பொலிஸாரின் இலஞ்ச ஊழல்களே குற்றச்செயல்கள், விபத்துக்களுக்குக் காரணம் – சபா.குகதாஸ்

நாட்டில் பொலிஸாரின் இலஞ்ச ஊழல்களே குற்றச் செயல்கள் மற்றும் விபத்துக்களுக்கு காரணம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்கின்ற சமநேரம் வீதிகளின் விபத்துக்களின் எண்ணிக்கையும் அதனால் அப்பாவிகளின் உயிர்கள் காவு கொள்ளப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது.

காரணம் சட்ட ஒழுங்குகளை கண்காணிக்கும் தரப்பிடம் மேலோங்கியுள்ள லஞ்ச ஊழல் செயல்களே ஆகும்.

நாட்டில் வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் அதிகரிப்பதற்கான உண்மையான காரணத்தை அரசாங்கம் இதுவரை கண்டறியவில்லை அதற்கான முயற்சிகளும் இடம்பெறவில்லை காரணம் ஆட்சித் தரப்பில் உள்ள ஊழல் மோசடிகள் மறைக்கப்படுவதற்காக இரண்டாம் மட்ட லஞ்ச ஊழல்கள் தடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு இலஞ்ச ஊழல் மோசடிகளே பிரதான காரணம் ஆகும்.

வீதி விபத்துக்கள் அதிகரிப்பதில் முறையற்ற வகையில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுதல், போதையில் வாகனம் செலுத்துதல், தண்டனைக் குரிய குற்றச் செயல்களுடன் போக்குவரத்து கண்காணிப்பு பொலிசாருக்கு இலஞ்சம் வழங்கி வீதிகளில் வாகனங்கள் செலுத்தும் நபர்களினால் நாளாந்தம் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.

ஆகவே நாட்டில் குற்றச் செயல்கள் மற்றும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு இலஞ்ச ஊழல் மோசடிகளே காரணம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, இன்று சனிக்கிழமை (27) மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், ஊடகவியலாளர்கள், மத குருமார், சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் உட்பட பலர் காந்தி பூங்காவின் முன்னால் இன்று ஒன்றிணைந்தனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் ‘படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணை வேண்டும்’, ‘ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து’, ‘படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கொடு’, ‘எங்கே எங்கே ஊடகவியலாளர் எக்னியாகொட எங்கே’, ‘நிகழ்நிலை காப்பு சட்டத்தை வாபஸ் பெறு’ போன்ற சுலோகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் நெற்றியில் கறுப்புப்பட்டி அணிந்தும் கோஷங்கள் எழுப்பியவாறும் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊடகங்களை அடக்குவதற்காகவா நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் – சபையில் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) எம்.பி சீற்றம்

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் இன்றைய விவாதம் இரண்டாவது நாளாக நடைபெறுகின்றது. உண்மையிலே ஜனநாயகத்தின் தூண்களில் நாலாவது தூணான ஊடகத்தினை அடக்குவதற்கான இந்த சட்டமா? அல்லது தொடர்ச்சியாக இந்த ஊடகத்தினை அடக்குவதற்கான இந்த சட்டமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என கோவிந்தன் கருணாகரம் எம்.பி தெரிவித்துள்ளார்

இன்றைய தினம்(24) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

இந்த சட்ட மூலம் இந்த கால கட்டத்திலே எதற்காக கொண்டு வரப்படுகிறது? உண்மையில் இந்த சட்ட மூலத்தில் கூறிய நோக்கங்களை அடைவதற்காகவா என்ற ஐயம் எனக்கு மட்டுமல்ல இந்த உயரிய சபையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் உண்டு. நமது அரசியல் அமைப்பு போதுமான உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் அரசியலமைப்பை பேணி பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்களே அரசியலமைப்பை மீறும் செயல்பாடாகவே நான் இந்த சட்ட மூலத்தை நான் நோக்குகின்றேன். மீண்டும் ஒரு அரகலய நாட்டில் ஏற்பட இடமளிக்கக் கூடாது, என்ற அச்சமே இந்த சட்டமூலத்தை பின்னணி என்பது எனது கருத்து.

ஆட்சித்தலைவர்களிடமிருந்து அமைச்சர்கள் வரை விமர்சனங்களை எதிகொள்ள தயாரில்லை. தமது ஊழல் நிர்வாக சீர்கேடுகளை புள்ளி விபரங்களுடன் புட்டு வைக்கும் போது ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் பயப்பிரதிபலிப்பே இந்த சட்ட மூலம். நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு சாவுமணி. மக்களின் சிந்தனை கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கல்லறையில் வைப்பதே இச்சட்ட மூலமாகும். உண்மையிலே இந்த நாட்டில் மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் அரசுகள் ஊடக அடக்குமுறையை தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகிறார்கள்.

மேலும் அரசுக்கு எதிராகவோ அல்லது அரசாங்க அமைச்சர்களினால் ஏற்படுத்தப்படும் ஊழல்களுக்கு எதிராகவோ யாரவது கருத்திட்டால் அவர்கள் அச்சுறுத்தப்படுவதும் சிறை பிடிக்கப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. இந்த நாட்டிலே உண்மையை எழுதிய ஊடகவியலாளர்கள் அரசினால் நடத்தப்படும் படுகொலைகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே ஐம்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இந்த நாட்டிலே கொல்லப்பட்டுள்ளார். அதிலும் 40க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் ஊடகவியலாளர்களாக இருந்திருக்கிறார்கள். அரசினாலும் அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் பலர் அரசதரப்பு படைகளினால் அல்லது வெள்ளை வான்களாலும் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்ட வரலாறுகளும் இந்த நாட்டிலே நடந்தேறி இருக்கிறது.

கருத்து வெளிப்பாடு தொடர்பாக இன்னுமொரு ஜனநாயகவாதி கூறிய இன்னுமொரு கருத்தொன்றும் இவ்வேளையில் எனக்கு ஞாபகம் வருகின்றது. உன்னுடைய கைத்தடியை சுழற்ற உனக்கு பூரண சுதந்திரம் உள்ளது. ஆனால் உன்னுடைய கைத்தடி எனது மூக்கு நுனியை தொடாதவரை என்று நான் படித்தது எனக்கு ஞாபகம் வருகின்றது.

இன்று கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல்களும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்துதலும் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் எட்டி பார்ப்பதுவுமே கருத்துச்சுதந்திரம் என்ற கருதுகோளாக உள்ளது. அதுவும் தற்போது சமூக வலைத்தளங்கள் பல்கிப்பெருகியமை. உண்மைகளை திரிவுபடுத்துவதை ஊக்கமளிக்கும் நிலைமைகளை ஏற்படுத்துதப்பட்டுள்ளது. போலிப் பெயர்களில், போலி முகங்களில் உண்மைக்கு சவாலாக இருப்பவர்களை தண்டிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு உண்டு.

ஊடகவியலாளர்கள் என்று முகம் காட்டி ஊடக தர்மத்தை சிதைக்க முகம் காட்டுபவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் தேவையும் அரசுக்கு உண்டு. உண்மையிலே இந்த முகநூல் வழியாகவோ அல்லது வட்ஸப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களூடாகவோ, தனிப்பட்ட காழ்புணர்ச்சியினால் பல சமூக சீர்கேடுகள் எமது சமூகத்திலே இடம் பெறுகின்றது. குறிப்பாக சொல்லப்போனால் குடும்பங்கள் பிரிவதும் சிலர் தற்கொலைக்கு தூண்டபடுவதற்கும் இந்த சமூக வலைத்தளங்கள் உள்ளது. ஆனால் அரசு தன்னை பாதுகாக்க, ஊழலை பாதுகாக்க, தனது அமைச்சரவையை பாதுகாக்க, தனது ஆட்சியை பாதுகாக்க, பொதுவான மக்கள் எழுச்சியை அடக்குவதாக இது இருக்க கூடாது. இதற்கேற்ப வகையிலும் இச்சட்டங்களில் திருத்தங்கள் ஏற்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பில் மீண்டும் இணைக்க வேண்டும் – சபா.குகதாஸ் கோரிக்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பில் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளரும், வட மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், மேற்படி அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

கடந்த உள்ளூராட்சி வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியது.

ஆனால் கட்சியின் அன்றைய முடிவை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி இனத்தின் ஒற்றுமையைக் கருதி பொதுச் சின்னத்தில் கூட்டமைப்பாக கடந்த காலத்தில் சில கசப்பான சம்பவங்களால் வெளியேறிய அனைவனையும் ஒன்றினைத்து ஒரு குடையின் கீழ் பயனிக்க தீர்க்க முடிவை கட்சியில் ஏகமனதாக முடிவெடுக்;க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தலைவர் தெரிவுக்கு முன்பாக மக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் முக்கியமானவை. அதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் இணைந்து பொதுச் சின்னத்தில் இனத்தின் ஒற்றுமையையும் அரசியல் விடுதலையையும் வென்றெடுப்போம் எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஜெனிவா தீர்மானங்களை பலவீனப்படுத்த கூட்டுச் சதி நடக்கிறது – சபா குகதாஸ் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் தொடர்பான குற்றங்களை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் பல நெருக்கடிகளை சர்வதேச ரீதியாக கொடுப்பதை தவிர்க்க எதிர்வரும் கூட்டத் தொடர்களில் புதிதாக வர இருக்கும் தீர்மானங்களை பலவீனப்படுத்து இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச சக்திகளும் இணைந்து பெரும் கூட்டுச் சதி ஒன்றை மேற் கொள்ள ஆரம்பித்துள்ளனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பொறுப்பாளரும், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமானசபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கம் உள் நாட்டில் பல போலியான செயற்பாடுகளை பாதிப்புக்களுடன் தொடர்பற்ற தரப்புக்களை வைத்து அரங்கேற்றுகின்றனர். அண்மையில் நீதி அமைச்சர் விஜயதாஸ வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து இன நல்லிணக்கம் பற்றிய பேச்சை சிறு குழுக்களை வைத்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் கலந்துரையாடியுள்ளார் உண்மையில் உள்ள நாட்டில் இன நல்லிணக்கத்திற்கு யார் தடை என்றால் ஆளும் அரசாங்கம் மட்டுமே தான் ஏனைய தரப்புக்கள் யாரும் தடை இல்லை.

கடந்த காலங்களில் ஆபிரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்க சார்பு நாடுகள் தான் ஐெனிவா தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கினர் இதனால் இலங்கை அரசாங்கத்திற்கு பாதிப்பு அதிகம் இதனை மாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற் கூறிய நாடுகளின் பிரதி நிதிகளுடன் இராஐதந்திர உரையாடலை ஆரம்பித்துள்ளார் இதற்கு சர்வதேச சக்திகளும் மறைமுகமாக ஆதரவை வழங்குகின்றன இதனால் எதிர் காலத்தில் தீர்மானங்கள் வருகிற போது இலங்கைக்கு எதிரான தீர்மானமாக இருந்தாலும் வலுக் குறைந்த விடையங்களை உள்ளடக்கியதாக மாறும் அபாயம் உள்ளது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தொடர்ந்து பயன்படுத்தி தங்கள் பூகோள அதிகாரங்களை நிலைப்படுத்த நினைக்கும் சர்வதேச சக்திகள் தமிழர் தரப்பின் நீதியை பலவீனப்படுத்தி இலங்கை அரசாங்கத்தை நெருக்கடிகளில் இருந்து பாதுகாக்க கூட்டுச் சதியில் இறங்கியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியப் பிரதமரின் இல்லத்தில் பொங்கல் விழா

பிரித்தானிய சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்புக்கான அமைச்சர் விக்டோரியா அட்கின்ஸ் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவானது பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் இன்றையதினம் இடம்பெற்றது.

இதன்போது, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்ல நுழைவாயில் பாரம்பரிய கோலத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் தமிழீழ தேசிய மலரான கார்த்திகை பூ அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பாணையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அட்கின்ஸ்,

உலகப் போரின் முன்னோடி விமானிகள் முதல் கோவிட் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் வரை ஐக்கிய இராச்சியத்திற்கு தமிழர்களின் நீண்டகால பங்களிப்புகளை பாராட்டினார் .

மேலும் தேசிய சுகாதார சேவையில் பணியாற்றும் தமிழர்களுக்கும், ஆசிரியர்கள் உட்பட தமிழ் கல்வியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கையில் தமிழரின் நிலையை பற்றி உரையாற்றிய அமைச்சர் அட்கின்ஸ்,

பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான இங்கிலாந்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமது ஆதரவை வலியுறுத்தனார். இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் ஒரு திட்டத்திற்காக 11 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

இது நீதிக்கான ஐக்கிய இராச்சியத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரது உரையை தொடர்ந்து மாணவிகளின் பாரத நாட்டிய நிகழ்வு இடம்பெற்றதுடன், நிகழ்வில் பாரம்பரிய தமிழ் உணவு பதார்த்தங்கள் பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“மஹிந்தவுடன் இணைய தமிழர்கள் தயாராக இல்லை” – ரெலோ செயலாளார் நாயகம் ஜனா எம்.பி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து ஆட்சியை அமைக்க தமிழர்களோ, தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ எந்த விதத்திலும் தயாராக இல்லையென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பட்டிருப்பில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

” தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விரும்பும் ஒரு வேட்பாளரை நிறுத்துவோமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார்.

ஆயுதப்போராட்டம் 2009 இல் மௌனிக்கப்படும்போது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும், சர்வதேசத்தின் துணைகொண்டு அழித்த ஜனாதிபதியாவார். புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலே 13 பிளஸ் கொடுப்பேன் என சர்வதேசத்திற்கு ஓர் உத்தரவாத்தத்தைக் கொடுத்து எமது மக்களையும் போராட்டத்தையும் அழித்தார்.

2009 இற்குப் பின்னர் தமிழ் மக்களின் முக்கியமான பிரதி நிதித்துவத்தைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகளைச் செய்து, இறுதியில் ஏமாற்றிய மஹிந்த ராஜபக்‌ஷ, தமிழ் மக்களுடன் மீண்டும் பேசி ஒரு ஜனாதிபதி வேட்பாளரைக் கொண்டு வருவேன் என அ கூறினாலும், தமிழ் மக்களோ தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ அவருடன் இணைந்து ஓர் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு எந்த விதத்திலும் தயாராக இல்லை.

மேலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினுடைய ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் ஆதரவுடனேயே ஜனாதிபதியாக இருக்கின்றார்.

அதள பாதாளத்திற்குச் சென்ற இலங்கையை மீட்பதாக அவர் கூறிக்கொண்டிருந்தாலும் பொதுஜனப் பெரமுனவை விட்டு அவர் இன்னும் வெளியேறவில்லை. ஆனால், அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடாத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஜனாதிபதி ஒத்திவைத்தது போன்று ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது. இந்நிலையில் பொதுஜனப் பெரமுனவில் இருக்கின்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவின் பக்கமும், இன்னும் சிலர் சஜித் பிரேமதாசவின் பக்கமும் சென்றிருக்கின்றார்கள்.

யாராக இருந்தாலும். இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மைகளையும் செய்யவில்லை” என தெரிவித்துள்ளார்.

இனவாதத்தின் காரணமாகவே மயிலத்தமடு விவகாரத்திலும் அரசு பாராமுகம் – தவிசாளர் நிரோஸ்

மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் தமிழ் பண்னையாளர்களுக்கு எதிரான பேரினவாதிகளின் ஆக்கிரமிப்பை அரச இயந்திரம் தடுக்கவில்லை. மாறாக அதற்கு ஒத்துழைப்பாகவே இருக்கின்றது என்பதனை வெளிப்படுத்துவதற்கு சகல இடங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளர்வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களப் போரினவாத ஆக்கிரமிப்பிற்கு எதிராக நாம் போராடுகின்றோம். வரலாற்று ரீதியில் எமது மக்களின் நிலங்கள் திட்டமிட்ட பௌத்த சிங்கள மயமாக்கத்திற்கு உட்பட்டே வருகின்றன. அதற்கு அரச இயந்திரமும் ஒத்துழைப்பாக இருந்து வருகின்றது. இலங்கையை இனவாதமற்றதாக அரசாங்கம் வெளியுலகிற்குக் காட்ட எத்தனிக்கும் அதேவேளை ஆரவாரமற்ற வன்முறைகளின் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீகத்தினையும் அவர்களது பொருளாதாரத்தையும் அழித்து வருகின்றது.

மயிலத்தமடு விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கால்நடைகள் வன்முறையான மிகக் கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றன. பண்னையாளர்கள் தமிழ் மக்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் அவர்கள் அதிகார பலத்துடன் பேரினவாத நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது.

 கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியில் நடைபெறும் ஆக்கிரமிப்பு அல்ல இப்பிரச்சினை. அடிப்படையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத நிகழ்ச்சி நிரலுடனான ஆக்கிரமிப்பு. நாம் வடக்குக் கிழக்கு எமது தாயகம் என்ற வகையில் இன்று யாழில் இவ் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளோம். தொடர்ந்தும் மயிலத்தமடுவில் போராடும் மக்களுக்கு ஆதரவாக சகல பிரதேசங்களிலும் வெளியுலகின் கவனத்தினை ஈர்ப்பதற்கான பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக பலதரப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) திருகோணமலை மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

தைப்பொங்கல் தினமான இன்றைய தினம்(15) திருகோணமலை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) அலுவலகம் சுங்க வீதியிலுள்ள தனது சொந்தக்கட்டிடத்தில் சம்பிரதாய பூர்வமாக கட்சி செயலாளரும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), கட்சியின் உப தலைவர்களான முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் பிரசன்னா, மற்றும் ஹென்றி மகேந்திரன் ஆகியோரால் கட்சி கொடியேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து வருகை தந்திருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மற்றும் உபதலைவர்களான நி.பிரசன்னா, மற்றும் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் திருகோணமலை மாவட்ட நிர்வாகத்தினரின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும். ஏனைய மாவட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளைவிட ஒருபடி மேலாக இம்மாவட்ட கட்சியின் செயற்பாடுகள் இருப்பதாகவும். தொடர்ந்து இவ்வாறே ஒற்றுமையாக செயற்படுவீர்களானால் இன்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் பல பிரதேச சபைகளையும் பெற்ற நாங்கள் வருகின்ற தேர்தல்களில் எமது மக்கள் பிரநிதிகளை திருகோணமலையிலும் பெறுவதற்கான காலம் கனிந்துள்ளதாகவும். பாராட்டி பேசினார்கள். நிறைவாக மாவட்ட அமைப்பாளர் அ.விஜயகுமார் அவர்கள் நன்றியுரை வழங்கி நிகழ்வை நிறைவுசெய்தார்.

தைப்பொங்கல் அனைவரின் வாழ்விலும் செழிப்பையும், வளங்களையும், மேன்மையையும் தரும் என்பது நம்பிக்கையாகும் – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். உலகெங்கும் வாழும் தமிழர்கள் பண்டுதொட்டு கொண்டாடிவரும் தைப்பொங்கல் அனைவரின் வாழ்விலும் செழிப்பையும், வளங்களையும், மேன்மையையும் தரும் என்பது நம்பிக்கையாகும். அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க தைத்திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்ற வாக்கிற்கு ஏற்ப இயற்கைக்கு நன்றி செத்தும் நாளாகவும் இத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டமைந்த இயற்கை முறை வாழ்வியலே உலகின் வாழ்வாதாரமாகும். இயற்கையின் ஆதாரமே சூரியனாகும். விவசாயத்திற்குத் தேவையான அனைத்து விடயங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதாகவும், உணவை வழங்கும் உழவர்களுக்கு நன்றி செலுத்துவதாகவும், அவர்களுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் என நன்றி செலுத்தும் ஒன்றாக தைத்திருநாள் அமைந்துவருகிறது.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் பண்டுதொட்டு கொண்டாடிவரும் தைப்பொங்கல் அனைவரின் வாழ்விலும் செழிப்பையும், வளங்களையும், மேன்மையையும் தரும் என்பது நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின் பயனாக ஒவ்வொருவரின் வாழ்வும் சிறப்புப் பெறும் பாரம்பரியம் மிக்கது தமிழர்களது பாரம்பரியம்.

பால் பொங்கி வழிவதைப் போல் அனைவரது உள்ளங்களிலும் அன்பும் மகிழ்ச்சியும் பெருகிப் பிரவாகிக்க வேண்டும் என்பது எமது விருப்பம். தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் என பல்வகை இனங்களைக் கொண்ட இந்து , பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களை கைக்கொள்ளும் மக்களையுடைய நம்நாட்டில் அமைதியுமு; மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ இந்தத் தைத் திருநாள்ள வழிசெய்ய வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமுமிருந்தாலும் அதற்கான விட்டுக்கொடுப்பு பரஸ்பர புரிந்துணர்வின்மை காரணமாக அமைதியும் ஒற்றுமையும் உருவாவதில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த தைத்திருநாள் அதற்கான வாய்ப்பை உருவாக்கித்தரவேண்டும் என்று பிரார்த்திப்போம்.

புதிய அரசியலமைப்பு உருவாதல், தமிழர்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும் எதிர்பார்த்தே வருடங்களைக் கடத்துபவர்களாக ஒவ்வொரு வருடத்தினையும் நாம் கடந்து வருகிறோம். ஏமாற்றங்களையும் நாம் அனுபவிக்கிறோம்.

பொங்கலில் பால் பொங்கி வழிந்து அதன் கறைகள் வெளியேறி தூய்மையடைவது போன்று நாட்டிலுள்ள ஆதிக்கவாதிகளின் மனதிலுமுள்ள கறைகள் நீங்கி துய்மையடைந்து புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு இவ்வருடத்திலேனும் உருவாகவேண்டும் என்று பிரார்த்திப்போம்.

உழவுக்கு உதவும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி, தமிழர் பாரம்பரியங்களைப் பறைசாற்றும் வகையிலமைந்த தைத்திருநாளின் பெருமையை உணர்த்தும் இந்நாளில் எல்லோருக்கும் மகிழ்ச்சியுடன் சேர்த்து எல்லா வளங்களும் கிடைக்கவேண்டும் என வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.