தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் தாய்க் கட்சி தாங்கள்தான் என்று சொல்லும் தமிழரசுக் கட்சியினர், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று (01.02.24) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சிகள், ஒன்றாக பயணிக்க வேண்டிய காலம் இதுவாகும். 2009 இற்கு முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமான ஒரு அரசியல் இருந்தது.
நாங்கள் ஆயுத ரீதியாகவும். அரசியல் ரீதியாகவும் பலமாக இருந்தோம். 2009 இற்குப் பின்பு ஆயுத ரீதியாக நாங்கள் செயற்பட முடியாத நிலை இருந்து கொண்டிருக்கும் இந்நிலையில் மிகவும் பலமாக இருக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக்காலகட்டத்தில் சிதைந்து பல்வேறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து 2004 ஆம் அண்டிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கியமான கட்சியாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தமிழரசுக் கட்சி தனியாக தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்றார்கள்.
அப்போது கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும், ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, மற்றும் தமிழ் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து பதிவு செய்யப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.
2009 இங்குப் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிதைவடைவதற்குக் காரணமும் கூட அக்கூட்டமைப்பை பதிவு செய்யாததுதான். இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே ஒரு குழப்ப நிலை உருவாகியிருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.
அக்கட்சியின் தலைவர்கூட வரலாற்றிலே வாக்களிப்பின் மூலம் தெரிவாகியிருக்கின்றார். செயலாளர் மற்றும் ஏனைய நிர்வாகங்களுக்கான தெரிவுகள் கூட நடைபெற்றிருக்கின்றது ஆனால் அது ஒழுங்காக நடைபெறவில்லை என ஒருசாரார் சொல்கின்றார்கள்.
இந்த நிலையில் ஒன்றை தமிழரசுக் கட்சி உணரவேண்டும். தாங்கள் தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் கட்சி தாங்கள்தான் தாய்க் கட்சி என்று சொல்பவர்கள், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும்.
அக்கட்சிக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள்கூட 2009 இற்கு முன்பு இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.