தமிழர்களின் நலன்களை விற்க வேண்டாமென சுமந்திரனிடம் சி.வி. விக்கினேஸ்வரன் எம்.பி கோரிக்கை

எமது நிலையை இன்னும் ஸ்திரப்படுத்தி எம்மை சமஷ்டியை நோக்கி எடுத்துச் செல்ல வல்லதே தமிழ் பொது வேட்பாளர் என்ற பதவிநிலை என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதில் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரிடத்தில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்த வேண்டும் என்று நீங்கள் கூறிவருவது ஏன்? அதனால் ஏற்படும் நன்மைகள் யாவை? ஏன் அதைச் சிலர் எதிர்க்கின்றார்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அவ்வினாவிற்கு அவர் அளித்துள்ள பதிலில்,

தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்நிறுத்த வேண்டும் என்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 2011 அளவில் இருந்து கூறி வந்தவர் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்கள். அக்கோரிக்கை அப்பொழுது தமிழ் மக்களால் ஆழமாகச் சிந்திக்கப்படவில்லை. நண்பர் சிவாஜிலிங்கம் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் நின்றிருந்தாலும் தமிழ் மக்களின் ஒரு பிரதிநிதியாக தமிழ் மக்களால் அரங்கேற்றப்படவில்லை.

ஆனால் 2009இன் பின்னரான வடகிழக்கு அரசியற் களம், மத்திய அரசாங்கம் வடகிழக்கு தமிழ் மக்கள் விடயத்தில் நடந்து கொண்டுவந்த விதம், நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்ட விதம், முதலமைச்சராக நான் பெற்றுக்கொண்ட அனுபவம், இவையாவும் என்னைச் சிந்திக்க வைத்தன.

உதாரணத்திற்கு 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் அவரின் அழைப்பின் பேரில் சுமந்திரன் அவர்களும் முதலமைச்சராக அப்போதிருந்த நானும் சந்தித்தோம். எமது மாகாணசபை சார்பான நடைமுறைக் கோரிக்கைகள் யாவை என்று அவர் கேட்டிருந்தார். நாம் அவற்றை எழுத்தில் இட்டு அவரிடம் கையளித்தோம்.

சுமார் பத்து பன்னிரண்டு விடயங்களைக் கோரியிருந்தோம். எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்த்து எமக்கு அவற்றை நாம் கோரியவாறு நல்குவதாக அவரும் அவரின் செயலாளரான லலித்வீரதுங்கவிடம் பொறுப்பெடுத்தனர். நாமும் மகிழ்வுடன் விடைபெற்றுக் கொண்டோம். ஆனால் நாம் கோரிய எதுவும் வழங்கப்படவில்லை. உதாரணத்திற்கு அப்போதிருந்த சிங்கள இராணுவ ஆளுநரை மாற்றி ஒரு தமிழ்ப் பேசும் சிவில் சமூக பிரமுகரை அந்த இடத்திற்கு நியமிக்கும்படி கோரியிருந்தோம்.

அப்போதிருந்தவரின் காலம் ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்றும் அதன் பின்னர் எமது கோரிக்கை கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்றும் கூறியிருந்தார். நாம் ஜூலை வரை காத்திருந்தோம். திரும்பவும் அதே இராணுவ அலுவலரை ஜனாதிபதி மஹிந்த ஆளுநராக நியமித்தார். இவ்வாறு எமது கோரிக்கைகளுக்கு நேர்மாறாகவே மத்திய அரசாங்கம் நடந்து வந்து கொண்டிருப்பதை அவதானித்தேன்.

இந்நாட்டில் ஒரு இனவழியாட்சி நடைபெற்று வருவதை நான் அவதானித்தேன்.

இந்நிலையில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தும், மற்றும் வெளிக் கொண்டுவரும் ஒரு களமாக தமிழ் பொது வேட்பாளர் நிலையை நாம் மாற்றலாம். முக்கியமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது மக்கள் தீர்ப்பை சர்வதேச வழி நடத்தல் ஊடாகப்பெற எத்தனிக்கின்றார்கள் என்ற கருத்தை ஊரறிய நாடறிய உலகறிய பறை சாற்ற தமிழ் பொது வேட்பாளர் உதவி புரிவார். வடகிழக்கு தமிழ் மக்களின் மனோநிலை என்ன என்பதை வெளிக் கொண்டு வர மக்கள் தீர்ப்பானது உதவும். அதனை சர்வதேசம் நடத்த வேண்டும் என்ற கருத்தை வெளிக் கொண்டுவர தமிழ் பொது வேட்பாளர் உதவுவார்.

அவருக்குத் தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களிப்பதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலை எம்சார்பில் திசை மாற்றலாம். சிங்கள வேட்பாளர்கள் எவ்வெந்தக் கருத்துக்களை மக்கள் முன்வைத்தாலும் தமிழ் மக்களின் கருத்துக்கள், அபிலாசைகள், குறிக்கோள்கள், எதிர்பார்ப்புக்கள் இவை தான் என்ற கொள்கை விளக்க அறிவிப்பை உலகறியச் செய்யலாம். எமது கொள்கை விளக்க உரைகள் தமிழ் மக்கள் பரந்து வாழும் நாடுகளில் எல்லாம் ஒளி, ஒலி மூலமாக எதிரொலிக்கும். வடகிழக்கினுள் சிறைபட்டிருக்கும் எமது சிந்தனைகள் உலகெங்கிலும் சிதறடித்துப் பறக்க தமிழ் பொது வேட்பாளர் உதவி புரிவார்.

தமிழ் பொது வேட்பாளர் தேர்தலில் வெல்ல போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை. போட்டி முடிவு அவருக்கு முக்கியமல்ல. போட்டியில் கலந்து கொண்டு மக்களை ஒன்றிணைப்பதே அவரின் கடமையாகும். இன்னாரை ஒரு பொது வேட்பாளராகத் தமிழர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற உண்மையே சிங்கள வேட்பாளர்கள் தமிழர்களுக்கு எது எதனைத் தருவார்கள் என்ற அவர்களின் உள்ளக் கிடக்கைகளை வெளிக் கொண்டு வர உதவும். அவற்றை வைத்துப் பேரம்பேச நாம் முனையக்கூடாது.

அவர்களின் இரட்டை வேடம் வெளிக்கொண்டுவரப்படலாம். ஆனால் பொதுவேட்பாளரின் பங்கு யாவர்க்கும் எமது நிலைப்பாட்டையும் எதிர்பார்ப்புக்களையும் இந்தத் தேர்தலைத் தளமாக வைத்துத் தெரியப்படுத்துதலேயாகும்.

எமக்கு பிரிவினையோ சமஷ்டி கிடைக்கும் வரையில் அல்லது எமது பிரதேசங்கள் பிறிதொரு நாட்டின் ஆட்சிக்குக் கீழ் வரும் வரையில் என்றும் இருக்கும். அப்படி வந்தாலும் நாம் அங்கும் சமஷ்டியையே கேட்போம். பொது வேட்பாளரை நிறுத்துவதால் எமது சமஷ்டி கோரிக்கை அடிபட்டுப் போகும் என்பது சுமந்திரனின் சட்டத்தரணி மூளையில் உதித்திருக்கும் ஒரு கற்பனைப்பிராந்தி.

உண்மையில் எமது நிலையை இன்னும் ஸ்திரப்படுத்தி எம்மை சமஷ்டியை நோக்கி எடுத்துச் செல்ல வல்லதே தமிழ் பொது வேட்பாளர் என்ற பதவிநிலை. வட கிழக்கு மக்களின் மக்கள் தீர்ப்பைப் பெற சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என்று கோருவது எவ்வாறு சமஷ்டியை கோரிக்கையை வலுவற்றதாக்கும்?

நாம் சமஷ்டியைக் கோரி தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தவில்லையே! நாம் எமது குறைகளை, நிலைகளை, நிர்ப்பந்தங்களை அகில உலகிற்கும் எடுத்துரைக்க உள்ளோம். “சமஷ்டியை தா” என்று தமிழ் பொது வேட்பாளர் கேட்கப் போவதாக யார் சுமந்திரனுக்குக் கூறினார்களோ நான் அறியேன்.

அடுத்து அவர் அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளே இதனை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம் என்றுள்ளார்.

ஒரு சமூகத்தின் சமூக சேவையாளர்கள் , செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகளுக்கு வாக்குகள் வழங்கும் மக்களிடையே இருந்து வருகின்றவர்கள். அவர்கள் அன்னியர்கள் அல்ல. சுமந்திரன் மனதிலே ஒரு தப்பபிப்பிராயம் குடிகொண்டுள்ளது. ஒருவர் எப்பாடுபட்டாவது பாராளுமன்ற உறுப்பினராக வந்தால் அதன் பின் மக்களுக்குப் பேச இடமில்லை என்று நினைக்கின்றார்.

சுமந்திர அக்கருத்துப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வென்றுவிட்டால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு தான் தோன்றித்தனமாய் நடந்து கொள்ளலாம் என்பதேயாகும்.

இன்று மக்களும் தமிழ் அரசியல்த் தலைவர்களும் சேர்ந்தே பொது தமிழ் வேட்பாளரை முன்நிறுத்த முன் வந்துள்ளார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. மத்திய அரசில் பதவி வகிக்கும் ஒருவருக்கு ஒத்திசைக்க எண்ணி தமது மக்களைப் புறக்கணிக்க முன்வருவோரை தமிழ்ச் சமூகம் மன்னிக்காது. மக்கள் சார்பில் இந்த செயற்பாட்டில் ஈடுபடுவதாக இருந்தால் சுமந்திரன் எம்முடன் சேர்ந்து பயணிக்கட்டும். இல்லையேல் ஒதுங்கியிருக்கட்டும். சிங்கள வேட்பாளர்கள் நலன் கருதி தமிழ் மக்களின் நலன்களை விற்காது இருக்குமாறு அன்புடன் அவரைக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

Posted in Uncategorized

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர்

இந்தியாவில் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றிருந்தார். இந்தியா என்பது எமது பெரிய அண்ணன். எனவே, அந்நாட்டுடன் நெருக்கமான உறவைப் பேண வேண்டியது அவசியம்.

இந்தியப் பிரதமர் விரைவில் இலங்கை வரவுள்ளார். திகதி விவரம் இன்னும் உறுதியாகவில்லை. ஆகஸ்ட் மாதமளவில் வருவார் என எதிர்பார்க்கின்றோம்.

ஏனைய அயல் நாடுகளைவிடவும் இலங்கை தொடர்பில் இந்தியா கூடுதல் கரிசனையைக் கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணிலுக்கு வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பும், மோடியின் அணுகுமுறையும் இதற்குச் சான்றாகும்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ரணில்தான் என்பது இந்தியப் பிரதமர் மோடிக்கும் தெரிந்துள்ளது.” – என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு தமிழ் பொது அமைப்புகள் தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் இன்று தீர்மானித்துள்ளனர்

குறித்த ஒன்று கூடல் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தலமையில் காலை 11:10 மணியளவில் வவுனியாவில் ரயில் வீதியில் அமைந்துள்ள RH விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது.

இதில் முதல் நிகழ்வாக ஆய்வாளர் நிலாந்தனின் அறிமுக உரையை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு உரையடல் இடம்பெற்றது.

இதில் உரையாடலை அகத்தியர் அடிகளார், திருகோணமலை வண. ஆயர் நொயல் இமானுவேல் வேலன் சுவாமிகள் உட்பட 48 சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வணக்கத்திற்க்கு உரிய மத தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பொது வேட்பாளர் விடயத்தை குழப்ப பலர் சதி – ரெலோ யாழ்.பொறுப்பாளர் சபா.குகதாஸ் குற்றச்சாட்டு

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பில் தாயக புலம்பெயர் தமிழர்களிடையே ஆதரவு பெருகி வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு பல தரப்பின் நிகழ்ச்சி நிரல்களில் தமிழ்த் தரப்பில் சிலர் சதி முயற்சியில் இறங்கியுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளருமான சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரசுடன் இணைந்துள்ள தமிழ் முகவர்கள் வழமை போன்று அரசுக்கு சார்பாக பொது வேட்பாளர் விவகாரத்தை விமர்சிப்பதை தாண்டி தமிழ்த் தேசியக் கட்சிகளில் இருப்பவர்களும் வேறு சிலரும் மறைமுக அரசின் மற்றும் வெளிச் சக்திகளின் முகவர்களாக மாறி எதிரான கருத்துக்களை ஊடகப் பரப்பில் முன்வைத்து வருகின்றனர்.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்து பொது வேட்பாளர் விடயத்தில் ராஜபக்சக்கள் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டார். இவரைப் போன்று ஒரு சிலர் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களிடையே ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு முன்பாக உரியவர்களின் அனுமதி இன்றி வேட்பாளர்களின் பெயர்களை அறிவிப்பது போன்ற சதிகளில் குதித்துள்ளனர்.

தமிழர் தரப்பு எவ்வகையான தீர்மானங்களையும் எடுத்தாலும் அதனை தென்னிலங்கையில் சிங்கள பேரினவாதம் இனவாதமாக மற்றும் பிரிவினைவாதமாக பார்க்கும் என்பதற்காக ஒற்றுமையாக வெளிப்படுத்தும் ஐனநாயக முடிவை அதற்கான சந்தர்ப்பத்தை தவற விட முடியாது. விமர்சனங்கள், சதிகளை கடந்து அனைவரும் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கில் பெரும்பான்மை பெறக்கூடியவரை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்க வேண்டும் – ஸ்ரீநேசன்

வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும் தமிழ் பேசுகின்ற மக்களின் விருப்புக்களைப் பெற்ற 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் (Gnanamuthu Sreenesan) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) செட்டிபாளையத்தில் உள்ள இல்லத்தில் நேற்று (16.04.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சரியாகவும் நிதானமாகவும் முடிவெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சிவில் சமூகமும், புத்திஜீவிகளும், இந்த தேர்தலை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்கின்றார்கள்.

இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்துள்ளன. ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டு 46 ஆண்டுகள் கடந்திருக்கின்றன, யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடக்கும் நிலமை காணப்படுகின்றது.

30 வருடகாலமாக ஆயுதரீதியாகப் போராடினார்கள். பலநாடுகளின் யுக்திகளின் மூலமாக அந்த போராட்டமும் மௌனிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை.

இராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இந்தியாவின் (India) நிர்ப்பந்தத்தின் மூலம் 1987ஆம் ஆண்டு மாகாணசபை முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த மாகாணசபையிலும் கூட இலங்கை இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு இல்லை.

மாகாணசபை தேர்தல் நிறுத்தப்பட்டு 6 வருடங்களாகின்றன. மயிலத்தமடு மேய்ச்சல்தரைப் பிரச்சினையைக்கூட மாகாணசபை முறையால் தீர்க்கப்படாமலுள்ளன.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக்கப்படல் வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குக்கூட 13ஆவது திருத்ததின் மூலம் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு தீர்க்க முடியவில்லை. 1987ஆம் ஆண்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமை எமக்குத் தீர்வாக அமையவில்லை.

தற்போதைய நிலையில 3 ஜனாதிபதி வேட்பாளர்கள் முகம் காட்டுகின்றார்கள். நான் 13ஆவது திருத்தத்தையோ, சமஸ்ட்டியைத் தருவேன் என்றோ கூறமாட்டேன் என அனுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayaka) தெரிவிக்கின்றார். 13ஆவது திருத்தச் சட்டத்தை தரலாம் என சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவிக்கின்றார் ஆனாலும் சிங்கள பேரினவாதம் குறுக்கிடுகின்றபோது பொலிஸ் அதிகாரத்தை அவரும் தரக்கூடிய வாய்ப்பு இல்லை.

தமிழர் ஒருவரை பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று கூறுகின்றவர்கள், ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடாக என்ன தீர்வைத் தருவார்கள்? அவ்வாறு தரக்கூடியவர்கள் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும்.

மகாணசபை, உள்ளுராட்சிமன்றம் போன்ற தேர்தல்கள் இன்னும் நடாத்தப்படவில்லை. எனவே மக்கள் தங்களது பிரதிநிதிகளைக்கூட தெரிவு செய்ய முடியாத ஜனநாயக முறை இங்கு காணப்படுகின்றது. தேர்தல் தொடர்பில் சுயவிருப்பு வெறுப்புக்களைப் பார்த்துக் கொண்டிருக்கினார்கள்.

மேலும், நாடு வங்குறோத்து நிலையில் உள்ள இக்காலகட்டத்தில் உலக நாடுகளிலிருந்து கடன்பெற்று ஆங்காங்கே சில அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன.

கச்சதீவை இந்தியா மீள பெறவேண்டும் என எழுந்துள்ள சர்சையானது இலங்கையின் இறைமைக்கு ஓர் சவால் விடுகின்ற விடயமாகவும் கடற்அறாழிலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுகின்றதாகவும் அமைந்துள்ளது.

இது இந்திய தேர்தலுக்காக கொள்ளப்படுகின்ற உத்தியாகவே பார்க்கப்படுகின்றது. அந்நாட்டில் தேர்தல் முடிவுற்றதும் இவ்விடயம் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு விஜயதாச ராஜபக்ஷவிடம் கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுப்பதாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ்ப் பொதுவேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற(09) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கை கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பரப்புரைகளை ஆரம்பித்துவிட்டன. சிறிலங்கா பொது ஜன பெரமுன சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்கவுள்ள நிலையில், பிரதான போட்டியாளர்களின் எண்ணிக்கை 4 ஆக மாறியுள்ளது.

இவர்கள் யாரும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேசக்கூடியவர்கள் இல்லை. அதைத்தொடுவதற்கும் அவர்கள் தயாராக இல்லை. போர் முடிவடைந்து 14ஆண்டுகளாக நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றோம். இதனை மாற்றியமைக்கவேண்டும்.

தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதை சிங்களச் சமூகத்துக்கு வலியுறுத்தும் நோக்கமாக, அதேபோன்று இங்குள்ள இராஜதந்திரிகளுக்கு வலியுறுத்தும் வகையிலும் தமிழ் மக்களுக்கு ஒரு நியா யமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை வெளிக்கொணரும் முகமாக நாங்கள் ஒரு பொது தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய எல்லாக் கட்சிக ளும் இணைந்து பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தவேண்டும் என்ற பேச்சுகள் கடந்த 6 மாத காலமாகப் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த 7ஆம் திகதி வவுனியாவில் நடந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி யில் அங்கம் வகிக்கும் 4 கட்சிகளும் அதற்கான முன் முயற்சிகளில் அனைத்தையும் நாங்கள் கூட்டாக எடுப்பது என்று தீர்மானித்துள்ளோம்.

ஒரு பொது வேட்பாளருடைய தேவையை இந்த ஐந்து கட்சிகளும் வலியுறுத்தும் வகையில் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவது தொடர்பிலான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

இதுவரை யார் பொது வேட்பாளர் என்பது பிரேரிக்கப்பட வில்லை. ஆனாலும், மதங்களைக் கடந்து வடக்கு – கிழக்கைப் பிரதிநிதித் துவப்படுத்தும் ஒருவரே போட்டியிடுவார். மலையகம் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

அவர்களுடனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சம்மதித்தால் அவர்களுடனும் பேச நாம் தயார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ் வரன் ஏற்கனவே தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படவேண்டும் என்பதில் அவர் உடன்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தவரை முக்கியமான தலைவர்கள் எமது நிலைப்பாட்டுக்கு ஆதரவாக உள்ளனர்.

அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மாத்திரமே இதற்கு எதிராக உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கத் தயார் – சம்பிக்க

பரந்துபட்ட அரசியல் கூட்டணியொன்று எதிர்காலத்தில் மலரவுள்ளதாகவும், அதன்மூலம் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்குமாறு கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்பதற்கு நான் தயார்” என்றும், ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஜனாதிபதித் தேர்தல்தான் தற்போது நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு எவராவது முற்பட்டால் அது வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தால் தாக்கம் செலுத்தும்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பை எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் செய்தாக வேண்டும். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்குமாறு எனக்கு இன்னும் கோரிக்கை விடுக்கப்படவில்லை.

எதிர்காலத்தில் பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தக் கூட்டணி கோரிக்கை விடுத்தால் பொதுவேட்பாளராகக் களமிறங்கத் தயார்” என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் யார்? தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா என்பது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அரசியல் அமைப்பின் பிரகாரம் இவ்வருடம் பழைய முறையிலோ அல்லது புதிய ப முறையிலோ தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.

இவ்வாறான நிலையில் தென் இலங்கையில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா அல்லது தமிழ் தேசியக் கட்சிகள் சார்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா என்பது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

தமிழ் கட்சிகளைச் சேர்ந்த சிலர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களிடம் வாக்குகள் வழங்குமாறு கோருவது என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கோருவதால் தென் இலங்கையில் செயல்படுகின்ற இனவாத சக்திகளுக்கு சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சாதகமாக அமைந்து விடும் என சில தமிழ் தரப்பினர்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

இவ்வாறு இரு பக்கவாதங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒரே நிலைப் பாட்டில் செயற்படுகின்ற தமிழ் கட்சிகள் மக்களின் எதிர்கால அரசியல் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சக தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி – திலித் ஜயவீர

இலங்கையில் பாரிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் உறுதியளித்துள்ளார்.

மகிழ்ச்சியான உலகை உருவாக்கும் தொழில் முனைவோர் அரசாங்கத்தை கட்டியெழுப்பும் இந்த மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் சனிக்கிழமை (17) நடைபெற்றது. கடந்த சில மாதங்களில் பல மாவட்ட மாநாடுகள் நடைபெற்ற போதிலும் , இந்த மாநாட்டுக்கு அதிக சனத்திரள் காணப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

“நான் அரசியலுக்கு வர எதிர்பார்த்தவன் அல்ல . தயக்கத்துடன் ஆனால் விருப்பத்துடன், காலகாலமாக அரசியல் ஓட்டத்தைப் பொறுத்து நாங்கள் வெவ்வேறு நபர்களை ஆதரித்தோம். ஆனால் இப்போது உங்களுக்காக, நாட்டிற்காக, இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன். நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் முன்பு பல தரப்புகளை ஆதரித்தோம். அது வேறொன்றுமில்லை. என்றாவது ஒரு நாள் இந்த அன்பான இலங்கையை கட்டியெழுப்பலாம், வளர்ந்த நாடாக மாற்றலாம் என்ற ஆசைதான் அது .

ஆனால் இலங்கையில் தீர்க்கமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தற்போது மவ்பிம ஜனதா கட்சி மற்றும் அந்த அமைப்பின் இளையோர் மூத்த தலைவர்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். இந்த நாடு இப்போது மிகவும் சோர்வாக இருப்பதாக உணர்கிறோம். மிகவும் கடினம். 75 வருடங்களாக இந்த நாடு கொள்கை இல்லாத அரசியல் செய்து வருகிறது என்பது உங்களுக்கு மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. உங்கள் அனைவரின் வாழ்விலும் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும் புரட்சிகரமான மாற்றம் இந்த நாட்டிற்கு தேவை. நாங்கள் செய்த முக்கிய தவறு என்னவென்றால், நாங்கள் எப்போதும் மற்றொரு அரசாங்கத்தை கவிழ்க்க புதிய அரசாங்கங்களை கொண்டு வந்தோம். அல்லது வேறொரு அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எமது பணியாக இருந்தது. ஆனால் உலகில் உள்ள அனைத்து வளர்ந்த நாடுகளும் பயன்படுத்தும் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு திட்டத்துடன் நாங்கள் வருகிறோம்.அது நாட்டையும் உங்களையும் முன்னோக்கி நகர்த்தும் வாழ்க்கையை உருவாக்குகிறது என்ற கருத்துடன் நாங்கள் வருகிறோம். இந்த நாடு பின்னடைந்து நிற்கும் நாடு அல்ல. இது ஒரு விஞ்ஞான மற்றும் நடைமுறை திட்டமாகும், இது உங்கள் வாழ்க்கையின் முன்னேற்ற நிலையை இது விரைவாக மேம்படுத்தும்.

இந்த நாட்டின் அனைத்து படைப்பாற்றல் மிக்கவர்களும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். எங்களிடம் எப்போதும் இருந்த தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் படைப்பாற்றலுடன் முன்னேற்றத்திற்கான பயணத்தை இலங்கையர்களாகிய நாங்கள் மேற்கொள்ள வேண்டும். துக்கம் அனுசரிக்க புலம்புவதற்காக நாங்கள் மக்களை ஒன்று சேர்க்கவில்லை. புலம்பல்களை கேட்கவோ அல்லது சோற்றை சுவைக்கவோ மக்கள் நம்மைச் சுற்றி கூடுவதில்லை. இது உங்கள் வாழ்க்கையை மாற்றும் திகதிகளுடன் திட்டமிடப்பட்ட அட்டவணை. அந்த நடைமுறையில் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறீர்கள். கொழும்பில் உள்ளவர்களைப் போன்று, நிற, கட்சி, மத, இன வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களும் இத்திட்டத்தில் இணைவார்கள் என நம்புகிறோம். மறுக்க முடியாத வெற்றியுடன் இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே வகையான மற்றும் கெளரவமான தீர்வு இதுதான் என்பதை இன்றைய இந்த நிகழ்ச்சி நிரூபிக்கிறது. சரியான நேரத்தில் அதை உங்களுக்கு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இது முன்னேறக் கூடிய நாடு, எழுச்சி பெறவும், முன்னின்று நடத்தவும் காத்திருக்கும் இளம் தலைமுறையைக் கொண்ட நாடு. இவர்கள் அனைவருக்கும் தலைமை தாங்கி நாட்டை கட்டியெழுப்பும் பணிக்கு நாம் தயாராக உள்ளோம். சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது எந்த நிறத்தில் யார் வந்தாலும், வெறுப்பை விதைத்தால், இந்த நாடு பின்னோக்கிச் செல்லும். வெறுப்பை விதைக்கும் அனைவரையும் நேசிக்கும் கட்சி நாங்கள் என்று கூறிக்கொள்ள விரும்புகிறோம். நாங்கள் தூய்மையான இதயம் கொண்ட கட்சி. வெறுப்பு அரசியல் செய்து இந்த நாட்டை அழிப்பதை நிறுத்துங்கள். உங்கள் வெறுப்புக்கு அன்புடன் பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த நாட்டின் மவ்பிம ஜனதா கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் இந்த நாட்டின் அப்பாவி மக்களை ஏமாற்றிய கட்சிகள், உங்கள் கண்ணீரை ஒரு சதத்திற்கு கூட கணக்கில் எண்ணாத கட்சிகள், அதனால் தான் உங்களுக்காக சரியான நிலையில் அவர்கள் நிற்கவில்லை. இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான சரியான பாதையை அவர்கள் ஏற்படுத்தவில்லை.

எங்கள் அணுகுமுறையைப் பாருங்கள். நாங்கள் இந்த பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன் அர்த்தம் இந்த இருநூற்றி இருபத்தைந்தும் வேண்டாம் என்பதல்ல. அவர்கள் சேரக்கூடிய இடம் இருந்தால், எங்கள் கொள்கையுடன் உடன்பட்டால் அவர்கள் எங்களது வரிசையில் சேரலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் எப்படி ஒன்றாக பயணிக்கலாம் என்று பார்ப்போம். நாம் மற்ற பாரம்பரிய அரசியல் கட்சிகளை ஆதரிக்கிறோம் என்பதல்ல நண்பர்களே. எங்களுக்கு அத்தகைய நம்பிக்கை இல்லை. இத்திட்டம் நமது தாய்நாட்டை மாற்றும் திட்டமாகும். பின்னர் யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் நேர்மையான இதயத்துடன் மட்டுமே அவர்கள் எங்களுடன் சேர வேண்டும்.

அரகலய போராட்டத்தின் போது எங்களுடன் இருக்கும் இளைஞர்கள், வலிமையான, படைப்பாற்றல் மிக்க, துணிச்சலான பலரை நான் அறிந்துகொண்டேன். நான் நேர்மையாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பற்றி பேசுகிறேன், அரசியல் காரணங்களுக்காக அங்கு வந்தவர்களை அல்ல. சிகப்பு, இளஞ்சிவப்பு கட்சிகளின் அரசியல் தேவைகளுக்காக மக்கள் நலமற்ற சமூக ஊடக கலாச்சாரத்தில் இருந்து வெளியே வந்து, மகிழ்ச்சியான தேசத்தை உருவாக்கவும், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டை உருவாக்கவும் பிரார்த்தனை செய்வோம்.இல்லையெனில் எதிர்மறை சிந்தனை மூலமும் மக்களின் மரணத்தை விரும்பி கருத்துகளை வெளியிடுவதன் மூலமும் இந்த இளைஞர்களுக்கு கொண்டு செல்லப்படுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது இந்த நாடு முன்னேறுவதற்கான வழி அல்ல.

Posted in Uncategorized