தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து சார்ள்ஸ் விலக பஸிலே காரணம் : கொழும்பு ஊடகம் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் விலகியதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷவே காரணம் என்று சிங்கள ஊடகம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சில நாட்களாக பொது அரசியலில் ஈடுபடாது இருந்து வந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ, கந்தானை எனும் இடத்தில் தங்கியிருந்து பாரிய அரசியல் திட்டத்தை தயாரித்துள்ளதாக எமது ஊடகம் அறிந்துள்ளது.

அதற்கமைவாக, கந்தானையில் இருந்தே பஸில் கொழும்பில் உள்ள பல முக்கியமான அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி சார்ள்ஸ் பதவி விலகியதன் பின்னணியில் பஸிலின் நிழல் வீழ்ந்துள்ளதாக சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஆனால், இது தொடர்பாக இது வரை முக்கியமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஆணைக்குழு உறுப்பினர் சார்ள்ஸின் இராஜினாமாவை ரணில் ஏற்றுக்கொள்ளவில்லை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அனுப்பிய இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கவில்லை என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி கடந்த வாரம் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் ஜனவரி 25 ஆம் திகதி தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததுடன், அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றொரு உறுப்பினருக்கு நேற்று இரவு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.மொஹமட் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் எஸ்.பி.திவரத்னவுக்கு நேற்று மீண்டும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆணைக்குழுவின் உறுப்பினர்களான கே.பி.பி. பத்திரன மற்றும் எஸ்.பி.திவரத்னவுக்கு ஆணைக்குழுவில் இருந்து ராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

அதன்படி, அந்த இரு உறுப்பினர்களின் வீடுகளுக்கும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு எம்.எம்.மொஹமட்டுக்கு மிரட்டல் அழைப்பு வந்ததாகக் கூறப்படும்போது எஸ்.பி. திவரத்னவுக்கு வாட்ஸ்அப்பில் மிரட்டல் குறுஞ்செய்தி வந்தது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் மாவட்டத்தில் 402 உள்ளூராட்சி உறுப்பினர்களை தெரிவு செய்ய 4111 வேட்பாளர்கள்

யாழ். நிர்வாக மாவட்டத்தில் 17 உள் ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 4111 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண தேர்தல்கள் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- யாழ். நிர்வாக மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இம்முறை போட்டியிடும் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்த முறை தேர்தலில் யாழ்.மாவட் டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேச் சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 13 அரசியல் கட்சிகள் சார்பில் 135 வேட்புமனுக்களும் 15 சுயேச்சைக் குழுக் கள் சார்பில் 15 வேட்புமனுக்களுமாக 150 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு தேர்தலுக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.

இந்த முறை தேர்தலில் வாக்களிப் பதற்கென யாழ்.மாவட்டத்தில் 4 லட் சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். அவர்கள் வாக்களிப்பதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் யாழ்.மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்முறை உள்ளூராட்சி மன்ற சட்டத்திற்கிணங்க அந்தந்த வட்டாரங்களிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு வட்டாரங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவேண்டிய நிலையில் உள்ளோம்.

அந்த வகையில் 243 வாக்கு எண்ணும் நிலையங்கள் யாழ். மாவட்டம் முழுவதும் அமைக்கப்படவுள்ளன. அந்த 243 வாக்களிப்பு நிலையங் களில் வாக்குகள் எண்ணப்பட்டு வட்டார தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பின்னர் மாவட்ட ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் வட்டார அடிப்படையில் 243 உறுப்பினர்களும் கட்சிகள் பெற்றுக்கொள்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிந்து அனுப்பப்பட வேண்டிய 159 வேட்பாளர்களு மாக 402 உறுப்பினர்கள் 17 சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளனர்.

இந்த 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக யாழ். மாவட்டத்தில் 4111 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 13 கட்சிகள் சார்பில் 3686 வேட்பாளர்களும் 15 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 425 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.

இதன் அடிப்படையில் மொத்த வாக்காளர் தொகையிலேயே 0.85 வீதமான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்தப்படுமா என்பது சந்தேகம் – உதய கம்மன்பில

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்தப்படுமா என்பது சந்தேகத்திற்குரியது. தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு கூட திறைச்சேரி இதுவரை நிதி ஒதுக்கவில்லை. அரசியலமைப்பின் 5 உறுப்பினர்கள் உறுதியாக இருந்தால் அரசியலமைப்பு பேரவை ஊடாக தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச சேவையாளர்களுக்கு மாத சம்பளம் வழங்குவது கடினமாக உள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச சேவைக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைமை தனியார் துறைக்கும் தாக்கம் செலுத்தும். அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.

தனி நபரின் மாத வருமானத்தை காட்டிலும் அத்தியாவசிய செலவுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. வரி அதிகரிப்பினால் அதிக சம்பளம் பெறும் தரப்பினர் நாட்டை விட்டு நிச்சயம் வெளியேறுவார்கள்.பிறிதொரு தரப்பினர் சட்டத்திற்கு முரணான வகையில் நாட்டை விட்டு வெளியேறுவார்கள், மூளைசாலிகளை நாட்டை விட்டு வெளியேற்றி தொடர்ந்து ஆட்சி செய்ய அரசாங்கம் முயற்சி செய்கிறது.

அரசாங்கத்தின் தவறான வரி அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.வரி கொள்கை தொடர்பில் பௌத்த மதம் பல விடயங்களை போதித்துள்ளது. பௌத்த மத கருத்துக்களை போதிக்கும் ஜனாதிபதி வரி கொள்கை தொடர்பான அறக்கருத்தை அறியாமல் இருப்பது ஆச்சரியத்திற்குரியது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு அமைய அரசியலமைப்பு பேரவை நேற்று புதன்கிழமை கூடியது. அரசியலமைப்பு பேரவை ஊடாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய நியமனங்களை வழங்கி தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அரசியலமைப்பு பேரவையில் சபாநாயகர்,பிரதமர்,ஜனாதிபதியின் பிரதிநிதி மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதி ஆகியோர் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக உள்ளார்கள். எதிர்க்கட்சி தலைவர்,எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதி மற்றும் மூன்று சிவில் உறுப்பினர்கள் ஆகியோர் அரசாங்கத்தின் பிரதிநிதிகளை காட்டிலும் உறுப்பினர் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர், ஆகவே அரசியலமைப்பு பேரவை ஊடாக தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக 5 உறுப்பினர்கள் உறுதியாக இருந்தால் வெற்றிக்கொள்ளலாம்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்தப்படுமா என்பது சந்தேகத்திற்குரியது. ஏனெனில் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க திறைச்சேரி இதுவரை நிதி ஒதுக்கவில்லை. திறைச்சேரி நிதி வழங்காவிட்டால் தேர்தலை நடத்த முடியாது,தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் தனிப்பட்ட நிதியை கொண்டு தேர்தலை நடத்த முடியாது என்றார்.

கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம்; முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்பாளர் அறிமுக கூட்டம் புதன்கிழமை(25) காலை 11 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் இடம்பெற்ற குறித்த அறிமுக கூட்டத்தில் ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான ரெலோ,புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எப்,ஜனநாயக போராளிகள் கட்சி,தமிழ் தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,கோவிந்தன் கருணாகரம்(ஜனா) சித்தார்த்தன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன்,எம்.கே .சிவாஜிலிங்கம் ,தமிழ் தேசிய கட்சி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா,ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த 5 கட்சிகளும் எதற்காக ஒன்றிணைந்து இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் சின்னமாக குத்து விளக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

குறித்த அறிமுகக் கூட்டத்தில் குறித்த 5 கட்சிகளையும் உள்ளடக்கி மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் 09 இல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வது சனிக்கிழமை பிற்பகல் 12 மணியுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து தேர்தலை நடத்தும் திகதியை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

இதற்கமைய கடந்த 5 ஆம் திகதி முதல் நேற்று வெள்ளிக்கிழமை வரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்,சுயாதீன குழுக்கள் நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட செயலகங்களில் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தின.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் கோரப்பட்டன.விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு பெறும்.

கடந்த 18ஆம் திகதி (புதன்கிழமை) முதல் இன்று 21 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்பட பெரும்பாலான சுயாதீனக் குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஒருசில மாவட்டங்களில் கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இதுவரை பொதுச் சின்னம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.

உரிய திகதியில் தேர்தல் நடத்தப்படும் தேர்தல் ஆணைக்குழு உறுதி

உள்ளூராட்சி மன்ற சட்டதிட்டங்களுக்கு அமைய உரிய திகதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு மீண்டும் உறுதியளித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடை நிறுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் இராணுவ கேர்ணல் டபிள்யு.எம்.ஆர்.விஜேசுதந்தர தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்யுமாறு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அனைத்து தரப்பினரும் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த பிரியந்த ஜயவர்தன, எஸ்.துறைராஜா மற்றும் பி.பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் பெப்ரவரி 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியது

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப் பணத்தை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி இன்றைய தினம் புதன்கிழமை(18) காலை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ரெலோ உட்பட ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இன்றைய தினம் புதன்கிழமை(18) காலை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயக போராளிகள் கட்சி,தமிழ் தேசிய கட்சி ஆகிய 5 கட்சிகளும் இணைந்து கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகள் உள்ளிட்ட மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தயார் : நீதிமன்றுக்கு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி  சாலிய பீரிஸ் உச்ச நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்ற  தேர்தலுக்கு எதிரான மற்றும் ஆதரவான மனுக்கள் மீதான விசாரணைகள்  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனத் சில்வா மற்றும் எஸ்.  துரைராஜா  ஆகியோர் முன்னிலையில்  எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.