இந்தியாவின் புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) நேற்று(18.5.2023), மே 18 தமிழர் இனப்படுகொலை நினைவு நாளை முற்போக்கு மாணவர் அமைப்பும் (PSA) ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பும் (JNUTSA) இணைந்து இலங்கையில் இந்நினைவேந்தலை மேற்கொள்ளும் மக்களுக்கான தோழமைக்காக தீபமேற்றியும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியும் நினைவுகூர்ந்தனர்.
Tag: இனப்படுகொலை
எமது மக்களுக்காக ஒன்றாக இணைந்து பயணிக்க உறுதி பூண வேண்டும் ஜனா எம்.பி
எமது உறவுகளின் இழப்பின் மேல் சத்தியம் செய்து ஒன்றாகப் பயணிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இதே அரசாங்கம் கடந்த காலங்களிலே தமிழ்ப் போராட்ட இயக்கங்களைப் பிளவு படுத்தியது போல் மீண்டும் மீண்டும் எங்களைப் பிளவுபடுத்தி வலிமை இழந்தவர்களாக மாற்றக் கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009 மே 18ம் திகதி எங்களது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கின்றது. அதனையொட்டிய ஒரு வார காலத்துக்குள் எமது உறவுகள் சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பொதுமக்கள், போராளிகள் உயிர்நீத்துள்ளதாக முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. இன்றுடன் 14வது ஆண்டை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் செல்ல முடியாத எமது மாவட்ட மக்களுக்காக இந்த நினைவேந்தலை நாங்கள் கல்லடி கடற்கரையிலே செய்துள்ளோம். எமது உறவுகளை நினைத்து அவர்களை நினைவு கூர்வதற்காக இங்கு வருகை தந்துள்ளோம்.
இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த காலம் முதல் எமது மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்ந்ததன் காரணமாக எமது உரிமைகளைப் பெறுவதற்கும், சுயநிர்ணய உரிமையுடன் எங்கள் பிரதேசங்களில் வாழ்வதற்காகவும் அகிம்சை ரீதியாகப் போராடினோம். ஆனால், எமக்கு அந்த உரிமை கிடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மாறாக தொடர்ச்சியாக இனக்கலவரங்களின் ஊடாக எமது உறவுகளின் உயிர்களும் உடமைகளும் இழக்கப்பட்டதே தவிர நாங்கள் சுதந்திரமடைந்த மக்களாக வாழவில்லை என்ற காரணத்தினால் ஆயுதப் போராட்டத்திற்குள் நாங்கள் வலிந்து தள்ளப்படடிருந்தோம்.
அந்த ஆயுதப் போராட்டம் 2009 மே 18ம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும், எமக்கான உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த வகையில் நாங்கள் தமிழ்த் தேசியப் பரப்பிலே ஜனநாயக, இராஜதந்திர ரீதியாக எமது உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
2001ம் ஆண்டு பல முரண்பாடுகளுக்கு மத்தியில் இருந்த தமிழ் போராட்ட இயக்கங்கள், அரசியற் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அரசியல் ரீதியாக எமது பிரச்சனைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு செல்வதற்கும், பாராளுமன்றத்திலே ஒற்றுமையாகப் பொரடுவதற்குமாக ஒன்றிணைந்தோம். ஆனால் 2009ல் ஆயுதப் பேராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு ஜதார்த்தமாகப் பேசப்போனால் நாங்கள் இன்று பல பிரிவுகளாகப் பிளவு பட்டு இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கூட ஒற்றுமையாகச் செய்ய முடியாத ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
இந்த நிலைமை தொடரக் கூடாது. ஏனெனில் நாங்கள் முள்ளிவாய்க்காலிலே இழந்த இழப்புகளுக்கு இதுவரை பதில் இல்லை. முள்ளிவாய்க்காலிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குக் கூட இதுவரை என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்குக் கூட என்ன நடந்தது என்பது இன்னமும் தெரியாமல் இருக்கின்றது.
2009ற்குப் பின்னர் மூன்றாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருந்து கொண்டிருந்தாலும் கூட இறந்தவர்களுக்கோ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கோ ஒரு நீதி கிடைக்கும் சூழ்நிலையை இந்த நாட்டிலே உருவாக்கவில்லை.
ஆனால், தற்போதைய ஜனாதிபதி புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்திலும் கூறுகின்றார். வடக்கு கிழக்கு தமிழ் எம்பிகளையும் அழைத்து கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றார். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டாலும் 13வது திருத்தம் எங்களது இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வல்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
எனவே நாங்கள் இந்த உறவுகளின் இழப்பின் மேல் சத்தியம் செய்து கொண்டு இனியாவது ஒன்றாகப் பயணிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் நாங்கள் ஒன்றாகப் பயணிக்காவிட்டால்; கடந்த காலங்களிலே இதே அரசாங்கம் தமிழ்ப் போராட்ட இயக்கங்களை பிளவு படுத்தியது போல் மீண்டும் மீண்டும் எங்களைப் பிளவுபடுத்தி எங்களை வலிமை இழந்தவர்களாக மாற்றக் கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது.
தமிழ்ப் பிரிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்ற போது கூட நாங்கள் வலியுறுத்திக் கூறுவது ஒரு சர்வதேச மத்தியஸ்தத்துடன் தான் ஒரு பேச்சுவார்ததை நடக்க வேண்டும். சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடக்கும் போதே இதற்கு நியாயமான ஒரு தீர்வை சபைக்குக் கொண்டு வரும்.
இன்று நாங்கள் சொல்லிக் கொள்வதெல்லாம் உள்நாட்டுப் பொறிமுறையினூடாக நடைபெறும் எந்தவொரு விசாரணை மூலமும் இழந்த எமது உறவுகளுக்கு ஒரு இழப்பிடோ நீதியோ உண்மையோ கண்டு பிடிக்க முடியாத சூழ்நிலை இருக்கின்றது. இதன் காரணமாகவே நாங்கள் கலப்புப் பொறிமுறை மூலமாக சர்வதேச தலையீட்டுடனான நீதியான விசாரணையைக் கோரி நிற்கின்றோம்.
அந்த வகையில் நாங்கள் ஒன்றாக இணைந்து ஒரே குரலாக எமது மக்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கும், இழந்தவர்களுக்கான இழப்பீட்டையும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்குமாக தொடர்ச்சியாகப் போராட வேண்டும் என்று இன்றைய நாளில் நாங்கள் உறுதி பூணுவோம் என்று தெரிவித்தார்.
பிரித்தானியாவில் பெருமளவானோர் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் உட்பட பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், உலகத்தமிழர் வரலாற்று மைய “முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் “பெருமளவானோர் மனமுருகி வணக்கம் செலுத்தியுள்ளனர்.
இருபத்தொரம் நூற்றாண்டில் உலகமே பார்திருக்க ஓர் இனம் இனப்படுகொலை செய்யப்பட்டு, அடக்குமுறைக்கு உள்ளான அடையாளங்கள் அனைத்தும் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி வல்லாதிக்க சக்திகளின் கொடும் கரம் கொண்டு வஞ்சம் தீர்க்கப்பட்டு இன்றோடு 14ஆண்டுகள் கடந்தும், எம்மின உறவுகளின் உள்ளங்களில் என்றும் துயர்நிறைந்த அந்த கொடூர நாட்களின் வடுக்கள் என்றும் நெருப்பாக பற்றி எரிந்துகொண்டே இருக்கிறது அது, ஓர் நாள் அவர்களின் இழப்பிற்கெல்லாம் நிச்சயமாக விடிவைப்பெற்றுத்தரும்.
முள்ளிவாய்கக்காலின் இறுதி நாட்களில் கொத்துக்கொத்தாக தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் வழமை போல் இந்த ஆண்டும் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாயக்கால் நினைவு முற்றத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொள்ள உணர்வெழிச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பொது ஈகைச்சுடரினை அற்புதவிநாயகர் ஆலய பூசகரான குருக்கள் பிரம்மச்சிறிசதீஸ்வர சர்மா அவர்களும், நாடு கடந்த அரசாங்க பிரதிநிதி சாமினி இராமநாதன் அவர்களும் , இளையோர்களான செல்வன் சோதிதாஸ் மதி,மற்றும் பேரின்பநாதன் சஞ்சிகா அவர்களும் , முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் மகன் செல்வன் ஆரகன் அவர்களும் ஏற்றிவைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பிரித்தானியா கொடியினை உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் ஆலோசகர் பாலகிருஸ்ணன் (பாலா மாஸ்ரர்) ஏற்றிவைத்துள்ளார்.
ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் செங்குருதியால் தமிழர்களின் அடையாளமாக பட்டொளி வீசிப்பறந்த தமிழீழ தேசியக்கொடியினை முன்னாள் போராளி கபில் ஏற்றிவைத்துள்ளார்.
இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, அகவணக்கம் செலுத்த, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என அடையாளப்படுத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமை நினைவாக ஏற்றிவைக்கப்படும் “இனப்படுகொலையின் பிரதானச்சுடரினை” இன அழிப்பினை அடையாளப்படுத்தும் இசை ஒலிக்க, பிரிகேடியர் ஆதவனின் துணைவியார் சுதா ஏற்றிவைத்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தமது உறவுகளை நினைவில் நிறுத்தி ஒழுங்குபடுத்தப்பட்ட சுடர்களை மனமுருகி கண்களில் கண்ணீர் சொரிய ஏற்றி வைத்து ஆத்மார்த்தமாக வணக்கம் செலுத்தியுள்ளனர்.
மேலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்ததூபிக்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்து ஆரம்பித்து வைக்க,நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்களை ஏற்றி,மலர் வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து முள்ளிவாயக்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்கான இறையாசி வேண்டிய உரையினை ஒக்ஸ்பேட் அற்புத விநாயகர் ஆலய குருக்கள் பிரம்மசிறி சதீஸ்வரசர்மா நிகழ்த்தியுள்ளார்.
மேலும்,வளாகத்தில அமைந்துள்ள ஆலயங்களில் ஆத்ம சாந்தி பூசை வழிபாடுகளும் நடைபெற்றுள்ளன
மேற்படி அனைத்து நிகழ்வுகளையும், தமிழர் கலைபண்பாட்டு நடுவமும், தமிழீழ மாவீரர் பணிமனையும் இணைந்து “வீழ்ந்தது அவமானமல்ல, வீழ்ந்து கிடப்பதே அவமானம், மீண்டெழ முயற்சிப்போம்” என ஒழுங்கு செய்துள்ளனர்.
பிரித்தானிய இலங்கைத்தூதரகம் முன்பாக நீதி கோரி போராட்டம்
இறுதி யுத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் உட்பட பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக தமிழர்களுக்கான சுதந்திர வேட்கை அமைப்பினர் 14ஆண்டு முள்ளிவாய்க்கால் நிணைவுதினத்தையும் ஆர்ப்பாட்டத்தினையும் மேற்கொண்டனர்.
இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் போன்றவற்றிற்கு நீதி கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் தாய்மார்கள் சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இடையூறு
உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் இடம்பெற்ற பேரலங்களில் ஒன்றான முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு சிவில் சமூக அமைப்புக்களால் வியாழக்கிழமை (18) கொழும்பு – பொரளை கனத்தை மயான சந்தியில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது , சிங்கள ராவய அமைப்பை சேர்ந்த சிலர் அங்கு வந்து நினைவேந்தலை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
‘புலிகளுக்கான நினைவேந்தல் எமக்கு வேண்டாம்’ என்ற வசனம் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அங்கு சென்ற சிங்கள ராவய அமைப்பினர் , ஏற்பாடுகளை குழப்புவதற்கும் முயற்சித்தனர்.
இதனால் அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்க முன்னரே அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிங்கள ராவய அமைப்பினரால் அமைதியற்ற நிலைமை ஏற்பட்ட போது அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நினைவேந்தலை நிறுத்துமாறு ஏற்பாட்டளர்களை அறிவுறுத்தினர்.
எனினும் தாம் எவ்வித குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யவில்லை என்பதால் , நினைவேந்தலை நிறுத்த முடியாதென ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு தரப்பிடம் தெரிவித்ததாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் இவ்வாறான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அங்கு தீபம் ஏற்றப்பட்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டதோடு , கஞ்சி வழங்கப்பட்டது.
அத்தோடு எதிர்வரும் திங்களன்று (22) நீர்கொழும்பு – பால்தி சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு பிரிதொரு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் , எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அங்கும் நினைவேந்தல் இடம்பெறும் என்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி
யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வியாழக்கிழமை (18) மதியம் 2:30 மணியளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபியில் இடம்பெற்றது.
இதன் பொழுது பொதுசுடர் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராமினால் ஏற்றிவைக்கப்பட்டது.
தொடர்சியாக ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
தமிழகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுப்பு
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இலங்கையில் உள்நாட்டு போரின் போது ஈழத் தமிழர்களை கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டதை அடுத்து ஆண்டுதோறும் உலக தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களால் மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் தீரன் திருமுருகன் தலைமையில் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உருவப்புகைப்படத்தை தெர்மாகோல் மூலம் உருவாக்கப்பட்ட படகில் வைத்து கடலில் விடப்பட்ட பின்னர் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத்தமிழர் நினைவாக கோஷங்கள் எழுப்பியதோடு, ராஜபக்சேவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும். மே 18 நினைவு தமிழின அழிப்பு நாளாக அறிவித்து அனுசரிப்பு விழாவாக தமிழக அரசு நடத்த வேண்டும் என அஞ்சலி கூட்டத்தில் பேசினர்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வு
14ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை (18) முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வு, சரியாக காலை 10.30மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, அதனையடுத்து பொதுச்சுடரேற்றப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் தனது குடும்பத்தில் 13பேரை இழந்த மன்னாரைச் சேர்ந்ந தாயார் ஒருவர் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.
அதேவேளை சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் பிரகடனம் வாசிக்கப்பட்டது. தென்கைலாய ஆதீன குருமுதல்வர் அகத்தியர் அடிகளார் அவர்களால் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
அத்தோடு இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்ற உறவுகள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து உணர்வெழுச்சியுடன் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், யாழ் பல்கலைக்கழக மணவர் ஒன்றியத்தினர், முள்ளிவாய்கால் மண்ணில் உயிர் நீத்தவர்களுடைய உறவினர்கள் என பெருந்திரளானவர்களின் பங்குபற்றலுடன் உணர்வழுச்சியுடன் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை: நினைவேந்தலுக்கு அணிதிரளுமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டதன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் நாளை 14 ஆவது ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன.
18 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றவுள்ளதோடு ஏனைய உறவுகளுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் மே 18 தமிழினப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள், தனியார் கல்வி நிலையங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், அனைதினதும் அன்றாட செயற்பாடுகளை நிறுத்தி நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபடுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கை அரசு தமிழ் மக்கள்மீது மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களுடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் கடந்த 2009 மே 18 ஆம் திகதி மௌனிக்கச் செய்யப்பட்டது.
இந்த இனவழிப்பு யுத்தத்தின்போது சுமார் 150000 வரையான தமிழ் மக்கள் இலங்கை ஆயுதப் படைகளால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டத்திற்கான வரைபு 1987 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தபோது, இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் 13ஆம் திருத்தச் சட்ட வரைபில் உள்ளடக்கப்பட்ட விடயங்களைத் தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியாகக் கூட கருத முடியாது என்பதனைச் சுட்டிக்காட்டி அதனைச் சட்டமாக நிறைவேற்ற அனுமதிக்க வேண்டாம் என்றுகோரி தமிழ்த் தலைவர்களால் அன்றைய இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதப்பட்டது.
எனினும் அக்கோரிக்கையை முற்றாகப் புறந்தள்ளி தீர்வு என்ற பெயரில் தமிழ் மக்களது விருப்புக்கு மாறாகத் தமிழ் மக்கள்மீது திணிக்கப்பட்ட 13ஆம் திருத்தத்தையும் ஒற்றையாட்சியையும் நிராகரித்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்துப் போராடியமையினாலேயே தமிழ் மக்கள் இனவழிப்புச் செய்யப்பட்டிருந்தார்கள்.
தமிழ்த் தரப்பின் கோரிக்கைகளை முற்றாகப் புறக்கணித்து 1987 நவம்பர் 14 இல் பாராளுமன்றத்தில் 13ஆம் திருத்தமானது சட்டமூலமாக நிறைவேற்றப்பட்டு முழுமையாக நடைமுறையில் உள்ளபோதே மேற்படி இனவழிப்பு அரங்கேற்றப்பட்டது.
உரிமைக்காகப் போராடியமைக்காக இவ்வாறு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரவேண்டிய வரலாற்றுக்கடமை அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டும்.
அத்துடன் அவர்கள் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்து போராடினார்கள் என்பதும், அக்கோரிக்கைகளை இறுதிவரை கைவிட மறுத்து உறுதியாக நின்றமையினாலுமே இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று உண்மைகள் எமது அடுத்த சந்ததிக்குக் கடத்திச் செல்லப்படல் வேண்டும்.
அதனூடாக இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியில் விசாரணையை வலியுறுத்துவதுடன், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வுகளை நிராகரித்துத் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வை நோக்கி மக்களை அணிதிரட்டிச் செல்வதும் அவசியக் கடமையாகும்.
அவ்வாறு இனவழிப்பு அரங்கேற்றப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் தமிழ் மக்கள் 13ஆம் திருத்தத்தையும், ஒற்றையாட்சியையும் நிராகரித்து, தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிகப்பட்ட அடிப்படையிலான சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியே சனநாயக வழிமுறையிலான தேர்தல்கள் மூலம் ஆணை வழங்கி வந்துள்ளனர்.
நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து கடந்த 36 ஆண்டுகள் முழுமையாக நடைமுறையில் உள்ள 13ம் திருத்தச் சட்டத்தினை, நடைமுறையில் இல்லாதது போன்று பாசாங்கு செய்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோருவதானது, அதனைத் தீர்வாக ஏற்றுக்கொள்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடாகும்.
கடந்த 75 வருடங்களாகத் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டுவந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்பினை 13ஐ நடைமுறைப்படுத்தல் என்னும் பெயரில் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடுவதற்கும், அதனை வடக்குக் கிழக்குத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்து அதற்கு அங்கீகாரம் வழங்குவதற்குமான திரைமறைவுச் சதிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இத்தகைய செயற்பாடுகள் முள்ளிவாய்க்கால் வரை நடந்தேறிய தியாகங்களுக்குச் செய்யப்படும் துரோகமாகும். 1987 இல் தமிழ் மக்களின் சம்மதமின்றி ஒருதலைப்பட்டசமாகக் திணிக்கப்பட்ட 13 ம் திருத்தச் சட்டத்தை நிராகரித்து, 2009 வரை மேற்கொள்ளப்பட்டிருந்த தியாகம் நிறைந்த உன்னதமான விடுதலைப் போராட்டத்தைத் தவறானதாக சித்தரிக்க முயலும் செயற்பாடுமாகும்.
இச் சதியை மக்களுக்கு அம்பலப்படுத்தி, ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தீர்வை வலியுறுத்தி மக்களை அணிதிரட்ட வேண்டிய வரலாற்றுக் கடமை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை முன்னடுக்கும் ஒவ்வொரு தரப்பினருக்கும் உண்டு.
கீழ்வரும் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் வழமைபோன்று இவ்வாண்டும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அணிதிரளவேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.
• தமிழ் மக்கள்மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்குச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை நடாத்தப்படல் வேண்டும். பொறுப்புக் கூறல் தொடர்பிலான எந்தவொரு உள்ளகப் பொறிமுறையையும் முற்றாக நிகராரிக்கின்றோம்.
• 1987 இலேயே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கூடக் கருத முடியாது என்று, அன்றே தமிழ்த் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டிருந்த 13 ஆம் திருத்தச் சட்டத்தை, ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வாகத் திணிக்க முடியாது என்பதையும், ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
• ஸ்ரீலங்காவின் 75 வருடத் தோல்விக்குக் காரணமான ஒற்றையாட்சி அரசியல் யாப்புக் கைவிடப்பட்டு, புதிய அரசியல் யாப்பானது தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரிக்கும் சமஸ்டி யாப்பாக அமைய வேண்டும்.
• பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படல் வேண்டும் என்பதுடன் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படல் வேண்டும்.
• புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டுவரப்படுவது நிறுத்தப்படல் வேண்டும்.
• வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிய சர்வதேச விசாரணை நடாத்தப்படல் வேண்டும்.
மேற்படி கோரிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் மே 18 ஆம் திகதி வடக்குக் கிழக்கில் மக்கள் தமது வழமையான நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தி முள்ளிவாய்க்கால் மே 18 இனப்படுகொலையை நினைவுகூருமாறு அழைக்கின்றோம்.
அந்தவகையில் வடக்குக் கிழக்கில் உள்ள அனைத்து அரச திணைக்களங்கள், அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், சந்தைகள், தனியார் கல்வி நிலையங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தினதும் அன்றாடச் செயற்பாடுகளை நிறுத்தி நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்குமாறும், வியாழக்கிழமை மே-18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வுக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடம் மட்டுமல்ல. எங்களுடைய வாழ்வியலாக மாறியிருக்கின்றது – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு
முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடம் மட்டுமல்ல. எங்களுடைய வாழ்வியலாக மாறியிருக்கின்றது என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பதினான்கு ஆண்டுகளாகி போன 2009 ஆம் ஆண்டின் இன அழிப்பின் நினைவு தினத்தை நாளைய தினத்திலே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்திலே நினைவு கூரப்பட இருக்கின்றது.
கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக நிகழ்ந்தது போல இந்த ஆண்டும் சரியாக காலை 10.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாக இருக்கின்றன.
முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடம் மட்டுமல்ல. எங்களுடைய வாழ்வியலாக மாறியிருக்கின்றது. எங்களுடைய தமிழ் இனத்தின் விடுதலைக்கான ஒரு புள்ளியாகவும் இந்த இடம் இருக்கிறது.
இந்த மண்ணிலே படுகொலை செய்யப்பட்ட அத்தனை மக்களையும் நாங்கள் நினைவு கூர கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம்.
ஆகவே இந்த நினைவேந்தலை பங்கெடுக்க தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் பொதுக்கட்டமைப்பின் சார்பாக அழைத்து நிற்கின்றோம்.
இந்த நிகழ்விலே பங்கெடுக்க முடியாதவர்கள் உங்களுடைய இல்லங்களில் மாலையிலே நீங்கள் விளக்கேற்றி இறந்தவர்களுடைய ஆன்மாவிற்காக மன்றாடும்படி கேட்டு நிற்கின்றோம்.
இறுதி யுத்த காலங்களிலே மக்களுக்கான வாழ்வுக்கு அல்லது உயிரைப் பிடித்துக் கொள்ள காரணமாக இருந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை நீங்கள் உங்களுடைய இல்லங்களிலே சமைத்து அதனை அருகில் உள்ளவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைக்கிறோம்.
இவ்வாறான செயற்பாடுகளை, நினைவேந்தல்களை, கஞ்சி வழங்குதல்களை உங்களுடைய இல்லங்களில் மட்டுமல்லாது, ஆலயங்களிலும், சமூக அமைப்புகளிலும், வீதிகளிலும் இவற்றை முன்னெடுக்குமாறு அத்தனை மக்களையும் கேட்டுக்கொள்ளுகிறோம்.
இதனை ஏன் நாங்கள் செய்கிறோம் என்பதை எங்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும்படியாகவும் அன்புரிமையோடு கேட்டுநிற்கின்றோம்.
இந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு காரணமான அத்தனை பேரும் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற அந்த ஒருமித்த குரலில் மக்களினுடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற கூடிய மக்களுக்கான நிர்வாக அல்லது எந்த தாகத்தோடு நாங்கள் போராடினோமோ அந்த தாகங்கள் நிறைவேறும்படியாக நாங்கள் எம்மை அர்ப்பணிப்பதும் அவசியமாக இருக்கிறது.
இன்றும் இடம்பெற்று வருகின்ற பல்வேறு வகையான இன அழிப்பு விடயங்கள், பௌத்தமயமாக்கல்கள், இவற்றுக்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பது அவசியம் என்பதை இந்த வேளையிலே உணர்த்தி இதிலே அனைவரையும் பங்கெடுக்குமாறு அன்போடு கேட்டுநிற்கின்றோம்.