இலங்கை விரைவில் பொருளாதார மீட்சியை எட்டும். – இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்பு மன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது திறைசேரியின் அபிவிருத்திப் பங்காளர் ஒருங்கிணைப்பு மன்ற இம்முயற்சியினை பாராட்டிய பிரதி உயர் ஸ்தானிகர்,

இவ்வாறான அமர்வுகளை 6 மாதங்களுக்கு ஒரு தடவை ஒழுங்கமைக்கவேண்டுமென்ற முன்மொழிவுக்கு தனது ஆதரவினையும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியம் குறித்த விவகாரங்களில் இலங்கை மக்களுக்காக இந்தியா உறுதியான ஆதரவினை வழங்கியதாக தெரிவித்த அவர்,

இலங்கை வெகு விரைவில் பொருளாதார மீட்சியினை எட்டும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ஒப்புதல்

இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

இதன்படி, எரிசக்தி துறை ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அதன்படி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து பணியாற்றவுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் செயற்படுத்தப்படும் சூரிய சக்தி, காற்றாலை திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

சிறுவர்களுக்காக ஜப்பான் 1.8 மில்லியன் நன்கொடை

இலங்கையில் அபாய நிலையில் வாழும் சிறுவர்களுக்கு உதவுவதற்காக யுனிசெப் நிறுவனத்திடம் ஜப்பான் அரசாங்கம் 1.8 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதனூடாக 6 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர், சுகாதார மேம்பாட்டை வழங்கவும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில், மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர், கனடியத் தூதுவர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை ஆகிய மூன்று தூண்களிலும் நிலவும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் செயல்முறையை ஜனநாயகமயமாக்கல் போன்ற விடயங்களும் இதன்போது கருத்தில்கொள்ளப்பட்டன.

இங்கிலாந்திற்கும் இலங்கைக்கும் இடையே உறவுகளை வலுப்படுத்த தீர்மானம்

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செயற்படுவதற்கு இலங்கையும் பிரித்தானியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்கச் செயலாளரை லண்டனில் சந்தித்து பேசிய போதே இதுதொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை மற்றும் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கும் இரு தரப்பினரும் இச்சந்திப்பின் போது இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

22வது கொமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அலி சப்ரி லண்டன் சென்றுள்ளார்.

இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இல்லை –

இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மை அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்த மீளாய்வுக்கூட்டத்தில் குறித்த குழு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்தோடு அரச அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் கொண்டிருந்த நிபுணத்துவத்தின் அடிப்படையில் அதற்கு தகுதி பெற்றிருந்தார்கள் என்றும் ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

மேலும் பாலின சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் உள்ளிட்ட பல அபிவிருத்திகள் இலங்கைக்குள் இடம்பெற்றுள்ளதாகவும் அனைத்து மக்களுக்குமான மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

21 ஆவது திருத்தும் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனநாயக ஆட்சி, முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வை, அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் அமைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானிய திட்டங்களின் மூலம் இலங்கைக்கு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் வாய்ப்பு

இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தயாராக இருக்க, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அங்கீகாரம் போதுமானதாக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் தொகையைப் பெறுவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட சீர்திருத்தம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் காரணமாக இலங்கைக்கு கூடுதலாக 220 பில்லியன் யென் (1.6 பில்லியன் அமெரிக்க டொலர்) நிதி திறக்கப்படும் என்று Bloomberg இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இடைநிறுத்தப்பட்ட ஜப்பானிய திட்டங்களை மீண்டும் தொடங்குவதன் மூலம் இந்த 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்கு திறக்கப்படும் என Bloomberg இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கைக்கு வழங்கிய அங்கீகாரம் எதிர்கால செயற்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானது என ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி பலரை தற்கொலைக்கு தூண்டுகிறது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பலரை தூக்கிட்டு தற்கொலைக்கு கொண்டு சென்றுள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், அதிக வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வது முதல் குழந்தைகளுக்குக் குறைவாக உணவளிப்பது வரை, இந்த நெருக்கடியானது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தியதால், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து குடும்பங்களையும் பாதித்துள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய இளைஞர்களும் தங்களின் செலவுகளைச் சமாளிக்க பொருத்தமான வேலைவாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டை விட்டு வெளியேற பலர் ஆவலுடன் காத்திருக்கும்போது, தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் உணவளிக்க நாட்டிலேயே தங்க விரும்புபவர்களும் உள்ளனர்.

இந்தநிலையில், பணத்தை உழைப்பதற்காக, சில குடும்பங்கள் பயன்படுத்தும் சமீபத்திய உயிர்வாழும் முறை பாலியல் தொழிலாகவும் மாற்றம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகமான பெண்கள் இந்த தொழிலில் ஈடுபடும் அதேவேளையில், 20 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்ற தகவலையும் ஆங்கில ஊடகமொன்று ஒன்று வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து கடந்த சில மாதங்களுக்குள், அதிகமான ஆண்கள் ‘ஆண் பாதுகாப்பு’ சேவைகளை வழங்கும் இணையத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

பல்வேறு நாடுகளில் இருந்து பாலியல் நோக்கங்களுக்காக, ஆண்களை வழங்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து இந்த இணையத்தளங்கள் செயல்படுவதாகவும், ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு வர்த்தக கடன்வழங்குநர்களும் பங்கெடுக்கவேண்டும் – சீனா

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு மற்றும் வர்த்தக கடன்வழங்குநர்களும் பங்கெடுக்கவேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

சுமையை பகிர்ந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ள மாவோநிங் இலங்கை தற்போதைய நிலைமைக்கு தீர்வை காண்பதற்கும் இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்கும் பேண்தகு அபிவிருத்தியை எட்டுவதற்கும் உரிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதியமைப்புகளுடன் சேர்ந்து செயற்படுவதற்கு சீனா தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அதிக கடன்வழங்கிய நாடான சீனா தனது எக்சிம் வங்கி இலங்கையுடன் கடன் விவகாரம் குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதை ஆதரிக்கின்றது எனவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பான சட்டம் ஒருவருடத்திற்குள் நிறைவேற்றப்படும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை அரசாங்கம் பூர்த்திசெய்துள்ள நிலையில், பெரும்பாலும் ஒருவருடகாலத்திற்குள் அச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்கள் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் வெகுவிரைவில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 6 ஆவது மீளாய்வுக்கூட்டத்தில் இன்றும், நாளையும் இலங்கை தொடர்பான மீளாய்வு இடம்பெறவுள்ளது.

அதனை முன்னிட்டு இலங்கை மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு என்பன தொடர்பில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நிகழ்நிலை முறைமையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் அமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் நீதியரசர் ரோஹிணி மாரசிங்க வாய்மொழி மூலம் விளக்கமளித்தார்.

அதுமாத்திரமன்றி இதுகுறித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எழுத்துமூல அறிக்கையும் மீளாய்வுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

நாட்டுமக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் பல்வேறு நேர்மறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில், ‘இருதரப்பினரும் மீறல்களில் ஈடுபட்ட அதேவேளை, இது முன்நோக்கிப் பயணிப்பதற்கான தருணம்’ என்ற கோணத்தில் நிலைமாறுகாலநீதியை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு உள்ளகப்பொறிமுறைகளை அரசாங்கம் ஸ்தாபித்தது.

இந்தப் பொறிமுறைகள் ஆயுதப்போராட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதுடன், அவை மீளநிகழாதிருப்பதை உறுதிப்படுத்தின.

அதன் ஓரங்கமாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், மரணங்களைப் பதிவுசெய்தல், காணாமல்போனமைக்கான சான்றிதழ் வழங்கல், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான சட்டம், குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் என்பன அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டன.

மேலும் தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை அரசாங்கம் பூர்த்திசெய்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்கள் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் வெகுவிரைவில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படும். அதுமாத்திரமன்றி பெரும்பாலும் ஒருவருடத்திற்குள் உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

அடுத்ததாக நினைவுகூர்தல் என்பது நல்லிணக்க செயன்முறையின் இன்றியமையாததோர் அங்கமாகும். அதற்கான வாய்ப்பை மறுப்பதென்பது இனங்களுக்கு இடையிலான பிளவை மேலும் ஆழப்படுத்துவதற்கும், நல்லிணக்க செயன்முறையில் தடங்கல்களை ஏற்படுத்துவதற்குமே வழிவகுக்கும்.

அதன்படி இராணுவத்தினரின் குடும்பங்களைப்போன்று பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பங்களும் சமத்துவமான முறையில் நடத்தப்படவேண்டும் என்றும், தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் நாம் பரிந்துரைத்துள்ளோம். அதற்கமைய இப்போது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் தமது உறவுகளை நினைவுகூருவதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை நாட்டுமக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்பது குறித்தும் அவ்வறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் ஆணைக்குழுவின் வகிபாகம், மரணதண்டனைக்கு எதிரான ஆணைக்குழுவின் நிலைப்பாடு, பெண்கள்மீதான வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் நிலைப்பாடு, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதில் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவ்வறிக்கையில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.