இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை குறித்து அரசாங்கம் ஸ்ரீலங்காபொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர குற்றம்சாட்டியுள்ளார்.
மார்ச்மாத இறுதிக்குள் இந்தியாவுடனான உத்தேச பொருளாதாரதொழில்நுட்ப உடன்படிக்கை குறித்த தொழில்நுட்ப பேச்சுக்களை இறுதிசெய்வது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சரத்வீரசேகர எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்
இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நாடாளுமன்ற குழுவினருடன் அரசாங்கம் ஆராயவில்லை இது குறித்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் உரிய கலந்தாலோசனைகளை மேற்கொள்ளாமல் இறுதி உடன்படிக்கை குறித்த தீர்மானத்தை எடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எக்டா உடன்பாடு குறித்து ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது நிலைப்பாட்டை தாமதமின்றி வெளிப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சரத்வீரசேகர நாட்டில் காணப்படும் அரசியல் சமூக சூழ்நிலைகளை தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து 2018 இல் இரண்டு நாடுகளும் எக்டா உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன எனவும் தெரிவித்துள்ள அவர் 2016 இல் மோடி அரசாங்கத்திற்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின எனவும் தெரிவித்துள்ளார்.
2022 பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய முன்னொருபோதும் இல்லாத உதவியை இலங்கை பாராட்டுகின்றது எனினும் நெருக்கடியில் ஒரு நாடு சிக்குண்டுள்ள வேளை அதன் மூலம் பலன்பெற முயலக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.