காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தின் திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் ஜனாதிபதி

காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்கு நீதியும் நியாயமானதுமான உணர்வுகளுடன் தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க COP28 மாநாட்டில் “காலநிலை நீதி மன்றத்தை” சனிக்கிழமை (02) முன்மொழிந்தார்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இங்கர் அண்டர்சன் (Inger Andersen) மற்றும் உகாண்டா சுகாதார அமைச்சர் வைத்தியர். அசெங் ஜேன் ரூத் (Dr. Aceng Jane Ruth) ஆகியோரின் ஆதரவுடனேயே ஜனாதிபதி மேற்படி யோசனையை முன்மொழிந்தார்.

காலநிலை நீதிமன்றம் காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஒன்றுபட்ட முயற்சிக்காக அனைத்து தரப்புக்களையும் ஒன்றுசேர்க்கும் அர்பணிப்புக்கான முதற்கட்டச் செயற்பாடாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இது அரசாங்களினால் மாத்திரம் முன்னெடுக்ககூடிய செயற்பாடு அல்லவென்றும் அதற்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது என்றும், நட்டம் மற்றும் இழப்பீட்டுக்கான நிதியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடவும் அதிகமான தொகை இஸ்ரேல் மற்றும் காஸா எல்லைகளில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள செலவிடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலநிலை மாற்றங்களுக்காக நிதி ஒதுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான நிலையான தீர்வாகவே காலநிலை நீதிமன்றத்தை முன்மொழிந்திருப்பதால், அதனுடன் இணைந்துகொள்ளுமாறு சகலருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இலங்கை முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கான பங்குதாரர்களுடன் இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத்திட்டம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம், ஐரோப்பிய சங்கத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஒன்கர் அண்டர்சன், காலநிலை அனர்த்தங்களுக்கு எதிராக போராடுவதற்கு அவசியமான செயற்பாடுகள் மற்றும் தற்போதைய முயற்சிகளில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

காலநிலை அனர்த்தங்கள் தொடர்பான பிரச்சினைகளை மட்டுப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் பெரும் சக்தியாக காலநிலை நீதிமன்றம் செயற்படும் என்றும் அதனை வரவேற்பதாகவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல

காலநிலை அனர்த்தங்களுக்கு வலுவாக ஈடுகொடுப்பதற்கு காலநிலை நீதிமன்றம் போன்ற முன்னெடுப்புக்கள் அவசியம் என வலியுறுத்தினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான தற்போது முன்னெடுக்கப்பட்டும் கலந்துரையாடல்களுக்கு மேலதிகமான பல்வேறு முயற்சிகள் அவசியப்படுகின்றன. நிலையான எதிர்காலத்திற்கான உலகளாவிய களத்தை அமைப்பதற்காக காலநிலை நீதிமன்றம் தொடர்பான யோசனையை இலங்கையின் வெளிநாட்டு கொள்கையில் உள்ளடக்கவுள்ளோம் என சுட்டிக்காட்டினார்.

காலநிலை நீதிமன்றத்தை அன்பாக ஏற்றுக்கொள்வதாகவும் காலநிலை அனர்த்தங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு, இதன்மூலம் வலுவான தலைமைத்துவத்தை வழங்க முடியுமெனவும் தெரிவித்தார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக, மதுர விதானகே, அஜித் மானப்பெரு, எம்.ரமேஸ்வரன் ஆகியோருடன் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, சுற்றாடல் தொடர்பிலான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஆனந்த மல்லவதந்திரி, நிதி அமைச்சின் ஆலோசகர் தேஷால் டி மெல், ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொலம்பகே, ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் சாண்ட்ரா பெரேரா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

வறட்சியினால் யாழ் மாவட்டத்தில் 69113 பேர் பாதிப்பு

வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது யாழ் மாவட்டத்தில் நிலவுகின்ற வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரை 21714 குடும்பங்களைச் சேர்ந்த 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கூடுதலாக சங்கானை, சாவகச்சேரி பிரதேச செயலாளர்  பிரிவுகளில் பாதிப்புகள் உணரப்பட்டுள்ளது.

அந்த வகையில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 15965 குடும்பங்களைச் சேர்ந்த 49160 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 3135 குடும்பங்களைச் சேர்ந்த 11160 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 1028 குடும்பங்களைச் சேர்ந்த 3146 பேரும், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 956 குடும்பங்களைச் சேர்ந்த 3067 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குடிநீர் விநியோகத்திற்காக தற்போது 6053 குடும்பங்களைச் சேர்ந்த 19704 பேருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்; வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களும் மொனராகலை, குருணாகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் மனித உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறும் அதிக நீரை பருகுமாறும் வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மூன்று மாவட்டங்கள் சீரற்ற காலநிலையால் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 346 குடும்பங்களைச் சேர்ந்த 1,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு இருவர் உயிரிழந்துள்ளதுடன்  மூவர் காயமடைந்துள்ளனர்.

மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கையின் மேற்கு கரையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

காலநிலை மாற்றத்தை தணிக்கும் முதலீட்டாளர்களை வரவழைப்பதில் அரசு கவனம்

காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் திட்டங்களில் ஒன்றாக அதனை தணிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியின் 70 சதவீத இலக்கை அண்மித்தல், 2050இற்குள் காபன் மத்திய நிலையை (Carbon Neutrality) எட்டுதல், காபன் வெளியேற்ற அனுமதி பத்திரத்துக்கு பதிலாக  சர்வதேச சந்தையைக் கண்டறிவது ஆகிய மூன்று இலக்குகளையும் அடைவதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதே அரசின் திட்டம் ஆகும்.

இது தொடர்பான கலந்துரையாடல் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன மற்றும் சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

எதிர்கால எரிசக்தி ஆதாரங்கள், கார்பன் வெளியேற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஹைட்ரஜன் போன்றவற்றின் மீதான தனது சர்வதேச அறிவை சொல்ஹெய்ம் இந்தக் கலந்துரையாடலுக்கு வந்திருந்த அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பில் கருத்து தெரிவித்த எரிக் சொல்ஹெய்ம்,  இந்தியா, சீனா போன்ற நாடுகள் இதன்மூலம் அதிக நன்மைகளை பெற்றிருப்பதாகவும் அதே நன்மைகளை இலங்கையாலும் பெற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தீர்த்து வைப்பார் என தாம் நம்புவதாகவும் சொல்ஹெய்ம் மேலும் சுட்டிக்காட்டினார்.

இங்கு உரையாற்றிய காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, புதுப்பிக்கத்தக்க சக்தி மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை என்றும், ஐரோப்பா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் இத்துறை சார்ந்த முதலீட்டாளர்கள் அதிகளவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே இலங்கை மக்கள் பயன்பெறும் வகையில் அவ்வாறான முதலீடுகள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ருவன் விஜயவர்தன, கொள்கைகளை உருவாக்கும் போது இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும், புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பான மாநாடு ஒன்றை எதிர்காலத்தில் நடத்தவிருப்பதாகவும் அதன் ஊடாக முதலீட்டாளர்களை எமது நாட்டுக்கு ஈர்க்க முடியும் என நம்புவதாகவும் ருவன் விஜயவர்தன மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, காலநிலை மாற்றம் தொடர்பான அலுவலக பணிப்பாளர் குமுதுனி வித்யாலங்கார, உதவிப் பணிப்பாளர் ஆர்.எம்.ஆர்.டி.வீரசூரிய, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பணிப்பாளர் பன்டு டி சில்வா, இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் எம்.எல். வீரசிங்க, பிரதம பொறியியலாளர் வஜிர விஜேகோன், பிரதம பொறியியலாளர் கே. ராம்ஜி, சஜனா சூரியராச்சி, ஹஷான் ஜெயகொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வட,கிழக்கில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்த கால்நடைகளுக்கு நட்டஈடு

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அதிகுளிருடன் கூடிய காலநிலையால், வடக்கு, கிழக்கில் பெரும் தொகையிலான கால்நடைகள் மரணமடைந்தன.

இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தால், இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  1,800 இற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டுமென வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையால் இறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்- ரெலோ சபா.குகதாஸ்

சீரற்ற காலநிலையால் இறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அண்மையில் ஏற்பட்ட காலநிலை அனர்த்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாடுகள், எருமைகள் ,ஆடுகள் என ஆயிரத்துக்கு அதிகமான கால் நடைகள் இறந்துள்ளன.  இதனால் வாழ்வாதாரத்தை நம்பி வாழும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல கோடி ரூபா பெறுமதியான தங்களது கால்நடைகளை இழந்துள்ளமையால் அவர்களது வாழ்வாதார மீட்சிக்கு அரசாங்கம் விரைவாக இழப்பீட்டு நிதியை வழங்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க செயலாளர்கள்  துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மண்டாஸ் புயல் தாக்கம் வட, கிழக்குக்கு பாதிப்பு

ஒருவர் உயிரிழப்பு-  2,143 பேர் பாதிப்பு – 275 மாடுகள் பலி – 510 வீடுகள் சேதம்

மண்டாஸ் புயல் நேரடியாக தாக்காத போதிலும் தொடர்ச்சியான மழை, கடும் குளிர், வேகமான காற்றால் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன. கிழக்கு மாகாணத்தில் ஒருவர் உயிரிழந்தார். 245 குடும்பங்களை சேர்ந்த 883 பேரும், 484 குடும்பங்களை சேர்ந்த 1,659 பேருமாக 729 குடும்பங்களை சேர்ந்த 2143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வடக்கு கிழக்கில் 275இற்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன. வங்கக்கடலில் மையம் கொண்ட தாழமுக்கம் மண்டாஸ் புயலாக மாற்றம் கொண்டது.

இது வடக்கு – வடமேற்காக நகர்ந்தது. தமிழகக் கரையை புயலாக இது நள்ளிரவை தாண்டி கடந்தது. இந்த புயலின் நகர்வின் தாக்கத்தால் நேற்று முன்தினம் இரவு வடக்கு – கிழக்கில் அதிக மழைவீழ்ச்சி பதிவானது. அத்துடன், மிகக் குளிரான காலநிலையும் நீடிக்கிறது. மேலும், வேகமான காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல மரங்கள் வீடுகளின்மீது வீழ்ந்ததில் அவை சேதமடைந்தன.

வடக்கில் 1,659 பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் 112 குடும்பங்களை சேர்ந்த 407 பேரும் முல்லைத்தீவில் 141 குடும்பங்களை சேர்ந்த 454 பேரும், வவுனியாவில் 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேரும், கிளிநொச்சியில் 172 குடும்பங்களை சேர்ந்த 585 பேரும், மன்னாரில் 50 குடும்பங்களை சேர்ந்த 184 பேருமாக 484 குடும்பங்களை சேர்ந்த 1,659 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேசமயம், யாழ்ப்பாணத்தில் ஒரு வீடு முழுமையாகவும் – 76 வீடுகளும், முல்லைத்தீவில் 141 வீடுகளும், வவுனியாவில் 7 வீடுகளும், கிளிநொச்சியில் 34 வீடுகளும், மன்னாரில் முழுமையாக ஒரு வீடும் பகுதியளவில் 11 வீடுகளுமாக வடக்கு மாகாணத்தில் 2 வீடுகள் முமுமையாகவும் 269 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

கிழக்கில் ஒருவர் பலி!

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான மழை மற்றும் கடும் குளிரான காலநிலையால் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு வெல்லாவெளியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 குடும்பங்களை சேர்ந்த 173 பேரும், திருகோணமலையில் 71 குடும்பங்களை சேர்ந்த 251 பேரும், அம்பாறையில் 130 குடும்பங்களை சேர்ந்த 459 பேருமாக கிழக்கு மாகா ணத்தில் 245 குடும்பங்களை சேர்ந்த 883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் 44 வீடுகளும், திருகோணமலையில் 68 வீடுகளும், அம்பாறையில் 129 வீடுகளுமாக கிழக்கு மாகாணத்தில் 241 வீடுகள் சேதமடைந்துள்ளன.

275 மாடுகள் பலி!

கிளிநொச்சி, முல்லைத்தீவு, திரு கோணமலை மாவட்டங்களில் 275இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்தன. கிளிநொச்சி மாவட்டத்தில் 165 மாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 மாடுகளும், திருகோணமலையில் 50 மாடுகளும் உயிரிழந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டெஸ் சூறாவளியால் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வங்காள விரிகுடாவின் தென் கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, சூறாவளியாக வலுவடைந்துள்ளதால் இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூறாவளிக்கு மாண்டெஸ் (Mandous) என பெயரிடப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் மழையால் யாழில் 1025 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 305 குடும்பங்களை சேர்ந்த 1025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது எனவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் டி.என் சூரியராஜா தெரிவித்தார்

கரவெட்டி,யாழ்ப்பாணம்,பருத்தித்துறை, மருதங்கேணி,சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளன. இதில் பருத்தித்துறைப்பிரதேச செயலர் பிரிவில் அதிகபட்சமாக 201 குடும்பங்களை சேர்ந்த 690 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் 16 குடும்பங்களை சேர்ந்த 46 அங்கத்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 24 குடும்பங்களை சேர்ந்து 72 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 54 குடும்பங்களை சேர்ந்த 177 பேரும், யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 25 குடும்பங்களை சேர்ந்த 80 பேரும் கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 அங்கத்தவர்களும் பாதிப்படைந்துள்ளன அவர் மேலும் தெரிவித்தார்.