மரண அச்சுறுத்தல் விவகாரம் : ஜனாதிபதியின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் – அனுர

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அச்சுறுத்தல் விடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி யாருடையது என்பது குறித்தும் ஆராய வேண்டும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

13 நாட்டைப் பிரிக்கும் என பதறுவது வெட்கக்கேடு – ஜனாதிபதி ரணில்

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்படக்கூடாது என்று போர்க்கொடி தூக்குவோர் முதலில் அந்தத் திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை வாசித்துப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து 13 ஆவது திருத்தம் முழுமை பெற்றால் நாடு பிளவுபடும் என்று பதறியடிப்பது வெட்கக்கேடானது.” இவ்வாறு தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைப் பயன்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று கடந்த வாரம் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்துக்கு எதிராக தெற்கில் உள்ள கடும்போக்குவாத அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர உள்ளிட்டவர்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

மேற்படி விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தால் நாட்டுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் நாடு ஒருபோதும் பிளவுபடாது.

இந்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்படக்கூடாது என்று போர்க்கொடி தூக்குவோர் முதலில் அந்தத் திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை வாசித்துப் பார்க்கவேண்டும். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் கட்டாயம் அதனை வாசிக்க வேண்டும்.

அதைவிடுத்து இந்தச் திருத்தச் சட்டம் முழுமை பெற்றால் நாடு பிளவுபடும் என்று பதறியடிப்பது வெட்கக்கேடானது.

மொட்டுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், இருவர் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கருத்துக்களை வெளியிடுவதால் ஒட்டுமொத்த மொட்டுக் கட்சியுமே 13 இற்கு எதிர் என்று எவரும் தப்புக்கணக்குப் போடக்கூடாது. 13 ஐ விமர்சிப்போர் தாராளமாக விமர்சிக்கட்டும். ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் என்னிடம் பதில்கள் உண்டு” – என்றார்.

தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் காலத்தை இழுத்தடிக்கும் ரணில்! – டலஸ் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களுக்கான தீர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும், ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகள் காலத்தை இழுத்தடிப்பு செய்பவையாக உள்ளன என்று – இவ்வாறு சுதந்திர மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும எம்.பி. தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் கூட்டணி எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டியிடுகின்ற நிலையில் அம்பாறை மாவட்டத்துக்கான சபைகளின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை தெய்யத்தகண்டியில் நேற்று டலஸ் அழகப்பெரும சந்தித்துப் பேசினார். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ச உடன் வந்திருந்தார். அனைத்து கட்சி செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிஸாம் அடங்கலாக அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பில் டலஸ் அழகப்பெரும எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:-

“எனது மிக நீண்டகால அரசியல் பயணத்தில் நான் எப்போதும் நேர்மையானவனாகவே நடந்து வருகின்றேன். நான் மக்களின் பணத்தை எந்த வகையிலும் சுரண்டியதில்லை. இலஞ்சம், ஊழல், துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஈடுபட்டவன் அல்லன். நாட்டுக்கும், மக்களுக்கும் மொட்டு நன்மை செய்யும் என்று நம்பி ஆதரித்தோம். அந்த நம்பிக்கை பொய் என்று கண்டபோதே அரசில் இருந்து விலகினோம்.

சுதந்திரம் கிடைக்கப் பெற்ற காலம் தொட்டு இந்த நாட்டில் தொடர்ச்சியாகக் குடும்ப ஆட்சியே நடந்து வருகின்றது. மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களே மாறி மாறி இந்த நாட்டை ஆண்டு வருகின்றனர். இதை மாற்ற வேண்டும் என்று நாம் விரும்பினோம். ஊழல் அற்ற ஆட்சியைக் கொண்டு வர எத்தனித்தோம்.

இதற்காகவே ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போட்டியில் பங்கேற்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னை ஆதரிப்பதாக இருந்தது. ஆனால், இறுதியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சம்பந்தன் கடைசி நேரத்தில் மாறி விட்டார்.

நாம் விரும்புகின்ற நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக இளையோர்கள் அடங்கலாக இந்த நாட்டு மக்களின் முன்னிலையில் வந்திருக்கின்றோம். தேர்தலில் போட்டியிடுகின்றோம். எமது வேட்பாளர்களை ஆதரியுங்கள்” – என்றார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரச தலைவர்களுடன் ஜனாதிபதி நேரடிப் பேச்சு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தையை இறுதி செய்யும் வகையில், சீன அரசாங்க தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரடி பேச்சில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதியளிப்புத் திட்டத்திற்கான ஆதரவை இந்தியா ஏற்கனவே தெரிவித்துவிட்டது. இதன்படி 10 வருடங்களுக்கு கடன் தடைக் காலத்தையும், 15 வருட மறுசீரமைப்பையும் வழங்க இந்தியா உடன்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜப்பான் இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு பாரிஸ் கிளப் மூலம் ஆதரவை தெரிவித்தது.

எனினும் சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கி, இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும், இதன் அடிப்படையில் இரண்டு வருட கடன் தடையை வழங்க முடியும் என்றும் இலங்கையின் நிதியமைச்சுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

எனினும், இலங்கை தொடர்பான திட்டத்தைத் தொடர்வதற்கு சீனாவின் முன்மொழிவு போதுமானதாக இல்லை என்று சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளன. அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் ஒரே மாதிரியான திட்டம் இருக்கவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் தலையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவை நீடிக்கும் அறிக்கையை பாரிஸ் கிளப் இந்த வாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரிஸ் கிளப், இலங்கைக்கு 10 வருட கடன் தடைக்காலத்தையும் 15 வருட கடன் மறுசீரமைப்பையும் முன்மொழிந்துள்ளது.

இது நாட்டின் நிதி சிக்கல்களை ஒழுங்கமைக்க போதுமான நேரத்தை வழங்கும்.

ஆதாரத்தின்படி, சவூதி அரேபியா மற்றும் குவைத் போன்ற பரிஸ் கிளப்பிற்கு வெளியே உள்ள பல நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக் கொண்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அடுத்த 6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தைகளை நிறைவுசெய்யும் என நம்புவதாக வெளிநாட்டு ஊடக மொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வேலன் சுவாமி முறைப்பாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட அமைதி வழி போராட்டக்காரர்கள் மீது அரச படைகளின் தாக்குதல் மற்றும் அதன் பின்னான கைது நடவடிக்கையை அடுத்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஊடாக நேற்று திங்கட்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

கடந்த தைப் பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட தேசிய தைப்பொங்கல் நிகழ்வுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஏற்பட்ட கலவரத்தில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதன்போது சிலருக்கு காயங்களும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்தனர் என போராட்டகார்களில் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து வேலன் சுவாமிகளை முதற்கட்டமாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி பிணையில் விடுவித்திருந்தனர். இதன் வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலைமையில் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் தம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு நடவ டிக்கை எடுக்கக் கோரியும் தமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் நேற்று முறைப்பாட் டைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்புக்குள் எதற்காக வந்தாரோ அதை சரியாக செய்துள்ளார் சுமந்திரன்; ரணில் இப்பொழுது சிரித்துக் கொண்டிருப்பார் என்கிறார் தவராசா

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எதற்கு வந்தாரோ அதைச் சரியான முறையில் செய்து முடித்திருக்கிறார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய, அரசியல் குழுக்களின் உறுப்பினரும், கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசா தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் ஒரே நிலைப்பாட்டில் உள்ள ஏனைய தமிழ்க் கட்சிகளையும் இணைத்துப் பயணிக்கவேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால் அதிகாரம் பதவி ஆசை காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்தவர்கள் கூட்டமைப்புப் பிளவுக்குக் காரணமாக இருந்துள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்க் கூட்டமைப்புக்குள் இருக்கும் ஆமை சுமந்திரன் என பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் பேசினார்.

அவரது கருத்துத் தொடர்பில் தமிழ் மக்கள் ஆழமாகச் சிந்திக்கவேண்டும். சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒன்றாக இருந்தவர்கள் தொடர்பில் பெயர் குறிப்பிடாமல் தூள் வியாபாரிகள் காட்டிக் கொடுப்பவர்கள் என விமர்சனம் செய்துள்ளார். அவர் யாரை குறிப்பிட்டார் என தெரியாது. தூள் விற்பவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஒரு விடயத்தை நேராகச் சொல்ல வேண்டும். செல்வம் அடைக்கலநாதன் சரியாக செயற்பட்டுள்ளார். கூட்டமைப்பிற்குள் ஆமை வந்து விட்டது, சுமந்திரன் வந்து விட்டார் என்றார். சுமந்திரனுக்கு பெயர் சொல்லி விமர்சிக்கும் துணிவில்லை. சிறிய, வட்டார தேர்தலுக்காக இப்படி தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது வெட்கக்கேடு. இப்படி விமர்சித்து விட்டு மீண்டும் இணைய முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் ஒரு கட்சியை குறிப்பிடுவது அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து இருப்பதே கூட்டமைப்பு.

தற்போதைய நிலையை பார்த்து ரணில் சிரிப்பார். சுமந்திரன் எதற்காக வந்தாரோ அதை நிறைவேற்றி விட்டார். அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சில தமிழ் அரசியல்வாதிகள் தடையாக இருப்பதாக நீதியமைச்சர் கூறுகிறார்.

அரசியல்வாதிகளின் வழக்கை கையாளுபவரும், அவருடைய சம்மதமும் ஒப்புதலும் இல்லாததால் நீதிமன்றத்தால் அவர்களை விடுவிக்க முடியவில்லையென்றார். அரசியல்வாதியால் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து தனது சம்ம தத்தை அல்லது எதிர்ப்பை தெரிவிக்க முடியாது. நிச்சயமாக, அரசியல்வாதியான சட்டத்தரணியால் மட்டுமே முடியும். யார் அந்த அரசியல்வாதி, சட்டத்தரணியென்பதை நீதியமைச்சர் வெளிப்படுத்தவேண்டும்.

சுதந்திர தினத்தை கரிநாளாக தமிழ் அரசு கட்சி பிரகடனப்படுத்துவதாக செய்தி வெளியானது. உண்மையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அந்த தீர்மானத்தை எடுக்கவில்லை. கட்சியின் மத்திய குழு, அரசியல் குழுவில் அது தீர்மானிக்கப்படவில்லை. இதே சுதந்திர தினத்தில்தான் சம்பந்தன் சிங்கக்கொடி ஏந்தினார். சுதந்திரதினத்தில் தானும், சம்பந்தனும் மட்டுமே கலந்து கொண்டதாக சுமந்திரனும் கூறியிருந்தார். இவர்களுக்கு திடீரென ஏன் கரிநாள்?-என்றார்.

பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைக்கமையவே காணிகள் மீள ஒப்படைக்கப்படும் – சர்வகட்சி மாநாட்டில் ரணில்

வடக்கு கிழக்கில் இருக்கும் காணி பிரச்சினை குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

3000 ஏக்கர் வரையான காணிகளே மீள ஒப்படைக்கப்பட வேண்டியுள்ள நிலையில், அவற்றை பகிர்ந்தளிப்பது குறித்து ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி பாதுகாப்பு தரப்பினர் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், காணி ஆணைக்குழுவை விரைவில் நியமித்து அதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

காணி ஆணைக்குழுவிற்காக மாகாண ரீதியில் 09 பேரை நியமிக்குமாறு அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர்.

இதன் பின்னரே தேசிய காணி கொள்கையொன்று அறிமுகம் செய்யப்பட்டு தேசிய காணிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியும் என ஜனாபதி தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசாத ரணிலின் சர்வகட்சி மாநாட்டை மலையகக் கூட்டணி புறக்கணிப்பு

ரணில் விக்கிரமசிங்கவின் சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளாது என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும், எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் பேசுங்கள்” என நாம் திரும்ப, திரும்ப ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கோரினோம்.

“எமது பிரச்சினைகள் பற்றி பேச உங்கள் தலைமையில் விசேட அதிகாரம் கொண்ட குழுவை நியமியுங்கள்” எனவும் கோரியுள்ளோம்.ஆனால், பகிரங்க மேடைகளில் இருந்து கூறப்பட்ட சில கருத்துகளை தவிர, இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி விக்கிரமசிங்க அதிகாரபூர்வமாக எதுவும் செய்யவில்லை.

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் தொடர்புகளில் வடகிழக்கு கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுகளை நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம்.ஆனால், மலையக தமிழரின்  அரசியல் அபிலாஷைகள் இன்று “தோட்ட வரம்புகளுக்கு” வெளியே வளர்ந்து விட்டன என்பதை அனைத்து தரப்பினரும் அறிய வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினை என்பது இன்று வடக்கு கிழக்கை மட்டும் மையம் கொண்டதல்ல, அது தேசியமயமானது என்பதை அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்.தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒரு எதிரணி கட்சியாக இருந்தாலும்கூட, “தேசிய இன பிரச்சினை தொடர்பில் பேச்சுகளை நடத்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இருக்கிறதா” என நாம் கேள்வி எழுப்பவில்லை.

இந்நாட்டின் பிரதான பிரச்சினை தேசிய இன பிரச்சினை ஆகும். இந்நாட்டின் எந்தவொரு அரசு தலைவருக்கும் இதற்காக விசேட மக்களாணை அவசியமில்லை என்பது எமது நிலைப்பாடு.இந்த கருத்தை நாம் நமது வடகிழக்கு நட்பு கட்சிகளுடனும் பரிமாற்றி கொண்டுள்ளோம்.

ஆகவே, இன்று ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தையில் நாம் அதிருப்தியடைந்துள்ளோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது – ஜனாதிபதி

13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குங்கள் அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும், இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என இன்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

“நான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். அந்த வகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன். எமது அரசியலமைப்பில் கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும். இங்கு என் மீது சத்தம் போடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

எனவே இரண்டில் ஒன்று நடைபெற வேண்டும். 13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குகங்கள். அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். அதனை இல்லாமல் ஒழிக்காவிட்டால், எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும் இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனிப்பட்ட பிரேரணையொன்றைக் கொண்டு வந்து யாருக்கு வேண்டுமானாலும் அதனை நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அபப்டியாயின், 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும்.

ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்துக்கமைய பார்த்தால் நாம் ஒற்றையாட்சியில் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன்.

நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது. லண்டன் நகரசபைக்கு இதனை விடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை.

அதனை நடைமுறைப்படுத்தவில்லையென்றால் நாம் அதனை நீக்க வேண்டும். அரசியலமைப்பில் வைத்துக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது சரியானதல்ல.” என்றார்

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம்; சர்வ கட்சி கூட்டத்தில் ஆளும் தரப்புகள் கடும் எதிர்ப்பு

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்குவதற்கு ஆளும் தரப்பினர் சிலரே நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின்பேரில் நேற்றைய தினம் சர்வகட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பேச்சு எழுந்தது. இதன் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும்”, என்று உறுதியளித்தார்.

இதன்போது, ஆளும் தரப்பை சேர்ந்த கட்சிகளின் தலைவர்களே கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், தமது ஆதரவு இன்றி 13ஆம் திருத்தத்தை முழுமை யாக செயல்படுத்த முடியாது என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் கூறினார்கள். இதற்கு, பதிலளித்த ஜனாதிபதி ஏற்கனவே சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த நிறைவேற்று அதிகாரம் போதுமானது. பாராளுமன்றின் அனுமதி தேவையில்லை என்று கூறினார்.

இந்த சமயத்தில், தமிழ் மக்கள் கூட் டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன், கடந்த காலங்களில் 13ஆம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்காக காலத்துக்கு காலம் வெளியிடப்பட்ட சுற்று நிரூபங்கள் மற்றும் அறிவித்தல்கள் தொடர்பில் எடுத்துக் கூறினார். அவ்வாறு வெளியிடப்பட்ட கட்டளைகளை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன், அது தொடர்பாக தாம் தயாரித்த ஆவணம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளித்தார். இதன் பின்னர், இனப்பிரச்னைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றுக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

இந்த சமயத்தில், பேராசிரியர் திஸ்ஸ விதாரண, “கடந்த காலத்தில் இனப்பிரச்னை தீர்வுக்காக எனது தலைமையில் 127 கூட்டங்களை நடத்தி பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.”, என்று சுட்டிக் காட்டினார்.

அவருக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதியரசர் நவாஸ் தலைமையிலான குழு அந்த அறிக்கையை பரிசீலிக்கின்றது. அதிலிருக்கும் பரிந் துரைகள் தொடர்பிலும் கவனம் செலுத் தப்படும். இது தொடர்பான விடயங்களும் எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என்றார். மேலும், இன்னும் இரண்டு கூட்டங்களில் இனப் பிரச்னைக்கான தீர்வு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேசமயம், கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தரப்பினர் உறுதியளிக்கப்பட்டபடி காணிகள் விடுவிக்கப்படாதமை தொடர்பில் தமது அதிருப்தியை வெளி யிட்டனர்.

இதற்கு உறுதியளித்தபடி இனங் காணப்பட்ட 100 ஏக்கர்கள் காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும். சில தடங்கல்கள் காரணமாக காணிகள் விடுவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதேபோன்று, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையிலான குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விரைவில் 15 அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் மீண்டும் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

சர்வகட்சி கூட்டத்தில் தமிழ்த் தேசியத் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புளொட்டின் த. சித்தார்த்தன், ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்கவில்லை. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரா. சம்பந்தன், சுமந்திரன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் க. வி. விக்னேஸ்வரன் ஆகியோரே பங்கேற்றனர். இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.