தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) திருகோணமலை மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

தைப்பொங்கல் தினமான இன்றைய தினம்(15) திருகோணமலை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) அலுவலகம் சுங்க வீதியிலுள்ள தனது சொந்தக்கட்டிடத்தில் சம்பிரதாய பூர்வமாக கட்சி செயலாளரும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), கட்சியின் உப தலைவர்களான முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் பிரசன்னா, மற்றும் ஹென்றி மகேந்திரன் ஆகியோரால் கட்சி கொடியேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து வருகை தந்திருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மற்றும் உபதலைவர்களான நி.பிரசன்னா, மற்றும் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் திருகோணமலை மாவட்ட நிர்வாகத்தினரின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும். ஏனைய மாவட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளைவிட ஒருபடி மேலாக இம்மாவட்ட கட்சியின் செயற்பாடுகள் இருப்பதாகவும். தொடர்ந்து இவ்வாறே ஒற்றுமையாக செயற்படுவீர்களானால் இன்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் பல பிரதேச சபைகளையும் பெற்ற நாங்கள் வருகின்ற தேர்தல்களில் எமது மக்கள் பிரநிதிகளை திருகோணமலையிலும் பெறுவதற்கான காலம் கனிந்துள்ளதாகவும். பாராட்டி பேசினார்கள். நிறைவாக மாவட்ட அமைப்பாளர் அ.விஜயகுமார் அவர்கள் நன்றியுரை வழங்கி நிகழ்வை நிறைவுசெய்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெருகல் மக்களுக்கு ரெலோ நிவாரண உதவி

இன்றைய தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெருகல் வட்டவன் கிராம மக்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், திருகோணமலை குலம் , தம்பலகாமம் ரூபன், திரகோணமலை ரதன் , மற்றும் எமது மாவட்ட அமைப்பாளர், விஜயகுமார், உதவி அமைப்பாளர் பிரபாதரன், உறுப்பினர்கள் மணி , கமலேஸ், சற்பரூபன், சஞ்சீவ், ராம்கி, சஜீவன், ஆகியோரின் நிதி உதவியுடனும் ரஞ்சித், ராஜன், பிரேம், டெனி, பூவா மற்றும் எமது வெருகல் பிரதேச உறுப்பினர்களின் பங்களிப்புடன் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

இதற்காக எமக்கு ஏற்பாடுகளை செய்து தந்த எமது மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா அண்ணன், வட்டவன் பாடசாலை அதிபர் கோணேஸ்வரன் மற்றும் கிராம சேவையாளருக்கும், கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கும் நன்றிகள்

எமக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்கிய எமது உறவுகளான கிராம மக்களுக்கும் எமது வெருகல் அங்கத்தவர்களுக்கும் வெருகல் பிரதேச எமது மூத்த உறுப்பினர்களுக்கும் நன்றிகள்.

 

மேலும் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் அதற்கான நிதி உதவிகள் கிடைக்கப்பெற்றதும் உங்களையும் உதவிகள் வந்து சேரும்.

“என்றும் நாம் உங்களுடன்”

ரெலோ – TELO
திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை மாணவர் படுகொலை – நீதி நிலைநாட்டப்படாமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை விசனம்

திருகோணமலை 5 மாணவர் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதுகுறித்து உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை விசனம் வெளியிட்டுள்ளது.

செவ்வாய்கிழமையுடன் (2) ‘திருகோணமலை 5 மாணவர் படுகொலை’ இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலை நகரில் 5 தமிழ் மாணவர்கள் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, திருகோணமலை 5 மாணவர் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், அதுகுறித்து உண்மை, நீதி நிலைநாட்டப்படுவதையும், இழப்பீடு வழங்கப்படுவதையும் உறுதிசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. அதுமாத்திரமன்றி முக்கிய ஆதாரங்கள் இருந்தபோதிலும், அது மூடிமறைக்கப்பட்டிருப்பதாகவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

எதிர்ப்புக்கு மத்தியில் திருகோணமலை இலுப்பைக்குளத்தில் புதிய புத்தர்சிலைகள்

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பொரலுகந்த ரஜமஹா விகாரைப்பகுதியில் இன்று (06) காலை பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்களினால் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஆரம்பத்தில் புத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநரிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஆளுநரினால் குறித்த கட்டுமானங்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் தடையுத்தரவையும் மீறி குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிராக பொதுமக்கள் 03.09.2023 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் பின்னர் 09.09.2023 அன்று குறித்த பகுதியில் பொரலுகந்த ரஜமஹா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டு தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் எவ்வித அனுமதி இல்லாத நிலையிலும் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு இன்றைய தினம் (06) காலை குறித்த பகுதியில் இரண்டு புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

பௌத்த மக்களே இல்லாத, தமிழ் மக்கள் காலாகாலமாக வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும், இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முகமாகவும் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும், புத்த விகாரையின் கட்டுமானங்களைத் தொடர்ந்து இப்பகுதிகளைச்சூழ சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் உள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

திருமலையில் ஐ. ஓ.சி.யின் எண்ணெய் குதங்களை பார்வையிட்டார் இந்திய நிதி அமைச்சர்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் திருகோணமலையில் உள்ள ஐ. ஓ.சி.யின் எண்ணெய் குதங்களை வியாழக்கிழமை (2) பார்வையிட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் காஸ் ஒயில் குதங்களான 1, 2,  (Gasoil tank no 11,12) ஆகியன திறந்து வைக்கப்பட்டன.

இந்திய நிதியமைச்சர் திருக்கோணேஸ்வரத்திற்கு விஜயம்

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை  திருக்கோணேஸ்வரம் கோயிலில் இடம்பெற்ற  விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் குறித்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும்  பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்குமாறு திருகோணமலையில் கோரிக்கை

மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் அநீதிகளையும், நீதி மறுக்கப்படுவதையும் உலகத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கத்துடனும், எமது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்தும், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரவையை ஆக்கிரமித்து இருப்போரை வெளியேற்றக் கோரியும், எமது தாயகமான வட- கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்திற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளாகிய நாம் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கின்றோம்.

கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதற்கு  ஆதரவு தர முன்வந்துள்ளன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நிகழவுள்ள இந்த பொது முடக்கத்திற்கு, வட- கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம்.

மேலும், எம் மக்கள் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மனித உரிமை இயக்கங்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் உட்பட மாணவர் அமைப்புக்கள், மகளிர் உரிமை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் கழகங்கள், சிவில் சமூக சங்கங்கள் மற்றும் மத ஸ்தாபனங்கள் உட்பட, பல்துறை சார்ந்த செயற்பாட்டு அமைப்புக்களின் ஆதரவையும் பங்களிப்பையும் இந்த மக்கள் போராட்டத்தில் நாம் நாடி நிற்கின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இலங்கைத் தமிழரசுக் கட்சி , தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,  தமிழ்த் தேசியக் கட்சி,  ஜனநாயகப் போராளிகள் கட்சி , ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

விகாரை கட்ட அனுமதி மறுப்பு – திருமலை மாவட்ட செயலகத்தில் பிக்குகள் முற்றுகை போராட்டம்

திருகோணமலை மாவட்ட செயலகத்தை பிக்குகள் நேற்று முற்றுகையிட்டு போராடினர். அத்துடன், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்த மண்டபத்துக்குள்ளும் புகுந்து களேபரத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் நிலாவெளி – பெரியகுளத்தில் இடை நிறுத்தப்பட்ட விகாரையின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விகாரை நிர்மாணத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பிக்குகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விகாரை நிர்மாணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் பிக்குகளை அழைத்து விளக்கம் வழங்கினார். ஆனால், அவர்கள் அதனை ஏற்கவில்லை.

இந்நிலையில், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்குள் புகுந்த பிக்குகள் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தினர். இவர்கள் ஏற்படுத்திய குழப்பத்தால் கூட்டம் தடைப்பட்டது.

இதன்போது, “திருகோணமலை அனைத்து இன மக்களும் வாழும் ஒரு பிரதேசம். பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும் இவ்வாறான செயல்பாடுகளை முன்னெடுப்பார்களானால், அதற்கு நீங்களே முன்னுதாரணமாக இருப்பீர்கள் என்று ஆளுநர் கூறினார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஆளுநர், பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்க முடியாது – என்றார்

திருகோணமலையில் பயிற்சி விமானம் விபத்து: இரு விமானப்படையினர் பலி

திருகோணமலை சீனன்குடா விமானப்படைதளத்தில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானமே விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்து இன்று (07) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், பயிற்சியின் போது ஓடுபாதையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது விமானத்தில் இருவர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூதூர் தன்னார்வ தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டமையின் 17 ஆம் அண்டு நினைவு தினம்

மூதூரில் அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் கடந்துள்ளன.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் நடந்த படுகொலைச் சம்பவத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (04.08.2023) 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

எனினும் தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி 17 வருடங்களாகியும் இதுவரை கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

2006ம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள் மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதன்போது 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது. குறித்த படுகொலைச் சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இப்­ப­டு­கொ­லையில் முத்­து­லிங்கம் நர்மதன், சக்­திவேல் கோணேஸ்­வரன், ரிச்சட் அருள்ராஜ் சிங்­க­ராஜா பிறீமஸ், ஆனந்­த­ராஜா மோகனதாஸ் ரவிச்­சந்­திரன், ரிஷி­கேசன், கன­க­ரத்­தினம் கோவர்த்­தனி, கணேஷ் கவிதா, செல்­லையா கணேஷ் சிவப்­பி­ர­காசம் ரொமிலா, வயி­ர­முத்து கோகி­ல­வ­தனி, அம்­பி­கா­வதி ஜெய­சீலன், கணேஷ் ஸ்ரீதரன், துரை­ராஜா கேதீஸ்­வரன், யோக­ராஜா கோடீஸ்­வரன், முர­ளீ­தரன் தர்­ம­ரட்ணம், ஏ.எல்.மொகமட் ஜப்பா, ஆகியோர் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

மூதூர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இயங்­கி­வந்த அக்ஷன் பாம் எனும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த மேற்­படி 17 பணி­யா­ளர்­க­ளையும் ஆயுதம் தரித்த சீரு­டைக்­காரர்கள் நிறு­வன வளா­கத்­துக்குள் நுழைந்து நிலத்தில் குப்­பு­றப்­ப­டுக்கப் பண்ணி பின்­பக்­க­மாக தலை­யில் சுட்டு படு­கொ­லை­ ப­டுத்­தி­ய­தாக அன்­றைய செய்­திகள் தெரி­வித்­தன.