பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் , நீண்ட கால உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான திட்டங்கள் மற்றும் நல்லிணக்கச் செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன , ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜாவிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் உதவி நிர்வாகியும், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (03) அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தினார். இதன் போது கன்னி விக்னராஜா சமூக அரசியல் அபிவிருத்திக்கான இலங்கையின் திட்டங்கள் குறித்து பாராட்டு தெரிவித்தார். ‘இலங்கை சரியான திசையில் மீள்வதை நாங்கள் பாராட்டுகிறோம்,’ என்று தெரிவித்த அவர், தமது தொடர்ச்சியான உதவியையும் உறுதிப்படுத்தினார்.
இதன் போது கன்னி விக்னராஜா அண்மையில் உதவிச் செயலாளர் நாயகமாக பதவி உயர்வுபெற்றமைக்காக பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பேண்தகு அபிவிருத்தி இலக்குகள், பசுமைப் பொருளாதாரம், சமூக ஒற்றுமை மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக அவர் பிரதமரை சந்தித்தார்.
பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான திட்டங்கள் குறித்து பிரதமர் அவருக்கு விளக்கியதுடன், நல்லிணக்கச் செயற்பாட்டின் முன்னேற்றம் பற்றியும் விளக்கினார். பெரும்பாலான கைதிகள் விடுவிக்கப்பட்டு, கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விவசாய மற்றும் கடற்றொழில் வாழ்வாதாரங்கள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, நாட்டின் முன்னுரிமைகள் பற்றிய சிறந்த விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதும் இலங்கைக்கு உதவுவதற்கான புதிய வழிகள் குறித்து ஆராய்வதும் குறிப்பாக சமூக பொருளாதார மீட்சிக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்த பின்தொடரலில் கவனம் செலுத்துவதுமே தனது நோக்கம் என குறிப்பிட்டார்.