போதிய சமையல் கலைஞர்கள் நாட்டில் இல்லை; ஜனாதிபதி கவலை

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்புகளை முழுமையாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் சமையல் கலையானது சர்வதேச சுற்றுலா பயணிகள் இடையே பிரசித்தி பெற்றுள்ளதாகவும் அதன் வளச்சிக்கு அரசாங்கம் ஒத்துழைப்புகளை வழங்குமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

2023 சமையல் கலை உணவுக் கண்காட்சியை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சமையல் கலை தொடர்பான பாடசாலை ஒன்றினை ஆரம்பிக்கவும், துறைசார் சமையல் கலைஞர்களை உருவாக்குவதற்குத் தேவையான முறைமையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கருத்து வௌியிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதே முதற்கட்ட நோக்கம் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, நாட்டிலிருந்து பெருமளவிலான மனித வளங்கள் வெளியேறுவதாகவும் போதிய சமையல் கலைஞர்கள் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாண சுற்றுலா துறை நிறுவனங்கள் உரிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்

இலங்கை இந்திய போக்குவரத்து விரிவுபடுத்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவே சுற்றுலாத்துறையில் மேம்படுத்தும் நோக்குடன் சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களை சட்டரீதியாக பதிவு செய்து ஒழுங்குபடுத்தலை மேற்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகமும் இணைந்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் யாழ் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறை சேவையை வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

சுற்றுலாத்துறையில் மேம்படுத்தும்நோக்குடன் சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களை சட்டரீதியாக பதிவு செய்வதன் ஊடாக அவற்றை ஒழுங்குபடுத்தலை நோக்காக கொண்டு இக்கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் காணப்படும் சுற்றுலாத்துறை சேவையை வழங்கும் நிறுவனங்களுள் பதிவுசெய்த நிறுவனங்கள், பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் முறைப்படியாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் .

மேலும் இலங்கை இந்திய போக்குவரத்து விரிவுபடுத்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதனால் யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தவேண்டியுள்ளது.

மேலும் யாழ் மாவட்டத்தில் உள்ள அதிகமான சுற்றுலாத்துறைச் சேவையை வழங்கும் நிறுவனங்கள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவுசெய்யப்படவில்லை. இதனால் இவ் விழிப்புணர்வு கலந்துரையாடல் மூலம் அதிகமாக சுற்றுலாத்துறைச்சேவையை வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்யக்கூடியதாக இருக்கும் என்றார்.

இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுற்றுலா பணியக தலைவர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர், வடக்கு மாகாண சுற்றுலா பணியக உதவிப் பணிப்பாளர் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறைச் சேவையை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடம் இலங்கை – ஃபோர்ப்ஸ்

ஆபிரிக்காவிற்கு வெளியில் வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கை உள்ளதாக பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை தனது தனித்துவமான சுற்றுலா சலுகைகள் மற்றும் இயற்கை அழகு காரணமாக தொடர்ந்து பலரதும் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது.

உலக நாடுகளில் சிறுத்தைகளின் அடர்த்தியான பரம்பலைக் கொண்ட இடமாகவும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை விடவும் மிகச்சிறந்த பூனை இனங்களைக் கொண்ட இடமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஆசிய யானைகள், மயில்கள், நீர் எருமைகள், குரங்குகள் மற்றும் தேன் உண்ணி கரடிகளை அதிகம் கொண்ட தேசமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேனப் கோடில் இருந்து டொமினிக்கன் குடியரசு வரை திமிங்கலங்களை பார்க்கக்கூடியதாக இருந்தாலும், இலங்கையில் மாத்திரமே எளிதில் நீலத் திமிங்கலங்களை காண முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

சுற்றுலாப் பயணிகள் பீ.சீ.ஆர் அறிக்கை, தடுப்பூசி உறுதிப்படுத்தல்களை சமர்பிக்க அறிவுறுத்தல்

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீது புதிய கொவிட் விதிமுறைகளை அறிமுகப்படுத்த சுற்றுலா துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைவாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியைப் பெற்றதற்கான  அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுற்றுலா துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சுற்றுலா துறை அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியைப் பெற்றதற்கான  அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் கொவிட்  எதிர்ப்பு தடுப்பூசியைப் பெறாத சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட பீ.சீ. ஆர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேவேளை  இலங்கைக்கு வருகை தரும் அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும் என்றும் உலகளாவிய ரிதியில் மீண்டும் கொவிட் தொற்று நோயின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.