ஜனாதிபதி ரணில் பொதுஜன பெரமுனவின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது

நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நாட்டினது நெருக்கடி நிலைமைகளின்போது கட்சிகளின் பங்களிப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் உள்விவகாரங்களுடன் தொடர்புபட்ட விடயங்களில் தலையிடக்;கூடாது என பொதுஜனபெரமுன வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடி குறித்த பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மாதமொருமுறை ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

பொதுஜன பெரமுன பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் வழங்காத அரசாங்கத்தில் நீடிக்கோம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க கடுமையாக உழைத்த உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாவிடின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் நீடிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இதுவரை வழங்கப்படாத அமைச்சரவை அமைச்சர் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் அண்மையில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் நடத்தையை கடுமையாக விமர்சித்ததுடன், தமது கட்சித் தலைவர் அரச தலைவர் என்பதாலேயே அவரது செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதியை ஓரங்கட்டும் எண்ணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைவிட முயற்சித்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என எச்சரித்துள்ளார்.

லொகான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்கப்படாது – ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவிப்பு

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்படும்வரை அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கப்போவதில்லைஎன ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்குள் இராஜாங்க அமைச்சர் 2021ம் ஆண்டு பலவந்தமாக நுழைந்த விதம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் ஆணைக்குழு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டு;;ம் என பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் குற்றச்சாட்டுகள் நிருபி;க்கப்படும்வரை இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பொதுஜனபெரமுன இராஜாங்கஅமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா என மோர்னிங் கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசத்திடம் வினவியவேளை பல நடைமுறை பிரச்சினைகள் உள்ளதால் கட்சி அவ்வாறான நடவடிக்கையை எடுக்கும் நிலையில்இல்லை என சாகரகாரியவசம்தெரிவித்துள்ளார்.

முதலாவது இந்த சம்பவம் குறித்து பொலிஸார் ஏதாவது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனரா என்பது பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தாவிட்டால் அல்லது உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகள் பதியப்படாவிட்டால் கட்சியால் எதனையும் செய்ய முடியாது என சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கையொன்றை அடிப்படையாக வைத்துமாத்திரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக எவராலும் நடவடிக்கை எடுக்க முடியாது கட்சி அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அந்த உறுப்பினர் கட்சிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கலாம் எனவும் பொதுஜனபெரமுனவின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே சட்டரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையிருக்கவேண்டும்,இராஜாங்கஅமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் நாங்கள்நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பசில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம்.

ராஜபக்ஷர்களே மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை இல்லை என்ற தவறான கருத்தை மே தின கூட்டத்துடன் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். பெரும்பாலான மக்கள் பொதுஜன பெரமுனவுக்கும்,ராஜபக்ஷர்களுக்கும் சார்பாகவே செயற்படுகிறார்கள்.

மே தின கூட்டம் தொடர்பில் கடந்த வாரம் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும்,பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.

பிரதான வீதியை மரித்து மேடை அமைத்து கூட்டத்தை நடத்த எந்த அரசியல் கட்சிக்கும் அனுமதி வழங்க முடியாது என பாதுகாப்பு தரப்பினர் உறுதியாக குறிப்பிட்ட பின்னணியில் ஒரு அரசியல் கட்சிக்கு மாத்திரம் எவ்வாறு நடுவீதியில் மேடையமைக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

பாராளுமன்றத்தை சுற்றி வளைக்கும் வகையில் மக்களை தவறாக வழி நடத்திய அரசியல் கட்சிக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்தோம்.

இதுவரை இந்த முறைப்பாடு தொடர்பில் உரிய அரசியல் கட்சி பிரநிதிகளிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் இந்த அரசியல் கட்சி முறையற்ற வகையில் செயற்படும் போது அதிகாரம் கிடைத்து விட்டால் இவர்கள் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பார்கள் என்பதை மக்கள் ஆராய வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டத்தில் எமது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினோம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக்கு அமைய அரசியல் தீர்மானங்களை எடுத்து முன்னோக்கிச் செல்வோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகிறோம். எமது கட்சி கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். அவர் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவாக இருக்கலாம்.ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என்றார்.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் மொட்டுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும்

எதிர்காலத்தில் திட்டமிட்ட கலந்துரையைாடல்கள் மூலம் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் மொட்டுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் என அந்தக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைப்பதாக இருந்தால் அதில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

தற்போதுள்ள அரசாங்கத்தில் மொட்டுக் கட்சியைச் சேர்ந்த 4 அமைச்சர்கள் உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர்கள் இருவர் உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் இருவர் உள்ளனர். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர். அதனால் இதுவும் ஒரு தேசிய அரசாங்கம்தான் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் திட்டமிட்ட கலந்துரையைாடல்கள் மூலம் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் மொட்டுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாவை ஜனாதிபதியாக்கியமை தவறென பொதுஜன பெரமுன ஒப்புக்கொண்டுள்ளது

2019 இல் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததன் மூலம் தாம் “தவறு” செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒப்புக்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததன் மூலம் அப்பிழை திருத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிட்டு வெற்றிபெறும் என்றும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் சுகாதார அமைச்சராகவும் போக்குவரத்து அமைச்சராகவும் பவித்ரா வன்னியாராச்சி செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அவசியம் தற்போது இல்லை – பொதுஜன பெரமுன

ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகள் தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம்.

எந்த தேர்தல் இடம்பெற்றாலும் வெற்றிகரமாக அதனை எதிர்கொள்வோம். பெரும்பாலான மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள்.

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் இம்மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இந்த சட்டமூலத்தின் ஊடாக விசேட கவனம் செலுத்தப்படும்.

ராஜபக்ஷர்களை திருடர்கள் என விமர்சித்து ஒருதரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொண்டார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் எந்த குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.

ஊழல் ஒழிப்பு தொடர்பில் எவ்வித சட்டங்களும் இயற்றப்படவில்லை. தற்போது பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு சட்டம் உருவாக்கப்படவுள்ளதையிட்டு பெருமையடைகிறோம். ஆகவே ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவோம்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டமூலம் தொடர்பில் தற்போது பல்வேறு மாறுப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.“ எனத் தெரிவித்துள்ளார்.