யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் கைது

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் யாழ். பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இம்மானுவேல் ஆர்னோல்ட் சென்றபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவரென தெரிய வருகின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற்றியமைக்கு எதிராக வழக்குத் தாக்கல்

நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குறித்த வழக்கை இன்றையதினம் (03) தாக்கல் செய்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் யாழ் மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற பணித்ததுடன் அதனை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்துள்தார்.

குறித்த விடயத்தை கைவிடக்கோரி யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 28 பேரின் கையொப்பத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மகஜரொன்றும் யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபனால் கையளிக்கப்பட்டநிலையில் தற்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

யாழ் நாவலர் மண்டபத்தை கலாசார திணைக்களத்திடம் ஒப்படைத்தார் ஆளுநர்

யாழ் நல்லூர் நாவலர் மண்டபத்தின் செயற்பாடுகள் எவ்வித இடையூறும் இன்றி புனிதத் தன்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்து சமயம் மற்றும் கலாச்சார திணைக்கப் பணிப்பாளர் அனிருதனனுக்கு எழுத்து மூலமான நிபந்தனைகளுடன் பணிப்புரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,

இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சமய மற்றும் ஆன்மீக நடவடிக்கைகள் நாவலர் கலாசாரத்தில் எவ்வித இடையூறும் இன்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் பின்வரும் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நாவலர் மண்டபத்தின் சமய மற்றும் ஆன்மிக நடவடிக்கைகளுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமே முழுப் பொறுப்பாக இருக்க வேண்டும்.

நாவலர் கலாசார மண்டபம் புனிதமாக பாதுகாக்கப்படுவதோடு நடவடிக்கைகளுக்காக மாகாண கலாச்சார திணைக்களத்துடன் ஒத்துழைத்தல். நாவலர் நினைவுப் பொது நூலகத்தை யாழ்ப்பாண மாநகர சபையால் பராமரிக்க முடிவதோடு அதற்கான நியாயப்படுத்தல்கள் மற்றும் தொடர்வதற்கு ஒப்புதலை பெறுவதோடு பொறுப்பு வாய்ந்த இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து மாநகரசபையை வெளியேற ஆளுநர் உத்தரவு

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டத்திலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மாநகர சபையினை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் நாவலர் மண்டபம் யாழ் மாநகர சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் கீளுள்ள இந்து கலாசார அமைச்சு குறித்த மண்டபத்தினை தங்களிடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்த போது அது பல தடவைகள் யாழ்.மாநகர சபை அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது 45 மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் குறித்த விடயம் நிராகரிக்கப்பட்டதுடன் எக்காரணம் கொண்டும் மத்திய அரசாங்கத்திடம் அதனைக் கையளிக்க மாட்டோம் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிற்பாடு இந்து கலாசார அமைச்சும் யாழ்.மாநகர சபையும் இணைந்து குறித்த மண்டபத்தினை நிர்வகிப்பது தொடாடர்பில் இந்து கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட வரைபு தொடர்பாக சபையில் விவாதிக்கப்பட்டு உறுப்பினார்களினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் இந்து கலாசார அமைச்சுக்கு அறிவித்து அதனை நிர்வகிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

யாழ்.மாநகர சபையின் முதல்வராக வி. மணிவண்ணன்; பணிபுரிந்த காலத்தில் குறித்த மண்டபம் தனியார் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டது அத்துடன் சைவமகா சபையின் அனுசரணையுடன் யாழ்.மாநகர சபை ஆறுமுகநாவலரின் சிலையினையும் நிறுவியிருந்தது.

அத்துடன் குறித்த மண்டபத்தினை புனரமைப்பதற்கு இந்து கலாசார அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி யாழ்.மாநகர சபையின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டு யாழ்.மாநகர சபையினால் கோள்விகோரப்பட்டு குறித்த பணிகள் யாழ்.மாநகர சபையினாலேயே மேற்கொள்ளப்பட்டது.

தற்போது உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதிக்கு முன்னர் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வெளியேறுமாறும் அதன் பிற்பாடு இந்து கலாசார அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகர சபைக்கே; பதில் முதல்வர் ஈசனிடம் இந்திய துணைத்தூதுவர் வாக்குறுதி

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலைய கட்டிடத்தொகுதி யாழ் மாநகர சபைக்கே வழங்கப்படுமென இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தன்னிடம் வாக்குறுதியளித்ததாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாநகர பதில் முதல்வர் துரைராஜா ஈசன் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றங்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் நேற்றைய தினம் இந்திய துணைத்தூதரகத்தில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அரை மணிநேரத்துக்கு மேலாக சந்தித்து கலந்துரையாடி குறித்த வாக்குறுதியை பெற்றேன் என்றார்.

குறித்த சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்தபோதே பிரதி முதல்வர் து.ஈசன் இதனை தெரிவித்தார்.

குறித்த விளக்கத்தில், கலைகள் கலாசாரம் திட்டமிட்டு அழிக்கப்படும்போது யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையம் போன்ற கட்டிடத்தொகுதி யாழ் மாநகர சபையின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்றார்.

யாழ். மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலத்துக்குப் புதிய இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. எனினும் கூட்டத்ததுக்குத் தேவையான நிறைவெண் இல்லாத காரணத்தால் கூட்டம் 10:30 மணிக்கு ஆரம்பமாகும் என்று உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு உறுப்பினர்கள் சிலர் சபா மண்டபத்தினுள் வராமல், பார்வையாளர் பகுதியில் அமரந்திருந்தனர். ஈ. பி. டி. பி உறுப்பினர்கள் சபா மண்டபத்துக்கு வெளியே உறுப்பினர் அறையில் அமர்ந்திருந்தனர்.

உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தபடி மீண்டும் 10:30 மணிக்குக் கூட்டம் ஆரம்பமாகிய நேரத்தில் 19 உறுப்பினர்கள் மட்டுமே சபா மண்டபத்தினுள் பிரசன்னமாகியிருந்தனர். இந்நிலையில், கூட்டத்துக்கான நிறைவெண் இல்லாத காரணத்தால் இன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் கூட்டத்தை ஒத்திவைத்தார்.

முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட், கடந்த 28 ஆம் திகதி சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பிலும் அது பெரும்பான்மை இல்லாமல் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாகப் பதவி இழந்திருந்தார். அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் இன்று 10 ஆம் திகதி வெள்ளிக் கிழமை கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் ஒரு உறுப்பினர் உயிரோடு இல்லாத காரணத்தினால், மீதமுள்ள 44 உறுப்பினர்களில் 22 பேர் கூட்டத்துக்கு வந்தால் மட்டுமே கூட்டத்தை நடாத்தி, புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்ய முடியும்.

புதிய முதல்வர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான சொலமன் சூ. சிறிலை நியமிப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பிரேரிக்கவுள்ளதாகக் கடந்த வாரம் கட்சி முடிவு செய்திருப்பதாக அதன் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா அறிவித்திருந்தார்.

இன்றைய கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் 9 பேரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 3 பேரும், ஐக்கிய தேசியக் கடசியின் உறுப்பினர்கள் 2 பேரும், ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் ஒவ்வொரு உறுப்பினர்களுமாக 19 பேர் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

விரைவில் யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வர் தெரிவு

யாழ். மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

2022 டிசம்பர் மாதம், யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பின் முதலாவது சமர்ப்பிப்பில் அங்கீகரிக்கப்படாததன் காரணமாக முன்னாள் முதல்வரும், சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து, கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற முதல்வர் தெரிவில் இ.ஆனோல்ட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவரது நியமனம் குறித்த கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் தனது 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது சமர்ப்பிப்பிப்பைக் கடந்த 14 ஆம் திகதி நடாத்தியிருந்தார். அந்த  பாதீடு சமர்ப்பிப்பு உறுப்பினர்களுக்கிடையிலான வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது.

அதன் பின் பாதீட்டின் இரண்டாவது வாக்கெடுப்பு  கடந்த மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்றது. அந்த வாக்கெடுப்பிலும் ஆனோல்ட் சமர்ப்பித்த பாதீடு 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார்.

நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக் காலம் 2022 மார்ச் மாதம் 18 ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையில், உள்ளூராட்சி சபைகள் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி மேலும் ஒரு வருட காலத்துக்கு – எதிர்வரும் மார்ச் 19 வரை நீடிக்கப்பட்டிருந்தன. இந்த நீடிப்பின் படி, எதிர்வரும் மார்ச் 19 வரை சபை நடவடிக்கைகளைக் கொண்டு நடத்துவதற்காகப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காகவே தேர்தல் நடாத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் நாட்டிலுள்ள 340 உள்ளூராட்சி சபைகளின் ஆயுட் காலம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பது பற்றி அமைச்சரவை மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது. உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோக பூர்வ பதவிக் காலத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

யாழ் மாநகரசபை பாதீடு மீண்டும் தோல்வி

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் வரவு செலவு திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் முன் மொழியப்பட்டது.

இதற்கு சபையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது , வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் ஒருவர் நடுநிலைமை வகித்திருந்தார்.

முதல்வர் ஆர்னோல்டினால் , 2023ஆம் ஆண்டிற்கான பாதீடு கடந்த 13ஆம் திகதி முன் மொழியப்பட்ட போது , அது தோற்கடிக்கப்பட்டது அதன் பின்னர் அவர் மீண்டும் இரண்டாவது தடவையாக இன்று சமர்ப்பித்த பாதீடும் தேற்கடிக்கப்பட்டமையினால் அவர் பதவி இழந்துள்ளதுடன் மாநகர சபையின் செயற்பாடுகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் மீண்டும் தோற்கடிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30 மணியளவில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றைய வாக்களிப்பில் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக 24 வாக்குகளும், ஆதரவாக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் சிகிச்சை பயணின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளானதில், தலைக் கவசம் கழன்றமையினால் தலையில் பலத்த காயத்திற்கு இலக்காகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.