சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி பெறப்பட்டமை இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் நாட்டை மேம்படுத்துவதற்கும் ஒரு படியாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், 4 வருடங்களில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி பெறுவதாகவும், இதன் முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்படும் எனவும் தெரிவித்தார்.
“கூடுதலாக, நாடு மற்ற தரப்புக்களிடமிருந்து விரைவான கடன் ஆதரவில் சுமார் 7 பில்லியன் டொலர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறது. சிலர் நாணய நிதியத்தின் கடன் வசதியை மற்றொரு கடனாகக் கருதுகின்றனர். அதே சமயம் மற்றொரு தரப்பினர் நாட்டின் மொத்தக் கடனையும் பெற்ற தொகையைக் கொண்டு அடைக்க முடியாது என்று கூறுகின்றனர்.
இந்த அறிக்கைகள் அறியாமையை அல்லது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விருப்பத்தை காட்டுகின்றன என்றார்.
பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“எதிர்கால செலவு மதிப்பீட்டை கணக்கில் கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் சரி செய்யப்படுகிறது. பணவீக்க விகிதத்தை 6-4 சதவீதம் என்ற நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட, கடன் வாங்கி வருமானம் ஈட்ட வேண்டும்“ என்றார்.