நிதி இன்மையால் வட, கிழக்கில் வீதி அபிவிருத்திப் பணிகள் இடை நிறுத்தம்

வட, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட கொழும்பு,  ஊவா ஆகிய நான்கு மாகாணங்களில் தொடர்ந்து வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியவில்லை.

இவ்வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சில வீதிகளை போக்குவரத்து மேற்கொள்வதற்கு ஏற்றது போல அபிவிருத்திக்கு மேற்கொள்ளவதாகவும் ஐரோட் திட்டப்பணிகள் சிலவற்றை முடிவிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஆசிய அபிவிருத்தியின் கடன் நிதியானது சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்தும் உடன்பாடு உறுதியாக கிடைக்கும் வரை அந்நிதி மூலம் நடைபெற்ற ஐரோட் திட்ட வீதி புனரமைப்புப்பணிகள் சிலவற்றை இடை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சில வீதிகள் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் மாத்திரம் சீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

இத்திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள உடன்படிக்கை பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி மீள வழங்க உடன்பாடு காலத்தை பொறுத்துத் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிய வருகின்றது.

யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமல ஆகியன பௌதீக வள அபிவிருத்திக்கான நகரங்களாக அடையாளம்

கொழும்பு, அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நான்கு முக்கிய நகரங்கள் பௌதீக வள அபிவிருத்திக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த நகரங்களை இணைக்கும் வகையில் 9 பொருளாதார வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நகரின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு உரிய திணைக்களங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் முக்கிய வர்த்தக மற்றும் நிதி நகரமாக கொழும்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையானது எதிர்வரும் 8 வருடங்களுக்கான கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தை ஏற்கனவே வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளது.

அதன் கீழ் கிரிமண்டல மாவத்தை நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர மறுமலர்ச்சி வீடமைப்புத் திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொரளை நகர அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அம்பாந்தோட்டை நகரின் அபிவிருத்திக்காக தயாரிக்கப்பட்ட அம்பாந்தோட்டை பெரு நகர அபிவிருத்தித் திட்டத்தை இது புதுப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட சர்வதேச மாநாட்டு மண்டபம், துறைமுகம், மத்தள விமான நிலையம், உலர் வலய தாவரவியல் பூங்கா மற்றும் நிர்வாக வளாகம் என்பன ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. புதிய திட்டங்களாக, வங்கியின் பிராந்திய திட்டம் மற்றும் மருத்துவமனை சதுக்க அபிவிருத்தித் திட்டம் ஆகியவை எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.

திருகோணமலையை ஒரு பெரிய வணிக நகரமாக அடையாளம் காணவும் மற்றும் பல உள்ளுராட்சி நிறுவனங்களை உள்ளடக்கவும் திருகோணமலை நகர அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி, திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, எண்ணெய் முனைய அபிவிருத்தி மற்றும் கப்பல்துறை கைத்தொழில் வலயம் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து திட்டங்களைத் தயாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ் குடாநாட்டுக்கான அபிவிருத்தி திட்டமும் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன் கீழ் காங்கேசந்துறை நகர அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய வசதிகளை விஸ்தரித்தல், கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் பல கலப்பு அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இந்த நான்கு முக்கிய நகர அபிவிருத்தி திட்டங்களுடன் தம்புள்ளை, கண்டி மற்றும் காலி அபிவிருத்தி வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலி அபிவிருத்தி திட்டம் ஏற்கனவே அதன் கீழ் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. காலி கோட்டை தபால் நிலைய மீள் அபிவிருத்தி, ஒலுவாகொட சூழலியல் விவசாய அபிவிருத்தித் திட்டம் மற்றும் காலி மத்திய கலப்பு அபிவிருத்தித் திட்டம் ஆகியவையும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போகம்பர சுற்றுலா மற்றும் கலாச்சார அபிவிருத்தி நிலையம், கட்டம்பே நடுத்தர வர்க்க வீடமைப்பு வளாகம், கட்டுகஸ்தோட்டை மொத்த விற்பனை நிலைய அபிவிருத்தித் திட்டம், கன்னோரவ கல்வி மைய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல கலப்பு அபிவிருத்தித் திட்டங்கள் கண்டி அபிவிருத்தியின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தம்புள்ளை அபிவிருத்தித் திட்டம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளது. இதன் கீழ் பல்வகை போக்குவரத்து நிலையம், சீகிரியா சுற்றுலா அபிவிருத்தி திட்டம், தம்புள்ளை இனாமலுவ சிகிரியா வழியாக ஹபரணைக்கு செல்லும் பாதை அபிவிருத்தி, ஹபரணை சுற்றுலா அபிவிருத்தி திட்டம், கலேவெல மாற்று பாதை திட்டம் மற்றும் நாவுல பொது விளையாட்டரங்கம் நவீனமயப்படுத்தப்படவுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக தற்காலிக பின்னடைவை சந்தித்த இவ்வாறான பாரிய திட்டங்கள் அடுத்த வருடம் துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஜனாதிபதியும் சம்மதித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறினார்.

காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அமைச்சர் பணிப்புரை

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து காணிகளையும் சேகரித்து உடனடியாக காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அறிவுறுத்தல்.

நகர அபிவிருத்தி அதிகார சபையானது நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அதிக சந்தை பெறுமதியுடன் கூடிய சுமார் 1,008 ஏக்கர் நிலம் மற்றும் கட்டிடங்களை வைத்துள்ளது.

அதிக சந்தைப் பெறுமதியுடன் கூடிய, இதுவரையில் அதிகபட்ச பாவனைக்கு உட்படுத்தப்படாத இவ்வாறான காணிகள் தேசியத் திட்டத்தின்படி அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டுறவில் அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

இப்போதும் நாடளாவிய ரீதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சில காணிகள் பல்வேறு நபர்களினால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், காணி வங்கியொன்றை அமைத்து, காணிகளை உரிய முறையில் பட்டியலிடுவதன் மூலம், காணிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுத்து, அந்த காணிகளை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையானது, பொது மற்றும் தனியார் பங்காளித்துவத்தின் கீழ் காணி அபிவிருத்தியுடன் முதலீட்டு மாதிரிக்கு சில நெகிழ்வுத்தன்மையை வழங்குதல், நெகிழ்வான கொடுப்பனவுகளின் கீழ் முதலீட்டாளருக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்குதல் போன்ற பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

80 பில்லியன் ரூபா கடன் ; வீதி புனரமைப்புக்கள் தற்போது சாத்தியமில்லை – பந்துல

நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்கனவே புனரமைக்கப்பட்ட வீதிகளுக்காக ஒப்பந்தக்காரர்களுக்கு நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சினால் 80 பில்லியனுக்கும் அதிக தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளது.

இதனை செலுத்தாமல் அவர்களால் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது. தற்போது வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கக் கூடிய சாத்தியமும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (டிச.06) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது அரச ஊடகமொன்று புனரமைக்கப்படாத வீதிகள் தொடர்பில் தினமும் செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.

நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் தனிப்பட்ட ரீதியில் என்னால் அந்த வீதிகளை புனரமைக்க முடியாது. அரசாங்கம் அமைச்சிற்கு நிதியை வழங்கினால் மாத்திரமே வீதிகளை புனரமைக்க முடியும்.

ஏற்கனவே அமைக்கப்பட்ட வீதிகளுக்காக ஒப்பந்தக்காரர்களுக்கு 80 பில்லியனுக்கும் அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளது.

இந்தத் தொகையை தொகுதிகளாக மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே செலுத்திக் கொண்டிருக்கின்றோம். செலுத்த வேண்டிய பணத்தை வழங்காவிட்டால் , ஒப்பந்தக்காரர்கள் வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்கமாட்டார்கள்.

மக்களின் வரிப்பணத்தில் கிடைக்கப் பெறும் வருமானம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்திற்கும் அபிவிருத்தி பணிகளை பேணுவதற்கும் செலவிடப்படுகிறது.

இதனால் எஞ்சிய தொகை எதுவும் இல்லை. முன்னர் பணம் அச்சிடப்பட்டு இந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டன. எனினும் தற்போது அவ்வாறு செய்ய முடியாது. எனவே இது முறையாக முகாமைத்துவம் செய்யப்பட வேண்டிய பிரச்சினையாகும். நிதி முகாமைத்துவம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்றார்.

இலங்கையின் கடன் சுமைக்கு தீர்வை காண்பதற்கான கூட்டு முயற்சிகளிற்கு சீனா அழைப்பு

இலங்கையின் கடன்சுமைக்கு தீர்வை காண்பதற்கான கூட்டு முயற்சிகளிற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை போன்ற நாடுகளின் கடன்தறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக  சர்வதேச நாணயநிதியத்தின் குழுவொன்று இந்த வாரம் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனும் ஏனைய நிதியமைப்புகளுடனும் சீனாவிற்கு நீண்ட கால நல்லுறவு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நெருக்கடிகள் சவால்களிற்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கு நிதியமைப்புகளிற்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம் என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அதன் கடன் சுமையை குறைத்து பேண்தகு அபிவிருத்தியை சாத்தியமாக்குவதற்கும் உரிய சர்வதேச நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து செயற்படும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் ஜப்பானுக்கு – ரணில்

இலங்கை துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை ஜப்பானிற்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வர்த்தக சம்மேளனத்தில் ஆரம்பமாகியுள்ள உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ‘துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பான் விரும்பியதால் அதனை வழங்க முன்வந்துள்ளோம்.

இதேவேளை ஜப்பான் மறுப்பு தெரிவித்தால் அதனை வேறு நாடுகளிற்கு வழங்குவோம்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவின் தொழில்நுட்ப உதவி

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் தங்கியிருப்பதனை தவிர்க்கும் வகையில் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அவசியமான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்கும் நோக்கில் இந்திய தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டின் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

அது தொடர்பில், இந்திய தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையும் (NDDB) இந்தியாவின் அமுல் பால் நிறுவனமும் இணைந்து இந்நாட்டில் திரவப் பால் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கான ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் உள்ளுர் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், நீண்டகால திட்டத்தினூடாக இலங்கையை பாலில் தன்னிறைவடையச் செய்வதே இதன் நோக்கம் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.

விவசாய அமைச்சின் மேலதிகச் செயலாளர் கலாநிதி நிமல் சமரநாயக்க, தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யூ. சிரில் மற்றும் அமைச்சுக்களின் உயரதிகாரிகளும் இந்திய தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் சிரேஷ்ட பொது முகாமையாளர் ராஜேஷ் ஓங்கர்நாத் குப்தா(Rajesh Onkarnath Gupta), பொது முகாமையாளர் சுனில் சிவபிரசாத் சின்ஹா(Sunil Shivprasad Sinha), சிரேஷ்ட முகாமையாளர் ராஜேஷ் குமார் சர்மா (Rajesh Kumar Sharma) உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

நாட்டின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம் – கஞ்சன விஜேசேகர

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முன்னதாக இங்கு உள்ளவர்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்று மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

வெளிநாட்டில் இருந்து ஒரு முதலீட்டாளர் நாட்டுக்கு வரும் போது, இங்குள்ள சில தரப்பினர் எமது நாட்டின் வளங்களை குறித்த முதலீட்டாளர் தமது நாட்டுக்கு எடுத்துச் செல்வதாக போலியான தோரணையை உருவாக்கி விடுகிறார்கள்.

அண்மையில் இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையில் மின்சார உற்பத்தித்துறையில் முதலீட்டை மேற்கொள்ள எத்தனித்த போது, நாட்டின் மின் வளத்தை இந்தியாவுக்கு சூறையாடிச் செல்லப் போகிறது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கினார்கள்.

எனினும் இந்த நிலைப்பாட்டை மாற்றி, எமது நாட்டை அபிவிருத்தியடைய செய்ய வேண்டும் என்றால் பிராந்திய நாடுகளுடன் போட்டியிட வேண்டும்.

அத்துடன், பெருந்தோட்டத்துறை அல்லது கைத்தொழில்துறை ஆகியவற்றில் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் முதலீடுகளை அதிகரிப்பதே சிறந்த வழியாகும் என்றும் கஞ்சன விஜேயசேகர குறிப்பிட்டுள்ளார்.