ஜனாதிபதித் தேர்தல்,நாடாளுமன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்க முடியாது – டியூ குணசேகர

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன எனத் தகவல்கள் வெளியாகும் நிலையில், இவ்விரு தேர்தல்களையும் ஒத்திவைக்க முடியாது என்று இலங்கை கம்யூனிஸ் கட்சி தலைவரான டியூ குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு அரசமைப்பில் இடமுள்ளது. ஆனால், அதனை ஒத்திவைப்பதற்கு இடமில்லை. அதேபோல் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கும் அரசமைப்பில் இடமில்லை. ஆளுந்தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடினால்கூட அதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றே நம்புகின்றேன்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் அரசமைப்புக்கு அப்பால் சென்று, சிற்சில சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தி ஒத்திவைக்கப்பட்டன. இதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை பிற்போட நிறைவேற்று அதிகாரத்துக்கு அதிகாரம் இல்லை.” – என்றார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, ஆணைக்குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

இது தொடர்பான செலவு மதீப்பீட்டு அறிக்கை இலங்கைவின் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் மதிப்பீட்டு அறிக்கைகளை திறைசேரி கோருமெனவும், இதற்கமைய ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி சபைத் தேர்தல்களுக்கான செலவு மதிப்பீட்டு அறிக்கைகளை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் – ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்ரங்கில் இன்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் சாத்தியமாகுமாகும் பட்சத்தில் மாகாண சபைத் தேர்தலையும் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உத்தேசிப்பதாக தம்மிக்க பெரேரா தெரிவிப்பு

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார் நாட்டின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா.

அந்தவகையில் 51% வாக்குகளை மொத்த வாக்களாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஜனாதிபதித் தேர்தல் போரில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேரா போட்டியிடுவார் என்ற வதந்திகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தம்மிக்க பெரேரா,

பெரும்பான்மைக் கட்சிகள் தாம் வேட்புமனுத் தாக்கல் செய்வதில் இணக்கம் காணும் பட்சத்தில் அது தனது தேர்தல் பிரசாரத்திற்கு பெரும் உந்துதலாக அமையும் என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியிலிருந்து களமிறங்குவீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தான் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதாக மாத்திரம் தெரிவித்தார்.

இந்நிலையில் அரசியல் திட்டத்தில் ஒரு படியாக கல்வித் திட்டம் தொடங்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பியபோது, ​​இளைஞர் சமுதாயத்தை அறிவாற்றலுடன் செயற்படவும் அவர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கவும் டி.பி. கல்வி தொடங்கியது.

இலங்கையில் 55 லட்சம் குடும்பங்களில் 11 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் பிள்ளைகள் கல்விப் பாடசாலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்போது கல்வி பயின்று வருகின்றனர்.

Posted in Uncategorized

தமிழர் தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ! நாடாளுமன்றில் தனித்து இயங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை தமிழர் தரப்பு சார்பில் நிறுத்துவது என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் பங்காளிக் கட்சியான ஈ. பி. ஆர். எல். எவ்வின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல். எவ். தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் வேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திலேயே ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்றும் இது தொடர்பில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது எனவும் முடிவு எட்டப்பட்டது. அத்துடன், இந்த உத்தியை கொண்டு சிங்கள தரப்புகளிடம் பேச்சு நடத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசுக் கட்சி விலகிய போதிலும் அந்தக் கட்சியின் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம். பியே இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கொரடவாக உள்ளார். இதனால், பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தில் தமக்கு போதுமான நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், பாராளுமன்றத்தில் தனித்து செயல்படவும் அந்தக் கட்சியின் எம். பிக்கள் முடிவு செய்துள்ளனர்.

இதே நேரம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக அனைத்து தமிழ் கட்சிகளுடனும் மீண்டும் பேசி இந்திய தூதுவரை சந்தித்து இது தொடர்பில் பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அறிய வருகின்றது.

அடுத்த ஜனாதிபதியாக பசில் ராஜபக்ச கிடைக்கவுள்ளமை நாட்டுக்கு கிடைத்த பேரதிஷ்டம் – காமினி லொக்குகே

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தீர்மானங்களுக்கு கட்சி என்ற ரீதியில் நாடாளுமன்றத்தின் ஊடாகவும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்கவுள்ளதாகவும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை விரைந்து நடாத்த நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம் – ஜீ. எல். பீரீஸ்

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் வகையில் எதிர்வரும் மாதங்களில் பாராளுமன்றத்தில் சட்ட திருத்த பிரேரணை ஒன்றை முன்வைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் எடுக்கும் சகல முயற்சிகளுக்கும் நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நுவரெலியா மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் நீதியரசர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ஆற்றிய உரை பாரதூரமானது.

தேர்தல் தொடர்பில் மக்களுக்கு அக்கறையில்லை,தேர்தல் குறித்து கவனம் செலுத்த கூடாது என்பதே ஜனாதிபதியின் உரையின் உள்நோக்கமாக காணப்பட்டது.

தேர்தலற்ற சமூகம் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படாது.இலங்கை ஜனநாயக நாடு என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்தல் அவசியமில்லை என அரச தலைவர் குறிப்பிடுவதை அலட்சியப்படுத்த முடியாது.மக்களின் விருப்பத்துக்கு அரசாங்கம் செயற்படும் போது அங்கு சர்வாதிகாரமே தோற்றம் பெறும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ஆற்றிய உரையை அலட்சியப்படுத்த முடியாது.உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு திரைமறையில் ஜனாதிபதி மேற்கொண்ட சகல முயற்சிகளும் அவரது வார்த்தை ஊடாக தற்போது வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு திறைசேரியின் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இருப்பினும் நாட்டின் இறுதியானதும் மேன்மை மிக்கதுமான உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மதிக்காமல் நிறைவேற்றுத்துறை செயற்படுகிறது.இதனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நிர்ணயிக்காமல் பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசியல் நோக்கத்துக்காக பிற்போடப்பட்டுள்ள பின்னணியில் தற்போது ஜனாதிபதி தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டும் என்றால் அதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியமாகும்.

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் பாராளுமன்றத்திற்கு ஒரு திருத்தப் பிரேரணையை கொண்டு வரவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு சுதந்திர மக்கள் சபை என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.அத்துடன் ஜனாதிபதி தேர்தலை வெகுவிரைவில் நடத்த சகல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.அதற்கு சுதந்திர மக்கள் முன்னணி முன்னிலை வகிக்கும் என்றார்.

2048 இல் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை உருவாக்கும் திட்ட வரைபடத்தை முன்வைத்தார் ஜனாதிபதி

ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்கமாட்டோம் என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே எனது போராட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

நான்கு முக்கிய தூண்களில் நாட்டை கட்டியெழுப்புவோம். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்தி, அடுத்த 25 ஆண்டுகளில் உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவோம். நாட்டை கட்டியெழுப்பும் பணியில் இளைஞர் சமூகம் மீது பெரும்நம்பிக்கை வைத்திருக்கிறோம். துரித பொருளாதார மறுசீரமைப்பு செயல்பாட்டில் அரச – தனியார் துறை ஒத்துழைப்பை அதிகரிக்க கூட்டாய்வு முறையை அமுல்படுத்துவோம். மோசடியை ஒழிக்க விசேட செயலணி உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

‘தேசிய நிலைமாற்றத்துக்கான திட்ட வரைபடம்’ என்ற திட்டத்தை முன்னிறுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த உரையின் முக்கிய அம்சங்கள் மட்டும் வருமாறு, நவீன உலகுக்கும், நவீன தொழில் நுட்பத்துக்கும் ஏற்றவாறு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்காவிட்டால் நாடு பின்நோக்கி செல்லும். அதன் முடிவாக நாடு பொருளாதார காலனித்துவமாக மாறிவிடும். எனவே, நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அதற்கு அவசியமான துரித பொருளாதார மறுசீரமைப்புக்களை செயல்படுத்த வேண்டும். ஒழுங்குபடுத்தல், கொள்முதல் மற்றும் அரசியல் ஆகிய அனைத்து அம்சங்களிலும் ஊழலை முற்றிலுமாக நிறுத்துவதற்கும், டிஜிற்றல் மயமாக்கல் மற்றும் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க பொறிமுறையின் மூலம் ஊழலுக்கு எதிரான நடைமுறைகளை செயல்படுத்தவும் ஒரு விசேட செயலணி நிறுவப்படும். மறுசீரமைப்பு வேலைத்திட்டம், இலகுவான பணி இல்லை. என்றாலும், நாட்டுக்கு சிறந்த விடயங்களை மேற்கொள்ள அரசாங்கம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. நாம் எடுக்கும் தீர்மானங்கள் எவ்வளவு கடினமான மற்றும் வேதனையானதாக இருந்தாலும், எதிர்கால சந்ததியினருக்காக அந்தக் கடினமான பாதையில் சரியான கொள்கைகளின்படி முன்னேறுவதன் மூலம் மாத்திரமே நாட்டை மீண்டும் உயர்வடையச் செய்ய முடியும்.

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஓர் இலக்குடன் சரியான பாதையில் செல்வதன் விளைவுகளை இன்று நாம் அனைவரும் அனுபவிக்கிறோம். 70வீதம் வரை உயர்ந்திருந்த பணவீக்கத்தை தற்போது 25.2 வீதம் வரை குறைக்க முடிந்துள்ளது. இதனால் வாழ்க்கைச் சுமை படிப்படியாகக் குறைந்து வருவதோடு, ஒட்டுமொத்த சமூகமும் இந்த பயனை உணர ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை முன்னேற்ற முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களில் நாட்டை விற்கிறார்கள் என்று கோஷமிட்டு இதனை சிலர் குழப்ப முயல்கின்றனர். முன்னரும் இவ்வாறு தான் நடந்தது. இனி, இது போன்ற கோஷங்களுக்கு நீங்கள் ஏமாறமாட்டீர்கள் என்று எங்களுக்கு தெரியும். நாட்டை முன்னேற்ற நாம் அனைவரும் கடுமையாக உழைத்து, நம்மை அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. 2048 ஆம் ஆண்டுக்குள் உலகில் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற நமது இலக்கை அடைய வேண்டும் என்றார். மேலும், நவீன உலகத்துக்கும், நவீன தொழில்நுட்பத்துக்கும் ஏற்றவாறு நமது பொருளாதாரத்தை வடிவமைக்காவிட்டால், பின்னோக்கிச் செல்ல வேண்டி ஏற்படும். இத்தகைய விலகலின் விளைவு, நாடு பொருளாதார காலனித்துவமாக மாறுவதுதான்.

தவறான கொள்கைகள், பலவீனமான நிகழ்ச்சிகள், தோல்வியடைந்த வேலைத் திட்டங்கள் ஆகியவற்றை ஓர் ஒழுங்கான பாதையில் முன்னெடுப்பதையே பொருளாதார மறுசீரமைப்புகள் மூலம் நாம் மேற்கொள்கிறோம். பழைய பாரம்பரிய முறைகள் மூலம் வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டை மீண்டும் கட்டியெ ழுப்ப முடியாது. நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் – என்றும் சொன்னார். மேலும் நாட்டின் அபிவிருத்தி- அரச நிதி மற்றும் மறுசீரமைப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு, அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு என்ற நான்கு தூண்களில் கட்டி யெழுப்பப்படும் என்று தெரிவித்ததுடன், அவை குறித்து விளக்கமும் அளித்தார்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார் ஜனக ரத்நாயக்க

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து தான் அகற்றப்பட்டமை இலங்கை மக்களிற்கு ஏற்பட்ட தோல்வி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தனது தோல்வியில்லை எனவும் இலங்கையின் அனைத்து மக்களினதும் தோல்வி, இதனை பற்றி தனக்கு எந்த பிரச்சினையுமில்லை என்றும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவேன் என முன்னரே உறுதியாக தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க அழைத்தால் ஏற்பேன் – சரத் பொன்சேகா

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தி தனக்கு அழைப்பு விடுத்தால் அதை ஏற்கத் தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறுகையில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு எனக்கு இதுவரை யாரும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், என்னைச் சந்திப்பவர்கள் எல்லாம் சொல்வது இப்போதைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்றால் உங்களைப் போன்ற ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று.

நான் இப்போது அரசியல் செய்வது ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு அதற்குள் இருந்து அழைப்பு வந்தால் ஏற்றுக்கொள்வேன்.

இந்த நாடு பொருளாதார ரீதியில் சீரழிவதற்குக் காரணம் ஊழல், மோசடிகள்தானே தவிர பொருளாதார நிபுணர்கள் அல்லர்.

ஊழல் மிக்க அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவு பெற்ற ஊழல்மிக்க வர்த்தகர்களுமே இந்த நாட்டைச் சீரழித்தனர்.

இவர்களிடமிருந்து நாம் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கினார் என்பதற்காக இந்த நாடு முன்னேறிவிடாது” – என்றார்.

Posted in Uncategorized