ரணில் மெய்யாகவே தீர்வுக்குத் தயாரா ?

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்காக வடக்கு,கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் கஜேந்திரக்குமாரை நோக்கி அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும்,காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை நிறைவுசெய்வதற்காக மேலதிக குழுக்களை நியமித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநபர்கள் எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை என்றும், நாமே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே ரணில்+மைத்திரி ஆட்சிக் காலத்தில் சம்பந்தர் ஒரு ஜோதிடரைப் போல அல்லது,ஆவிக்குரிய சபையின் போதகரைப்போல”அடுத்த தீபாவளிக்குள் தீர்வு”; “அடுத்த புத்தாண்டுக்குள் தீர்வு ” என்று வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார். இப்பொழுது ரணில் அடுத்த ஆண்டுக்குள் தீர்வு என்று கூறத் தொடங்கியுள்ளார். எந்த அடிப்படையில் அவர் அவ்வாறு கூறுகிறார்? ஒன்றில் அவரிடம் ஏதும் மந்திரக்கோல் இருக்க வேண்டும்.அல்லது அவரிடம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தீர்வு இருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் அவர் தந்திரம் செய்கிறார் என்று பொருள். அவரிடம் மந்திர கோல் இல்லை.அவர் மந்திரம் தந்திரங்களில் நம்பிக்கை உள்ள ஆளும் அல்ல. எனவே அவர் எதையோ புத்திசாலித்தனமாக செய்ய முயற்சிக்கிறார் என்று மட்டும் தெரிகிறது.

அண்மை வாரங்களாக ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வரும் நகர்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் அது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

முன்னாள் சமாதானத் தூதுவர் சூல் ஹெய்ம் மீண்டும் அரங்கில் குதித்திருக்கிறார்.அவர் ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் என்று கூறப்பட்டாலும், அது ஓர் உருமறைப்பு என்று நம்பப்படுகிறது. இது முதலாவது.

இரண்டாவது,நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்சவும் கூறுகிறார், அடுத்த ஆண்டுக்குள் தீர்வு என்று.அதோடு காணாமல்போன எவரும் உயிருடன் இல்லை என்றும் கூறுகிறார்.

மூன்றாவதாக்க, மற்றொரு அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வா கூறுகிறார்..”வடக்கு,கிழக்கில் வாழும் தமிழ்மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தயாராகவுள்ளது. அதற்கு முன்னர் பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் சங்கமிக்க வேண்டும்.” என்று.

நாலாவதாக,காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தவிசாளர் கூறுகிறார், இறுதிக் கட்டப்போரில் யாரும் சரணடையவோ காணாமல் போகச் செய்யப்படவோ இல்லை என்று.படைத்தரப்பு கூறுகிறது,இறுதிக் கட்டப் போரில் யாரும் சரணடையவில்லை என்று. அதாவது காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் விவகாரத்தை அவர்கள் எப்படியாவது முடித்து வைக்க விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.

ஐந்தாவதாக உண்மை மற்றும் நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்கப் போவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால்,ரணில் விக்ரமசிங்க மீண்டும் நல்லிணக்க முயற்சி ஒன்றை நோக்கி நகரப் போகிறாரா என்ற கேள்வி பலாமாக எழும்.

யாழ்ப்பாணத்தை நோக்கி மேற்கத்திய நாட்டு தூதுவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு அவர்கள் அரசியல்வாதிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்கள். மேற்கத்திய நாட்டு தூதுவர்கள் மட்டுமல்ல தென்னாபிரிக்கத் தூதுவரும் யாழ்ப்பாணத்துக்கு வந்து போயிருக்கிறார். சிவில் சமூகங்களுடனான சந்திப்புகளின்போது, அவர்கள் ஒரு தீர்வுக்கான களநிலைமை குறித்துத் தகவல்களைத் திரட்ட முற்படுவதாகவே தோன்றுகிறது. தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா முன்னெடுத்த நல்லிணக்க முயற்சிகளைப் போன்ற ஒரு ஏற்பாட்டுக்கு அரசாங்கம் தயாராகி வருகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. உண்மையை மற்றும் நீதிக்கான ஆணைக்குழு என்பது நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டமைப்பு ஆகும். ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவோடு ஆட்சியைப் பகிர்ந்த காலகட்டத்தில் ரணில், அவ்வாறான கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.இப்பொழுது அந்த முயற்சிகளை அவர் தொடரப் போகிறாரா?

அப்படியென்றால் நிலைமாறுகால நீதிச் செய்முறையின் கீழ் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் பலவீனமான கட்டமைப்புகளை இயங்க வைத்து, தேவையான புதிய கட்டமைப்புகளையும் உருவாக்கி, தென்னாபிரிக்கா பாணியிலான ஒரு நல்லிணக்க முயற்சியை நோக்கி ரணில் நகரப் போகிறாரா?

அவ்வாறு ஒரு தீர்வு முயற்சியை நோக்கி ரணில் சீரியஸாக உழைக்கத் தேவையான ஒப்பீட்டளவில் சாதகமான ஒரு சூழல் அவருக்கு இப்பொழுது உண்டு. அதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலாவதாக,முன்பு ரணில்+ மைத்திரி ஆட்சிக்காலத்தில் அவர் தீர்வைக் கொண்டுவர முற்பட்டபொழுது அவர் ஒரு பலவீனமான பிரதமர்.ஆனால் இப்பொழுது அவர் ஒரு பலமான ஜனாதிபதி.குறிப்பாக வரும் மார்ச் மாதத்தோடு அவர் மேலும் பலமடைந்து விடுவார். எனவே பலமான நிலையில் இருந்து கொண்டு தான் ஏற்கனவே தொடங்கிய தீர்வு முயற்சிகளைத் தொடரலாமா என்று அவர் யோசிக்க முடியும்.

இரண்டாவதாக, அவர் அந்தத் தீர்வு முயற்சியை முன்னெடுத்த பொழுது கூட்டமைப்பு அதில் பங்காளியாக இருந்தது. சஜித் பிரேமதாச அவருடைய கட்சிக்குள் இருந்தார். எனவே அதே முயற்சியை மீண்டும் தொடங்கினால் இரண்டு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புக்கு வாய்ப்புகள் ஒப்பிட்டளவில் குறைவு. சுமந்திரன் இப்பொழுது ரணிலுக்கு எதிரானவர் போல தோன்றுகிறார்.ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் தீர்வு முயற்சிகளுக்கு தாம் ஆதரவு அளிக்கப் போவதாக கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. ஆனால் கஜேந்திரகுமார் அணி எதிர்க்கும்.அதனால்தான் ரணில் நாடாளுமன்றத்தில் கஜேந்திரக்குமாரை நோக்கி தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தார்.

மூன்றாவதாக,முன்னைய தீர்வு முயற்சியை குழப்பியது மைத்திரி. அவரைப் பின்னிருந்து இயக்கியது மகிந்த அணி. புதிய யாப்புக்கான இடைக்கால வரைபை அடுத்தகட்ட வாசிப்புக்கு போவதற்கிடையில் மைத்திரி ஒரு யாப்புச்சதியைச் செய்தார். ஆனால் இப்பொழுது மகிந்த ரணிலில் ஒப்பீட்டளவில் தங்கியிருக்கிறார். எனவே தனது யாப்புருவாக்க முயற்சியை எதிர்த்த மகிந்தவை ஒப்பிட்டுளவில் சமாளிக்கக்கூடிய பலத்தோடு ரணில் காணப்படுகிறார்.அதனால் ஒரு தீர்வு முயற்சிக்கு எதிராக மஹிந்த காட்டக்கூடிய எதிர்ப்பை ஒப்பிட்டுளவில் குறைக்கலாம் என்று அவர் நம்ப முடியும்.

நாலாவதாக,தமிழ்மக்கள் ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படுகிறார்கள்.கூட்டமைப்பு முன்னைய தீர்வு முயற்சியின் பொழுது 16 ஆசனங்களைக் கொண்டிருந்தது. இப்பொழுது 10 ஆசனங்கள்தான். தமிழ்த் தேசியத் தரப்பு மூன்றாகச் சிதறிக் கிடக்கிறது. அதேசமயம் தமிழ் தேசியப் பரப்புக்கு வெளியே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. குறிப்பாக கிழக்கில்,கிழக்குமைய வாதத்தை முன்வைக்கும் பிள்ளையான் வியாழேந்திரன் போன்றவர்கள் மக்கள் ஆணையைப் பெற்றிருக்கிறார்கள்.எனவே வடக்கு-கிழக்கு இணைப்புப் பொறுத்து கிழக்கு வாழ் தமிழ்மக்கள் மத்தியிலேயே அதற்கு எதிரான கருத்துக்களை உருவாக்கக்கூடிய சக்திகள் பலமடைந்து வருகின்றன.இதுவும் ரணிலுக்கு சாதகமான ஒரம்சம். அண்மையில் அவர் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைமைப் பொறுப்பை பிள்ளையானுக்கு வழங்கியிருந்தார் என்பதனை இங்கே கவனிக்க வேண்டும்.

எனவே தொகுத்துப் பார்த்தால் முன்னைய சமாதான முயற்சிகளோடு ஒப்பிடுகையில், இம்முறை ரணில் ஒப்பீட்டளவில் பலமாகக் காணப்படுகிறார். சூல் ஹெய்மை அரங்குக்குள் கொண்டு வந்ததன்மூலம் அவர் மேற்கு நாடுகளையும் கவர முடியும். தமிழ்த் தரப்பு ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில், சிங்கள மக்கள் மத்தியிலும் கடும்போக்கு வாதிகள் ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில் ரணில் விக்கிரமசிங்க தனது தீர்வு முயற்சியை புத்திசாலித்தனமாகவும் தந்திரமாகவும் முன்னகர்த்த முடியும்.

எதிர்ப்பு-ஆதரவு, தமிழ்த் தரப்பின் பலம்-பலவீனம் என்பவற்றைக் கூட்டி கழித்துப் பார்த்தால்,ரணிலுக்கு ஒப்பீட்டளவில் சாதகமான நிலை என்று கூறலாம்.எனவே அவர் மெய்யாகவே ஒரு தீர்வு முயற்சியை நோக்கி நகரக்கூடுமா?

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்தைக் கவர்வதற்கும் அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களைப் பிரித்துக் கையாள்வதற்கும் அவருக்கு அது உதவும்.ஏற்கனவே புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள பெரு முதலாளிகளை அவர் நெருங்கிச் செல்லத் தொடங்கிவிட்டார். முன்னைய நிலை மாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் அவர் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றை நெருங்கிச் சென்றார். இம்முறை பெரு முதலாளிகளை நெருங்கிச் செல்கிறார். அவரிடம் ஏதோ ஓரு புத்திசாலித்தனமான திட்டம் இருப்பதாகவே தெரிகிறது. அல்லது குறைந்தபட்சம், பன்னாட்டு நாணய நிதியம், ஐநா போன்றவற்றைத் திசை திருப்புவதற்காகவாவது,அவர் ஒரு தீர்வை கண்டுபிடிக்க போவதான தோற்றத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கலாம்.

இந்நிலையில் மூன்றாகச் சிதறிக் காணப்படும் தமிழ்த் தேசியத் தரப்பு அதனை புத்திசாலித்தனமாக அணுக வேண்டியுள்ளது. அவர் ஒரு நரி. சூழ்ச்சிகள் செய்வார் என்று கூறிக்கொண்டு, தமிழ்த் தரப்பு அப்பாவி வெள்ளாடுகளாக இருக்கத் தேவையில்லை. பதிலுக்குத் தாங்களும் சூழ்ச்சிகளில் வல்லவர்கள் என்பதனை நிரூபிக்க வேண்டும்.

– நிலாந்தன்