இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு தடை விதிக்க பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு எதிராக கனடா தடைவிதித்துள்ள நிலையில், பிரிட்டனின் பழமைவாதக்கட்சி அமைச்சர்கள் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தொடர்ந்து மறுத்துவருவது குறித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் கரெத் தோமஸ் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

மிகமோசமான மனித உரிமை மீறல் குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகிய நால்வருக்கு எதிராக விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் தடைவிதிப்பதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டும் என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்திவரும் பின்னணியில், கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே கரெத் தோமஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் தடைவிதித்திருக்கின்றது.

ஆனால் இங்குள்ள பழமைவாதக்கட்சி அமைச்சர்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு உதவும் வகையில் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தொடர்ந்து மறுத்துவருகின்றார்கள்’ என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

தனிநபர்களை தடை செய்வதுமாத்திரம் போதாது- சர்வதேச நீதி பொறிமுறை அவசியம் – புலம்பெயர் செயற்பாட்டாளர்

தனிநபர்களை தடை செய்வது மாத்திரம் போதாது  குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தும் சர்வதேச பொறிமுறை அவசியம் என இலங்கையின் நீதி மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பின் ஆலோசகர் மரியோ அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

தடை ராஜபக்ச சகோதரர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அமெரிக்க கனடா இங்கிலாந்து போன்ற நாடுகளிடமிருந்து பல வருடங்களாக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது இலங்கை தான் தொடர்ச்சியாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது, எனவும் மரியோ அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு பின்னர் கனடா தடைகளை அறிவித்துள்ளமை தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள்  இலங்கையை துரத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தனிநபர்களை தடை செய்வது மாத்திரம் போதாது  குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தும் சர்வதேச பொறிமுறை அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் நாடு திரும்பவுள்ள கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெற விண்ணப்பித்துள்ளதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் கடந்த  ஜூலையில் நாட்டை விட்டு வெளியேறி  சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர்  நாடு திரும்பினார்.

பின்னர் அவர் சமீபத்தில் டுபாய் நாட்டுக்குச்  சென்றுள்ள  நிலையில், குடியுரிமை தொடர்பான அவரது கோரிக்கையை அமெரிக்கா  இதுவரை பரிசீலிக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவிக்கையில்,

‘முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெறுவதற்கான எந்தக்   கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. கோட்டாபய ராஜபக்க்ஷவும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் டுபாய் சென்றுள்ளார். இந்நிலையில்    இம்மாதம் 6 அல்லது 7 ஆம் திகதி அவர்  நாடு திரும்புவார்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறிய கோத்தபாய ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது உறவினர்கள்திங்கட்கிழமை (டிச. 26) அதிகாலை 2.55 மணிக்கு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய் நோக்கி சென்றதாகவும் அவர்கள் டுபாயிலிருந்து அமரிக்கா செல்ல உள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர்களோடு மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ, பேரப் பிள்ளையான டி.எச்.ராஜபக்ஷ ஆகியோரும் பயணித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

சீனி வரி மோசடி தொடர்பில் கோத்தாவை விசாரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு திட்டம்

சீனி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த வரியை 50 ரூபாவிலிருந்து 25 சதமாக குறைத்து இலங்கை அரசுக்கு கிடைக்க வேண்டிய 1,600 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரி வருமானத்தை இழக்கச் செய்து பாரிய நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு கிலோ கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட பண்ட வரி 25 சதமாக குறைக்கப்பட்டது.

இந்த வரிக்குறைப்பிற்கு 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட பண்ட வரி சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு நிதி அமைச்சின்  அதிகாரிகளிடம் விசாரணை நடாத்திய போது, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபயவின் ஆலோசனைக்கமைய வரிக் குறைப்பு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த வரிக் குறைப்பு அப்போதைய வர்த்தகத்துறை அமைச்சரான தனக்கே தெரியாமல் செய்யப்பட்டது எனவும், அரச அதிகாரிகள் சிலர் அது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றில் குரிப்பிட்டிருந்தார்.

இந் நிலையில், குறித்த வரி மோசடி தொடர்பில் விடயங்களை தெரிந்தோரின் வாக்கு மூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஓர் அங்கமாக  கடந்த 19ஆம் திகதி திங்களன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவில் ஆஜராக அமைச்சர் பந்துலவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும்  அன்றைய தினம் ஆஜராகாத அவர் பிரிதொரு திகதியை கோரியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி நடந்த அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு (கோபா) கூட்டத்தின் பின்னர் அரசின் உத்தரவிற்கமைய,  நிதி,பொருளாதார ஸ்திரம் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன செய்த முறைப்பாட்டை மையப்படுத்தி,  பாரிய அளவில் வரி குறைப்பின் ஊடாக கிடைக்கப்பெற்ற  பிரதிபலன் நுகர்வோரை சென்றடையாது வேறு தரப்பொன்று கொள்ளை இலாபம் ஈட்டியுள்ளதா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதிக்குற்ற விசாரணை பிரிவு முதலாம் இலக்க விசாரணை அறை ஊடாகவும் விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மாகாணத் தேர்தலை பிற்போட்டவர்களே 13ஐ பற்றி பேசுவது வேடிக்கைக்குரியது – நாமல் ராஜபக்ச

தேர்தலைக் காலந்தாழ்த்த முயற்சித்தவர்கள் தற்போது 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். மின்சாரம், எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின் விலைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறைத்திருந்தாலும், போராட்டம் ஊடாக மக்கள் அவரை விரட்டியடித்தார்கள் எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் நாட்டில் தேர்தல் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும்.

அன்று மாகாணசபைத் தேர்தலைக் காலந்தாழ்த்துவதற்காக செயற்பட்டவர்கள் இன்று அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியது. 13ஆவது திருத்தச் சட்டம், தேர்தல்கள் தொடர்பில் அவர்களுக்கு அக்கறை இருந்தால் கடந்த 2, 3 வருடங்களுக்கு முன்பு தேர்தலைக் காலந்தாழ்த்தி இருக்க மாட்டார்கள். நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அது தொடர்பான நீண்டக் கலந்துரை யாடல்களை நடத்தி தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். என்றார்

கோட்டாபயவை பதவியிலிருந்து விரட்டி ஜனாதிபதியாவதற்கு பஸில் திட்டமிட்டார் – உதய கம்மன்பில

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அந்த நெருக்கடியை மேலும் பெரிதாக்கவே பஸில் ராஜபக்ஷ திட்டம் தீட்டினார். கோட்டாபயவை விரட்டி பாராளுமன்றம் ஊடாக தான் ஜனாதிபதியாகும் திட்டத்திலேயே பஸில் செயல்பட்டார்” – என்று பிவித்திரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், “கோட்டாபயவின் ஆட்சியில் தோன்றிய பொருளாதார நெருக்கடி உக்கிரமடையாமல் தடுப்பதற்குப் போதுமான வாய்ப்பு இருந்தது. ஆனால், பஸில் அதைச் செய்யவில்லை.

நிலைமையைத் தனக்கு சாதகமாக பயன் படுத்துவதற்கு அவர் திட்டம் தீட்டினார். பொருளாதார நெருக்கடி உக்கிர மடைந்து கோட்டாபய பதவியை விட்டு ஓடினால் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாகும் திட்டம் ஒன்றை பஸில் வகுத்திருந்தார்.

அதற்காவே இரசாயன பசளைக்கான தடைக்கு அவர் அனுமதி வழங்கினார். இரசாயனப் பசளைக்கான தடை எந்தளவு விளைவை நாட்டில் ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட பஸில் அதற்கு அனுமதி வழங்கினார். அதேபோல், எரிபொருள் நெருக்கடி வந்தபோது 14 மணி நேர மின்வெட்டுக்கு பஸில் அனுமதி வழங்கினார்.

இவை அனைத்தும் நாட்டில் பெரும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தும். அதனூடாகக் கோட்டாபய பதவியை விட்டு ஓடுவார் என்று பஸில் அறிந்து வைத்திருந்தார். அப்படி நடந்தால் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாவது தான் பஸிலின் திட்டம். ஆனால், இடையில் வந்து ரணில் விக்கிரமசிங்க புகுந்து கொண்டதால் எல்லாம் பிழைத்துவிட் டது” – என்றார்.

நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் அமைப்பு இலங்கைக்கு அவசியம் – சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன்

கோட்டடாபய ராஜபக்ஷ சில காலம் சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு தனது நாடு அனுமதியளித்ததன் மூலம் இலங்கையில் அமைதியான ஆட்சிமாற்றத்திற்கு உதவியுள்ளது என கருதுவதாக சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

சிஎன்பிசிக்கு வழங்கிய பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையில் நல்லிணக்கத்திற்கான அவசியம் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,

கேள்வி:- நல்லாட்சியும் ஊழல்இன்மையும்,இலங்கைக்கு மிகமுக்கியமான சொற்பதங்கள் முக்கியமான அபிலாசைகள். நானும் நீங்களும் பலதடவை இலங்கை குறித்தும் அதற்குள்ள ஆற்றல் குறித்தும் பேசியுள்ளோம்.

அமைச்சர் அவர்களே நாங்கள் மீண்டும் இந்த வருட ஆரம்பத்திற்கு திரும்பி செல்வோம் என்றால்  ஏன் சிங்கப்பூர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுமதியளித்தது- புகலிடம் இல்லை அதனை நான் தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன்.

நான் இங்கு சந்தித்த இலங்கையர்களும் புலம்பெயர் தமிழர்களும் இந்த அனுமதி குறித்து கடும் அதிர்ச்சியும் சீற்றமும் வெளியிட்டிருந்தனர் – பிழையான செய்தியை இது சொல்லியதாக கருதினர்?

பதில் :- நான் இது குறித்து என்ன தெரிவிக்க விரும்புகின்றேன் என்றால் அதிகாரமாற்றம்  மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி சிங்கப்பூரிற்கு வந்தவேளை அவர் அப்போதும் ஜனாதிபதியாக காணப்பட்டார், அவர் அதன் பின்னர் தனது இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

அவர் அதன் பின்னர் ஒரு சாதாரண இலங்கை பிரஜையாக விளங்கினார்,நாங்கள் அவரை ஒரு சாதாரண இலங்கை பிரஜையாகவே நடத்தினோம்.

அவர் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே சிங்கப்பூரில் தங்கியிருந்தார், எந்த இலங்கை பிரஜைக்கும் அதற்கான உரிமையுள்ளது.

நாங்கள் அவருக்கு எந்த சலுகையையும் வழங்கவில்லை, விடுபாட்டுரிமையையும் வழங்கவில்லை,பாதுகாப்பையும் வழங்கவில்லை.

இது சட்டத்தின் ஆட்சி தொடர்பானது மிகவும் அவதானமாக நியாயமான முறையில் நடந்துகொள்வது தொடர்பானது நாங்கள் அதனை செய்தோம்.

இலங்கையில் அமைதியான முறையில் அதிகாரமாற்றத்திற்கு நாங்கள் உதவியுள்ளோம் என்றால் அது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றோம். அவர் மீண்டும் இலங்கைக்கு சென்றுள்ளார்.

நான் அந்த நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படும் என நம்புகின்றேன். நான் பல தடவை இலங்கைக்கு சென்றிருக்கின்றேன்,உலகம் முழுவதும் இலங்கை மக்கள் மிகவும் வெற்றிகரமானவர்களாக திகழ்கின்றனர்,

இலங்கை ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தீவு.ஆனால் அவர்களிற்கு அரசியல் அமைப்புமுறையொன்று அவசியம், நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் அமைப்பு- இனம் மதம் மொழி

அனைத்து மக்களிற்கும் அவர்கள் தங்கள் ஆற்றலை பயன்படுத்துவதற்கான  நியாயமான வாய்ப்பை  வழங்கவேண்டும்,இது இலங்கைக்கு முக்கியமான விடயம் என நான் கருதுகின்றேன்.

எனக்கு நேர்ந்ததே கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் நேர்ந்துள்ளது என்கிறார் மைத்திரி

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு 2019ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

ஆனால் இறுதியில் எனக்கு நேர்ந்ததே கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் நேர்ந்தது. பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்குவது பயனற்றது, பாதுகாப்புத்துறை முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 410 பில்லியன் ரூபாவில் 100 பில்லியன் ரூபாவை கல்வி அமைச்சுக்கு மேலதிகமாக வழங்க ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும் என சபையில் ஜனாதிபதிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ.24) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்  பாதுகாப்பு  அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு  மற்றும் தொழில்நுட்ப அமைச்சு  ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை 2009 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வேகமாக அபிவிருத்தி அடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இதற்கு உப்பு, காரமாக என்னால் கருத்து குறிப்பிட முடியும், ஆனால் நேரம் இல்லாத காரணத்தினால்   இன்றைய  நாளுக்கான விடயம் தொடர்பில் கருத்துரைக்கிறேன்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக நான் பதவி வகிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு 280 பில்லியன் அல்லது 285 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால் தற்போது 410 பில்லியன் குறிப்பாக இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை, பொலிஸார் பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். அத்துடன் பொருளாதார பாதிப்பையும் பொலிஸார் எதிர்க்கொண்டுள்ளார்கள்.

பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கியுள்ள 410 பில்லியன் நிதியில் இருந்து 100 பில்லியன் ரூபாவை குறைத்து அதனை கல்வி அமைச்சுக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்துகிறேன். இலவச கல்வியை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும், கல்வியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் 160 ரூபா உணவு கொடுப்பனவு தற்போதைய நிலைக்கு போதுமானதல்ல எற்றார்.