அதிகமான பார்வையாளர்களுக்கான வசதியினைக் கொண்ட கேட்போர் கூடம், 11 மாடிகளைக் கொண்ட கற்றல் நிலையம், திறந்த அரங்கமாக பயன்படுத்தக்கூடிய வசதியுடனான பொது சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.

மக்களை மையமாகக் கொண்ட இந்த நன்கொடைத் திட்டங்கள் ஊடாக மக்களின் நாளாந்த வாழ்வில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் இந்தியாவின் திடசங்கற்பத்தினை சுட்டிக்காட்டுவதாக இந்த இரு சந்திப்புகளும் அமைகின்றன.

இலங்கை அரசினால் முன்னுரிமைப்படுத்தப்பட்டதும் இலங்கையின் சகல சமூகங்களினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த திட்டங்கள் அமைந்துள்ளன.

இதுவரை இலங்கையில் இந்தியாவால் 85 நன்கொடைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் புதிய திட்டங்களில் இலங்கையின்  பிரத்தியேக டிஜிட்டல் அடையாள முறைமை திட்டமும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா தொடர்ந்து உங்களுக்கு உதவி வழங்கும் – இந்திய தூதுவர்

மலையக மக்கள் இந்தியாவுடன் மிகவும் பலமான தொடர்புகளை கொண்டுள்ளனர். இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்கள் மனோ கணேசன் கூறியவாறு இலங்கையை கட்டியெழுப்ப பங்களிப்பு வழங்கி வருகின்றனர் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்தியாவுடன் நட்புறவு மற்றும் உறவுகளை பேணுவதற்கும் மலைய மக்கள் பங்களிப்பு வழங்குகின்றனர். இந்தியாவும் உங்களை மறக்காது. இந்தியா உங்களை எந்த நேரத்திலும் நினைவில் வைத்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

வீடுகளின் நிர்மாணம் ஊடாகவும் புலமைபரிசில்கள் மற்றும் கல்வி ஊடாகவும் இந்தியா தொடர்ந்தும் உங்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுகின்றது. நாங்கள் இங்கு வந்ததில் இருந்து இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றோம்.

இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் தொடர்பில் இந்திய மக்கள் அறிவார்கள். நான் இன்று ஒன்றை கூற விரும்புகின்றேன். இந்திய மக்கள் இலங்கையிலுள்ள சகோதர சகோதரிகளுக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்குவார்கள். குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது வீடுகளை நிர்மாணிப்பதில் பழனி திகாம்பரம் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

இன்று இந்தியாவின் உதவி மூலம் உணவு, எரிபொருள் மருந்து உரம், ஆகியவற்றுடன் அரசி மாத்திரமல்லாமல். கோதுமை மாவும் இலங்கை மக்களுக்கும் இந்த பிராந்திய மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இளம் பிள்ளைகள், இளம் சிறுவர்கள், மற்றும் தாய்மாருக்கான பால்மாவை வழங்குவதற்கும் இந்தியா தயாராக உள்ளது. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என திருவள்ளுவர் கூறியுள்ளார்.

அதேபோன்று நீங்கள் கேட்காமலேயே நண்பன் செய்வதை போன்று இந்தியாவும் உதவி வழங்கும். உங்களின் நண்பான இந்தியா இருக்கும் என நான் உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகின்றேன். இலங்கை மக்களுக்கும் இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கும் இடையில் மிகவும் பலமான உறவு காணப்படுகின்றது.

நீங்கள் கட்டாயம் இந்தியாவிற்கு வருகைதர வேண்டும். அடிக்கடி இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளும் பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகின்றது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என கோருகின்றேன் என்றார்.