வடக்கு மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயம் ஆரம்பம்

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் 2 ஆம் திகதி புதன்கிழடை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

செப்டம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணத்தை ஆரம்பிக்க இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார்.

சீனாவின் உரங்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் – தலைவிரித்தாடும் ஊழல் மோசடிகள்

நாட்டு மக்கள் இக்கட்டான நிலையில் தத்தளிக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளுக்கு சென்று உரை நிகழ்த்திக்கொண்டிருப்பதாக ஜக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலகை எப்படி ஆள்வது, சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்று உலகத் தலைவர்களுக்குப் பல்வேறு உபதேசங்கள் வழங்கப்படுகின்றன.

உலகத் தலைவர்களுக்கு உபதேசம் செய்யும் ஜனாதிபதி தனது அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு உபதேசம் செய்ய முடியவில்லை ஏனெனில் இந்த அரசாங்கத்தில் உள்ள மோசடிகள், ஊழல்கள் மட்டுமன்றி அரசாங்கத்தின் கையாலாகாத்தனம், தோல்விகள் இவையனைத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதிலும் ஜனாதிபதி இவற்றையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எருவுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் கொடுக்கப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நாட்டில் மோசடிகளும் ஊழல்களும் தலைவிரித்தாடியுள்ளன.

ஆனால் அந்த அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை, வெளியிடப்படவில்லை.

மறுபுறம், அரசாங்கம் மோசடி மற்றும் ஊழல் சட்டமூலம் பற்றி பேசுகிறது. மோசடி, ஊழல் போன்ற சட்டமூலத்தை எடுத்துக்கொண்டாலும், மோசடி, ஊழல்கள் குறித்து வெளியாகியுள்ள அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடாது என்று கூறுகின்றனர்.

சீன உரங்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் குரங்குகள் சீனாவிற்கு வழங்கப்படவுள்ளன

இலங்கையில் அதிகரித்து வரும் குரங்குகளின் எண்ணிக்கைக்கு தீர்வொன்றை வழங்கும் வகையில், நாட்டிலுள்ள குரங்குகளை சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலைகளுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இந்த ​கோரிக்கைக்கு அமைய, முதற்கட்டமாக ஒரு இலட்சம் குரங்குகள் சீனாவிற்கு வழங்கப்படவுள்ளன.

நாட்டிலிலுள்ள குரங்குகளை வெளிநாட்டிற்கு வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக, அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குரங்கு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

உலக வங்கி 18 மாதங்களுக்கு விவசாயத்துறைக்கான உதவியை நீடித்தது

நாட்டின் விவசாயத்துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான உதவியை, மேலும் 18 மாதங்களுக்கு நீடிக்க உலக வங்கி இணங்கியுள்ளது.

அண்மையில் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் பிரதிநிதிகள், அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்தபோது, இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதல், 18 மாதங்களுக்கு இந்தத் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக, 30 மில்லியன் டொலர் நிதியை வழங்க உலக வங்கியின் பிரதிநிதிகள் இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

1 கிலோ நெல்லை ரூபா.100 வீதம் கொள்வனவு செய்ய கிளிநொச்சியில் ரணில் உறுதி

கிளிநொச்சியில் விவசாயிகளின் நெல்லை கிலோ கிராம் ஒன்று 100 ரூபாய் விகிதம் கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையை அரசு ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

கிளிநொச்சியில் விவசாயிகளின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யூரியாக் கப்பல் நாட்டை வந்தடைந்தது

யூரியா உரத்தை ஏற்றிச் சென்ற கப்பல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலில் 28 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

வவுனியாவில் மடிச்சுக்கட்டி நோய்த்தாக்கத்தால் விவசாயிகள் பாதிப்பு

வவுனியா மாவட்டத்தில் மடிச்சுக் கட்டி நோய் தாக்கம் காரணமாக 782 ஏக்கர் நெற் செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையின் நெல் மற்றும் பயிர் பாதுகாப்பு பாடவிதான உத்தியோகத்தர் கு.கஐரூபன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை (டிச. 22)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நெற் செய்கை மாவட்டங்களில் வவுனியா மாவட்டமும் முன்னிலை வகிக்கின்றது. இம்முறை கால போகத்தில் 23 ஆயிரத்து 186 ஹெக்ரெயர் நெற் செய்கை எதிர்பார்க்கப்பட்ட போதும் ஆரம்பத்தில் போதியளவு மழை கிடைக்காமையால் 21 ஆயிரத்து 832 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் ஆரம்பத்தில் குறைவான மழை வீழ்ச்சி கிடைத்ததுடன், தற்போது அதிகளவிலான மழை வீழ்ச்சி கிடைத்து வருகின்றது. வானிலை மாற்றத்தினால் குறைந்தளவிலான பகற்காலமான, இருளான அதிக ஈரப்பதன் காலநிலை நிலவி வருவதால் நெற் செய்கை பயிர்களுக்கு இலை மடிச்சுக்கட்டி நோய் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக விசாயிகள் பலர் பாதிப்படைந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம், பாவற்குளம், பம்பைமடு, மடுகந்தை, மகாகச்சகொடி, நெடுங்கேணி, கனகராயன்குளம், ஓமந்தை உள்ளிட்ட பகுதிகளில் 782 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இது 25 – 30 வீதமான தாக்கமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் பொருத்தமான கிருமி நாசினிகளை பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அதிகரித்த உழவு கூலி, களை நாசினி மற்றும் கிருமிநாசினி என்பவற்றின் அதிகரித்த விலை என பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது மடிச்சுக்கட்டி நோய் தாக்கத்தால் தாம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ள

மன்னார் அம்மாச்சி உணவகத்தை மீள திறக்க நடவடிக்கை

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அம்மாச்சி என்ற பாரம்பரிய உணவகத்தை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையை விவசாய பணிப்பாளர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளி மாவட்டங்களிலிருந்து மன்னார் பகுதிக்கு வருவோருக்காகவும் மன்னார் மாவட்ட மக்கள் பாரம்பரிய உணவு வகைகளை உண்டு மகிழவும், 2018ஆம் ஆண்டு முருங்கன் பிரதான வீதியில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் விவசாய திணைக்களத்தினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த உணவகம் திறக்கப்பட்டமையால் பெண்கள் தலைமைத்துவம் கொண்டவர்களும் வறுமை கோட்டில் வாழ்ந்த குடும்ப பெண்களும் வருமானத்தைப் பெற்று வந்தனர்.

அத்துடன் குறித்த உணவகத்தில், குறைந்த விலையில் பாரம்பரிய உணவு வகைகளை பெறக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் – 19 தொற்று நோய் காலப்பகுதியில் இந்த அம்மாச்சி உணவகம் மூடப்பட்டது. இதற்கு பின்னர் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு காணப்படுவதால் இப் பகுதியிலும் வெளி மாவட்டங்களிலிருந்து வருவோரும் பாரம்பரிய உணவுகளை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளிடம் வினவியபோது, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு முருங்கன் பகுதி அம்மாச்சி உணவகம் மீண்டும் இயங்கயுள்ளது.

மேலும், அம்மாச்சி உணவகத்துடன் இணைந்து பயணிப்பதற்கு சமையல் மற்றும் வியாபாரம் செய்வதில் ஆர்வம் உள்ள அமைப்புகளைச் சார்ந்தவர்களும் மற்றும் தனிப்பட்ட பெண்களிடமும் இருந்து விண்ணப்பங்களை கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரும்பியோர் முருங்கன் விவசாய போதனாசிரியர் அலுவலகம், 077-2911198 , 076-5459436 பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகம் உயிலங்குளம் 077-6614703 , 077-6640526 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளும்படியும் வேண்டப்பட்டுள்ளனர்.

வடக்கில் கால்நடைப் பண்ணைகளை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானம்

வடக்கு மாகாணத்தில் உள்ள கால்நடைப்  பண்ணைகளை ஒழுங்குபடுத்துவற்கு சில சட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் வசீகரன்  தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் சுமார் 80 வீத கால் நடைகள் திறந்த வெளிகளிலேயே வளர்க்கப்படுகிறது. இவை உற்பத்தி திறன் குறைந்தவையாக காணப்படுகின்றன. வடக்கில் 4 இலட்சம் மாடுகள், 10 ஆயிரம் எருமை மாடுகள், 3 இலட்சம் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் 3 இலட்சம் மாடுகள் பால் உற்பத்திக்காக  திறந்த வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. இவை நாட்டு இன மாடுகாளாக காணப்படுகின்றன.

அத்துடன் நாட்டின் மொத்த இறைச்சித் தேவையில் 30 வீதத்தை வடக்கு மாகாணம் பூர்த்தி செய்கிறது. இதனால் வருமானமும் அதிகரிக்கிறது. எனினும் விவசாயத்தின் முக்கியத்துவம் தற்போது அதிகமாக காணப்படுகின்றன. இதனால் வயல் நிலங்களை நாசம் செய்துவிடும் என்ற காரணத்தால், கால்நடைகள் பொருத்தம் இல்லாத இடங்களுக்கு மேய்ச்சலுக்காக விடப்படுகின்றன. இதனால் கால்நடைகள் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

சுமார் 30 ஆண்களுக்குப் பின்னர் வடக்கில் ஒரு துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கோடை காலத்தில் நீர் இல்லாமலும், மழை காலத்தில் வெள்ளத்தாலும் மாடுகள் இறப்பது வழமை. ஆனால் இப்போது முதல் தடவையாக குளிரால் மாடுகள் அதிகளவில் சில தினங்களுக்கு முன்னர் இறந்துள்ளன.

இதற்கு காரணம் மாடுகளில்  கொழுப்புப் படை இன்மையே ஆகும். 90 வீத மாடுகளுக்கு கொழுப்புப் படை இல்லை.இந்த பெரும் போக காலத்தில் அவைகளுக்கு  தீவனம் இல்லை. இம்முறை தான் இந்தப் குளிர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை நாம் கவனமாக அணுக வேண்டும்.

திறந்த வெளிகளில் மாடுகளை வளர்ப்பவர்கள் அலட்சியமாக உள்ளனர்.பண்ணைகளைப்  பதிவு செய்வதில்லை. மாடுகளின் இலக்கங்களை பெறுவதில்லை. உரிய காலத்தில் தடுப்பூசிகளை பெறுவதில்லை. இவ்வாறு அவர்கள் எமக்கு ஒத்துழைப்பை வழங்குவதில்லை. கால் நடைகளுக்கான பராமரிப்பு போதியளவு இல்லை.

ஆகவே கால் நடைகளின் இறப்புகளை தவிர்ப்பதற்கு சில நடவடிக்கைளை, சில சட்டங்களை பிறப்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக நடைமுறைப் படுத்த எண்ணியுள்ளோம். முறையான பதிவு மூலம் பண்ணைகளை நடாத்தி, அந்த கால்நடைகள் உயிரிழந்திருந்தால் ,அரசாங்கம் நட்ட ஈடு வழங்கும் பட்சத்தில்  நாம் பண்ணையாளர்களுக்கு வழங்குவோம் என்றார்.

குளிர்காரணமாக கிளிநொச்சியில் 529 மாடுகளும் முல்லைத்தீவில் 524 மாடுகளும் வவுனியாவில் 28 மாடுகளும் உயிரிழந்துள்ளன. இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் மாடொன்று உயிரிழந்துள்ளது.

அத்துடன், குளிர் காரணமாக  கிளிநொச்சியில் 266 ஆடுகளும்  முல்லைத்தீவில் 199 ஆடுகளும் வவுனியாவில் 52 ஆடுகளும் உயிரிழந்துள்ளன என்றார்.

விவசாயத்துறை நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்படாவிடில் நாடு மோசமான விளைவுகளை எதிர் நோக்கும் – மைத்திரி

விவசாயத்துறையில் எடுத்த தீர்மானங்களின் விளைவை முழு ,நாட்டு மக்களும் தற்போது நன்கு எதிர்கொண்டுள்ளார்கள். விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு விரைவான தீர்வை காணாவிட்டால் நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.06) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் விவசாயம், நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் ஆகிய அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

விவசாய நடவடிக்கைகளுக்கான பயிர் விதை விநியோகத்தில் பாரிய தட்டுப்பாடு காணப்படுகிறது. காலநிலை மற்றும் மண்வளத்திற்கு உகந்த வகையிர் பயிர் விதைகள் சந்தையில் விநியோகிக்கப்படுவதில்லை.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருட்கள் தற்போது முழுமையாக இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்பட்டுள்ளது.

நாட்டின் உணவு பாதுகாப்பு எந்நிலையில் காணப்படுகிறது என்பதை பற்றி புதிதாக குறிப்பிட வேண்டிய தேவை கிடையாது.

உணவு பாதுகாப்பிற்கு உரிய சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை. உணவு பாதுகாப்புக்கு விரைவான தீர்வு எடுக்காவிட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

விலங்குகளினால் பயிர்செய்iகைக்கு ஏற்படும் விளைகள் தொடர்பில் தொழினுட்ப ரீதியில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

நா நாட்டில் உரம் தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.சந்தையில் உரம் ஒவ்வொரு விலையில் காணப்படுகிறது.

நெல்லுக்கான உத்தரவாத விலை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நெற்பயிர்ச்செய்கை உற்பத்திக்கான செலவுக்கும், நெல் சந்தைப்படுத்தல் சபை நிர்ணயிக்கும் விலைக்கும் இடையில் பாரிய வேறுப்பாடு காணப்படுகிறது. ஆகவே விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்க வேண்டும்.

விவசாயத்துறையில் எடுத்த தீர்மானங்களின் விளைவை முழு நாட்டு மக்களும் தற்போது நன்கு எதிர்கொண்டுள்ளார்கள்.

விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு விரைவான தீர்வை காணாவிட்டால் நாடு மிக மோசமான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் தரம் குறித்து பாரிய பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. சேதன பசளை உற்பத்திகள் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.