’13’ தொடர்பில் ரணிலுடன் பேசிய இந்திய அமைச்சர்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரன் நேற்று (04) மாலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டினார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள முரளிதரன் நேற்றுக் காலை இலங்கை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமிழக பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்தல்

டெல்லி சென்றுள்ள தமிழக பாஜ.க தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவு த்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் இன்று (பிப்.,02) சந்திப்பு நடத்தினார்.

அப்போது, அவர் இலங்கையில் 13வது சட்டத்திருத்தத்தை மாற்றமின்றி உடனே அமல்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என வெளியுறவு த்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தற்போது இலங்கையின் சூழல் மாறி கொண்டு இருக்கிறது. வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள தலைவர்கள், தமிழர்கள் 13ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ், வருவாய் ஆகிய அதிகாரங்களை தர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர் எனவே இலங்கையில் 13ஆம் திருத்தச்சட்டத்தை விரைவாக அமுல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதன்போது, இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குதல், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து பேசப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

சந்திப்பின் போது, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலையுடன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்திய வரவு செலவுத்திட்டத்தில் இலங்கைக்கு குறைந்தளவிலான ஒதுக்கீடு

இந்திய மத்திய அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் இலங்கைக்கு கடந்த ஆண்டைவிட குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவு திட்டத்தில் பூடான், மாலத்தீவுகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்த போதும் இலங்கைக்கு 150 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர நேபாளம், மியன்மார், மங்கோலியா, மொரிஷியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு குறைந்தளவில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து தொடர்ச்சியாக 2 வது தடவையாக 200 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள்; உலக நாடுகள் வலியுறுத்து

13ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதும் முக்கியம் என்று இந்தியா நம்புகிறது என்று ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இந்திய பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத் தொடரில் முழுநிறை காலமுறை மீளாய்வு செயல்குழுவில் இலங்கை குறித்து நேற்று மீளாய்வு செய்யப்பட்டது. இதில், பங்கேற்ற இந்தியாவின் பிரதிநிதி உரையாற்றியபோதே மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட கொள்கைகள் அவ்வாறே அமுல்படுத்தப்பட வேண்டும். வறுமையை ஒழிக்கவும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்களின் மீதான தாக்கத்தை குறைக்க வும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

இதில், இந்திய வம்சாவளி தமிழ் மக்களையும் உள்ளடக்க வேண்டும். அனைத்து பிரஜைகளின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என அமெரிக்க, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

அத்தோடு அரச சார்பற்ற நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் மனித உரிமைகளை மீறுபவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யுமாறும் கனடா வலியுறுத்தியுள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டவும் பொலிஸார் சித்திரவதை நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் கொலம்பியா பரிந்துரைத்துள்ளது.

மேலும் அமைதியான போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு டென்மார்க் பரிந்துரைத்துள்ளது.

இந்தியா இல்லையேல் இலங்கை மோசமான விளைவுகளைச் சந்திருக்கும் – மிலிந்த மொராகொட

இந்தியா துரிதமாக செயற்பட்டிருக்காவிட்டால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமான சமூக விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பிற்கான இந்தியாவின் உதவி மற்றும் சர்வதேச நாணயநிதியத்திற்கு இந்தியா வழங்கியுள்ள நிதி உத்தரவாதங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்தியாவின் உதவிகள் ஆதரவுகள் இரு நாடுகளிற்கும் இடையிலான நம்பிக்கையில் காணப்படும் இடைவெளியை மேலும் குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

வேறு எந்த நாட்டினாலும் இந்தியா போன்று இலங்கைக்கு உதவியிருக்க முடியாது என தெரிவித்துள்ள மிலிந்த மொராகொட கடந்த 22 மாதங்களில் மூன்நு தடவையாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை- அவரது சமீபத்தைய விஜயம் இரு நாடுகளினதும் இருதரப்பு உறவுகள் புதிய கட்டத்தில் நுழைவதை குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இலங்கையின் பொருளாதார மீட்சியின் ஆரம்பத்தை குறித்து நிற்கின்றது எனவும் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.

இக்கட்டான நிலைமையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய அரசாங்கத்தின் உதவிகள் பாராட்டத்தக்கவை – நீதி அமைச்சர்

இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின்போது எமது நாட்டு மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிய இந்தியாவின்  ஒத்துழைப்பை மிகவும் பாராட்டுக்கிறேன். அத்துடன் இரண்டு நாடுகளும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் மூலம் முதலீடு மற்றும் சுற்றுலா துறையையை முன்னேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

இந்தியாவின் 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்ட நிகழ்வு  நேற்று முன்தினம் மாலை  இந்தியன் ஹவ்ஸில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை மற்றும்  இந்தியாவுக்கு இடையிலான அரசியல், மத, கலாசார மற்றும் பொருளாதார உறவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.  விசேடமாக தர்மசோக சக்கரவர்த்தி பாரத தேசத்தை ஆட்சி செய்த காலத்தில் மஹிந்த தேரர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புத்த மதத்தை எடுத்துவந்தமை  இந்நாட்டு மக்களை புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் திருப்புமுனையாக அமைந்தது.

அத்துடன் இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான அரசியல், மத, கலாசாரம்,தொழிநுட்பம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளை மேலும் முன்னேற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கவேண்டும். விசேடமாக கடந்த வருடங்களில் இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின்போது எமது நாட்டு மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிய இந்தியாவின்  ஒத்துழைப்பை மிகவும் பாராட்டுக்கிறேன்.

குறிப்பாக கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்க இருக்கும்  கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்காக இந்திய அரசாங்கம் இலங்கைக்காக  அனைத்து வகையிலும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

மேலும் 2017 இல் இலங்கையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் நிகழ்வை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி இந்த நாட்டுக்கு வந்து வழங்கிய ஆதரவை நினைவுபடுத்த விரும்புகிறேன். இரண்டு நாடுகளுக்கிடையில்  இடம்பெறும் பொருளாதார மற்றும் தொழிற்நுட்ப ஒப்பந்தம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள பொருளாதார பிரதிபலன்களை மேலும் அபிவிருத்தி செய்துகொண்டு முதலீடு மற்றும் சுற்றுலா துறையையை முன்நேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

சீனாவின் 2 வருட கால கடன் தவணை அவகாசம் இலங்கைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்

இலங்கையின் கடன்கள் தொடர்பில் சீனா இணங்கியுள்ள 2 வருட தவணை காலம் சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனைகளுடன் வேறுபடுவதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

10 வருட தவணை காலம் மற்றும் 15 வருட மறுசீரமைப்பு காலத்துடன் இலங்கையின், சர்வதேச நாணய நிதியக் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்விற்கு ஆதரவளிக்க, இந்தியா முடிவு செய்துள்ளது.

எனினும் சீனாவின் அரச வங்கிகள் 2 வருட அவகாசத்தை மட்டுமே வழங்க தயாராக உள்ளன. இது இலங்கைக்கு மேலும் பொருளாதார வலியை ஏற்படுத்தலாம் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையும் பாகிஸ்தானும் கடந்த தசாப்தத்தில் சீனாவின் பெல்ட் ரோடு முன்முயற்சியின் முக்கிய நாடுகளாக இருந்தன. அத்துடன் தமது நாடுகளில் வெள்ளை யானை திட்டங்களை உருவாக்க பீய்ஜிங்கில் இருந்து அதிக வட்டி கடன்களைப் பெற்றுக்கொண்டன.

எனினும் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க மிகவும் தேவையான உதவிகளுடன் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் சீனா உற்சாகத்தை காட்டாமைக் காரணமாக, இலங்கையும், பாகிஸ்தானும் இன்று திவாலாகிவிட்டன.

இந்த இரண்டு நாடுகளின் பொருளாதார நெருக்கடி நேபாளம், பங்களாதேஷ், மாலத்தீவுகள் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுக்கு ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது

மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது – ஜனாதிபதி

13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குங்கள் அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும், இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என இன்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

“நான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். அந்த வகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன். எமது அரசியலமைப்பில் கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும். இங்கு என் மீது சத்தம் போடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

எனவே இரண்டில் ஒன்று நடைபெற வேண்டும். 13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குகங்கள். அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். அதனை இல்லாமல் ஒழிக்காவிட்டால், எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும் இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனிப்பட்ட பிரேரணையொன்றைக் கொண்டு வந்து யாருக்கு வேண்டுமானாலும் அதனை நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அபப்டியாயின், 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும்.

ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்துக்கமைய பார்த்தால் நாம் ஒற்றையாட்சியில் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன்.

நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது. லண்டன் நகரசபைக்கு இதனை விடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை.

அதனை நடைமுறைப்படுத்தவில்லையென்றால் நாம் அதனை நீக்க வேண்டும். அரசியலமைப்பில் வைத்துக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது சரியானதல்ல.” என்றார்

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம்; சர்வ கட்சி கூட்டத்தில் ஆளும் தரப்புகள் கடும் எதிர்ப்பு

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்குவதற்கு ஆளும் தரப்பினர் சிலரே நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின்பேரில் நேற்றைய தினம் சர்வகட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பேச்சு எழுந்தது. இதன் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும்”, என்று உறுதியளித்தார்.

இதன்போது, ஆளும் தரப்பை சேர்ந்த கட்சிகளின் தலைவர்களே கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், தமது ஆதரவு இன்றி 13ஆம் திருத்தத்தை முழுமை யாக செயல்படுத்த முடியாது என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் கூறினார்கள். இதற்கு, பதிலளித்த ஜனாதிபதி ஏற்கனவே சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த நிறைவேற்று அதிகாரம் போதுமானது. பாராளுமன்றின் அனுமதி தேவையில்லை என்று கூறினார்.

இந்த சமயத்தில், தமிழ் மக்கள் கூட் டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன், கடந்த காலங்களில் 13ஆம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்காக காலத்துக்கு காலம் வெளியிடப்பட்ட சுற்று நிரூபங்கள் மற்றும் அறிவித்தல்கள் தொடர்பில் எடுத்துக் கூறினார். அவ்வாறு வெளியிடப்பட்ட கட்டளைகளை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன், அது தொடர்பாக தாம் தயாரித்த ஆவணம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளித்தார். இதன் பின்னர், இனப்பிரச்னைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றுக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

இந்த சமயத்தில், பேராசிரியர் திஸ்ஸ விதாரண, “கடந்த காலத்தில் இனப்பிரச்னை தீர்வுக்காக எனது தலைமையில் 127 கூட்டங்களை நடத்தி பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.”, என்று சுட்டிக் காட்டினார்.

அவருக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதியரசர் நவாஸ் தலைமையிலான குழு அந்த அறிக்கையை பரிசீலிக்கின்றது. அதிலிருக்கும் பரிந் துரைகள் தொடர்பிலும் கவனம் செலுத் தப்படும். இது தொடர்பான விடயங்களும் எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என்றார். மேலும், இன்னும் இரண்டு கூட்டங்களில் இனப் பிரச்னைக்கான தீர்வு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேசமயம், கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தரப்பினர் உறுதியளிக்கப்பட்டபடி காணிகள் விடுவிக்கப்படாதமை தொடர்பில் தமது அதிருப்தியை வெளி யிட்டனர்.

இதற்கு உறுதியளித்தபடி இனங் காணப்பட்ட 100 ஏக்கர்கள் காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும். சில தடங்கல்கள் காரணமாக காணிகள் விடுவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதேபோன்று, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையிலான குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விரைவில் 15 அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் மீண்டும் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

சர்வகட்சி கூட்டத்தில் தமிழ்த் தேசியத் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புளொட்டின் த. சித்தார்த்தன், ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்கவில்லை. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரா. சம்பந்தன், சுமந்திரன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் க. வி. விக்னேஸ்வரன் ஆகியோரே பங்கேற்றனர். இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின நிகழ்வு

இந்தியாவின் 74ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது.

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதைத் தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.