வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாணசபை முறைமையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிவரும் அதே கருத்தினை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கஜேந்திரகுமார் அணியினரும் கூறுவது வேடிக்கையானது.
வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளபோதிலும் தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தினை முழுமையான அமுல்படுத்தி அதனை ஒரு முதல்படியாக கொண்டு தீர்வு நோக்கிய செயற்பாட்டினை முன்கொண்டு செல்ல முடியும்.
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் செயற்படுவோம்.
அவர்களின் குரல்களுக்கு நாங்களும் மதிப்பளித்து வடக்கு கிழக்கு தமிழர்கள் ஹர்த்தாலை அனுஸ்டிப்போம்.
இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதை நாங்கள் விரும்புகின்றோம் என்ற வகையில் இந்திய பிரதமர் தனது பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியுள்ளார்.
அந்த வகையில் அனைத்து கட்சியினரையும் அழைத்து ஜனாதிபதி மகாநாடு ஒன்றை நடாத்தியுள்ளார். அதன் ஊடாக அமைச்சரவை உபகுழுவினை நியமித்துள்ளார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படையில் சமையல்காரராக இருந்த சரத் வீரசேகர மனநோயாளியாகி விட்டார்.எமது மக்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல இனவாதம் கக்குவதை சரத் வீரசேகர தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் எமது மக்கள் கிளர்தெழுவார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்ட மூல விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஒரு மனநோயாளி .அவர் கடற்படையில் சமையல்காரராகத்தான் இருந்துள்ளார்.
போர்க்காலத்தில் தொடர்ந்தும் அவரை சமையலறையில் வைத்திருந்ததன் காரணமாக ஒரு மனநோயாளி போல் தற்போது செயற்படுகின்றார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இடமளிக்க போவதில்லை என்கிறார்
அதே போல் சமஸ்டியை வழங்க முடியாது என்கின்றார். குருந்தூர் மலையில் தமிழர் வழிபாடுகளை நடத்த முடியாது என்கின்றார்.
இவ்வாறு சொல்வதற்கு இவர் யார்?எந்த அடிப்படையில் இவர் இவ்வாறு பேசுகின்றார் ? இருக்கு ஆதரவாக இருப்போர் யார்? இவரின் கருத்துக்கள் அரசியல் சாசனத்தையும்,அரசியமைப்பையும் எதிர்ப்பவையாகவே உள்ளன.
இப்போது பார்த்தால் கனடா உயர்ஸ்தானிகரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்கின்றார். அமெரிக்க தூதுவரை மிக மோசமாக சாடுகின்றார்.
இந்தியாவையும் அவர் சாடுகின்றார். வெளிநாடுகளின் நிதியை பெற்று சாப்பிட்டு வயிறு வளர்த்துக்கொண்டிருக்கும் சரத் வீரசேகர எங்களது நியாயமான உரிமைகள் நாங்கள் கோருகின்ற போது அதனை அவர் எந்த அடிப்படையில் எதிர்க்கின்றார்?
அதனால்தான் அவர் ஒரு மனநோயாளி என நாங்கள் கூறுகின்றோம்.அவரின் கருத்துக்களை இங்கு யாரும் எதிர்க்கவில்லை.
சரத் வீரசேகர மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார். அவரின் கட்சித்தலைமை அவரை அடக்கி வைத்திருக்க வேண்டும். அத்துடன் அவரை இந்த சபையிலிருந்து நீக்க வேண்டும்.
எமது மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல. போராடியவர்கள் குண்டுகளைத் தாங்கியவர்கள்.விடுதலை வேட்கை கொண்டவர்கள்.
தமிழினத்தை சீண்ட வேண்டாமென சரத் வீரசேகரவை எச்சரிக்கின்றோம். உங்களின் தடிப்பு கதைகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். எமது மக்கள் தொடர்ந்தும் மௌனமாக இருக்க மாட்டார்கள் தொடர்ந்தும் சரத் வீரசேகர இனவாதம் கக்கினால் எமது மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என சரத் வீரசேகரவுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
மடியில் கனம் இருப்பதால் கமால் குணரட்ன பிதற்றுகிறார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
தற்போதைய பாதுகாப்பு செயலரும் இறுதிப் போரின் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஓய்வு நிலை இராணுவத் தளபதியும் ஆன கமால் குணரட்ன ஊடக அறிக்கையில் எதற்கு எடுத்தாலும் தமிழ் அரசியல்வாதிகள் சிறுபிள்ளைத் தனமாக சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்கிறார்கள் என பிதட்டியுள்ளார்.
கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் நடந்தால் இறுதிப் போரில் முக்கிய தளபதியாக வன்னிப் போர்க்களத்தில் நின்ற கமால் குணரட்ன மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்ற பயத்தினால் உளற ஆரம்பித்துள்ளார்
தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அரச படைகளினாலும் ஆட்சியாளர்களினாலும் மேற் கொள்ளப்பட்ட மேற் கொள்ளப்படுகின்ற அநீதிக்கு ஆட்சியாளர்களினால் நீதி கிடைத்த வரலாறு இருக்கிறதா? நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பை மதித்து நடந்த சந்தர்ப்பம் உண்டா? உண்மையை கண்டறியும் ஆணைக்குழுக்களின் மூலம் நீதி கிடைத்ததா ? இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள் நாட்டில் நீதி கிடைக்கும் என நம்ப தயார் இல்லை முழுமையான நம்பிக்கையை இழந்த பின்னர் சர்வதேச நீதியை கோரி உள்ளனர்.
இறுதிப் போரில் அரச படைகள் மேற் கொண்ட யுத்தக் குற்றங்கள் இனப்படுகொலைகள் யாவற்றுக்கும் பக்கச் சார்ப்ற்ற விசாரணை நடப்பதாக இருந்தால் கமால் குணரட்ன உற்பட்ட குழுவினர் போர்க்குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளதால் பிதட்டுகிறார் பாதுகாப்பு செயலாளர்.
ஏப்பிரல் 21 படுகொலைக்கு கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் கதவினை தட்டினார் என்பதை குறுகிய காலத்தில் கமால் மறந்து விட்டாரா? கர்தினால் உள் நாட்டில் நீதி கிடைக்காமையால் தான் சர்வதேசத்தின் கதவுகளை திறந்து நீதியை பெற்றுத் தருமாறு கேட்டார் என்பதை உலகமே அறியும் கமாலின் கருத்தை பார்த்தால் கர்தினாலும் சிறுபிள்ளைத் தனமாகவா நடக்கிறார்? இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் இன்று வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட இச்சங்கமானது மாவட்ட ரீதியில் போராளிகளால் அணுகக் கூடிய வகையில் அலுவலகங்களைத் திறக்கவுள்ளது.
இதன் ஒரு அங்கமாக வவுனியா அலுவலகத்தை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று திறந்து வைத்தார்
இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் போராளி மறைந்த சிவகுமாரன், விடுதலைப்புலிகளின் அரசியல் பெறுப்பாளர் தமிழ் செல்வன், அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் அரசியல் கைதியான அரவிந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், முன்னாள் போராளிகள், எழுத்தாளர் மேழிக்குமரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொக்கு தொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழி ஆய்வாராய்ச்சியானது, மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அதற்கான சாட்சியங்களை திரட்டுகின்ற பொறிமுறையின் அடிப்படையில் அதன் பிரதிநிதிகள் முன்பாக இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழிகள் அகழ்வு ஊடாக பல மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது கடந்த காலத்தில் குற்றச்சாட்டப்பட்ட வகையிலே யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற பல விடயங்களிற்கு சாட்சியமாக விளங்குகின்றது.
மனித உரிமை பேரவையில், மனித உரிமை உயர்தானிகராலும் இந்த யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்களிற்கான சாட்சியங்களை பதிவு செய்கின்ற ஒரு பொறிமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த அகழ்வாராய்ச்சி என்பது மனித உரிமை உயர்தானிகர் அல்லது ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதிகள் முன்பாகவும் இந்த சாட்சியங்களிற்கான அலுவலகம் திறக்கப்பட்டு இதற்கான உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாரிய நிதி ஒதுக்கீட்டினையும் ஐ.நா செய்துள்ளது.
ஆகவே அவர்களையும் வைத்துக்கொண்டு இந்த அகழ்வாராச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலமே, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்தவர்களின் தோண்டியெடுக்கப்படும் மனித புதைகுழிகளின் விபரங்களை சரியான முறையில் பதிவு செய்ய முடியும்.
குறிப்பாக கொக்குத் தொடுவாய் என்பது தமிழ் மக்கள் பூர்விகமாக வாழ்ந்த இடம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடம் என்பது மட்டுமன்றி யுத்தத்திற்கு முன்னரே அங்குள்ள தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதும், கிராமங்கள் அழைக்கப்பட்டதும் என்று பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்த விடயங்களை சர்வதேச பிரதிநிதிகள் மாத்திரமன்றி குறிப்பாக ஐ.நாவினுடைய மனித உரிமை உயர்தானிகருடைய அல்லது மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அதற்கான சாட்சியங்களை திரட்டுகின்ற பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிநிதிகள் அல்லது அலுவலர்கள் முன்னாலே இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.
சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் கஷ்டப்பட வேண்டாம். வவுனியா மக்கள் வேண்டாம் என்றால் திருப்பி அனுப்புறோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் சீனித் தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் – சீனித் தொழிற்சாலை தொடர்பில் 4வது தடவையாக அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை.
நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் இன்னும் தமது கருத்துக்களை சொல்லவில்லை. ஆனால் பலர் அதில் பெரிதும் விருப்பம் தெரிவிக்கவில்லை . சிங்கள குடியேற்றம் வரும் எனவும், சீனா முதலீடு எனவும் கூறுகிறார்கள்.
எம்மைப் பொறுத்த வரை தமிழீழ விடுதலை இயக்கம் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம்.
இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சீனா முதலீட்டை எதிர்ப்போம். நாம் ஒரு போராட்ட இயக்கம். நிச்சயமாக சிங்கள குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.
சீனித் தொழிற்சாலை முறையாக நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், வவுனியா மக்களோ அல்லது வவுனியாவில் உள்ள அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கருத்து சொல்லவில்லை.
வவுனியாவிற்கு வரும் முதலீடு என்ற அடிப்படையில் எங்களது மக்களின் கருத்துக்களையும், இங்குள்ள அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரது கருத்துக்களையும் பெற்ற பின் தான் இங்கு கொண்டு வருவதா இல்லையா என முடிவெடுப்போம்.
ஆகவே, தயவு செய்து யாரும் தேவையில்லமால் தலையிட வேண்டாம். சீனித் தொழிற்சாலையால் சிங்கள குடியேற்றம் வரும். சீனா வரும் என நிரூப்பிக்க முடிந்தால் நிரூப்பிக்கவும்.
இந்த தொழிற்சாலை தாய்லாந்து நிறுவனத்தின் முதலீடு. இதில் தமிழீழ விடுதலை இயக்கம் எந்தப் பங்காளியும் இல்லை. இது தென்னிலங்கைக்கு செல்வதற்கான வாய்ப்பை தடுத்து நிறுத்தி வடக்கிற்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியே. இதற்கான பங்காளிகளாக நாம் இருக்கப் போவதில்லை.
முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாட்டு பங்காளர் இல்லை. மக்களின் நலன், விவசாயிகளின் நலன் என்பன பற்றி கவனம் செலுத்தி வவுனியா மக்களோடு கலந்தாலோசித்து எமது கருத்தை சொல்ல தெரிவிக்கின்றோம்.
வவுனியா மக்கள் விரும்பவில்லை என்றால் சிங்கள இடத்திற்கு போகட்டும். மக்கள் அபிப்பிராயம் பெற்று தான் நாம் முடிவெடுப்போம்.
எங்களைப் பொறுத்த வரை எமது தேசத்தில் முதலீடுகள் நடைபெற வேண்டும். ஆகவே இதில் முதலீட்டை பார்ப்பதை விட்டுவிட்டு கனவுகளோடு பார்க்க வேண்டாம். ஆதாரம் இல்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.
வவுனியா மக்கள் ஆதரவு தந்தால் கொண்டு வர முயற்சி செய்வோம். அவர்கள் வேண்டாம் என்றாம் திருப்பி அனுப்புவோம். தமிழீழ விடுதலை இயக்கம் முதலீட்டை கொண்டு வர முயற்சிக்கின்றது என்பதற்காக சிலர் இதை எதிர்க்கிறார்கள். இது எங்களது ஒரு முயற்சி அவ்வளவு தான். இதை பற்றி யாரும் கவலை பட தேவையில்லை என தெரிவித்தார்.
தமிழர் தாயகம் முழுவதும் சிங்கள அரச படைகளினால் கொன்றெழிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் உடலங்களின் எச்சங்களே புதைகுழிகளாக காணப்படுகின்றன என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட ஊடகங்களுக்கு அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நூற்றுக்கணக்கான சந்தர்ப்பங்களில் பல்வேறு தேவைகளுக்கு அகழ்வுகள் மேற் கொள்ளப்பட்ட போது அதற்கான தடையங்கள் பெருமளவில் கிடைத்துள்ளன.
ஆனால் அவையாவும் உரிய நீதி இன்றி மறைக்கப்பட்டு காலம் கடத்தப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.
கடந்தகாலத்தில் மன்னாரில் இரண்டு பாரிய புதைகுழிகளில் தோண்டத் தோண்ட எலுப்புக் கூடுகள் வந்தன ஒன்று திருக்கேதீஸ்வர வீதியில் நீர்க்குழாய் அமைப்பதற்கான அகழ்வில் அப்பகுதிக்கு அருகில் யுத்தகாலத்தில் இராணுவம் இருந்து முகாமிக்கு அருகில் உரிய ஆய்வுகள் இல்லாமல் மறைக்கப்பட்டது இண்டாவது சதொச கட்டட அமைப்பதற்கான அகழ்வில் நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டன அவற்றை ஆங்கிலேயர் காலத்தவை என கதை முடித்தனர்.
தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது ஆனால் இதற்கான நீதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கள அரசாங்கததால் வழங்கப்படமாட்டாது.
எனவே தமிழர் தாயகத்தில் குறிப்பாக சிறிலங்காவில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பௌத்த சிங்கள அரசாங்கத்தால் நீதி கிடைக்க ஒரு போதும் வாய்ப்பு இல்லை அவ்வாறு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் மூன்றாம் தரப்பு மந்தியஸ்தம் அல்லது மேற்பார்வை மூலமே சாத்தியப்படும் இதனால் தாயக புலம்பெயர் அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக மூன்றாம் தரப்பு மேற்பார்வையை உள்ளீர்க்க வலுவான இராஐதந்திர நடவடிக்கைகளை தொடர்ந்து கையாள வேண்டும். அதுவே புதைகுழி விவகாரம் மட்டுமல்ல அரசியல் தீர்வுக்கும் வழியைத் திறக்கும் – என குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பௌத்த மேலாதிக்கம் தீவிரமடைந்துள்ளது. தென்னிலங்கையில் ஆதிக்கம் கொள்வதற்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாதத்தை பேசி திரிகிறார்கள்.
இவர்களை அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரத்தில் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ள நிலையில் அதற்கு அப்பாற்பட்ட வகையில் பௌத்த மேலாதிக்கம் செயற்படுவதால் நீதி கட்டமைப்பின் மீது சந்தேகம் எழுந்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோரதராதலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஐக்கிய நாடுகள் மனித53 ஆவது மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகின்றது.மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளரின் உரையில் இலங்கை தொடர்ந்தும் பொறுப்பு கூறலை உறுதிப்படுத்தாமல் தண்டனையில் இருந்து விடுபடும் போக்கு முடிவுக்கு கொண்டுவரப்படாமல், அலட்சியமாக செயற்படுகிறது என்று சுட்டிக்காட்டி கண்டித்துத்துள்ளதை தமிழ் மக்கள் சார்பில் வரவேற்கிறோம்.
சர்வதேச விசாரணை பொறிமுறை விடயத்தில் தொடர்ந்தும் இலங்கை ஏமாற்றுமாக இருந்தால் அந்த பொறிக்குள் இந்த அரசாங்கம் அகப்படுவதை தடுக்க முடியாது என்பதனையும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். ஐ .நா மனித உரிமைகள் ஆணையகம் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகளை நிறைவேற்றாது இலங்கை இருக்குமாக இருந்தால் அதற்கான தண்டனை நிச்சயமாக கிடைக்கும். அதற்கு நாங்கள் பக்க பலமாக இருப்போம் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி அதற்கு பதிலளிக்கையில் இங்கே அனைத்தும் சுமுகமாக நடைபெறுகின்றது என்றும் இராணுவத்தினரிடம் இருக்கும் காணிகளில் 98 வீதம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.. ஆனால் வன்னியில் 98 வீதமான காணிகள் இன்னும் இராணுவத்திடமே இருக்கின்றன.
சிறியளவிலான காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை மக்கள் இன்னும் மீளவும் குடியேறாது தவித்துக்கொண்டுள்ளனர். அரச படைகள் தேசிய பாதுகாப்பு என்ற ஒற்றை வசனத்தில் அங்கே இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
ஜனாதிபதி உரையாற்றும் போது பொய்களையே கூறுகின்றார். அதேபோன்று ஜெனிவாவில் உள்ள இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியும் பொய்களையே கூறுகின்றார். எவ்வாறாயினும் மனித உரிமைகள் ஆணையகத்தையோ, சர்வதேச சமூகத்தை எந்த வகையிலும் ஏமாற்ற முடியாது என்பதனை கூறுகின்றேன்.
ஜனாதிபதி அடிக்கடி உரையாற்றுகின்றார். ஆனால் அவர் கூறுபவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அரசியல் தீர்வு விடயத்தில் கடந்த சித்திரைக்கு முன்னர் தீர்வு எட்டப்படும் என்று கூறினார். ஆனால் இன்னும் அது நடைபெறவில்லை. நல்லாட்சி காலத்தில் இருந்து பிரதமராக இருக்கும் போதிருந்து கூறுகின்றார். ஒவ்வொரு தைப்பொங்கல்,தீபாவளி, புத்தாண்டில் தீர்வு என்று பொய் சொல்லி ஏமாற்றுகின்றார்.
தமிழ் மக்களுக்கென நிலையான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாதுள்ள நிலைமையில் இனவாதம் பேசி பௌத்த பிக்குகளுக்கு அப்பால் இந்த பாராளுமன்றத்தில் உள்ள உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றோர் தொடர்ச்சியாக இனவாத சிந்தனையுடன் பௌத்த மேலாதிக்கத்தை இந்த நாட்டில் மேலோங்க செய்ய திட்டமிட்ட வகையில் அவர்கள் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.
அரசாங்கத்தினால் அந்த இனவாத குரல்களுக்கு எதிராக செயற்படவோ, அதனை அடக்கவோ முடியாத நிலைமையே இருக்கின்றது.தொடர்ச்சியாக இவர்கள் போன்றோர் இனவாதத்தை மக்கள் மத்தியில் கக்கிக்கொண்டிருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி குருந்தூர் மலையில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் முறையிட்டும் எங்களுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது.
தொடர்ச்சியாக இந்த நிலைமை நீடிக்கப்படுமாக இருந்தால், வன்னி மாவட்டத்தில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தப்படுமாக இருந்தால், இது சிங்களவர்களுக்கு உரியது பௌத்த பூமி தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டுமேயானது என்பதனை நிறுவுவதற்காக திட்டமிடும் போது அங்கே மிகப்பெரிய இன முரண்பாட்டை வளர்ப்பதற்கு வழியேற்படுத்தப்படுகின்றது என்பதனை சுட்டிக்காட்டுகின்றேன்.
நாங்கள் நீதிமன்றத்தை நம்புகின்றோம், அதனை நாடியுள்ளோம். ஆனால் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாறாக பௌத்த மேலாதிக்கம் உயர்ந்து நிற்பதனால் நீதிமன்றங்கள் தேவையா? அதனூடாக நீதி கிடைக்குமா? என்ற நிலைமை உள்ளது என்றார்.
தமிழர்களின் தொல்லியல்களை சிங்கள பௌத்தமாக மாற்றியமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தனது அரச இயந்திரத்தை சர்வாதிகாரமாக வழி நடாத்தி தமிழர்களின் இருப்பை அழிக்க பல முனைகளிலும் கங்கணம் கட்டி நிற்கின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வியாழக்கிழமை (22) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
இலங்கைத்தீவில் ஆரம்பத்தில் அனுராதபுரத்தை ஆண்ட முத்துசிவன் மன்னனின் மகன் தீசன் (தேவநம்பியதீசன்) என்கிற தமிழ் மன்னன் காலத்தில் தான் பௌத்தம் கொண்டுவரப்பட்டது என்ற உண்மையை மகாவம்சத்தின் பாளி மொழியிலான மூலப் பிரதி கூறியுள்ளதை மறைத்து உண்மையான தமிழ்ப் பௌத்த தொல்லியல் அடையாளங்களை சிங்கள பௌத்தமாக மாற்றும் எதேச்சதிகார நடவடிக்கைகளையே பேரினவாத ஆட்சியாளர்களும் தொடரந்து மேற் கொள்கின்றனர்.
தீசன் என்ற பெயரை திஸ்ஸ என சிங்களத்தில் பிற்காலத்தில் மாற்றியது போலவே அனுராதபுரத்தில் இருந்து வடகிழக்கு மாகாணங்கள் முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்ட போது சைவ ஆலயங்களுடன் தமிழ் பௌத்தமும் பரவி இருந்தது அவ்வாறான தொன்மைகளை தற்போது சிங்கள ஆட்சியாளர்கள் சிங்கள பௌத்தமாக மாற்றியமைக்கும் செயற்பாடு தமிழின அழிப்புக்கு வலுச் சேர்க்கும் பாரிய ஆபத்தாக தமிழர் தாயகத்தில் மாறியுள்ளது.
குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட செயற்பாடு சட்டத்திற்கு முரணானது என்பதை நீதிமன்ற தடையே மிகப் பெரும் ஆதாரம் அதனை மீறி இராணுவத்தை முழுமையாக பயன்படுத்தி நீதிமன்றத்தை அவமதித்து விகாரையை கட்டி முடித்து இராணுவம் அமைத்ததாக பெயர்ப் பலகை இடப்பட்டுள்ளது என்றால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு நடைபெறும் அடக்கு முறைகளுக்கு மிகப் பெரும் ஆதாரம் ஐனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் அரச சர்வாதிகாரம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நெல் விலை நிர்ணயத்தில், அரிசி ஆலை உரிமையாளர்கள் அழுத்தம் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாது ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை அரசாங்கம் கவனத்திலெடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு தொடர்பான இன்றைய (20) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
தோடர்ந்து உரை நிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் ஜனா,
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வரவு செலவுத்திட்டம் மூலமாக ஒதுக்கப்படும் நிதிகள் ஒதுக்கப்படாமல் நாங்கள் எந்தவித அபிவிருத்தி வேலைகளையும் எமது மக்களுக்குச் செய்யமுடியாத சூழ்நிலையில் இருந்து கொண்டு இந்த வரவு செலவுத்திட்ட அலுவலகம் சம்பந்தமான விவாதத்தில் எப்படிப் பங்கு பெறலாம் என்று யோசிக்கின்றேன்.
இருந்தாலும் எனது மாவட்ட மக்கள் சம்பந்தமாக சில விடயங்களையும்; இந்த விவாதத்தில் எடுத்துரைக்கலாம் என்று நினைக்கிறேன்.
முதலாவதாக கடந்த 28.05.2023 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தவேந்திரன் மதுசிகன் என்ற 20 வயது மாணவண் இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரையான 30 கிலோமீற்றர் கடலை நீந்திக் கடந்திருக்கின்றார். ஒரு சாதனை புரிந்திருக்கின்றார். அதுவும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் கடலில் பிளாஸ்ரிக் கழிவுகள் அதிகரிப்பதனால் ஏற்படும் பின்விளைவுகளையும், பின்விளைவுகளைத் தடுப்பதற்கும் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகா, சிறுவயதில தற்கொலைக்குச் செல்லாத மனோநிலையை வலுப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் சாதனைகளை நிறைவேற்ற வேண்டும என்ற சிந்தனையுடன் செயற்பட்டால் இவ்வாறான விடயங்களிலிருந்து விடுபடலாம் என்ற விழிப்புணர்வுகளுக்காக இந்த சாதனையைப் புரிந்துள்ளார். அந்தவகையில் இந்தப் பாராளுமன்றத்தின் ஊடாக அந்த மாணவனுக்கு பாராட்டுக்களைச் தெரிவிக்கவேண்டிய கடமையிலிருக்கின்றேன்.
அது மாத்திரமல்ல இன்றைய விவாதத்தின் ஆராம்பத்திலே 27/2 கேள்வியின் மூலமாக இந்தச் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஒரு கூற்றை முன்வைத்திருந்தார். உண்மையிலேயே விவசாயிகள் சார்பாக நான் அவருக்கு பாராட்டுத் தெரிவிக்கிறேன். இன்று மட்டக்களப்ப மாவட்டம் மாத்திரமல்ல அம்பாரை போன்ற பிரதேசங்களிலும் நெல் அறுவடை ஆரம்பித்து விட்டது;. ஆனால் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அவர்களுடைய நெல்லை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பது மாத்திரமல்லாமல் நெல்லுக்குரிய சரியான விலையைக் கூட இந்த அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.
இன்றைய 27/2 கீழான கேள்விக்குக் கூட விவசாய அமைச்சர் அவர்கள் சரியான பதிலைக் கூறாமல் தாங்கள் கூடி முடிவெடுத்து அறிவிப்பதாகக் கூறியிருக்கின்றானர். இன்றைய பொருளாதார நிலைமையில் அரசாங்க விதை உற்பத்திப் பண்ணைகளில் கூட விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு கிலோ நெல்லை 95 ரூபாவுக்கு விற்ற பண்ணைகள், இன்று ஒரு கிலோ நெல்லை 200 ரூபாவுக்கு விற்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றது. ஏனென்றால் அதற்குரிய உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றனர்.
உண்மையில் உற்பத்திச் செலவு அதிகரிப்பதாக இருந்தால் அரசாங்க விதை உற்பத்திகளுக்கு மாத்திரமல்ல ஏழை விவசாயிகளுக்கும் அந்த உற்பத்திச் செலவு அதிகரித்திருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நெல்வயல் செய்கை பண்ணுவதற்கு ஒரு லட்சத்து 25ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவு செய்யும் போது இன்றைய நெல்லின் விலை 75- 80ரூபாவுக்கு மேல் தாண்டவில்லை. எனவே இந்த அரசாங்கம் ஆகக்குறைந்தது நெல்லின் விலையை 120ரூபாவுக்காவது நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாகப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே அவர்கள் அவர்களுடைய நெருக்கடியிலிருந்து மீள்வார்கள். ஒரு கிலோ அரிசி 200 ரூபாவுக்கு விற்கப்படுகின்ற நிலையில். அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லின் விலையை நிர்ணயிக்க முடியாது. அத்துடன் அரிசி ஆலை உரிமையாளர்கள் விலை நிர்ணயத்தில் அழுத்தம் கொடுக்கின்றார்கள். அரசாங்கம், அவர்களது ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாது ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கவனத்திலெடுக்க வேண்டும் என்பதுடன் அதற்காக பாடுபட வேண்டும்.
அத்துடன் கடந்த சில வாரங்களாக அதிபர் சேவைக்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. ஆந்த அதிபர் சேவை போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் போது பல்கலைக்கழகப் பட்டம் அத்துடன் பட்டப் பின் கல்வி டிப்ளோமா இருக்க வேண்டும் அத்துடன் 5 வருட சேவைக்காலமும் இருக்க வேண்டும் அதைவிடுத்து கல்வியியல் கல்லூரி முடித்தவர்களுக்கு 6 வருட சேவை அனுபவம் இருந்தால் அதற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற சுற்றறிக்கை இருந்தது. ஆனால் அந்த கல்வி டிப்ளோமா பட்டம், பட்டப்பின் டிப்ளோமா, விஷேட தேவைகள் சார் பட்ட பின் கல்வி டிப்ளோமா பெற்றவர்கள் அந்தப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தாலும் நேர்முகப் பரீட்சையில் அவர்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது மிகவும் துரதிஸ்டவசமானது. இலங்கை அதிபர் சேவை தரம் III ல் ஆட்சேர்ப்பு செய்வதற்காக பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இதில் சேவை நிபந்தனை பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான வர்த்தமானிப் பத்திரிகை அறிவித்தல் 2018.10.19 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதில் சேவை நிபந்தனை பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் இலக்கம் 1885/31 மற்றும் 2014.10.22 ஆம் திகதி கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கும், அப்பிரமாணக்குறிப்பில் இதற்குப் பின்னர் மேற்கொள்ளும் திருத்தங்களுக்கும், அரச சேவையின் நியமனங்களை நிர்வகிக்கும் பொது நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரி இலங்கை அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கு நியமிக்கப்படுவார்”
இந்த நியமனமானது 2023யிலேயே வழங்கப்படவுள்ளது. எனவே பரீட்சை ஏலவே நடைபெற்றிருப்பினும், 2023இற்கு முன்னர் அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அமையவே நியமனம் வழங்கப்படல் வேண்டும் என்பது நியதியாகும். இதன் அடிப்படையில் 2255/55 ஆம் இலக்க 2021.11.26 ஆம் திகதிய அதி விஷேட வர்த்தமானி பத்திரிகையில் வெளியாகிய இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் 4ஆவது திருத்தத்தின் படி விசேட தேவைகள் சார் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் அமுல்படுத்தப்படும் திகதி குறிப்பிடப்படாமையினால் இது 2014 ஆம் ஆண்டிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது நியதியாகும்.
மேலும் 2010 இல் விஷேட தேவைகள் சார் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவானது சாதாரண பட்டப்பின் கல்வி டிப்ளோமாவிற்கு சமமானது என கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையும் குறிப்பிடுகின்றது. மேலும் திறந்த பல்கலைக்கழக உபவேந்தரினாலும் இது தெட்டத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடாத்தி, அதன் அடிப்படையில் அவர்களையும் இலங்கை அதிபர் சேவைக்கு உள்வாங்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.