நல்லூர்க் கந்தனை தரிசித்தார் நிர்மலா சீதாராமன்

மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் உடன் சென்றிருந்தனர்.

இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு வருகைதந்த அவர், அங்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில்  கலந்து கொண்டிருந்ததோடு,அங்கு கூடியிருந்த சிறுவர் சிறுமியர்களுடன் கலந்துரையாடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள சீன தூதுவர்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 06 ஆம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள  குறித்த குழுவினர் வட மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் நலனோம்புத் திட்டங்களையும் குறித்த குழுவினர் பார்வையிடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், இலங்கைக்கான சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேருக்கு மாதாந்தம் ரூபா 6,500 படி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சீனத் தூதுவரின் யாழ்ப்பாண விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரலில் யாழ். பல்கலைக் கழக விஜயம் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீன பெற்றோலிய உற்பத்திகள் யாழ்ப்பாணத்தில் அறிமுகம்

கடந்த சில காலமாக சீனாவின் உற்பத்திகளை இலங்கையின் தென் மற்றும் மேல் மாகாணங்களில் விற்பனை செய்வது மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுவது என ஆரம்பித்திருந்தனர். இந்நிலைமை, தற்போது வடக்கிலும் ஆரம்பித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெற்ரோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை மானிப்பாய் மெமோறியல் வீதியில் சினோபெக் ஒயில் வகைகளை அறிமுகம் செய்து விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தரான இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவட் லிமிட்டட் நிறுவனமானது யாழ்ப்பாணத்திற்கான தனது விநியோகஸ்தராக கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் பிறைவட் லிமிட்டட் என்னும் நிறுவனத்தினை இன்று செவ்வாய்க்கிழமை மானிப்பாயில் ஆரம்பித்துள்ளது.

இந்நிகழ்வில் பங்குதாரர்களான பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜயசாந்த தொட்டஹேவகே, தேசிய விற்பனை முகாமையாளராக துசிதகுமார, விற்பனை முகாமையாளர் எம்.குகன் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் சினோபெக் எரிபொருள் விற்பனை முகாமையாளர்கள் வாகன திருத்துநர்கள் வாகன உதிரிப்பாக விற்பனையாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் 7 தமிழ் அரசியல் கட்சிகளால் கதவடைப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை (20) பூரண கதவடைப்பு பொது முடக்கத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையம், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி,ஸ்ரான்லி வீதி, ஆஸ்பத்திரி வீதி, முனிஸ்வரா வீதி, கே.கே.எஸ் வீதி ஆகிய வியாபார, நகை கடைத்தொகுதிகள் அனைத்தும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டிருந்தன.

 

வெறிச்சோடிய நிலையில் யாழ்ப்பாணம் மத்திய நகரப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டதை அவதானிக்க முடிந்துள்ளது.

தமிழர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் ஜனாதிபதி ரணில் – சபாகுகதாஸ் குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர் விவகாரங்களில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரட்டை வேடம் போடுகிறார் என தமிழ் ஈழ  விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் உடனடியாக மேய்ச்சல் நில அபகரிப்பில்  மேலதிக செயற்பாடுகளை நிறுத்துமாறு ஓடர் போட்டார். ஆனால் மறுநாள் அரச படைகளினதும் பொலிசாரின் பாதுகாப்புடனும் மேற்கொள்ளப்படும் புத்தர் சிலை விவகாரம்  மற்றும் அத்துமீறிய  மேய்ச்சல் நில அபகரிப்பு போன்றவற்றை தடுத்து நிறுத்தாது  கண்டும் காணாதவர் போல ஐனாதிபதி செயற்படுகிறார்.

அரசமைப்பு சபை பொலிஸ்மா அதிபரை நீக்கம் செய்த செய்தியை அறிந்ததும்  சீனாவில் இருந்தவாறு ஒரு மணித்தியாலத்தில் தொலைபேசியில் கதைத்து அரசமைப்பு சபையின் சுயாதீனத்தை மீறி மீள நியமிக்க ஓடர் போட முடியுமாயின், தமிழ் மக்கள் விவகாரத்தில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலங்களை சிங்கள மக்கள்  ஏவி அபகரிக்கும் செயற்பாட்டை ஏன் தடுத்து நிறுத்தவில்லை இதில் வெளிப்படையாக தெரிகிறது ஐனாதிபதியின் இரட்டை வேடம்.

தனது அதிகார கதிரையை பாதுகாக்க தனக்கு சாதகமான பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் முடிந்து நீடிக்கப்பட்டு மேலதிக காலமும் முடிவடைந்த  நிலையில் தங்களுக்கு பொருத்தமானவரை நியமிக்கும் வரையும் இருப்பவரை தக்க வைக்க வெளிநாட்டில் இருந்து உடன் நடவடிக்கை எடுக்கும் ஐனாதிபதி, சட்டவிரோதமாக தமிழர் தாயகத்தில் நடைபெறும் செயற்பாடுகளை ஏன் தனது அரச இயந்திரத்திற்கு கீழ் உள்ள கட்டமைப்புக்களை  நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தவில்லை ஆகவே இத்தகைய நடவடிக்கைகள் ஐனாதிபதி இரட்டை வேடம் போடுகிறார் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.

யாழ். பொது நூலகத்தில் அப்துல் கலாமின் 92-வது பிறந்த தின நிகழ்வு

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமின் 92-வது பிறந்த தினம் இன்றையதினம் பொது நூலகத்தில் நடைபெற்றது.

அவரது சிலைக்கு யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.

மேலும், யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், தலைமை நூலகர், நூலக அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளும் இணைந்து அன்னாருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாண பொது நூலகத்தில் Dr. A. P. J அப்துல் கலாமின் மார்பளவு திருவுருவச் சிலையை நிறுவிய இந்திய அரசுக்கு யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் ஜெயசீலன் நன்றி தெரிவித்தார்.

டாக்டர் கலாம் யாழ்ப்பாணத்துடனான தொடர்புகள் குறித்து பேசிய அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் சந்திரயான் – 3 விண்ணில் ஏவப்பட்டதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியாவை மிகப் பெரிய சாதனைக்கு இட்டுச் செல்கின்றது என்றும் கூறினார்.

யாழில். நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரித்தானிய அமைச்சர்

பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியன்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் இரவு நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன், சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்தன், ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அதேவேளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்கும் (Andrew Patrick) இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்

சட்டங்கள் மட்டுமல்ல நீதிமன்ற தீர்ப்புக்களும் தமிழருக்கு எதிரானதாக வேண்டும் என இனவாதிகள் அதிகாரம் செலுத்துகின்றனர். – மனித  சங்கிலி போராட்டத்தில் நிரோஷ்

தமிழ் மக்களின் உரிமைகளை அடக்குவதற்காக சட்டங்களை இயற்றி அதன் வாயிலாக பாரிய மனித உரிமை மீறலை மேற்கொண்ட இலங்கை அரச கட்டமைப்பு தற்போது ஒரு படி மேலே சென்று, தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதற்கு நேரடியாகவே நீதிபதிகளின் தீர்ப்புச் சுதந்திரத்திலும் கைவைத்துள்ளமை நீதிபதி சரவணராஜாவுடன் அப்பட்டமாக வெளித்தெரிய வந்துள்ளதாக ரெலோவின் யாழ். மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்  முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நீதித்துறையின் சுதந்திரத்திற்காக மருதனார்மடம் முதல் யாழ்நகர் வரை பேரணியின் இறுதியில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும், நீதித்துறையின் சுதந்திரத்திற்காக தமிழ் மக்கள் இந்தளவு தூரம் போராடுகின்றனர் என்பதில் இருந்து எம்மிடத்தில் காணப்படும் ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதியை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசு நீதித்துறையின் சுதந்திரத்தினை மீறி ஏனும் தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதற்காகப் போராடுகின்றார்கள். ஆனால், இலங்கை அரச கட்டமைப்பு பயங்கரவாதச் சட்டம், அவரகாலச்சட்டம், தற்போது கொண்டுவரப்படவுள்ள சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டம் மற்றும் பிற்போக்கானதும் இனவாத நோக்கத்தினை நிறைவேற்றக்கூடிதுமான தொல்லியல் சட்டங்கள் என எமக்கு எதிராக பல சட்டங்களை பிரயோகிக்கித்துவருகின்றது. பாராளுமன்றில் காணப்படும் இனவாத பெரும்பான்மைப் பலத்தினைக் கொண்டு எண்ணிக்கையில் குறைவானதேசிய இனங்களை ஒடுக்குவதற்கான சட்டங்களை இயற்றி அவற்றை நீதிமனங்களின் வாயிலாக எம்மீது  அரச கட்டமைப்பு பிரயோகித்தது. இவ்வாறான சட்டங்களினால் தமிழ் மக்கள் சொல்லெணாத் துன்பங்களை எதிர்கொண்டுள்ளார்கள். நாட்டில் உள்ள சட்டங்கள் மாத்திரமல்ல நீதிமன்றத்தின் தீர்ப்புக்களும் சிங்கள பேரினவாத கட்டமைப்பிற்கு சாதகமாகக் கணப்பட வேண்டும் என்று தான் அரசும் சிங்கள பேரினவாதிகளும் அதற்காக உச்ச அதிகாரத்தை பிரயோகிக்கின்றார்கள்.

தற்போது தமிழ் மக்களின் இருப்பினை அழிப்பதற்காக குருந்தூர்மலை போன்ற இடங்களில் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்களை தொல்லியல் திணைக்களம்  உள்ளிட்ட அரச திணைக்களங்கள்; அவமதித்துள்ளன.  பேரினவாத சிந்தனைகளின் அடிப்படையில் நீதிபதிகளை அச்சுறுத்தி தீர்ப்பினை அவமதிக்கின்றனர். நீதித்துறையை அவமதிக்கின்னர். இந்த நாட்டை ஏனைய இனங்கள் வாழ முடியாத தனிச்சிங்கள பௌத்த இனவாத தேசமாகக் கட்டியெழுப்பவே இவை அனைத்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான எந்த nருக்கடிக்கும் பொறுப்புக்கூறலுக்கும் உள்நாட்டுப்பொறிமுறை தீர்வாகது என்பது பட்டவர்த்தனமாகப் புலப்பட்டுள்ளது என ரொலோவின் யாழ் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வலகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி

இன்றைய மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தலைக் கண்டித்தும் இலங்கைத் தமிழர்களுக்கு உள்நாட்டு சட்டங்களுக்கமைய நீதி கிடைக்காது என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டுவதற்கும் இலங்கையில் மீண்டும் ஒரு இன அழிப்பு நடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் இன்று (04) புதன் கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை மருதனார்மடம் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் எமது குறுகிய கால அழைப்பை ஏற்றுக் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

இன்றைய போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களும் பல்வேறுபட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் கலந்துகொண்டனர்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் குருந்தூர்மலை சைவத் தமிழர்களுக்குச் சொந்தமானது என்று வழக்காடிய உறவுகளும் கலந்துகொண்டனர் என்பதுடன் அவர்கள் நீதிபதிக்கு எத்தகைய அழுத்தங்கள் இருந்தன என்பதையும் தெளிவாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்த கருத்துகள் சர்வதேச சமூகத்தின் செவிகளுக்குச் சென்றிருக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இருக்கின்ற குறுகிய ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி தமிழ்த் தேசிய இனத்திற்கு இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நீதி கிடைக்காது என்பதை நாம் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்த வேண்டிய அவசியம் தமிழர் தரப்பிற்கு இருக்கின்றது. தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய இருக்கின்றோம்.

எமது தொடர்ச்சியான போராட்டங்களே எமக்கான நீதியையும் நியாயத்தையும் எமது வாழ்வுரிமையையும் நிலைநாட்ட வழிவகுக்கும் என்பதை உணர்ந்து கட்சி அரசியலைப் புறந்தள்ளி எத்தகைய முரண்பாடுகளையும் ஒதுக்கிவைத்து, எமது இனத்தின் இருப்பிற்காக அனைவரும் தொடர்ந்து இணைந்து செயற்பட அறைகூவல் விடுக்கின்றோம்.

போராட்டத்தில் கலந்துகொண்ட சகலருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாழில் நீதி தேவதையிடம் மண்டியிட்டு நீதிபதிக்கு நீதி கோரி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது கொக்குவில் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டோர், நீதி தேவதையின் உருவ சிலைக்கு கறுத்த துணி கட்டி, நீதி தேவதையின் கையில் உள்ள தராசு ஒரு பக்கமாக தாழ்ந்து இருக்க கூடியவாறு, நீதி தேவதையின் உருவ சிலையை காட்சி படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

பின்னர் சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள் என போராட்டத்தில் கலந்து கொண்டோர் நீதி தேவதையின் உருவ சிலைக்கு முன் மண்டியிட்டு, நீதி கோரினர்.