நாட்டு மக்களை ஒட்ட சுரண்டி, பிழிந்தெடுக்கும் ரணில் அரசு- சோசலிச இளைஞர் சங்கம் குற்றச்சாட்டு

இந்த நாட்டில் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என்பவற்றை விதைத்து சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையகம் என்ற அனைத்து மக்களிடையேயும் முரண்பாடுகளை ஏற்படுத்தி, பிரித்து, வன்முறைகளை தூண்டி, இந்த அரசாங்கம் ஆட்சியினை தக்க வைத்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் சதீஷ் செல்வராஜ் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இளைஞர்களை அணி திரட்டுவதும், அவர்களை தெளிவுபடுத்துவதும் எங்களின் கடப்பாடாக இருக்கின்ற காரணத்தினால், நாங்கள் நாட்டிலுள்ள அனைத்து தமிழ், சிங்கள, முஸ்லீம், மலையகம் என்ற பேதம் இல்லாமல் எல்லா இளைஞர்களும் அணிதிரண்டு நாட்டினை கட்டியெழுப்புவதற்காக ஒரு சக்தியினை வழங்குவதற்காக அணி திரள வேண்டும் என்பதற்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கிறோம்.

பொருளாதார ரீதியாக எமது நாடு பாரிய வீழ்ச்சியை கண்டிருக்கிறது. அதீத வட்டி, அதீத வரி, அதேவேளை மக்கள் நாட்டில் வாழ முடியாத சூழ்நிலையை இந்த ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

இந்த, நாட்டில் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என்பவற்றை விதைத்து சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையகம் என்ற அனைத்து மக்களிடையேயும் முரண்பாடுகளை ஏற்படுத்தி, பிரித்து, வன்முறைகளை தூண்டி அவர்கள் தங்களுடைய ஆட்சியினை தக்க வைத்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்கள்.

அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தினை பார்ப்போமாக இருந்தால், 3,456 பில்லியன் ரூபா வருமானமாக கொள்ளப்படுகிறது. செலுத்தப்பட வேண்டிய கடன் உட்பட நாட்டினுடைய மொத்த செலவு 7,879 பில்லியன் ரூபா, அதிகமாக காணப்படுகிறது. வருடத்திற்ககான கடன் தேவை 4,979 பில்லியன் ரூபாவுக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது. கடன் மொத்த செலவில் கடன் வட்டிக்கு மாத்திரம் 53.53 சதவீதம் பங்கினை இங்கு ஒதுக்க வேண்டிய நிலைமைக்கு இந்த நாடு தள்ளப்பட்டிருக்கிறது.

வருமானத்தை எடுத்துக்கொண்டால் மறைமுக வட்டி, விலையேற்றம் போன்ற வட்டி மூலம் வருமானத்தை திரட்டிக்கொள்வதற்கு இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதே தவிர நாட்டில் விழுந்து கிடக்கும் உற்பத்தி பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையிலும் இந்த அரசாங்கம் ஈடுபடாது. மேலும் நாட்டு மக்களை ஒட்ட சுரண்டி, பிழிந்தெடுக்கிற வேலையில் ரணில் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

கூலித்தொழில் செய்ய முடியாத நிலைக்கு இன்றை தொழிலார்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு விவசாயிகள் மிகவும் பாரியளவில் சிக்கல்களுக்கு முகங்கொடுத்து இருக்கிறார்கள். நாட்டினுடைய விவசாய துறை சீரழிந்து வீழ்ந்து இருக்கிறது.

யூரியா, இரசாயனப்பசளை பிரச்சினைகள், இது போன்று மீன்பிடிக்கு பெற்றோல், டீசல் பிரச்சினைகள், இதனை மேம்படுத்துவதற்காக முறையான திட்டமின்மை காரணமாக மீன்பிடி பாரியளவு வீழ்ச்சி கண்டிருக்கிறது. இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகமாக இருக்கிற இந்த நேரத்தில் இதற்கு தீர்வு இல்லாமல் இருக்கிறார்கள். எங்களுடைய கடல் வளம் வெளிநாட்டு கம்பனிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது.

இந்த  இனவாத ஆட்சியாளர்களை விரட்டியடிக்க தேசிய ஒற்றுமையினை முன்னிறுத்தி இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற இந்த வேளையில் எமது நிலம், எமது உரிமை, எமது மக்கள் என இந்த ஊழல்வாதிகளை, இனவாத ஆட்சியாளர்களை விரட்டியடித்து தேசிய ஒற்றுமையினை கட்டியெழுப்புவதன் ஊடாக எல்லா இன மக்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்வதற்கு கட்டியெழுப்பவது நம் எல்லோரினதும் கடமையாகும். – என்றார்.

ஜனாதிபதி மன்னாருக்கு கண்காணிப்பு விஜயம்!

னாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்து ரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மன்னார் நகருக்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

அதன் பின்னர், நடுக்குடா கடற்றொழிலாளர் கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, கடற்றொழிலாளர் சமூகத்தவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

நடுக்குடா கடற்றொழிலாளர் கிராம மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவு படுத்தப்பட்டதோடு , அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து தேவையான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தையும் ஜனாதிபதி அவதானித்ததுடன் காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி கேட்டறிந்துள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி ,வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ரணில்

காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்க உள்ளதாகவும் இதன்மூலம் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றதுடன், அந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

மாகாணத்தில் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக வடமாகாணத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேவையான தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

செட்டிகுளம் பிரதேசத்தின் காணிப்பிரச்சினை தொடர்பில் மத்தியஸ்தம் செய்து 03 மாதங்களுக்குள் தீர்வுகாணுமாறு வவுனியா மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இது தொடர்பில் நீதியமைச்சு மற்றும் காணி அமைச்சிடம் விசாரணை செய்வதாகவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வடமாகாண மக்களின் வீட்டுப் பிரச்சினை தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாகவும், அதற்கு மேலும் சுமார் மூவாயிரம் மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடளாவிய ரீதியில் தற்போது பல வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

வவுனியா குளம் மற்றும் திருக்குளம் குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களின் தேவைகள் குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைத்தல், உரப்பிரச்சினைக்கு தீர்வு காணல் மற்றும் விநியோக நடவடிக்கைகளை சீர்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வடமாகாணத்தில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் வைத்தியர் பற்றாக்குறை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

2023 ஆரம்பத்தில் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் – ஜனாதிபதி

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2023 ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்படும். அதனையடுத்து இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுடனும் இந்த ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படும். 2023 அல்லது 2024 இல் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நீண்ட கால இலக்காகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சவால்களை மீறி வாய்ப்புகளை எட்டுதல்’ எனும் 2023 வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரான கருத்துக்களம், கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

தொழில்துறை மற்றும் உற்பத்தி போட்டித் தன்மைக்கு முகம்கொடுக்கும் வகையில் வர்த்தக சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்துடன் கூடியதாக சுங்கத் தீர்வை மற்றும் சுங்கமற்ற தீர்வை ஆகியவற்றை எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு நீக்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கின்றது. அரசாங்கத் தரப்பு என்ற வகையில் உலக வங்கியுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக தனியார் துறை எவ்வாறான ஒத்துழைப்பை வழங்கப் போகிறது ? சிவப்புக் கொடியைக் காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதா அல்லது ஒத்துழைப்பு வழங்குவதா என்பது தொடர்பில் தனியார் துறையினர் தீர்மானிக்க வேண்டும். நடைமுறை சாத்தியமான பெறுபேறுகளை பாராமல் தவறான கொள்கைகளை பின்பற்றியமையே நாட்டின் நிதி நெருக்கடிக்கு காரணமாகும். நாட்டை இந்நிலையிலிருந்து மீட்பதாயின் அரசாங்கம் மட்டுமன்றி தனியார் துறையினரும் பொது மக்களும் பாரிய வகிபாகத்தை வகிக்க வேண்டும்.

தற்போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவு திட்டம் வழமையான வரவு செலவுத் திட்டத்திலும் பார்க்க முற்றிலும் வித்தியாசமானது. இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் கொள்கைகளைப் பார்த்து சிகரட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனவா, வேறு ஏதேனும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளனவா என்பதை தேட முடியாது. அதே கண்ணோட்டத்துடனேயே இந்த வரவு செலவுத் திட்டத்தையும் பார்ப்பீர்களேயானால் நீங்கள் தவறான பாதையில் பயணிக்கின்றீர்கள்.

துரதிஷ்டவசமாக பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் பலர் இந்த தவறை செய்கின்றார்கள். நாம் தற்போது முன்னொருபோதும் கண்டிராத பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருக்கின்றோம். இது பல நாடுகளால் மற்றும் உலகமே சந்தித்திராத்தொரு நிலைமையாகும். தவறான கொள்கைகளை பின்பற்றியதன் விளைவாகவே எமக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘கொள்கைகள்’ எனும்போது அவை நடைமுறை சாத்தியமானதாக இருக்க வேண்டும்.

நிதியமைச்சர் என்ற வகையில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே எனது முதலாவது இலக்காகும். இதனை கடந்த ஆகஸ்ட் வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகம் செய்தோம். இதற்கான சட்டவாக்க நடவடிக்கைகளையும் ஆரம்பித்தோம். இதற்கு மேலதிகமாக நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளோம். தற்போது பிரதான இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இந்தியா மற்றும் சீனா என்பன பாரிஸ் கிளப்பில் இல்லை. அவற்றுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததும் நாம் தனியார் கடன் வழங்குனர்களிடம் சென்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம். அதன் பின்னர் எமக்கு எமது பாதையில் பயணிக்க முடியும். அதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக நாம் பல வேலைகளை முன்னெடுக்க வேண்டும். நாம் பொருளாதார மீட்சி தொடர்பில் ஆராய வேண்டும். அதற்கான திட்டம், கட்டமைப்பு என்பன தொடர்பில் நாம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். 2023 என்பது உறுதிப்பாட்டுக்கு மட்டுமன்றி மீட்சிக்குமானதொரு ஆண்டாகும். உறுதிப்பாட்டுச் செயன்முறைகள் 2026 வரை தொடரும். அப்போது எமது மொத்த தேசிய உற்பத்தி, 2019 ஆம் ஆண்டில் நாம் இருந்த நிலையை எட்டும் என நம்புகின்றேன். எனினும் என்ன நடக்கும் என்பது திட்டவட்டமாக தெரியாது.

எமது முதலாவது கொள்கை, ‘ஒன்றிணைந்த முதலீடு மற்றும் ஏற்றுமதி முகவர் அமைப்பு’ தொடர்பானது. இதற்காக சில சட்டங்களை அகற்றவும் பொருளாதாரத்தில் அடிப்படை மீள்கட்டமைப்பை முன்னெடுக்கவும் வேண்டும். இல்லையேல் அதுவும் இன்னுமொரு சொத்து விற்பனை முகவர் அமைப்பாகிவிடும். கொள்கைகள் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான கட்டமைப்பொன்று இருக்க வேண்டும்.

பொருளாதார அபிவிருத்தியில் மூலோபாய அமைவிடமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் எம்மிடம் மூன்று முக்கிய துறைமுகங்களும் சிறியதான காங்கேசந்துறை துறைமுகமும் உள்ளது. ஆனால் நாம் அவை பற்றி பேசுவதேயில்லை. சிந்திப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்கின்றோம்.

கடந்த முறை நான் பிரதமராக இருந்தபோது இது பற்றி தூரநோக்குடன் சிந்தித்ததுடன் கிழக்கு முனையம் தொடர்பில் ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டிருந்தோம். நீங்கள் அதை ரத்துச் செய்தீர்கள். இது இன்னும் அப்படியே உள்ளது. துறைமுகத்தால் செயற்பட முடியாதுள்ளது. எம்மிடமும் பணம் இருக்கவில்லை. எனவே நாம் கிழக்கு முனையம் தொடர்பான திட்டத்தை நிறைவு செய்வதற்கு ஊக்குவிப்பதுடன் அதனை ஒரு சிறந்த மையமாகவும் உருவாக்குவோம்.

எம்மிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது. ‘பெல்ட் என்ட் ரோட்’ திட்டம் நிறைவடைந்ததும், சீன கம்பனிகள் ஆபிரிக்காவில் பல துறைமுகங்களை உருவாக்கியது போல அம்பாந்தோட்டையுடன் இணைந்ததாகவும் பல துறைமுகங்களை உருவாக்க முடியும். திருகோணமலை துறைமுகம் வங்காள விரிகுடாவுக்கான சேவையை வழங்கக்கூடியதாகவுள்ளது. எனவே எமக்குள்ள வாய்ப்புக்களை நாம் உணர வேண்டும். இந்த துறைமுகங்களே, எம்மிடமுள்ள மிகச் சிறந்த சொத்துக்கள். அதனை தவிர காலி , கொழும்பு துறைமுகங்களும் எம்மிடமுள்ளன. நாம் எம்மிடமுள்ள அனைத்து துறைமுகங்களையும் மறந்து விட்டோம்.

அடுத்ததாக எமது விவசாயத்தை முழுமையாக நவீனமயப்படுத்த வேண்டும். இதற்காக காணியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்காக மக்கள் வழங்கியுள்ள காணிகளுக்கு நாம் சட்டவாக்கத்தை உருவாக்குவோம். அரசாங்கத்தின் நிலத்தை கையகப்படுத்தும் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். அனைவருக்கும் இலவசமான காணி வழங்கும் வேலைத்திட்டத்தையும் நாம் நடைமுறைப்படுத்துவோம்.

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஆகக்கூடியது 02 மில்லியன் சுற்றாலாத்துறையினரை இலக்கு வைத்து புதிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நாம் அறிமுகம் செய்யவுள்ளோம். கொவிட் தொற்றுக்கு பின்னர் மீள்வதற்கான முயற்சிகளை கல்வியமைச்சு இதுவரையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும் , அதிக நிதி வழங்கப்பட்டாலும் கூட அவர்களால் அதனை திறம்பட பயன்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது. எனவே திட்டமிட்டு அடுத்த வருடம் முதல் அதிக நிதியை ஒதுக்க வேண்டும்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுகாதார சேவைகளுக்கான பிராந்திய மையம், துறைமுக நகரை கரையோர மையமாக அபிவிருத்தி செய்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் உலக வங்கி , ஆசிய அபிவிருத்தி வங்கி, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

2023 தொடக்கத்தில் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். அடுத்து, இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுடனும் இந்த ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படும் . அடுத்த ஆண்டில் அல்லது அதற்கு அடுத்த ஆண்டில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நீண்ட கால இலக்காகும்.

மக்களைப் பலப்படுத்துவதா? அல்லது மக்களின் பணத்தைக் கொண்டு காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் மற்றும் டெலிகொம் நிறுவனங்களை வலுப்படுத்துவதா? என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மக்களை பாதுகாப்பதற்கே தவிர இந்த நிறுவனங்களையும் கட்டடங்களையும் பாதுகாப்பது எனது முன்னுரிமையல்ல. இந்நிறுவனங்களை விற்பதால் கிடைக்கும் பணத்தை அந்நியச் செலாவணி கையிருப்பில் சேர்த்து, ரூபாயை வலுப்படுத்த தீர்மானித்துள்ளோம் என்றார்.

விவசாய ஆராய்ச்சிக்கு அமெரிக்காவிடம் உதவி கோரும் ஜனாதிபதி

இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற, அமெரிக்க – இலங்கை ஃபுல்பிரைட் (Fulbright) ஆணைக்குழுவின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உணவைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான வளம் இல்லாத தீவு நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்குத் தேவையான காணிகளை அடையாளங்கண்டு விவசாயத்தை நவீனமயப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நவீன விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் (TRI) இணைப்பதன் மூலம் இலங்கையின் விவசாய ஆராய்ச்சித் துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிய பல அமெரிக்க நிறுவனங்களின் ஆதரவைப் பெற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதில் பேராசிரியர் பிரதீபா பண்டாரநாயக்க போன்ற ஃபுல்பிரைட் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியமானது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பத்து வருடங்களில் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாபெரும் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும், ஃபுல்பிரைட் புலமைப்பரிசில்கள் மற்றும் உதவிகள் மூலம் இலங்கைக்கு வளவாளர்களை அழைத்துவருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம்

நாம் கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு காணப்பட்ட சீர்திருத்தங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உயர் திறன்களைக் கொண்ட சர்வதேச அளவில் போட்டித் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது இணக்கப்பாடுடன் தேசிய அபிவிருத்தி கொள்கையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : ஜனாதிபதி
அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 03 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியை நேரடி முதலீடாக பெறுவதற்கான திட்டங்கள்

பொதுச் செலவினங்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்த பல சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள்

ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா உற்பத்தியை ஆராய்வதற்காக விசேட குழு நியமிக்கப்படும்

ஆயுதப்படையினருக்கு முன்கூட்டியே ஓய்வுபெற அனுமதிக்கப்படுகிறது. 18 வருட சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது கட்டாயம் அல்ல, விரும்புபவர்கள் மட்டுமே ஓய்வு பெறலாம்

2023 இறுதிக்குள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கணிசமான நிவாரணம் வழங்கலாம் என நினைக்கிறோம்.அதற்குள் தனியாருக்கு நிவாரணம் வழங்குவோம் என நம்புகிறோம்.

2023-2032 காலப்பகுதியில் புதிய ஏற்றுமதிகளின் ஊடாக 03 பில்லியன் டொலர் வருடாந்த வருமான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

கடவுச்சீட்டு மற்றும் வீசா கட்டணம் உட்பட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தொடர்பான பல கட்டணங்கள் அதிகரிக்கப்படும்

சர்வதேச வர்த்தகத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 % ஆக அதிகரிப்பதற்கான நடவடிக்கை

சமூக சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் 7% – 8% உயர் பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கப்படுகிறது

2023 ஜனவரி முதல் பல இறக்குமதி வரிகள் படிப்படியாகக் குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்

பொருளாதார மாற்றத்திற்குத் தேவையான சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்கள் என்பன விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

உலகளாவிய போக்கைக் கருத்தில் கொண்டும் குறிப்பாக காலநிலை மாற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியும் சமூக பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்

சுற்றுச்சூழலுக்கு உகந்த பச்சை மற்றும் நீலப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் என்பன தொடர்பில் புதிய பொருளாதாரத்தின் கீழ் விசேட கவனம்.

அரச ஊழியர்களுக்கு 2023 ஆண்டு இறுதியில் சலுகைகள் வழங்க நடவடிக்கை, தனியார் துறைக்கும் வழங்க ஆலோசனை.

இலங்கையின் வரலாறு மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனம் ஒன்றை நிறுவுவதற்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதி நிதியமொன்றை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி சலுகைகள் போன்று தனியார் துறையினருக்கும் அத்தகைய காப்புறுதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரச வருவாயில் பெரும் பகுதி அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கே செலவிடப்படுவதால் அபிவிருத்திப் பணிகளுக்குப் பணத்தை ஒதுக்குவது சவாலாகியுள்ளதால் தற்போதைய தேவைக்கேற்ப அரச சேவைகளை வழங்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படுகிறது.

பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி பெறும் 75 மாணவர்களுக்கு, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் முதுகலைப் பட்டப்படிப்பை படிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது : ஜனாதிபதி
உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் 75 பேருக்கு 75 வெளிநாட்டுப் பல்கலைக்கழக புலமைப்பரிசில்கள். இதற்கான நிதி ஜனாதிபதி நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மைமிகு பொருளாதாரம்.

கிராமப்புற பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்த 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

தனியார் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கவும் தேவையான வசதிகள் வழங்கப்படும். அவர்களின் பணியை மேலும் திறம்படச் செய்யும் வகையில் கொள்கைகள் தயாரிக்கப்படும்.

வறிய மற்றும் நலிவடைந்த குழுக்களைப் பராமரிப்பது தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதி தெரிவிப்பு
தகவல் பாதுகாப்பு அதிகார சபை உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரச சேவை துறையை முழுமையாக மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்.

யாழ்ப்பாணம், பேராதெனிய, ருஹுணு பல்கலைக்கழங்களின் மருத்துவ மேற்படிப்புக்களை ஆரம்பிக்க 60 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

 

உலகின் புதிய போக்குகளுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதார அடித்தளத்தை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு
பல்துறைசார் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக 50 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணிவிக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
தனிநபர் வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைக்குப் பதிலாக இளைஞர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை முறைக்கு உகந்த வகையில் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய பொருளாதார முறைமை.

பரீட்சயமான சமூக வாழ்க்கை முறையானது மீண்டும் கீழ்மட்டத்திற்கு வீழ்ச்சியடையாத வகையில் புதிய பயணம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தாய்லாந்துடன் பொருளாதார – வர்த்தக உறவுகளை வலுப்படுத்தவும் சிங்கப்பூருடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தப்படுத்தவும் தீர்மானம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக, ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளுக்கு அப்பாற்பட்ட புதிய வேலைத்திட்டங்கள், புதிய அணுகுமுறையின் மூலம் ,இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உகந்த புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

நாட்டின் நீண்டகால (2023-2048) அபிவிருத்தி, பிரபலமான தீர்மானங்களில் அன்றி, சரியான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது. வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு.

முதலீட்டு சபையும் தேசிய ஏற்றுமதி சபையும் தோல்வியடைந்தமையே சர்வதேச முதலீடுகளின்மைக்கு காரணம் : இவற்றை மேம்படுத்த 100 மில்லியன் – ஜனாதிபதி
8.3 வீதமாக உள்ள தேசிய மொத்த வருமானத்தை 2025 ஆண்டில் 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை.

உலகிற்கு கடனாளியாகி விருந்துபசாரம் நடத்த இனியும் முடியாது என ஜனாதிபதி தெரிவிப்பு
சமூக பாதுகாப்பு திறந்த பொருளாதார கொள்கையின் ஊடாக அடுத்த 10 ஆண்டுகளில் 7 வீத பொருளாதார வளர்ச்சியும் 10 பில்லியின் நேரடி சர்வதேச முதலீடுகளும் இலக்காக உள்ளது என ஜனாதிபதி தெரிவிப்பு.

போட்டிச் சந்தை வாய்ப்புகள், இயற்கை பொருளாதாரம், தொழில்நுட்ப வர்த்தகம், ஆகிய துறைகளில் புதிய பொருளாதார கொள்கைகள் : ஜனாதிபதி
புதிய பொருளாதார சித்தாந்தத்தை உருவாக்குவதற்கான புதிய பயணத்தை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

52 அரச நிறுவனங்களினால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகின்றது என ஜனாதிபதி தெரிவிப்பு.

பிரபலமான தீர்மானங்களை விட நாட்டிற்கு சாதகமான தீர்மானங்களே இன்று அவசியமாகின்றன என குறிப்பிட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

 

ரணில் மெய்யாகவே தீர்வுக்குத் தயாரா ?

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்காக வடக்கு,கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் கஜேந்திரக்குமாரை நோக்கி அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும்,காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை நிறைவுசெய்வதற்காக மேலதிக குழுக்களை நியமித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநபர்கள் எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை என்றும், நாமே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே ரணில்+மைத்திரி ஆட்சிக் காலத்தில் சம்பந்தர் ஒரு ஜோதிடரைப் போல அல்லது,ஆவிக்குரிய சபையின் போதகரைப்போல”அடுத்த தீபாவளிக்குள் தீர்வு”; “அடுத்த புத்தாண்டுக்குள் தீர்வு ” என்று வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார். இப்பொழுது ரணில் அடுத்த ஆண்டுக்குள் தீர்வு என்று கூறத் தொடங்கியுள்ளார். எந்த அடிப்படையில் அவர் அவ்வாறு கூறுகிறார்? ஒன்றில் அவரிடம் ஏதும் மந்திரக்கோல் இருக்க வேண்டும்.அல்லது அவரிடம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தீர்வு இருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் அவர் தந்திரம் செய்கிறார் என்று பொருள். அவரிடம் மந்திர கோல் இல்லை.அவர் மந்திரம் தந்திரங்களில் நம்பிக்கை உள்ள ஆளும் அல்ல. எனவே அவர் எதையோ புத்திசாலித்தனமாக செய்ய முயற்சிக்கிறார் என்று மட்டும் தெரிகிறது.

அண்மை வாரங்களாக ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வரும் நகர்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் அது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

முன்னாள் சமாதானத் தூதுவர் சூல் ஹெய்ம் மீண்டும் அரங்கில் குதித்திருக்கிறார்.அவர் ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் என்று கூறப்பட்டாலும், அது ஓர் உருமறைப்பு என்று நம்பப்படுகிறது. இது முதலாவது.

இரண்டாவது,நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்சவும் கூறுகிறார், அடுத்த ஆண்டுக்குள் தீர்வு என்று.அதோடு காணாமல்போன எவரும் உயிருடன் இல்லை என்றும் கூறுகிறார்.

மூன்றாவதாக்க, மற்றொரு அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வா கூறுகிறார்..”வடக்கு,கிழக்கில் வாழும் தமிழ்மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தயாராகவுள்ளது. அதற்கு முன்னர் பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் சங்கமிக்க வேண்டும்.” என்று.

நாலாவதாக,காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தவிசாளர் கூறுகிறார், இறுதிக் கட்டப்போரில் யாரும் சரணடையவோ காணாமல் போகச் செய்யப்படவோ இல்லை என்று.படைத்தரப்பு கூறுகிறது,இறுதிக் கட்டப் போரில் யாரும் சரணடையவில்லை என்று. அதாவது காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் விவகாரத்தை அவர்கள் எப்படியாவது முடித்து வைக்க விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.

ஐந்தாவதாக உண்மை மற்றும் நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்கப் போவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால்,ரணில் விக்ரமசிங்க மீண்டும் நல்லிணக்க முயற்சி ஒன்றை நோக்கி நகரப் போகிறாரா என்ற கேள்வி பலாமாக எழும்.

யாழ்ப்பாணத்தை நோக்கி மேற்கத்திய நாட்டு தூதுவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு அவர்கள் அரசியல்வாதிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்கள். மேற்கத்திய நாட்டு தூதுவர்கள் மட்டுமல்ல தென்னாபிரிக்கத் தூதுவரும் யாழ்ப்பாணத்துக்கு வந்து போயிருக்கிறார். சிவில் சமூகங்களுடனான சந்திப்புகளின்போது, அவர்கள் ஒரு தீர்வுக்கான களநிலைமை குறித்துத் தகவல்களைத் திரட்ட முற்படுவதாகவே தோன்றுகிறது. தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா முன்னெடுத்த நல்லிணக்க முயற்சிகளைப் போன்ற ஒரு ஏற்பாட்டுக்கு அரசாங்கம் தயாராகி வருகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. உண்மையை மற்றும் நீதிக்கான ஆணைக்குழு என்பது நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டமைப்பு ஆகும். ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவோடு ஆட்சியைப் பகிர்ந்த காலகட்டத்தில் ரணில், அவ்வாறான கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.இப்பொழுது அந்த முயற்சிகளை அவர் தொடரப் போகிறாரா?

அப்படியென்றால் நிலைமாறுகால நீதிச் செய்முறையின் கீழ் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் பலவீனமான கட்டமைப்புகளை இயங்க வைத்து, தேவையான புதிய கட்டமைப்புகளையும் உருவாக்கி, தென்னாபிரிக்கா பாணியிலான ஒரு நல்லிணக்க முயற்சியை நோக்கி ரணில் நகரப் போகிறாரா?

அவ்வாறு ஒரு தீர்வு முயற்சியை நோக்கி ரணில் சீரியஸாக உழைக்கத் தேவையான ஒப்பீட்டளவில் சாதகமான ஒரு சூழல் அவருக்கு இப்பொழுது உண்டு. அதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலாவதாக,முன்பு ரணில்+ மைத்திரி ஆட்சிக்காலத்தில் அவர் தீர்வைக் கொண்டுவர முற்பட்டபொழுது அவர் ஒரு பலவீனமான பிரதமர்.ஆனால் இப்பொழுது அவர் ஒரு பலமான ஜனாதிபதி.குறிப்பாக வரும் மார்ச் மாதத்தோடு அவர் மேலும் பலமடைந்து விடுவார். எனவே பலமான நிலையில் இருந்து கொண்டு தான் ஏற்கனவே தொடங்கிய தீர்வு முயற்சிகளைத் தொடரலாமா என்று அவர் யோசிக்க முடியும்.

இரண்டாவதாக, அவர் அந்தத் தீர்வு முயற்சியை முன்னெடுத்த பொழுது கூட்டமைப்பு அதில் பங்காளியாக இருந்தது. சஜித் பிரேமதாச அவருடைய கட்சிக்குள் இருந்தார். எனவே அதே முயற்சியை மீண்டும் தொடங்கினால் இரண்டு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புக்கு வாய்ப்புகள் ஒப்பிட்டளவில் குறைவு. சுமந்திரன் இப்பொழுது ரணிலுக்கு எதிரானவர் போல தோன்றுகிறார்.ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் தீர்வு முயற்சிகளுக்கு தாம் ஆதரவு அளிக்கப் போவதாக கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. ஆனால் கஜேந்திரகுமார் அணி எதிர்க்கும்.அதனால்தான் ரணில் நாடாளுமன்றத்தில் கஜேந்திரக்குமாரை நோக்கி தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தார்.

மூன்றாவதாக,முன்னைய தீர்வு முயற்சியை குழப்பியது மைத்திரி. அவரைப் பின்னிருந்து இயக்கியது மகிந்த அணி. புதிய யாப்புக்கான இடைக்கால வரைபை அடுத்தகட்ட வாசிப்புக்கு போவதற்கிடையில் மைத்திரி ஒரு யாப்புச்சதியைச் செய்தார். ஆனால் இப்பொழுது மகிந்த ரணிலில் ஒப்பீட்டளவில் தங்கியிருக்கிறார். எனவே தனது யாப்புருவாக்க முயற்சியை எதிர்த்த மகிந்தவை ஒப்பிட்டுளவில் சமாளிக்கக்கூடிய பலத்தோடு ரணில் காணப்படுகிறார்.அதனால் ஒரு தீர்வு முயற்சிக்கு எதிராக மஹிந்த காட்டக்கூடிய எதிர்ப்பை ஒப்பிட்டுளவில் குறைக்கலாம் என்று அவர் நம்ப முடியும்.

நாலாவதாக,தமிழ்மக்கள் ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படுகிறார்கள்.கூட்டமைப்பு முன்னைய தீர்வு முயற்சியின் பொழுது 16 ஆசனங்களைக் கொண்டிருந்தது. இப்பொழுது 10 ஆசனங்கள்தான். தமிழ்த் தேசியத் தரப்பு மூன்றாகச் சிதறிக் கிடக்கிறது. அதேசமயம் தமிழ் தேசியப் பரப்புக்கு வெளியே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. குறிப்பாக கிழக்கில்,கிழக்குமைய வாதத்தை முன்வைக்கும் பிள்ளையான் வியாழேந்திரன் போன்றவர்கள் மக்கள் ஆணையைப் பெற்றிருக்கிறார்கள்.எனவே வடக்கு-கிழக்கு இணைப்புப் பொறுத்து கிழக்கு வாழ் தமிழ்மக்கள் மத்தியிலேயே அதற்கு எதிரான கருத்துக்களை உருவாக்கக்கூடிய சக்திகள் பலமடைந்து வருகின்றன.இதுவும் ரணிலுக்கு சாதகமான ஒரம்சம். அண்மையில் அவர் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைமைப் பொறுப்பை பிள்ளையானுக்கு வழங்கியிருந்தார் என்பதனை இங்கே கவனிக்க வேண்டும்.

எனவே தொகுத்துப் பார்த்தால் முன்னைய சமாதான முயற்சிகளோடு ஒப்பிடுகையில், இம்முறை ரணில் ஒப்பீட்டளவில் பலமாகக் காணப்படுகிறார். சூல் ஹெய்மை அரங்குக்குள் கொண்டு வந்ததன்மூலம் அவர் மேற்கு நாடுகளையும் கவர முடியும். தமிழ்த் தரப்பு ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில், சிங்கள மக்கள் மத்தியிலும் கடும்போக்கு வாதிகள் ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில் ரணில் விக்கிரமசிங்க தனது தீர்வு முயற்சியை புத்திசாலித்தனமாகவும் தந்திரமாகவும் முன்னகர்த்த முடியும்.

எதிர்ப்பு-ஆதரவு, தமிழ்த் தரப்பின் பலம்-பலவீனம் என்பவற்றைக் கூட்டி கழித்துப் பார்த்தால்,ரணிலுக்கு ஒப்பீட்டளவில் சாதகமான நிலை என்று கூறலாம்.எனவே அவர் மெய்யாகவே ஒரு தீர்வு முயற்சியை நோக்கி நகரக்கூடுமா?

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்தைக் கவர்வதற்கும் அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களைப் பிரித்துக் கையாள்வதற்கும் அவருக்கு அது உதவும்.ஏற்கனவே புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள பெரு முதலாளிகளை அவர் நெருங்கிச் செல்லத் தொடங்கிவிட்டார். முன்னைய நிலை மாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் அவர் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றை நெருங்கிச் சென்றார். இம்முறை பெரு முதலாளிகளை நெருங்கிச் செல்கிறார். அவரிடம் ஏதோ ஓரு புத்திசாலித்தனமான திட்டம் இருப்பதாகவே தெரிகிறது. அல்லது குறைந்தபட்சம், பன்னாட்டு நாணய நிதியம், ஐநா போன்றவற்றைத் திசை திருப்புவதற்காகவாவது,அவர் ஒரு தீர்வை கண்டுபிடிக்க போவதான தோற்றத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கலாம்.

இந்நிலையில் மூன்றாகச் சிதறிக் காணப்படும் தமிழ்த் தேசியத் தரப்பு அதனை புத்திசாலித்தனமாக அணுக வேண்டியுள்ளது. அவர் ஒரு நரி. சூழ்ச்சிகள் செய்வார் என்று கூறிக்கொண்டு, தமிழ்த் தரப்பு அப்பாவி வெள்ளாடுகளாக இருக்கத் தேவையில்லை. பதிலுக்குத் தாங்களும் சூழ்ச்சிகளில் வல்லவர்கள் என்பதனை நிரூபிக்க வேண்டும்.

– நிலாந்தன்

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது- ஜனாதிபதி ரணில்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட உரையை நிகழ்த்திய அவர், இனப்பிரச்சினை தீர்வு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்தல், காணாமல் போனோர் விடயம் என்பன தொடர்பாக தீர்வு காணப்படுவது அவசியம் என குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிலர் அண்மையில் விடுவிக்கப்பட்டார்கள், எதிர்காலத்திலும் எஞ்சியவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக அடுத்த வாரத்தில் தாம் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, எகிப்தில் இடம்பெற்ற கொப் 27 ஆவது காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தொடர்பாகவும், ஜனாதிபதி கருத்துக்களை வெளியிட்டார். இந்த மாநாட்டில் வளர்ந்த நாடுகளிடமிருந்து வளர்முக நாடுகள் எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை, இது அந்த மாநாட்டில் பின்னடைவாகவே கருதப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த மாநாட்டில் காலநிலை தொடர்பான எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உணவு பற்றாக்குறையை பொருத்த வரையில் ஆபிரிக்க நாடுகளே அதிகமாக அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளில் பாதிக்கப்படும் அபாயத்தை கொண்டுள்ளன.

இதனை மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் எச்சரிக்கை செய்தியாக அறிவித்ததாகவும் ஜனாதிபதி கூறினார். இதற்கிடையில், எகிப்து மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக தாம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரை சந்தித்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கைக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார். எனவே, எதிர்வரும் டிசம்பர் அளவில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்

ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிடும் போது குறுக்கீட்டு கேள்வியை எழுப்பிய, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியயெல்ல, எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கை குறித்த தகவல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, ஏனைய கடன்வழங்குனர்களின் இணக்கப்பாடு எட்டப்படும் வரை இந்த விடயத்தை வெளிப்படுத்த வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன், இணங்கப்பட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஏனைய கடன் வழங்குனர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

இதில் இணக்கப்பாடு காணப்பட்டதுடன் அதனை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்

இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்பாடுகளின் படி மறைமுக வரிகளை விதிப்பதன் மூலம் பாரத்தை சுமத்துவதா, நேரடி வரிகளை விதிப்பதா, அல்லது அரச செலவீனங்களை குறைப்பதா, என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்புக்கு கடன்வழங்குநர்களில் ஏதாவது ஒரு தரப்பு இணக்கம் வெளியிடாவிட்டால் அது குறித்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார். கடன்களை இரத்துச் செய்வதா அல்லது கடன் செலுத்தும் தவணைகளை நீடிப்பதா என்பது குறித்து கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டவேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

தமிழர் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு – ஐனாதிபதி

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாகவே தீர்வு காண முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாகவும், எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதிய முகாமைத்துவ பணிப்பாளரை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்டலினா ஜோர்ஜியேவா ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எகிப்தில் இடம்பெற்று வரும் கோப் – 27 மாநாட்டில் பங்குபற்றவதற்காக அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு பல்வேறு தரப்பினருடனும் முக்கிய சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளார்.

அதற்கமையவே நேற்று செவ்வாய்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அன்டலினா ஜோர்ஜியேவாவையும் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது கடன் முகாமைத்துவம் தொடர்பில் வெற்றிகரமான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில் கானா நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் மாலைதீவின் சபாநாயகர் ஆகியோர் மொஹமட் நஷீட் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.