முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்குள் மாத்திரம் வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகளை அமைக்க தீர்மானம்

முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்குள் மாத்திரம் வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்டான, ஹல்பே கோபியாவத்தை பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை உரிமையாளரான ஓமான் பிரஜையொருவர் தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் பதிவாகாமல் இருப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் உள்ள சில இடங்களுக்குள் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, கண்டி மாவட்டத்தை கேந்திர மையமாகக் கொண்டு, இவ்வாறான முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் பலவற்றை அமைப்பதற்கான இடங்களை தெரிவுசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகள் இந்நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் மாத்திரம் அவற்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில் 200 ஆடை தொழிற்சாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் வெளியிடங்களிலும் அவை ஸ்தாபிக்கப்பட்டன.

இந்நிலையில், முதலீட்டு வலயங்களுக்குள் பிரத்தியேக பாதுகாப்பு அமைப்பு நடைமுறையில் உள்ளதால், முதலீட்டாளர்கள் மீது வெளியாட்கள் யாரும் செல்வாக்கு செலுத்தக்கூடாது என்பதற்காக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும், ஏற்றுமதி முதலீட்டு வலயங்களுக்கு வெளியில் அமைந்துள்ள வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறும், ஏதேனுமொரு தரப்பினரிடமிருந்து அநாவசியமான அழுத்தங்கள் காணப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்களாக இன்று சத்தியப்பிரமாணம்

வட மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், வட மேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் இன்று (17) புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மற்றும்  வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் பதவிகளிலிருந்து நேற்று நீக்கப்பட்டதையடுத்து புதிய ஆளுநர்களாக இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதய சுத்தியுடன் ஜனாதிபதி அழைத்தால் பேச்சுவார்த்தைக்குச் செல்வோம் – ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினைக் காண்பதற்காக இதயசுத்தியுடன் ஜனாதிபதி அழைப்பு விடுத்தல் அதில் பங்கேற்பதற்கு தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்காக தமிழ்த் தரப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறித்தது தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மலையக தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்புக்களையும் தனித்தனியாக சந்திப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான மிகப்பொருத்தமானதொரு தருணம் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த தரப்பினரும், ஏனைய தமிழ்த் தரப்புக்களும் பிரிந்து நிற்பது துரதிஷ்டமானது என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும் இரா.சம்பந்தனின் காலத்திற்குள் தமிழ், முஸ்லிம் மக்களினது விவகாரங்களுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு என்றும் அனைத்து விடயங்களும் விரைவில் சீர்செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதியிடையேயான பேச்சு ஒத்திவைப்பு

இனப் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த பேச்சு இரத்து செய்யப்பட்டது.

எனினும், அதிகாரப் பகிர்வு தொடர்பான இந்தப் பேச்சு நாளை மறுதினம் திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று மாலை 5 மணிக்கு ‘நலன்புரி நன்மைகள் வழங்குதல்’ தொடர்பான சட்டமூலம் வாக்கெடுப்பு நடைபெறவிருந்தது.

இந்த வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் நோக்கில் பேச்சு ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சு நேற்று முன்தினம் ஆரம்பமானது.

நேற்று முன்தினம் நடந்த இந்தப் பேச்சில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணி பிரச்னை மற்றும் ஏனைய பிரச்னைகள் தொடர்பாக ஆராயப்பட்டன. நேற்றைய பேச்சில் அதிகாரப் பகிர்வு, நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக பேசப்பட இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பசிலுடன் இணைந்து ரணில் செயற்படுவது ரணிலுக்கு தடையை ஏற்படுத்தும் – உதய கம்மன்பில

நாட்டு மக்களால் கடுமையாக வெறுக்கப்படும் பஷில் ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினருடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய தடையாக அமையும்.ராஜபக்ஷர்களுடன் இனியொருபோதும் ஒன்றிணைய போவதில்லை என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மே தின கூட்டத்துடன் மக்களாணையை வென்று விட்டோம் என பொதுஜன பெரமுன குறிப்பிடுவது நகைப்புக்குரியது.கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை அடிப்படை கொண்டு பொதுஜன பெரமுனவுக்கு குறிப்பாக ராஜபக்ஷர்களுக்கு மக்களாதரவு எந்தளவுக்கு உள்ளது என்பதை நன்கு விளங்கிக் கொள்ள முடிந்தது. பொதுஜன பெரமுன பிரம்மாண்டமாக அமைத்த கூடாரங்கள் வெற்றிடமாகவே காணப்பட்டன.

நாட்டு மக்களை ஏமாற்றி அரசியல் செய்யலாம் என்ற நிலை மாற்றமடைந்து விட்டது.மக்கள் தெளிவாக உள்ளார்கள்.மக்களால் கடுமையாக வெறுக்கப்படும் பஷில் ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினருடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய தடையாக அமையும்.

2019 ஆம் ஆண்டுக்கு பிறகு ராஜபக்ஷ குடும்பமே நாட்டை ஆட்சி செய்தது.ராஜபக்ஷர்களின் முறையற்ற பொருளாதார கொள்கையை அமைச்சு பதவிகளை வகித்துக் கொண்டு நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்.சுட்டிக்காட்டிய குறைகளை அப்;போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திருத்திக் கொள்ளவில்லை.மாறாக எங்களை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கினார்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் பஷில் ராஜபக்ஷ உட்பட அவரது சகாக்கள் ஜனாதிபதிக்கு பாரிய தடையாக இருப்பார்கள்.

பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணையுமாறு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எம்மிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.ராஜபக்ஷர்களுடன் இனி ஒருபோதும் ஒன்றிணைய போவதில்லை.அரசியல் ரீதியில் தனித்து செயற்படுவோம் என்றார்.

இங்கிலாந்து பயணித்தார் ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை இங்கிலாந்திற்கு பயணித்துள்ளார்.

பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி அங்கு பயணமாகியுள்ளார்.

ஜனாதிபதியுடன் மேலும் 8 பேர் நாட்டிலிருந்து பயணித்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார்.

சுமார் 70 ஆண்டுக்காலம் ஐக்கிய இராச்சியத்தின் அரியணையில் இருந்த 2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார்.

அவரது மறைவின் பின்னர் இளவரசர் 3ஆவது சார்ள்ஸ் முடிக்குரிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.

இதன் பிரகாரம், 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை எதிர்வரும் 6ஆம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

முடிசூட்டு விழாவின் பின்னர், ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் மன்னராக 3ஆவது சார்ள்ஸ் மற்றும் ராணியாக அவரது மனைவி கமிலாவும் திகழவுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் பிரித்தானியா செல்லவுள்ள நிலையில் பக்க நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் உட்பட நிகழ்வில் கலந்துகொள்ளும் பிற நாட்டு தலைவர்களையும் சந்தித்து, இதன்போது ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு இவ்வருடத்துக்குள் தீர்வு – ஜனாதிபதி

நாட்டின் நீண்டகாலமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நியாயமான, புதிய போட்டித்தன்மையுள்ள மற்றும் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

ஆகவே அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு – ஜனாதிபதி

“வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு. அதை எந்தத் தரப்பும் கேள்விக்குட்படுத்த முடியாது. அத்துடன் அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ முடியாது.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“வடக்கில் மத ரீதியில் அண்மைக்காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும். இந்தப் பிரச்சினைகளை வைத்து அல்லது பிரச்சினைகளை மேலும் தூண்டிவிட்டு எவரும் அரசியல் இலாபம் தேட முயலக்கூடாது.

நீதிமன்ற வழக்கில் ஒரு பிரச்சினை இருந்தால் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய அரசு நடவடிக்கை எடுக்கும். எனினும், வடக்கில் மத ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைகளை வளர விடாமல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேரில் விரைந்து தீர்வு காண்போம்.” – என்றார்.

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு புதுவருடத்தின் பின்னரே தீர்வு

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு புத்தாண்டின் பின் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் உறுதியளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதி சிவன் விக்கிரகம் இனந்தெறியாத நபர்களால் கடந்த மாதம் தகர்தெறியப்பட்டது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாராளுமன்றத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று அது தொடர்பில் அவதானம் செலுத்தியிருந்தனர். அத்தோடு இவ்விடயம் தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரச்சனை தொடர்பில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெளிவுபடுத்தினர்.

இப்பிரச்சினைக்கு புத்தாண்டின் பின்னர் தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அத்தோடு இவ்விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்மையையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார் என்றார்.

பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து இனப்பிரச்சினையை பிரிக்க முடியாது – ஜனாதிபதி

பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து இனப்பிரச்சினையை பிரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘பொருளாதார உரையாடல் – ஐ.எம்.எப் மற்றும் அதற்கு அப்பால்’ என்ற தொனிப்பொருளில் இன்று(30) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.எம்.எப் திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்தை அடைவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி நாட்டை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.