இந்திய துணைத்தூதுவரை சந்தித்த கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கபிரதிநிதிகள்

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் துணைதூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்த மீனவர் சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை வழங்கியதோடு,  வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

குறிப்பாக இந்திய  கடற்றொழிலாளர்களின் நாட்டுப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கவுள்ளதாக வெளிவந்த செய்திகள் தொடர்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள் இந்திய  துணைதூதுவருக்கு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுடனான இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம்

இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 7ஆவது ஆண்டு இந்தியா-இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளும் தங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்தன.

இதன்போதே, இருதரப்பு பயிற்சிகளை மேம்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இரு தரப்பு அனுபவம் மற்றும் திறன்களை முழுமையாகப் பகிர்ந்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பு; பங்கேற்காத இலங்கை, இந்தியா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை கலந்துகொள்ளவில்லை.

ஜேர்மனி முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக மொத்தம் 141 நாடுகள் வாக்களித்தன. ரஷ்யா, பெலாரஸ், வட கொரியா, சிரியா, மாலி, எரித்திரியா மற்றும் நிகரகுவா ஆகிய ஏழு நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தன.

சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்கவில்லை

மன்னார் பூநகரி காற்றாலை மின்சார திட்டம் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

மன்னார், பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தானது.

இதனிடையே, எந்த ஆய்வுகளும் அனுமதிப் பத்திரங்களும் இன்றி முதலீட்டு சபையும் இந்தியாவின் அதானி குழுமமும் நேற்று மாலை உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒப்பந்தத்தின்படி மன்னாரில் 250 மெகா வோட்ஸ், பூநகரியில் 100 மெகா வோட்ஸ் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டம் 44. 2 கோடி அமெரிக்க டொலர்கள் – நம் நாட்டு மதிப்பில் சுமார் 16 ஆயிரத்து 129 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ளன. இது இரு ஆண்டுகளில் நிறைவுத்தப்படும் என்றும் அத்துடன் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மற்றும் பூநகரியில் இரண்டு காற்றாலை திட்டங்களில் 50 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்வதற்கு அதானி கிறீன் எனர்ஜிக்கு அரசாங்கம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர நேற்றிரவு தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தியாவின் முதல்நிலை பணக்காரராகவும் உலகளவில் மூன்றாவது இடத்திலும் அதானி இருந்தார். வரி ஏய்ப்பு மற்றும் சர்ச்சைகளால் அவரின் குழுமத்தின் பங்குகள் சரியவே உலகளவில் 17ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். இந்த நிலையில் கடந்த டிசெம்பரில் திட்டமிடப்பட்ட இந்த ஒப்பந்தம் திட்டமிட்டவாறு கைச்சாத்தாகியுள்ளது.

இதேசமயம், இந்த மின் உற்பத்தித் திட்டத்துக்குத் தேவையான சாத்தியக் கூறு ஆய்வுகள் மற்றும் அனுமதிகள் பெறப்படவில்லை. இதனால், இது சட்டவிரோதமான ஒப்பந்தம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மதவாதம், பயங்கரவாதம் ஆயுத கலாசாரம் முடிவிற்கு வரவேண்டும்: அர்ஜுன்

இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருவதாக தமிழக இந்துமக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தற்போதைய பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பன்னாட்டு உதவிகள் இங்கே கிடைக்கப்பெறுகின்றது. இந்திய அரசும் பெரியளவில் இலங்கைக்கு உதவி வருகின்றது.

குறிப்பாக வீதிகள், தொடரூந்து வீதிகள், வீட்டுத்திட்டம் அத்துடன் கடன்கள் என்று பிரதிபலன்னை கருதாமல் பல உதவிகளை செய்துவருகின்றது.

சீனாவும் பல விடயங்களை இங்கே செய்கின்றது, கொழும்பில் ஒரு கலாசார மண்டபத்தினை அமைத்தார்கள் ஆனால் அதன் நிர்வாகத்தை அவர்களே வைத்துள்ளனர். ஆனால் இந்திய அரசால் அமைக்கப்பட்ட கலாசாரமண்டபத்தின் நிர்வாகத்தை இலங்கை அரசிடமே ஒப்படைத்திருக்கின்றது. இருப்பினும் அதனை யாழ்பாண மாநாகரசபையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

அத்துடன் வறுமை, பொருளாதார பிரச்சனைகளில் இருந்து இலங்கை மக்கள் விடுபடவேண்டும். அதற்குரிய மேம்பாடான திட்டங்களை வகுத்து நல்லவிதமாக செயற்படுவதற்கான பிரார்த்தனைகளை நாம் செய்கிறோம்.

இதேவேளை இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருகின்றது. இங்கு வசிக்கும் சிங்கள மக்களாக இருக்கலாம், தமிழ்மக்களாக இருக்கலாம் அனைவரும் மண்ணின் மைந்தர்கள். ஆனால் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து மதமாற்றும் செயற்பாடுகள் இங்கு இடம்பெறுகின்றது.

அண்மையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் உலகையே உலுக்கியிருந்தது. எனவே மதவாதம், பயங்கரவாதம் ஆயுத கலாசாரம் முடிவிற்கு வரவேண்டும். அமைதியான வளமான இலங்கை உருவாக வேண்டும்’ என கூறினார்.

இலங்கையின் தேசிய வலுக்கட்டமைப்புக்களை இந்தியாவுடன் இணைப்தால் பாதிப்பில்லை

இலங்கையின் தேசிய சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

இலங்கையின் தேசிய சக்தி வலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதில் ஆபத்து எதுவும்எதுவுமில்லை உலகின் ஏனைய நாடுகள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன என குறிப்பிட்டுள்ள அமைச்சர் இலங்கை தனது சக்தி வலு கட்டமைப்பை இந்தியாவுடன் இணைப்பதால் என்ன ஆபத்து ஏற்படப்போகின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறான மனோநிலையே எங்கள் பொருளாதாரத்தை பல தசாப்தங்களாக வீழ்ச்சியை நோக்கி இட்டுச்சென்றது என குறிப்பிட்டுள்ள அவர் எண்ணெய் குதங்களை நாங்களே வைத்திருக்க விரும்பியதால் பல தசாப்தங்களாக அவற்றை அபிவிருத்தி செய்யாமல் வைத்திருந்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் யதார்த்தத்தில் நாங்கள் பொதுமக்கள் தனியார் கூட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்தால் கடந்த 12 மாதங்ளில் எங்களின் எரிசக்தி பாதுகாப்பு எங்கோ சென்றிருக்கும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் நாட்டில் சக்தி வலு பாதுகாப்பு காணப்படுவதைஉறுதி செய்வதே ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் முன்னெடுக்கவேண்டிய முதல் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் சக்தி வலு பாதுகாப்பு என்பது உணவு பாதுகாப்பு மருந்து பாதுகாப்பு உட்பட அனைத்துடனும் தொடர்புபட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் நாங்கள் தீர்மானங்களை எடுப்போம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணவேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக தெளிவாக உள்ளார் கடந்த 12 மாதங்களில் இந்தியா எங்களிற்கு பெரும் ஆதரவாக காணப்பட்டுள்ளது எனவும் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு

இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமயிலான அமர்வு முன்பு சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் முறையிடப்பட்டது.

இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசியல் சாசன அமர்வு விசாரணைக்குப் பிறகு சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு விசாரணை வரும் என தெரிவித்தனர்.

அண்மையில் இராமர் பாலம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வடக்கில் இருந்து இந்தியாவுக்கு மின்சார விநியோகத் திட்டம்

வடக்கில் இருந்து இந்தியாவுக்கு மின்சார விநியோகத் திட்டம்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட Reuters செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை ஒன்றிணைக்கும் உடன்படிக்கையை எற்படுத்திக்கொண்டதன் பின்னர் செயலாக்க ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக முன்மொழியப்பட்ட இந்த திட்டம் இதுவரை சிறிய அளவிலான முன்னேற்றத்தையே எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள மிலிந்த மொரகொட, இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் மின் கட்டமைப்பை உருவாக்கி, தீவில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை இந்தியாவிற்கு விற்க முடியும் என இலங்கை நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்தின் முக்கியப் பகுதியானது, தீவின் வடக்கில் அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அபிவிருத்தி செய்வதில் தங்கியுள்ளது. இங்கிருந்து, எல்லை தாண்டிய மின்சார பரிமாற்ற கேபிள் மூலம் மின்சாரத்தை தென்னிந்தியாவிற்கு கொண்டு செல்ல முடியும் என நம்பப்படுகிறது.

கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதரக விசா பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசா விண்ணப்ப மையம் நேற்று இரவு பதிவான பாதுகாப்பு சம்பவம் காரணமாக மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அனைத்து விண்ணப்பதாரர்களும் விசா பிரிவுடனான உடனான தங்கள் சந்திப்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விசா விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அவசர தூதரகம் அல்லது விசா விஷயத்திற்கு உயர் ஸ்தானிகராலயத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், நேற்றிரவு இந்த வளாகம் உடைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை நண்பனான சீனாவுடன் இணைந்து செயற்படும் – அலி சப்றி

இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இலங்கை நண்பனான சீனாவுடன் இணைந்து செயற்படும் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான இலங்கையின் வலுவான உறவு அதன் நாகரீகத்தின் ஒரு பகுதி என தெரிவித்துள்ள அலி சப்ரி இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளிற்கும் இலங்கை தனது மண்ணில் அனுமதியளிக்காது என தெரிவித்தார் என டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

இந்தியா கவலைப்படவேண்டிய அவசியமில்லை இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு மிகவும் வலுவானது அது எங்கள் நாகரீகத்தின் ஒரு பகுதி என குறிப்பிட்டுள்ள அலிசப்ரி எங்கள் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலுடனும் நாங்கள் ஈடுபடமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவும் எங்கள் நண்பன்  நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் எனினும் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பு ஏற்படாது இந்திய அரசாங்கத்திற்கு நாங்கள் இதனை தெளிவாக  தெரிவித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகள் குடும்ப பிணைப்பை போன்றவை பிரச்சினைகள் எழும்போது அவற்றிற்கு குடும்பத்திற்குள் தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.