அரசியலமைப்பு பேரவை வியாழன் கூடுகின்றது

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாட அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

இதன்போது உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்கள் அங்கு எடுக்கப்படம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நிதி ஆணைக்குழு, கொள்முதல் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன அடங்கும்.

ஜனாதிபதி கூறியது அப்பட்டமான பொய் – முஜிபுர் ரஹ்மான்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இன்றைய (23) பாராளுமன்ற உரை ஒரு ஜோக்காக இருந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தான் தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கூறியது தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதலளிக்கும் விதமாகவே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாமென தனக்கு ஒருபோதும் குறுஞ்செய்தி (SMS) அனுப்பவில்லை எனவும் ஜனாதிபதி மக்கள் அவதானங்களை திசை திருப்பும் விதமாக இல்லாத விடயத்தை சோடித்து கூறுவதாகவும், உயரிய சபையில் இவ்வாறு கருத்துத் தெரிவிப்பது அநுபவமும் முதிர்ச்சியும் மிக்க அரசியல் தலைவருக்குரிய பக்குவம் வாய்ந்த நடத்தையாக அமையாது.

ஜனநாயகம், லிபரல்வாதம் பற்றி பரப்புரை நடத்தும் ஜனாதிபதியின் அரசியல் போக்கு தற்போது மாறியிருப்பதை இன்றைய பாராளுமன்ற நடத்தை நன்றாக புலனானது.

உண்மையான ஜனநாயகவாதியாக இருந்தால் மக்கள் இறையாண்மை, மக்கள் ஆணை, தேச நலனை கருத்திற் கொண்டு மக்களுக்காகவும் நாட்டுக்காகவுமே சிந்தித்து தமது அரசியல் நடந்தையை ஒழுங்கமைத்திருக்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க ஒருமுறை பாராளுமன்றத்தில் வைத்து என்னுடன் கதைத்தார். அதற்கு முன்னதாக அநுர குமாரவுடன் உரையாடிக் கொண்டிருந்ததை அவதானித்தேன். எனக்கு அமைச்சுப் பதவியை ஏற்குமாறு 2 முறை வேறுவேறு ஆட்களை அனுப்பி அழைப்பு விடுத்தார். எனக்கு என்ன வேண்டுமென்றும் அவரால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதிகள் என்னிடம் கேட்டார்கள்.

இதை தான்டிய ஒரு பேச்சோ அல்லது தகவல் பரிமாற்றமே எமக்குள் இடம் பெறவில்லை. இருந்தபோதும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாமென்று, அல்லது அவரது பிரதிநிதிகள் மூலமோ அவ்வாறான குறுச்செய்தி SMS ஒன்றை ஜனாதிபதி ரணில் எனக்கு அனுப்பவில்லை.

அவர் அப்படி ஒரு SMS எனக்கு அனுப்பியதாக கூறுவது அப்பட்டமான பொய்யாகும். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலை நடத்த நிதி இல்லை : திகதி அறிவிப்பு சட்டவிரோதமானது (ஜனாதிபதியின் பாராளுமன்ற உரை)

அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய போதிலும், தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான உரிய திகதியை இதுவரை சட்டபூர்வமாக அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற விவாதத்தில் இன்று (23) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அரசியலுக்கு அன்றி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே தான் முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாவிட்டால் நாடொன்று எஞ்சாது எனவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் இன்று வாக்கெடுப்பொன்றை கோரியுள்ளனர். பொதுவாக இவ்வாறு வாக்கெடுப்பு கோருவதில்லை. மின்சக்தி என்பது அத்தியாவசிய சேவை. ஏன் இதனை எதிர்க்கிறார்கள்? ஏன் இந்த சேவைகளை எதிர்க்கிறார்கள். தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதை எதிர்க்கட்சி எதிர்க்கிறதா? இதுகுறித்து விவாதம் தேவையெனில் அதனை வழங்க முடியும். ஆனால், அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் விவாதம் கோரவில்லை. தேர்தலை ஒத்திவைப்பதாகக் கூறியே விவாதம் கேட்டிருந்தனர். தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. ஒத்திவைப்பதற்கு தேர்தல் ஒன்று இல்லை.

பொதுவாக இந்த விவாதத்தில் கலந்துகொள்வதில்லை என்று நான் அறிவித்திருந்தேன். ஏனென்றால் எனக்கு அரசியல் தேவையில்லையென்று நான் கூறியிருந்தேன்.

எனினும், தேர்தல் ஆணைக்குழுவும் இன்று நீதிமன்றத்திற்கு சென்று, தேர்தல் ஒன்றை நடத்த முடியாது என்று கூறுகிறது. எனினும், சத்தியக் கடதாசியொன்று வழங்கியிருப்பதால் இதுகுறித்து பேச நினைத்தேன். அப்படியில்லையெனில், எனக்கு கீழுள்ள நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பாரிய அநீதி ஏற்படும்.

தேர்தலை நடத்துவதற்கான நிதியை வழங்க முடியாதிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு திறைசேரியின் செயலாளர் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உண்மையில்லை.

முதலில் இந்த நாட்டின் பொருளாதார நிலைமையையும், தேர்தல் ஒன்றை நடத்த பணம் இல்லை என்பதையும் அதேபோல் இது பொருளாதாரத்திற்கு உகந்தல்ல என்றும், உறுப்பினர் எண்ணிக்கை 5,000இற்கு குறைந்தபின்னர் தேர்தலை நடத்துமாறும் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நான் அறிவித்திருந்தேன். நானே அவர்களுக்கு முதலில் இதுபற்றி அறிவித்தேன். இதுகுறித்து நான் விளக்கமளித்திருந்தேன். இது சாதாரண ஆணைக்குழு அல்ல.

21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இந்த பாராளுமன்றமே நிறைவேற்றியது. இந்த 21ஆவது திருத்தத்தைப் பார்த்தால், இடைக்கால விதிமுறைகளின் மூன்றாவது பிரிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருத்தம் நடைமுறைக்கு வரும் தினம் முதல் குறித்த ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர் பதவி வகிக்கும் அனைவரினதும் பதவிகள் இடைநிறுத்தப்படுகிறது.

இந்தத் திருத்தத்தில் நீங்கள் கையெழுத்திடப்பட்ட தினம் முதல் அந்தப் பதவிகள் உடனடியாகவே இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதாவது ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இது சாதாரண ஆணைக்குழு அல்ல. எவ்வாறாயினும், இந்த திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தும் திகதிக்கு முன்னர் ஏதாவது ஆணைக்குழுவின் தலைவர் அல்லது உறுப்பினர் பதவி வகிக்கும் ஒருவருக்கு, குறித்த ஆணைக்குழு, அரசியலமைப்பின் ( vii) பிரிவின்படி ஸ்தாபிக்கப்பட்டுள்ள திகதி வரை தமது குறித்த பதவிகளின் அதிகாரங்களையும், பணிகளையும் தொடர்ந்து முன்னெடுக்க முடியும்.

எனவே, தற்காலிக ஆணைக்குழுவொன்றே இருக்கிறது. இந்த தற்காலிக ஆணைக்குழு, விசேடமாக அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்திற்கே பொறுப்பு கூறுகிறது. வேறு யாருக்கும் பொறுப்புக்கூறத் தேவையில்லை. எனவே, உங்களுடனும் பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி , இந்த ஆணைக்குழு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எனினும், நான் அறிந்தவரையில், அப்படி எதுவும் நடக்கவில்லை. இது முதலாவது தவறு.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நான் தனியாக சந்தித்தபோது, தற்போதுள்ள நிலை குறித்து நான் அவர்களுக்கு அறிவித்துள்ளேன். ஜனாதிபதி என்ற வகையில் நான் அவர்களுக்கு அறிவித்துள்ளேன். செயலாளர் மீது குற்றஞ்சுமத்தத் தேவையில்லை ஜனாதபதி என்ற வகையில் நான் தேவையானவற்றை அறிவித்தேன்.

அதன்பின்னர், ஜனவரி 5ஆம் திகதி மாலை 3 மணிக்கு, நானும், பிரதமரும், சட்டமா அதிபரும், இவர்களைச் சந்தித்தோம். தேர்தலை ஒத்திவைப்பதற்காக நாம் இவர்களைச் சந்திக்கவில்லை. அந்த சமயம் ஆணைக்குழுவில் பிளவு ஏற்பட்டிருந்தது. டிசம்பர் 23ஆம் திகதி தேர்தலை நடத்த தீர்மானித்ததாக அவர்கள் கூறினார்கள். எனினும், வேட்பு மனுவை ஏற்பதற்கான திகதியைத் தீர்மானித்திருக்கவில்லை என்று இரண்டு உறுப்பினர்கள் கூறினார்கள். திகதியைத் தீர்மானித்ததாக ஒருவர் கூறினார். ஒருவர் இரண்டு பக்கமும் கதைத்தார். ஐந்தாவது உறுப்பினர் கண்டி ஆஸ்பத்திரியில் இருந்தார். இதனால், கூட்டங்களின் அறிக்கைகளைத் தருமாறு சட்டமா அதிபர் கோரியிருந்தார். அறிக்கைகள் இல்லை என்று அவர்கள் கூறினார்கள்.

எனவே, நீங்கள் அனைவரும் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்தால், எவ்வாறு செயல்படுவது என்பதைக் கூற முடியும் என்று சட்டமா அதிபர் அறிவித்தார். இதுகுறித்து ஒன்றுகூடிக் கலந்துரையாடி திகதியொன்றை தீர்மானிக்குமாறு அவர் கூறினார். எனினும், அவர்கள் சாலிய பீரிஸ் சட்டத்தரணியை வைத்துக் கொண்டு பணிகளை முன்னெடுத்தனர். சாலிய பீரிஸ், அரசியலுடன் தொடர்புபட்ட சட்டத்தரணி என்றும் அவரை எவ்வாறு பயன்படுத்த முடியும் என ஆளும் தரப்பினர் என்னிடம் வினவினார்கள். அரசியலுடன் தொடர்புபடாத சட்டத்தரணியொருவரை நியமிக்குமாறு கூறினார்கள். அல்லது சட்டமா அதிபரை வழங்குமாறு கோரினார்கள்.

இந்த நிலைமையில் சட்டமா அதிபரை ஈடுபடுத்துவது சிரமம் என்று கூறியிருந்தேன். இந்தச் சூழ்நிலையில், நான் தலையிடப் போவதில்லை என்று கூறினேன். சட்டத்தரணியொருவரை பணியமர்த்துவதாயின், எந்தவொரு கட்சியுடனும் தொடர்புபடாத சட்டத்தரணியொருவரை தெரிவு செய்ய வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

எவ்வாறாயினும், இதன்பின்னர் இதுகுறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தை தயாரிக்கும்போதே தேர்தலுக்கு 10 பில்லியன் கோரி மதிப்பீட்டறிக்கையை வழங்கியிருந்தார்கள். எனினும், 9ஆம் திகதி பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்கள். 06 பில்லியன் ரூபா முற்பணம் கோரி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது.

ஆரம்பத்தில் 10 பில்லியன் ரூபா தேவையெனக் கூறினார்கள். பண வீக்கம் உள்ள நிலையில் 5 பில்லியன் ரூபா தேவை என்று கேட்டுள்ளனர். எனவே, இந்த மதிப்பீட்டறிக்கையை குறித்து அமைச்சு மீண்டும் ஆராய்ந்துள்ளது. பொலிஸார் அதிகமாக கோருகின்றனர்.

10 பில்லியன் ரூபா செலவு உள்ள இடத்தில் 5 பில்லியன் ரூபாவில் தேர்தலை நடத்த முடியும் என்று ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் கூறுகிறார். எரிபொருள் விலை உள்ளிட்ட அனைத்தும் அதிகரித்துள்ளதால் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை இன்னும் அதிகமாக தேவை என்று பொலிஸார் கூறுகின்றனர். ஏனைய திணைக்களங்கள் முழுமையான மதிப்பீட்டறிக்கையை அனுப்பவில்லை. ஏனைய திணைக்களங்களின் மதிப்பீட்டறிக்கைகள் குறித்து தாம் அறிவிக்கமாட்டோம் என்று இரண்டாவது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். ஒவ்வொரு திணைக்களத்தில் இருந்தும் ஒவ்வொரு மதிப்பீடுகளை எங்களுக்கு அனுப்புகின்றனர். பணம் இல்லாத நிலையிலும், ஏற்கெனவே தேர்தலுக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், தேர்தல் ஆணைக்குழு இந்த அடிப்படை பிரச்சினையை சீர் செய்ய வேண்டும். இவற்றுக்கு நிதியமைச்சு பதலளிக்க வேண்டிய தேவை இல்லை. அரசியலமைப்பின் பிரகாரம் , ஆணைக்குழுவின் பணிகளும், அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவினால், ஆணைக்குழுவின் தலைவருக்கோ, ஆணைக்குழுவின் வேறொரு அதிகாரிக்கோ வழங்க முடியும். ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கமைய, அதன் கட்டுப்பாட்டின் கீழ், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அல்லது வேறொரு அதிகாரியினால் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 104 e6 பிரிவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஆணைக்குழுவின் கடித்தின் எந்த இடத்திலும் 104 e6 பிரிவு தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. எனினும், ஆணையாளர் தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இந்தக் கடிதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை . ஆனால் 09.01.2023ஆம் திகதி மற்றும் ஜனவரி 26 ஆம் திகதிகளில் தேர்தலின் முதற்கட்டப் பணிகளுக்காக, முற்பணம் வழங்குமாறு கோரியுள்ள போதிலும், அந்த முற்பணம் இதுவரை கிடைக்கவில்லை என்று தேர்தல் ஆணையாளர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இந்த முற்பணம் வழங்கியிருந்தால், குறித்த அதிகாரிக்கு எதிராக எமக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்தக் கடிதத்தில் கணக்காளருக்கு ஆணைக்குழுவினால் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. தனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் கூட அவர் குறிப்பிட்டிருக்கவில்லை. இதனை வழங்கியிருந்தால், அடிப்படை உரிமையை மீறியதாக பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக எவருக்கு வேண்டுமானாலும் நீதிமன்றம் சென்றிருக்க முடியும். இதன்பின்னர் அரச சேவை ஆணைக்குழு ஊடாக அவருக்கு தண்டனை வழங்கி, அவரை பணி நீக்கம் செய்திருக்க முடியும்.

இதன்பின்னர், தலைவர் பெப்ரவரி 3ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இந்தக் கடிதத்திலும், தனக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடவில்லை. தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் என்று எந்தவொரு கடிதத்திலும் குறிப்பிடவில்லை.

பெப்ரவரி 10ஆம் திகதி அறிவித்தவாறு தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிராக இரண்டு அரசியல் கட்சிகளினால் SEFR 062022 SEFR 072022 ஆகிய இலக்கங்களைக் கொண்ட இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, தேர்தல் ஆணைக்குழுவினால் தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்டபூர்வமான பணிகளை முன்னெடுத்துள்ளதால், இதனை நிராகரித்து, தேர்தல் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் , அப்படியானதொரு தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கவில்லை.

“ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, 2023 ஜனவரி 18ஆம் திகதி வெளியிடப்பட்ட குறிப்பு தொடர்பில் தெரிவித்தார். அந்த குறிப்பிற்கு அமைய உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச்சட்டத்திற்கு அமைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக 01 முதல் 05 வரையான பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அதனால் மென்டமூஸ் உத்தரவொன்று தேவையில்லை என மனுதாரர் தரப்பினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மெண்டமூஸ் உத்தரவொன்று தேவையில்லையென்றால் நீதிமன்றத்தினால் வழங்குவதற்கு தீர்ப்பெதுவும் கிடையாது.

07 ஆவது பிரதிவாதியான பிரதமரிடம் எந்த நிவாரணமும் கோரப்படவில்லை என அவர் சார்பாக ஆஜரான நெரீன் புள்ளே நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு எந்தப் பிணைப்பும் கிடையாது.

அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பொன்றை வழங்குமாறு கோரியிருக்கலாம். இதில் எதனையும் மனுதாரர்கள் கோரவில்லை. இதன்படி எந்தவொரு அதிகாரியையும் குறைகூற முடியாது. இறுதியாக தேர்தல் குறித்து பிரச்சினை இருந்தது. நாம் அறிந்த வகையில் இதுவரையில் தேர்தல் திகதியொன்று அறிவிக்கப்படவில்லை. சட்டபூர்வமான தேர்தல் திகதியொன்று அறிவிக்கப்படவில்லை. சிலர் மார்ச் 9ஆம் திகதி குறித்து பேசுகின்றனர். ஆனால் 9ஆம் திகதி குறித்து எனக்கு எதனையும் கூறமுடியாது. நான் அறிந்தவகையில் 9ஆம் திகதி தேர்தல் நடத்துவதற்கான சட்டபூர்வமான தீர்மானம் எதுவும் இல்லை.

104 ஆவது சரத்தின் பிரகாரம் ஆணைக்குழுவின் கூட்டத்திற்கு கோரத்திற்கு 3 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஜனவரி 22ஆம் திகதி சண்டே ரைம்ஸ் பத்திகையில் செய்தியொன்று வெளியாகியது. தேர்தல் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் கடந்த இரவு சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்ட கூட்டமொன்று நடந்ததாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது உறுப்பினர் எம்.எம். மொஹமட் தேர்தல் ஆணைக்குழு அலுவலத்தில் இருந்து இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்துள்ளார். எனவே, ஆணைக்குழுவின் தலைவரும், உறுப்பினர் எம்.எம். மொஹமட்டும் இணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். அதன்பின்னர், இதற்கான அனுமதியை ஏனையவர்களிடம் பெற்றுக்கொண்டதாக தலைவரே கூறியுள்ளார். இவர்கள் இருவருமே தீர்மானம் எடுத்துள்ளனர். எனவே, ஏனைய மூன்று உறுப்பினர்களிடம் கேட்டால், அவர்கள் வேறொரு நிலைப்பாட்டில் உள்ளனர். இதற்கான சாட்சியங்களும் என்னிடம் இருக்கிறது.

இதன்படி, உத்தியோகபூர்வமாக தேர்தல் நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை. இதற்கு பணம் வழங்கினால், செயலாளரை பணி நீக்கம் செய்து, அவருக்கெதிராக வழக்கு தொடருமாறு பொலிஸாருக்கு கூற நேரிடும். இதே நிலைமையே அச்சக திணைக்களத் தலைவருக்கும் நடக்கும். இவர்கள் தமது தொழில்களை இழப்பார்கள். இவர்களை குறைகூற முடியாது.

இவர்கள் அரச அதிகாரிகள். உண்மையில் நாட்டில் பொருளாதார நிலைமையொன்று இருக்கிறது. உண்மையில் எங்களிடம் பணம் இல்லை. அத்துடன் தேர்தலை நிறுத்தத் தேவையும் இல்லை. அவர்களின் பணிகளை அவர்களுக்கு முன்னெடுக்க முடியும். இதுகுறித்து அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான தீர்வை காண முடியும். எனினும், தற்போது பணம் இல்லை. இது அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போது தேர்தல் ஒன்றும் இல்லை. தேர்தலை நடத்த பணம் இல்லை. பணம் இருந்தாலும் தேர்தல் ஒன்றும் இல்லை.

இந்த ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கே பொறுப்புகூற வேண்டும். தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தெரிவுக்குழுவை நியமித்து, இந்தத் தகவல்களை சேகரித்து அறிக்கையொன்றைத் தயாரித்து உயர் நீதிமன்றத்திற்கு அந்த அறிக்கையை அனுப்ப வேண்டும்.

நிதி குறித்த அதிகாரம் எங்களுக்கே இருக்கிறது. மெக்னா கார்ட்டா தொடக்கம் 1688 புரட்சி காலம் முதலே அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்திற்கே இருக்கிறது. நான்காவது சரத்தின் கீழ், இந்த அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருக்கிறது. எனவே, இதுகுறித்து பரிசீலித்து, அறிக்கை சமர்ப்பித்து உயர் நீதிமன்றத்திற்கு இதனை அனுப்பிவையுங்கள்.

வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய நிதி அனைத்தையும் ஒரேதடவையில் வழங்க முடியாது. குறித்த திகதியில் வழங்குமாறு எங்கும் குறிப்பிடப்படவில்லை. வருட இறுதிக்குள் அவற்றை செலவிடவேண்டும். செலவிட முடியாவிட்டால் திருப்பி அனுப்ப வேண்டும். வருமானம் வருமாக இருந்தால் செலவிடலாம்.

4 டிரில்லியன் வரவேண்டிய நிலையில் ஒரு டிரில்லியன் தான் வருமானம் கிடைப்பதாக இருந்தால் நான் ஒரு டிரில்லியன் தான் என்னால் செலவிட முடியும். மத்திய வங்கிக்கு அறிவித்து பணம் அச்சிடுவதாக இருந்தால் அது குறித்து பாராளுமன்றத்திடம் வினவ வேண்டும். ஆனால் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் பிரகாரம் பணம் அச்சிட முடியாது.

சுற்றுநிருபத்தின் மூலம் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா என்று கேட்கின்றனர். அப்படி செய்ய முடியாது. ஆனால் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே எதையாவது செய்ய முடியும். உத்தியோகபூர்வமாக மூன்று பேர் தீர்மானிக்க வேண்டிய இடத்தில் இருவர் மட்டுமே இருந்துள்ளனர்.

எனவே, எப்படி தேர்தலை நடத்த முடியும். இந்த அதிகாரிகள் பொறுப்புகூற வேண்டும். முதலில் தேர்தலை அறிவிக்க வேண்டும். நாம் சட்டத்தின்படியே பணியாற்றியுள்ளோம். நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அனைத்து தேர்தல்களையும் உரிய நேரத்தில் நடத்துவோம்.

கடன் குறித்து பாரிஸ் மாநாட்டுடனும் , இந்தியாவுடனும், சீனாவுடனும் பேசி இணக்கப்பாட்டிற்கு வந்து, ஐ.எம்.எப். இடமிருந்து முடிவொன்றைப் பெறும் வரையில் இந்தப் பணத்தில் கைவைப்பதில்லை என்று தீர்மானித்துள்ளோம்.

நான் பொருளாதாரத்திற்கே முன்னுரிமை வழங்குகிறேன். இதனை சீர்செய்யவில்லையெனில், நாடொன்று எஞ்சாது. நாட்டை இழந்து, அரசியலமைப்பைப் பாதுகாக்க முடியுமா என்று கேட்க விரும்புகிறேன். நாட்டைப் பாதுகாத்தால் மட்டுமே அரசியலமைப்பைப் பாதுகாக்க முடியும். ஜனாதிபதியின் முதல்கடமை நாட்டைப் பாதுகாப்பதாகும்.

பொருளாதார நெருக்கடிக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பது தொடர்பில் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணையை மார்ச் 3 ஆவது வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதமருக்கு அறிவித்துள்ளேன். ஆளும் தரப்பு அதனை ஆதரிக்கும். தேர்தல் ஆணைக்குழுவை மாற்றுமாறும் எதிரணி கோரியது. அதனை ஏற்கிறோம். அடுத்த வாரம் அதனை நிறைவேற்றுவோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினால் சபையில் இருந்து வெளியேறினார் ஜனாதிபதி

தேர்தல் நடத்த முடியாது என ஜனாதிபதி தெரிவித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தலை நடத்தக்கோரி ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சபையில் போராட்டத்தை மேற்கொண்டதால் ஜனாதிபதி சபையில் இருந்து வெளியேறிச்சென்றார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிமை இடம்பெற்ற அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான ஜனாதிபதியின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றுகையில் தேர்தலை நடத்துவதற்கு தற்போது பணம் இல்லை என பல தடவைகள் தெரிவித்து வந்தார். இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

என்றாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை தேர்தல் ஆணையாளருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் ஜனாதிபதி அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என்ற கருத்தையே தெரிவித்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,விமல், டலஸ் அணி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிராக சபைக்குள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்திக்கொண்டிருந்தனர். இறுதியில் ஜனாதிபதி தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கு இணக்கம் தெரிவிக்காமல் செயற்பட்டுவந்ததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை நடுவில் வந்து ஆர்ப்பாட்டம் செய்ய வந்தபோது, உடனடியாக ஜனாதிபதி சபையில் இருந்து வெளிறிச்சென்றார்.

ஜனாதிபதி சபையில் இருந்து வெளியேறிச்சென்றதும் சபை நடுவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்துவந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியடைந்து தங்களின் ஆசனங்களுக்கு சென்றனர். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெற்றன.

Posted in Uncategorized

தேர்தலை நடத்தக் கோரி சபைக்குள் ஆர்ப்பாட்டம்; ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்

சபாநாயகரை மறைத்துக்கொண்டு அக்கிராசனத்துக்கு முன்பாக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், சபை நடவடிக்கைகள் யாவும் நாளை (22) காலை வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கள்ள அரசாங்கமே ! தேர்தலை நடத்து என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு, ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விசேட அபிவிருத்தித் திட்டம்

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “காங்கேசந்துறை துறைமுகம் நவீனமயப்படுத்தப்படும். விரிவாக்கப்படும். திருகோணமலையை நவீன சர்வதேச நகரமாக அபிவிருத்தி செய்யப்படும்.

மோதல்களுக்கு அகப்பட்டு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்னடைந்த கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

நேரடி வரிகளை அதிகரித்து வரிச்சுமையை குறைக்க முடியும்; ஜனாதிபதி ரணில்

நேரடி வரிகளை அதிகரிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வரிச்சுமையை குறைக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது ஆற்றிக்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலை தொடர்ந்தால் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடியும் எனவும், இந்த ஆண்டு இறுதியில் வட்டி விகிதங்களை குறைக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் தான் பிரபலமடைவதற்காக இந்த பதவியை பெறவில்லை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீள கட்டியெழுப்ப செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்காக இந்த வருட இறுதிக்குள் பணவீக்க வீதத்தை ஒற்றை இலக்கமாக குறைக்கும் இலக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத தீர்மானம் என்றாலும் நாட்டைக் கட்டியெழுப்ப அத்தகைய தீர்மானங்களை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பலன்களை எதிர்வரும் 2-3 ஆண்டுகளில் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணிலின் கொள்கை விளக்க உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வினை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் டளஸ் அழகப்பெரும தலைமையிலான தரப்பினரும் விமல் வீரவன்ச தரப்பினரும் இந்த நிகழ்வை புறக்கணித்திருந்தனர்.

இதேவேளை இன்றைய சம்பிரதாய நிகழ்வில் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் கலந்துகொள்ளவில்லை.

இருப்பினும் சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

புலிகளை பிரிக்கவே பிரேமதாஸ புலிகளுக்கு உதவி செய்தார் – சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு காசோலைகள் எழுதப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இவ்வாறு உரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, அவர் பல வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார். இது போன்ற மசோதாவில் யார் வேண்டுமானாலும் திருத்தங்கள் கொண்டு வரலாம். நீங்கள் அதை கொண்டு வர விரும்பினால், நீங்கள் கொண்டு வாருங்கள். அதற்கு உதவலாமா வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு செய்வோம். உங்கள் தந்தையின் காலத்தில் திறைசேரியில் இருந்து புலிகளுக்கு காசோலைகள் எழுதப்பட்டன. திருமதி சந்திரிகாவின் காலத்தில் அதுபற்றி ஒரு ஆணைக்குழுவை நியமித்து தகவல்களைக் கண்டறிந்தார்கள். அந்த உண்மைகளை அது உறுதிப்படுத்தியது. இன்று உங்களுக்கு புலிகளால் பணம் கொடுக்கப்படுகிறது என்ற கருத்து மக்களிடம் உள்ளது. நான் அதை உண்மை என்று சொல்லவில்லை. மக்கள் சொல்வதை நான் சொல்கிறேன். இப்படி ஒரு மசோதா கொண்டு வருவது நல்லது. நீங்கள் திருத்தம் கொண்டு வாருங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் கூட்டாளிகளுக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. முசோலினிக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கும் பணம் வழங்கப்பட்டது. வேறு எதனாலும் அல்ல. எதிரி அணியில் பிளவுகளை உருவாக்க. எனது தந்தையின் காலத்தில் பிரபாகரனிடம் இருந்து விலகியிருந்த மாத்தயாவையும் யோகியையும் வலுப்படுத்த விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த பல்வேறு உத்திகளை செயற்படுத்தினார்கள்.

ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – நீங்கள் வாலை மிதிக்காதீர்கள். அதாவது உங்களுக்கு பணம் எப்படி வருகிறது என்பது பற்றி மக்கள் சொல்லும் கதைகள். அப்படி ஒரு மசோதா கொண்டு வருவது உங்களுக்கு நல்லது.

அதிகாரத்தை பரவலாக்கினால் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கும் – சரத் பொன்சேகா

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, நாட்டில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டால், மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று இந்த நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. ஐ.எம்.எப். தொடர்பாக பேசுகிறோம். கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பேசுகிறோம்.

ஆனால், கடந்த 6 மாதங்களில் இந்நாட்டில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே உண்மையாகும்.

இன்னும் 25 வருடங்களில் நாடு முன்னேறி விடும் என ஜனாதிபதி கூறிவருகிறார். இன்னும் 25 வருடங்களில் தற்போதைய ஜனாதிபதிக்கு 99 வயதாகிவிடும். எனக்கோ 97 வயதாகிவிடும்.

அதுவரை நாம் கடுமையான வாழ்க்கைச் சுமையைதான் சுமக்க வேண்டியிருக்கும். எமது எதிர்க்கால சந்ததியினரும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில், ஜனாதிபதியோ குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறார். 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து இன்று பேசுகிறார்கள்.

தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இன்று உணவுக்கே சிரமப்படும் நிலையில், அரசியல் லாபத்தைத் தேடிக்கொள்ளத்தான் ஜனாதிபதி 13 குறித்து இன்று பேசி வருகிறார்.

முன்னாள் மாகாண முதல்வர்கள் அனைவரும் காணி – பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு கிடைப்பதை வரவேற்பதாக ஜனாதிபதி அன்மையில் தெரிவித்திருந்தார்.

இது முற்றிலும் பொய்யான கருத்தாகும். தெற்கிலுள்ள எந்தவொரு முதல்வரும் இவற்றை எதிர்ப்பார்த்தது கிடையாது.

வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடு இன்று இருக்கும் நிலைமையில் இவ்வாறான கோரிக்கைகளை விடுத்து பாவத்தை தேடிக்கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.

13ஐ முழுமையாக கொடுப்பதாயின், அதிகாரத்தை பரவலாக்கல் செய்வதாயின், முதலில் இந்த நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றமடைய வேண்டும்.

இனவாதம் இந்நாட்டில் இருக்கும்போது, அதிகாரத்தை பரவலாக்கினால் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கும்.

இரத்த ஆறு ஓடும். தெற்கு மக்கள் வடக்கு மக்களை குரோதத்துடன் பார்ப்பார்கள். தெற்கிலும் வடக்கிலும் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படும்.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி இடமளிக்கக்கூடாது என்று நான் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.