நாமலின் திருமண நிகழ்விற்கான ரூ.27 இலட்சம் மின் கட்டணம் செலுத்தப்படவில்லை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்தின் போது, இலங்கை மின்சாரச சபை வழங்கிய சேவைக்கான ரூ.27 இலட்சம் மின் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

ஜே.வி.பி.யின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நளின் ஹேவகே இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவரால் கோரப்பட்ட வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே இலங்கை மின்சார சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை ஜூலை 26ஆம் திகதி கேட்டிருந்ததாகவும், மின்சார சபை இன்று தகவல் வழங்கியதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெட்டியவில் உள்ள வீடொன்றில் இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொள்வார் எனவும் பாதுகாப்பு விளக்குகளை பொருத்துமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தற்காலிகமாக மின்சாரம் வழங்கப்பட்டு, பாதுகாப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு, பின்னர் உபகரணங்களை அகற்றியதாகவும், இதற்காக 2,682,246 ரூபா செலவிட வேண்டியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

செலவிடப்பட்ட தொகை தொடர்பான மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் தொகை வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக மிஹிந்தலை விகாரையில் மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைப் போன்று மெதமுலன வீட்டிலும் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டுமென நளின் ஹேவகே தெரிவித்தார்.

மஹிந்த விற்க முடியாத குப்பையாகி விட்டார் – ஐக்கிய மக்கள் சக்தி

மஹிந்த ராஜபக்ஷ என்பவர் விற்க முடியாத குப்பைக் கூடமாகிவிட்டார். இனியும் இவரை வைத்து அரசியல் செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்லுமாறு நான் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு சவால் விடுக்கின்றேன்.

நாம் தேர்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. நாளை தேர்தல் நடந்தால்கூட நாம் முகம் கொடுக்கத் தயாராகவே உள்ளோம்.

மக்கள் இன்று போராட்டங்களில் ஈடுபடுவதில்லை தான். ஏனெனில், வீதிகளில் இறங்கி போராடுவதற்கு பதிலாக தங்களின் வருமானத்தை உயர்த்தும் வழிகளை பார்க்கலாம் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், மக்களிடம் உள்ள கோபம் அப்படியே தான் உள்ளது என்பதை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது. தற்போது சிலர், ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்ததாக வரும் என்று கூறுகிறார்கள்.

கூறும் அவர்களுக்கே தெரியும், பொதுத் தேர்தல் ஒன்று தான் அடுத்து நடைபெறும் என்று. மஹிந்த ராஜபக்ஷ என்பவர் விற்க முடியாத குப்பைக் கூடமாகிவிட்டார்.

இனியும் இவரை வைத்து அரசியல் செய்ய முடியாது. ஜனாதிபதியும் விரைவில் வீழ்ந்துவிடுவார். எனவே, தைரியம் இருந்தால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாராகுங்கள்.

ஏனெனில், இப்போது மக்கள் தொடர்பாக கவலைப்படும் ஆளும் தரப்பினர், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாதத் தீர்மானத்தின்போது அவருக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள்.

மக்களை பாதுகாக்க யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது இறுதியில் தெரியவரும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறும் வாய்ப்பை தவறவிட்டு மஹிந்த ராஜபக்ச தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் – சபா குகதாஸ்

மகிந்த ராஜபக்ச ஜனாபதியாக இருந்தபோது நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறும் வாய்ப்பை தவறவிட்டு தற்போது நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (12.06.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“தமிழ்க் கட்சிகள் சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் நாட்டைக் குழப்பாமல் உள்நாட்டில் அரசுடன் கதைத்து அரசுக்கு நிபந்தனைகள் விதிக்காது பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஊடகங்களுக்கு மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதுவித நிபந்தனையும் இன்றி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இரண்டாவது தடவை இருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை 18 சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்டதை மகிந்த மறந்திருக்கலாம் ஆனால் தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.

தமிழர் தரப்பு முன்வைக்கும் உடனடிப் பிரச்சினைகளை நிபந்தனைகளாக தென்னிலங்கை மக்களுக்கு பொய்ப் பிரச்சாரம் செய்யும் சிங்கள தலைவர்களால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதற்கு மகிந்த போன்றோரின் அறிக்கைகள் சிறந்த எடுத்துக் காட்டு.

தமிழர்களின் உடனடிப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணுகின்ற நல்லெண்ண வெளிப்பாட்டை ரணில் அரசாங்கம் நியாயமான முறையில் தீர்க்க முன் வராவிட்டால் தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்க செயற்பாட்டை வெற்றிகொள்ள முடியாது.

தென்னிலங்கை மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணம் உள்ள இனவாத சிங்கள தலைவர்கள் இருக்கும் வரை நாட்டில் உள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வுகான முடியாது” என தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்திலேயே நிபந்தனைகளை முன்வைத்து எச்சரிக்கைகளை விடுத்து பேச்சுக்களை குழப்பாதீர்கள் – மகிந்த ராஜபக்‌ஷ

ஜனாதிபதியுடனான பேச்சுகளில் ஆரம்பத்திலேயே நிபந்தனைகளை முன்வைத்து எச்சரிக்கைகளை விடுத்து குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ எம். பி. கூறியுள்ளார்.

அத்துடன், சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயல்பட்டால் எல்லாம் குழப்பமாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வை காணும் செயல்பாட்டில் இறங்கியுள்ளார்.

இதற்கு அரசின் பிரதான பங்காளிக் கட்சியான பெரமுன முழு ஆதரவை வழங்குகின்றது. ஏனைய கட்சிகளும் ஆதரவு வழங்கும் நிலையில் உள்ளன.

இந்த நல்லதொரு சந்தர்ப்பத்தை குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயல்பட்டால் இங்கு எல்லாம் குழப்பத்தில்தான் முடியும்.” என்றார்.

தேர்தலை எதிர்கொள்ள பொதுஜன பெரமுன தயார் – மஹிந்த ராஜபக்‌ஷ

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு கூட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை மற்றும் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம் குறித்தும் இதன்போது ஊடகவியாளர்களினால் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

குறித்த சட்டமூலத்தை தான் இதுவரை பார்க்கவில்லை என்றும் தற்போது நாட்டில் சுதந்திரமான ஊடகம் இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

மகிந்த குடும்பத்தின் ஊழல்களை உடனடியாக விசாரிக்கவேண்டும்! செல்வம் எம்.பி. வலியுறுத்து

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்படவேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று ரெலோ இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாணய நிதியம் பணம் கொடுப்பது சம்பந்தமாக சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளில் ஊழல்கள் விசாரிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் காரணமாகத்தான் இந்த நாடு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆகவே இந்த ஊழலை விசாரிக்காத பட்சத்தில் நாடு மிகவும் மோசமான சூழலில் அதாவது பின் தங்கிய நிலையில் தொடர்ந்து செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆகவே மகிந்த ராஜபக்ஷ குடும்பம் இந்த ஊழல் செயற்பாடுகள் மூலம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை கொண்டு வந்து இன்றும் நடமாடிக்கொண்டிருக்கும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் கோரிக்கையாக முன் வைக்கிறோம். அப்படி இல்லை என்றால் இங்கு முதலீடு செய்யப்பட்ட வங்கிகளின் பணங்கள் எல்லாம் இந்த கடனுக்காக எடுக்கப்பட்டு மிக மோசமான ஒரு சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஊழலை விசாரிப்பதன் ஊடாகத்தான் இந்த நாட்டில் முன்னேற்றகரமான செயற்பாடுகளைச் செய்ய முடியும். ஜனாதிபதி இனப்பிரச்னைக்கு இவ் வருடத்துக்குள் தீர்வு என மீண்டும் அறிவிக்கத் தொடங்கி இருக்கிறார்.

எங்களை பொறுத்தவரை தீர்வு என்பது எப்படி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. அந்தக் கேள்வியை ஜனாதிபதியிடமே நாங்கள் கேட்கின்றோம்.

வடக்கு-கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற வேலை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அது புத்தசாசன அமைச்சாக இருக்கலாம், வனவள திணைக்களமாக இருக்கலாம், வன ஜீவராசிகள் திணைக்கள மாக இருக்கலாம். இப்படி திணைக்களங்களிடம் அதிகாரங்களைக் கொடுத்து விட்டு இனப்பிரச்னைக்கு தீர்வு என்பது எப்படி சாத்தியாகும்? – என்றார்.

மஹிந்த- இந்திய தூதுவர் கோபால் பாக்லே இடையே சந்திப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று வியாழக்கிழமை சந்தித்து பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்கு இந்தியாவின் ஆதரவு உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவுக்கு இந்தியா துணைநிற்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார்.

மேலும், இலங்கையில் இந்திய முதலீடுகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

நட்பு ரீதியிலும் சுமுகமான சூழ்நிலையிலும் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சதி செய்து தந்திரமாக பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார் மகிந்த – நாமல் ராஜபக்ச

கோட்டாபயவை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு முன்னர் பிரதமர் பதவியிலிருந்த மகிந்த ராபக்சவை போராட்டக்காரர்கள் ஏன் முதலில் வெளியேற்றினார்கள் என்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.

முகப்புத்தகத்தில் நடைபெற்ற நேரடிக் கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“கோ ஹோம் கோட்டா என்று நீங்கள் கூறும்போது பிரதமர், அடுத்ததாக அதிபர் பதவிக்காக வரிசையில் நிற்கிறார். அதனால் தான் கோட்டாபய பதவி விலகும் முன்னர் மஹிந்த பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தோன்றியது.

போராட்டத்தை முன்னின்று நடாத்தியவர்கள் கட்சி சார்பற்றவர்கள் இல்லை. கோட்டாபய பதவி விலகும் போது பிரதமராக இருந்த மஹிந்த அடுத்தபடியாக அதிபராவார் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர். அதனால் தான் அவர்கள் தந்திரமாக முதலில் மஹிந்த ராஜபக்‌சவை பதவி விலக்கினார்கள்.

ராஜபக்‌சாக்களை அதிகாரத்திலிருந்து நீக்குவது மூன்றாம் தரப்பின் சதிச் செயல். போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு நபரும் மூன்றாம் தரப்பு சதியாளர்களின் கைக்கூலிகள். இதைப் பற்றி மக்கள் பின்னர் விளங்கிக் கொள்வார்கள்.

“இப்போதும் எங்களுக்கு போராட்டத்தைப் பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிரச்சினை உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் மூன்றாம் தரப்பின் ஆட்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். போராட்ட காலத்தில் நீங்கள் மூன்றாம் தரப்பின் கைக்கூலியாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் பின்பு புரிந்து கொள்வீர்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மஹிந்த, பசிலுக்கு எதிரான பயணத்தடை நீக்கப்பட்டது

மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடை இனிமேல் தொடராது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே காரணம் என தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் உயர் நீதிமன்றம் பயணத்தடை உத்தரவை நீடிக்கவில்லை என சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் இதனை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க கோரினர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இரண்டு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட பயணத்தடை இனிமேல் நடைமுறையில் இருக்காது என அறிவித்தது.

மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தடை 10 நாட்களுக்கு நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தடையை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நீக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று (08) நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தென்கொரியாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, 10 நாட்களுக்கு பயணத்தடையை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Posted in Uncategorized