வடக்கிற்கான விஜயத்தை ஆரம்பித்தனர் சீனதூதுவர் தலைமையிலான குழு

இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழுவினர் இன்று முதல் வடக்கிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

இன்றையதினம், காலை பத்துமணியளவில் வவுனியாவை வந்தடையவுள்ள அக்குழுவினர் வவுனியா மாவட்டத்தில் 500 பேருக்கான வாழ்வாதார பொதிகளைக் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவள்ளனர்.

அதன்பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணிக்கும் அக்குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவிற்கான 500 பொதிகளை மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரனிடத்தில் கையளிப்பதோடு வெலிஓயா பிரதேச செயலகத்திற்கான 250 வாழ்வாதாரப் பொதிகளை அக்குழுவினரே நேரடியான விஜயமொன்றை மேற்கொண்டு வழங்கவுள்ளனர்.

அதனையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் அக்கழுவினர் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடத்தில் வாழ்வாதார பொதிகளை கையளித்த பின்பு யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கவுள்ளனர்.

யாழில் தங்கியிருக்கும் குறித்த குழுவினருடன் சீன பௌத்த அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து நாளை 6ஆம் காலை 9 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தினைச்  சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு, 10 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரனைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு நெடுந்தீவு மக்களின் வாழ்வாதார உதவியாக  500 வாழ்வாதரப் பொதிகள் கையளிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து மாலை 2 மணிக்கு நாவற்குழி விகாரைக்குப் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதோடு, குறித்த தினம் முன்னிரவில் சிவில் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தத்துறை சார்ந்தவர்கள் சிலரைச் சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை மறுதினம் 7ஆம் திகதி காலை நயினாதீவு பயணிக்கும் குறித்த குழுவினா நாகவிகாரையில் வழிபாடுகளைச் செய்யவுள்ளதோடு அங்குள்ள பொது மக்களுக்காக 250 வாழ்வாதார பொதிகளை கையளிக்கவுள்ளனர்

பின்னர் அங்கிருந்து யாழ்.திரும்பும் அவர்கள் சிறிது நேரத்தில் மன்னாரிக்குப் பயணித்து 8ஆம் திகதி மன்னார் மாவட்டச்செயலாளர் அ.ஸ்ரான்லி டிமலைச் சந்திக்கவுள்ளதோடு அங்கும் பொதுமக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளதோடு அன்றையதினம் மாலையில் வடக்கிற்கான விஜயத்தினை நிறைவு செய்துகொண்டு கொழும்பு நோக்கி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள சீன தூதுவர்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 06 ஆம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள  குறித்த குழுவினர் வட மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் நலனோம்புத் திட்டங்களையும் குறித்த குழுவினர் பார்வையிடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், இலங்கைக்கான சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேருக்கு மாதாந்தம் ரூபா 6,500 படி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சீனத் தூதுவரின் யாழ்ப்பாண விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரலில் யாழ். பல்கலைக் கழக விஜயம் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனக்கப்பல் மேலும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்க அனுமதி

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலான “ஷி யான் 6″ மேலும் இரண்டு நாட்கள் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் சனிக்கிழமை பிற்பகல் நாட்டிலிருந்து புறப்படவிருந்தது.

இந்தநிலையில், நாளை மறுதினம் வரை குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

Posted in Uncategorized

கொழும்பில் சீனாவின் ஆய்வுக் கப்பல்; விமானங்கள், ட்ரோன்கள் மூலம் மிகத் தீவிரக் கண்காணிப்பில் இந்தியா

இந்திய, அமெரிக்கா எதிர்ப்பையும் மீறி கொழும்புத் துறைமுகத்துக்கு சீன ஆய்வுக் கப்பல் ‘ஷியான் -6’ (Shiyan 6) புதன்கிழமை வந்திருக்கும் நிலையில், இந்தியக் கடற்படை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. கண்காணிப்பு விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டின் கடற்படை கப்பல்களும் போர்க்கப்பல்களும் போர்ப் பயிற்சிக்காகப் பாகிஸ்தான் நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் P-8I கண்காணிப்பு விமானங்கள் மற்றும் MQ-9B கண்காணிப்பு டிரோன்களும் கடற்பரப்பில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவுக்குச் சொந்தமான கடற்பரப்புகள் மற்றும் இலங்கை வந்திருக்கும் சீன ஆய்வுக் கப்பலையும் இந்தியக் கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானில் நடைபெறும் கடற்படை பயிற்சியில் பங்கேற்கும் வகையில், சீன கடற்படையின் 3 போர்க் கப்பல்கள் பாகிஸ்தான் எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

ஆனால், பாகிஸ்தான் மற்றும் சீனப் போர்க்கப்பல்கள், பெரிசியன் வளைகுடாப்பகுதிக்கு நெருக்கமாக வந்து, இஸ்ரேல் – ஹமாஸ் போருக்குப் பிறகு, குவிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கப் படைகளை நோட்டமிடலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இந்தியக் கடற்படை, கடல்பரப்பில் தீவிர கண்காணிப்புப் பணியை முடுக்கிவிட்டிருக்கிறது.

முன்னதாக சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கைக்குள் அனுமதி அளிக்கப்பட்டமை குறித்த தகவலை அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். கடந்த வாரம் சீனாவுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணம் மேற்கொண்டமையைத் தொடர்ந்து, இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது.

ஆய்வு மற்றும் கண்காணிப்பு கப்பல்களை இலங்கைக்கு சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது. இது தொடர்பாக இலங்கையிடம் இந்தியா தனது கவலையைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் (N.A.R.A.) இணைந்து கடல்சார்ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட சீன ஆய்வுக்கப்பல் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக அந்நாட்டு அரசு கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, இந்தக் கப்பலின் இலங்கைப் பயணம் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்திருந்தது.

சீன இராணுவத்தின் கடற்படை கப்பலான ‘ஹை யாங் 24 ஹாவோ’ (HAI YANG 24) கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கை வந்தது. இதேபோன்று, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு சீன கப்பலான ‘யுவான் வாங் 5” (Yuan Wang 5) இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

சீன பெற்றோலிய உற்பத்திகள் யாழ்ப்பாணத்தில் அறிமுகம்

கடந்த சில காலமாக சீனாவின் உற்பத்திகளை இலங்கையின் தென் மற்றும் மேல் மாகாணங்களில் விற்பனை செய்வது மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுவது என ஆரம்பித்திருந்தனர். இந்நிலைமை, தற்போது வடக்கிலும் ஆரம்பித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெற்ரோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை மானிப்பாய் மெமோறியல் வீதியில் சினோபெக் ஒயில் வகைகளை அறிமுகம் செய்து விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தரான இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவட் லிமிட்டட் நிறுவனமானது யாழ்ப்பாணத்திற்கான தனது விநியோகஸ்தராக கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் பிறைவட் லிமிட்டட் என்னும் நிறுவனத்தினை இன்று செவ்வாய்க்கிழமை மானிப்பாயில் ஆரம்பித்துள்ளது.

இந்நிகழ்வில் பங்குதாரர்களான பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜயசாந்த தொட்டஹேவகே, தேசிய விற்பனை முகாமையாளராக துசிதகுமார, விற்பனை முகாமையாளர் எம்.குகன் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் சினோபெக் எரிபொருள் விற்பனை முகாமையாளர்கள் வாகன திருத்துநர்கள் வாகன உதிரிப்பாக விற்பனையாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

சீனக் கப்பல் இலங்கை வருகை

சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி சீனாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த Shi Yan 6 ஆய்வுக் கப்பல் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Shi Yan 6 கப்பலுடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ருகுணு பல்கலைக்கழகம் அதிலிருந்து விலகியது.

இந்த பின்னணியில், கப்பலின் வருகையை அடுத்த மாத இறுதி வரை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனை வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியது.

எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அருகில், இந்து சமுத்திரத்தில் ஆய்வு அல்லது கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த Shi Yan 6 கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலின் வருகை தொடர்பாக இந்தியா தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், கப்பல் வருகைக்கு எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சீன ஜனாதிபதி – இலங்கை ஜனாதிபதி இடையே விசேட சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சீனாவில் பீஜிங் நகரித்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க  கடந்த 16ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் சீனாவிற்கான நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப்  பதவியேற்றதன் பின்னர் சீனாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவின் துறைமுக நகரத்தை ஊக்குவித்தமைக்காக கடும் விமர்சனங்களை எதிர் கொள்ளும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர்

இலங்கையில் சீனாவின் நிதியுதவியுடனான திட்டங்கள் இந்தோ பசுபிக்கில் சீனா ஆழமாக காலடி பதிப்பதற்கு உதவலாம் என்ற  கரிசனைகளிற்கு மத்தியில் இலங்கையில் சீனா நிதியுதவி உடனான துறைமுக நகரத்தை ஊக்குவித்தமைக்காக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

கொழும்பு துறைமுகநகரத்திற்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் அந்த திட்டம் குறித்து உரையாற்றுவதற்காக செப்டம்பர் மாதம் டேவிட் கமரூன் மத்தியகிழக்கிற்கு சென்றார் என பொலிட்டிக்கோ தெரிவித்துள்ளது.

சீனாவின் சர்வதேச உட்கட்டமைப்பு திட்டமாக புதிய பட்டுப்பாதை திட்டத்தின் முக்கிய பகுதி இந்த கொழும்பு துறைமுக நகரம்.சிங்கப்பூருக்கு போட்டியாக இது உருவாக்கப்படுகின்றது என்ற கருத்தும் உள்ளது.

கொழும்புதுறைமுக நகரத்தின் கட்டுமானத்துடன் தொடர்புபட்ட சீன நிறுவனத்தின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே டேவிட்கமரூன் இணைத்துக்கொள்ளப்பட்டார் என இலங்கையின் முதலீட்டு விவகாரங்களிற்கான அமைச்சர் டிலும் அமுனுகம பொலிட்டிக்கோவிற்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிட்டிக்கோ மேலும் தெரிவித்துள்ளதாவது

டேவிட் கமரூன் இரண்டு நிகழ்வுகளில் உரையாற்றியிருந்தார் அபுதாபியில் அவர் கலந்துகொண்ட நிகழ்வில் 100 பேர் கலந்துகொண்டிருந்தனர் துபாயில் அவரின் நிகழ்வில் 300 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

இது முற்றுமுழுதாக சீனாவின் திட்டமில்லை – இது இலங்கையின் திட்டம் என்பதை டேவிட்கமரூன் வலியுறுத்த முனைந்தார் என தெரிவித்துள்ள திலிம் அமுனுகம  சீனாவும் அவர் அதனையே வலியுறுத்தவேண்டும் என விரும்பியிருக்கலாம் என கருதுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டேவிட் கமரூனை உள்வாங்குவது குறித்து சீன நிறுவனமே தீர்மானித்தது இலங்கை அரசாங்கம் இல்லை எனவும் இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் பிரதமருக்கு சீனாவுடன் நேரடிதொடர்பில்லை கொழும்புதுறைமுகநகரத்திற்கு நிதி வழங்கும் நிறுவனத்துடனும் தொடர்பில்லை என அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

டேவிட் கமரூனை அமெரிக்காவை தளமாக கொண்ட வோசிங்டன் பேச்சாளர்கள் பணியகம் என்ற அமைப்பே ஏற்பாடு செய்தது அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின்கேபிஎம்ஜி நிறுவனமும் இந்த நிகழ்வுடன் தொடர்புபட்டிருந்தது,இந்த வருட ஆரம்பத்தில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்த பின்னரே டேவிட்கமரூனும் இந்த விடயத்தில் ஈடுபாட்டை காட்டினார் என டேவிட் கமரூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பில் கமரூன் சீன அரசாங்கத்துடனேயோ அல்லது கொழும்பு துறைமுக நகர திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்துடனேயோ தொடர்புபட்டிருக்கவில்லை இலங்கை அரசாங்கம் கொழும்பு துறைமுக நகரத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றது என தெரிவித்துள்ள அவரது பேச்சாளர் உரைக்காக டேவிட் கமரூனிற்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பதை தெரிவிக்க மறுத்துள்ளார்.

பிரிட்டனின் முன்னாள் பிரதமரின் நடவடிக்கைகள் குறித்து கடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ள கென்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இயன் டங்கன் ஸ்மித் புதிய பட்டுப்பாதை திட்டத்திற்கும் சமூக அபிவிருத்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

புதியபட்டுபாதை திட்டம் நாடுகளை சீனாவின் கைதிகளாக்குகின்றது எங்கள் அனைவருக்கும் சீனா ஆபத்தான நாடு என்பதால் டேவிட் கமரூன் இதனை தெரிவு செய்திருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தவறான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 14ஆம் திகதி சீனா செல்லவுள்ளார்.

இதன்போது சீன அரசாங்கத்துடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ளது

மேலும் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சீன ஆராய்ச்சிக் கப்பல் நவம்பரில் இலங்கை வருவதற்கு அனுமதி – அலி சப்ரி

சீன கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கைக்கு வருகைதருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார  அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் சீன கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனினும் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வரமுடியாது ஆனால் நவம்பர் மாதத்திலேயே சீன கப்பல் இலங்கை வரமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

சீன கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கை வரமுடியும் என்பது குறித்து அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இது வெறுமனே ஒரு விஜயம் மாத்திரம் இல்லை கப்பல் இலங்கையில் தரித்துநிற்க்கும் நாட்களில் அதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் உள்விவகாரங்களை கருத்தில் கொண்ட பின்னர் கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கான திகதியை வழங்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சீனாவுடனான இருதரப்பு உறவுகள்  மிகவும் அவசியமானவை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்