தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை மார்ச் 28, 29, 30, 31 ஆம் திகதிகளிலும், ஏப்ரல் 3ஆம் திகதியும் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து கலந்துரையாடியுள்ள போதே இவ்வாறு தீமானிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 25 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு தினம் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் செயற்பாடுகளில் தலையிட மாட்டோம் – சர்வதேச நாணய நிதியம்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளில் தலையிட மாட்டோம் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

மேலும் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் பரிந்துரை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை தாமதிப்பது நல்லதல்ல: மஹிந்த தேசப்பிரிய

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல எனவும், ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான எல்லை நிர்ணயம் செய்யும் தேசிய எல்லை மீள் நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

“உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை (19) முடிவடைவதால், கூடிய விரைவில் தேர்தலை நடத்துவது அவசியம்,” என்றார்.

எந்த சூழ்நிலையில் இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல என்றார்.

இந்த உள்ளுராட்சி மன்றங்களை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலம் நடத்துவது ஏற்புடையதல்ல என தலைவர் தெரிவித்தார்.

“குறைந்தது 3, 4 மாதங்களுக்குள் இந்தத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று நம்புகிறேன். ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் நல்லது. ஆனால் இப்போது அது கடினமாக இருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால் தபால் மூல வாக்களிப்பிற்கு கூட அரசாங்க அச்சுத் திணைக்களத்திடம் இருந்து வாக்குச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளவில்லை“ என்று அவர் கூறினார்.

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய அநுர- சஜித் தீர்மானம்

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தீர்மானித்துள்ளன.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்கத் தவறியதன் காரணமாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதன்படி சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் தலையீட்டில் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தாதது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என இரு கட்சிகளும் சுட்டிக்காட்டுகின்றன.

தேர்தலை நடத்துவதற்குத் தயாரா? என பவ்ரல் ஜனாதிபதியிடம் கேள்வி

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குப் பிரதான தடையாக அரசாங்கம் கூறுகின்ற நிதி நெருக்கடிக்குத் தீர்வு வழங்குவதற்கு ஏதேனும் ஒரு தரப்பினர் தயாராக இருந்தால், தேர்தலை நடத்துவதற்குத் தயாரா என அரசாங்கத்திடம் பெப்ரல் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

சட்டரீதியான காரணங்களை முன்வைக்காமல், உள்ளூராட்சித் தேர்தலைக் காலவரையறையின்றி ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தருணத்தில் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க முற்போக்கான தேர்தல் சீர்திருத்தங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய எல்லை நிர்ணய நடவடிக்கையின் மூலம் தொகுதிகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்த பின்னர் புதிய தேர்தல் முறை எப்படி இருக்கும் என்றும் ரோகண ஹெட்டியாராச்சி பிரதமரிடம் வினவியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 வீதமாகக் குறைக்கும்போது இளைஞர், பெண் ஒதுக்கீட்டுக்குத் தலா 25 வீதம் ஒதுக்கப்படுமா என்றும் ரோஹன ஹெட்டியாராச்சி, பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது – அரச அச்சகம்

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச அச்சகத் திணைக்களத் தலைவர் கங்கானி லியனகே இது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மற்றும் பொது வாக்கெடுப்பு ஆகியவற்றுக்குத் தேவையான வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என திறைசேரிக்கு கடந்த இரு வாரங்களில் இரண்டு தடவைகள் எழுத்து மூலமாக முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

மார்ச் மாதம் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட அச்சிடல் பணிகளுக்கான நிதி முழுமையாக கிடைக்கவில்லை.

நிதி விடுவிப்பு தொடர்பில் திறைசேரி ஒரு உத்தியோகபூர்வமாக அறிவிப்பை விடுக்க வேண்டும் என அரச அச்சகத் திணைக்களத் தலைவர் திறைசேரியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

நிதி கிடைப்பதில் தாமதம் காணப்படுவதால் தபால் மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது என அரச அச்சகத் திணைக்கள தலைவர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோ பூர்வமாக அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 28, 29, 30 மற்றும் 31ஆம் திகதிகளில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தபால்மூல வாக்குச்சீட்டு விநியோகப் பணிகள் எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் முழுமைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தநிலையிலேயே குறித்த திகதிக்கிடையில் தம்மாக் வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க முடியாது என அரச அச்சகத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்துங்கள்: மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகள் கூட்டாக வலியுறுத்தல்!

உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகான தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் விபரம் வருமாறு-

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், பொதுமக்களின் துன்பங்களைக் குறைக்கவும், சமூக அமைதியின்மையைப் போக்க முறையான கொள்கைப் பொறிமுறையைத் தயாரிக்கவும். <br>

நாட்டில் நிலவும் கடுமையான, பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரமற்ற தன்மையைப் போக்கி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மகா சங்கம் என்ற வகையில் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவ்வாறாயினும், பொருளாதாரச் சுருக்கம், பணவீக்கம், மோசமான அரசாங்க நிர்வாகம், தற்போதைய உயர் மின் கட்டணங்கள், தண்ணீர்க் கட்டணம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுப்படியாகாத அதிகரிப்பு போன்றவற்றால் எழுந்துள்ள சமூக அழுத்தத்தையும் ஜனாதிபதி அறிந்திருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.

வளர்ந்து வரும் பொருளாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும், மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் ஜனரஞ்சகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் அனைத்து தரப்பினரும் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் புரிந்து கொண்டு நாட்டை பொருளாதார ரீதியாக ஸ்திரப்படுத்துவதற்கு உழைக்க வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதற்காக கடந்த காலகட்டம் முழுவதிலும் தொடர்ச்சியான நடைமுறை நிலையான கொள்கைகளை முன்வைக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். கட்சி அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் நலன் கருதி தேசிய கொள்கைகளின் அடிப்படையில் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மக்கள்தொகை வீழ்ச்சியுடன் ஏற்படும் சமூகச் சிதைவு மற்றும் அராஜகம் பற்றி இலக்கிய குடதந்த சூத்திரம் மற்றும் சக்கவட்டி சிஹானதா சூத்திரம் போன்ற பௌத்த சூத்திரங்களில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் பொதுமக்கள் மீது சுமத்தாமல், பொது நிதியை முறையாக நிர்வகிப்பது, ஊழல் மற்றும் பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது, மக்கள் பிரதிநிதிகள் அனுபவிக்கும் வரம்பற்ற சலுகைகளை அகற்றுவது போன்ற நடைமுறைத் தீர்வுகளின் மூலம் பொதுமக்களின் துன்பத்தைக் குறைக்க அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மேலும், உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது பொதுமக்களிடையே சற்று கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் மூலம் மக்களின் இறையாண்மையை உறுதிப்படுத்துவது என்பது ஜனநாயகத் தலைவராக அங்கீகரிக்கப்பட்ட உங்களுக்கும் நன்றாகத் தெரியும்.

எனவே, உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவது அரசின் பொறுப்பு.

‘நாட்டில் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக மக்கள் நடத்தும் போராட்டங்கள் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறுதியற்ற தன்மையை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படக்கூடாது.

மேலும், நாட்டின் சட்ட எல்லைகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை பொதுமக்களுக்கு இருக்க வேண்டும்.

எனவே, அரசாங்கம் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி, சட்டத்தின் மேலாதிக்கத்தைப் பெற்று மக்களின் வாழ்க்கையை படிப்படியாக மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

தேர்தலை நடத்தினால் IMF நிபந்தனைகளை செயற்படுத்த முடியாது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அத்தோடு மீண்டும் அத்தியாவசிய சேவை விநியோக கட்டமைப்பில் நெருக்கடி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்படும் என கூறினார்.

நாட்டில் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் என்ற ரீதியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முதுகெலும்பு இருந்தால் பதவிகளை துறந்து பொதுத்தேர்தலுக்கு இடமளியுங்கள் – கர்தினால்

அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்து புதிய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று தெரிவித்துள்ளார்.

“இன்று நாட்டை ஆள்பவர்கள் தேசம் கவலைகொள்ளும் ஒரு பரிதாபமான நிலையை உருவாக்கியுள்ளனர். எனவே அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் முதுகெலும்பு இருந்தால் பதவியை இராஜினாமா செய்து ஒரு புதிய நிர்வாகத்தை மக்கள் தெரிவு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்” என்று கர்தினால் ரஞ்சித் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும், நீதித்துறையின் அதிகாரத்தை இழிவுபடுத்துவதில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்தினால் கேட்டுக் கொண்டார்.

“உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. உயர் நீதிமன்றம் மார்ச் 3, 2023 அன்று வழங்கிய தீர்ப்பு ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தை சமமாக கட்டுப்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. எனவே, அவர்கள் எடுத்த முடிவை உண்மையாக பின்பற்ற வேண்டும். இல்லையேல் அவர்கள் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து ஜனநாயகத்தின் அடிப்படையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவார்கள்” என்று கர்தினால் கூறினார்.

“உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியதாக செய்திகள் வெளியாகின. பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவை நீதிமன்றத்தால் தங்கள் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகக் கூறினர். இந்த விடயம் மிகுந்த அக்கறையுடன் பார்க்கப்பட வேண்டியதாகும். இரண்டு எம்.பி.க்களின் இந்தக் கோரிக்கை உயர் நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் சுதந்திரத்துக்குப் பொருந்தாதது மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீதித்துறை சுதந்திரம் பேணப்படுவதை உறுதி செய்ய இந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்“ என்றார்.

உள்ளூராட்சித் தேர்தல் இலங்கைக்கு தற்போது அவசியம் – அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie Chung) தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட சம்மேளனத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.