உள்ளூராட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கிய இடைக்கால ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா தமிழர் பேரவை இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு, இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படும் கூட்டாட்சிக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு நீண்ட கால அரசியல் தீர்வு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலையிடத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணத்திலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவணத்தில், இலங்கை அரசாங்கம் சர்வதேச நியமங்களை அலட்சியப்படுத்துவதையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு இணங்காத தன்மையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதால் இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சிய அரசாங்கங்கள் அமெரிக்காவுடன் இணைந்து நீதி, சமத்துவம், சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகள், பேச்சுவார்த்தை மூலம் நீண்ட கால அரசியல் தீர்வு உட்பட பல சட்ட ரீதியான தீர்வுகளை மேற்கொள்ள முன்முயற்சிகளை எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும்.
பொறுப்புக்கூறல் விடயத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இலங்கை தொடர்பில் எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியின் மையமாக இருக்க வேண்டும்.
14 ஆண்டுகளுக்குப் பிறகும் தாய்மார்கள், மனைவிகள் மற்றும் குழந்தைகள் தங்கள் காணாமல் போன உறவினரின் கதி என்னவென்று தெரியாமல் தங்கள் மகன், மகள், கணவன், தந்தை அல்லது தாயை தேடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய நீதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும், நீதி வழங்குவதற்கும், மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் ஒரு சர்வதேச சுயாதீன குற்றவியல் நீதி பொறிமுறையை அமைக்க வேண்டும்.
இடைக்கால நடவடிக்கையாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் 1948ஆம் ஆண்டு முதல் சிறிலங்கா அரசாங்கத்தால் ஒருபோதும் அபிவிருத்தி செய்யப்படவில்லை. தற்போது உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், உள்கட்டமைப்பை புனரமைக்கவும் போதுமான சட்ட, நீதி மற்றும் நிர்வாக அதிகாரங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கிய இடைக்கால ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்த விடயத்தில், 1987ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இலங்கையில் இனப்பிரச்சினைக்கான பரிகாரமாக இந்திய ஒன்றியத்தில் காணப்படுவதை போன்றதொரு பிராந்திய சுயாட்சி அல்லது அரை கூட்டாட்சி மாதிரியை முன்வைத்தது. அந்த மாதிரியின் உள்நோக்கமும் நோக்கமும் இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த மாகாண சபை சட்டமூலங்களில் மிகவும் நீர்த்துப்போனது.
சட்டமூலத்தில் உள்ள அற்ப அதிகாரங்கள் கூட மாகாண சபைகளுக்கு முழுமையாக பகிர்ந்தளிக்கப்படவில்லை. நிறைவேற்று அதிகாரங்கள் தெரிவு செய்யப்பட்ட சபைக்கு வழங்கப்படாமல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு வழங்கப்படுகின்றன. கவுன்சிலுக்கு நிதி அதிகாரங்கள் எதுவும் இல்லை மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. தற்போதைய காலகட்டத்தில் மேற்படி மாதிரியானது தேவைக்கு பொருந்தாது என்பதால் இது சரியான முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
நீண்ட கால அரசியல் தீர்வாக இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படும் கூட்டாட்சிக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு நீண்ட கால அரசியல் தீர்வு, இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் நடுவர் மன்றத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன், பொருளாதார ஒருங்கிணைப்புக்காக தமிழ்நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்பு, வடக்கு, கிழக்கு தமிழர்கள் மற்றும் மலையகத்தின் பொருளாதார ஒருங்கிணைப்பு துரித கதியில் நடைபெற வேண்டும். யாழ்ப்பாண விமான நிலையத்தை உண்மையான சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் தற்போதைய இணைப்புத் திட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, மத்திய கிழக்கு, தூர கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமான சேவைகளுடன் இணைக்கப்பட வேண்டும்.
மேலும், சென்னை, காரைக்கால் மற்றும் காங்கேசன்துறை இடையே கப்பல் சேவையை மேம்படுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வகையில் தலைமன்னாருக்கும் தனுஸ்கோடிக்கும் இடையில் தரைவழிப் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.