நவம்பர் 13 பாராளுமன்றில் பட்ஜெட் சமர்ப்பிப்பு

2024 ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகள் மீதான விவாதம், 26 நாட்களுக்கு இம்முறை நடைபெறவுள்ளது. வரவுசெலவுத்திட்ட உரை நவம்பர் 13 திங்கட்கிழமை மதியம் 12  மணிக்கு நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவினால்   நிகழ்த்தப்படும்

அதற்கு முன்னர்,  பாராளுமன்றம் நவம்பர் 7 முதல் 10 வரை கூடும் என  பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடிய போதே இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.

 வரவுசெலவுத்திட்ட விவாதம்

எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீடு எனப்படும் ‘வரவுசெலவுத்திட்ட உரை’ பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவுள்ளது. அதன்பின்னர், நவம்பர் 14 முதல் 21 வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்ட) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், வரவுசெலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, குழுநிலை விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசெம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. அதற்கமைய, 2024 நியதியாண்டுக்கான வரவு-செலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசெம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை விவாதம் இடம்பெறவுள்ளதுடன், வாக்கெடுப்பு இடம்பெறும் நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பி.ப. 6.00 மணி முதல் பி.ப. 6.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதன விவாதம் இடம்பெறும்.

2024 பட்ஜெட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜனாதிபதி ரணில்

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அத்துடன், தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வரவு – செலவுத் திட்டத்தில் 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி அரச ஊழியர்கள் நேற்று நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் குறைந்த அளவு பற்றாக்குறையை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியம்

உறுதியான வரவு செலவுத் திட்டம் மற்றும் குறைந்த அளவிலான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை ஆகியவற்றையே இலங்கையிடம் சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக ரொய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினுடைய நிகழ்நிலைச் சந்திப்பொன்று வொஷிங்டனில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பினை மேற்கோள் காண்பித்து ரொய்ட்டஸ் செய்திச் சேவை விடுத்துள்ள செய்தியில்,

இலங்கையின் வரவு,செலவுத்திட்டம் இந்த ஆண்டின் இறுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை 15 சதவீதமாகக் காணப்படுமென்ற கணிப்புக்கள் எமக்குள்ளன. அத்தோடு எதிர்வரும் ஆண்டில் வரவு,செலவுத்திட்டப் பற்றாக்குறை ஏற்படாமலிருப்பதை உறுதி செய்யவேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளது.

அத்துடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதத்தை விடவும் அதிகமான அரசாங்கத்தினது வருமானம் காணப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் வருமானப் பற்றாக்குறைக்கான இடைவெளி குறைக்கப்படும் பட்சத்தில், எஞ்சியுள்ள இடைவெளியை நிரப்புவதற்கு விரும்பும் கடன் வழங்குநர்களிடம் இருந்து அதனை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான நிலைமகள் ஏற்படும்.

இதேவேளை, இலங்கை கடந்த ஏழு தசாப்தங்களில் காண்டிருக்காத அளவிற்கு பொருளாதார நெருக்கடியினைச் சந்தித்திருந்த நிலையில் அதிலிருந்து மீள்வதற்கான சர்வதேச நாணய நிதியம் நீடிக்கப்பட்ட கடன்வசதி திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது.

இந்த நீடிக்கப்பட்ட கடன்வசதியின் இரண்டாவது தவணைக்கான கொடுப்பனவான 330 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கான ஊழியர்கள் மட்ட இணக்கப்பாட்டை சர்வதேச நாணயநிதியம் இலங்கை அரசாங்கத்துடன் எட்டிக்கொண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது

யாழ் மாநகரசபை பாதீடு மீண்டும் தோல்வி

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் வரவு செலவு திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் முன் மொழியப்பட்டது.

இதற்கு சபையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது , வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் ஒருவர் நடுநிலைமை வகித்திருந்தார்.

முதல்வர் ஆர்னோல்டினால் , 2023ஆம் ஆண்டிற்கான பாதீடு கடந்த 13ஆம் திகதி முன் மொழியப்பட்ட போது , அது தோற்கடிக்கப்பட்டது அதன் பின்னர் அவர் மீண்டும் இரண்டாவது தடவையாக இன்று சமர்ப்பித்த பாதீடும் தேற்கடிக்கப்பட்டமையினால் அவர் பதவி இழந்துள்ளதுடன் மாநகர சபையின் செயற்பாடுகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய வரவு செலவுத்திட்டத்தில் இலங்கைக்கு குறைந்தளவிலான ஒதுக்கீடு

இந்திய மத்திய அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் இலங்கைக்கு கடந்த ஆண்டைவிட குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவு திட்டத்தில் பூடான், மாலத்தீவுகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்த போதும் இலங்கைக்கு 150 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர நேபாளம், மியன்மார், மங்கோலியா, மொரிஷியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு குறைந்தளவில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து தொடர்ச்சியாக 2 வது தடவையாக 200 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று புதன்கிழமை (21) மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் பதிவாகின.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிநடப்பு செய்ததுடன் வாக்கெடுப்பு இடம்பெற்றபோது பங்கேற்கவில்லை.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன் நிறைவேறியது.

வாக்கெடுப்புக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமவிங்கவினால், 2023 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி இல்லை – ரணில்

மின்சார சபையின் நட்டத்தை போக்க மின் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி இல்லை. நாடு என்ற ரீதியில் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்கவேண்டி இருக்கின்றது. அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

நாங்கள் எப்போதும் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்க தவறியதாலே இந்த நிலையில் இருக்கின்றோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் மின் கட்டணம் அதிகரித்தது. என்றாலும் அது போதாது.  மேலும் 152 பில்லியன் நட்டம் ஒன்று ஏற்பட இருக்கின்றது. 2013 இல் இருந்து மின்சார சபையின் மொத்த நட்டம் 300 பில்லியனாகும்.

இந்த தொகையை இந்த காலப்பகுதியில் தேடிக்கொள்ளவேண்டி இருக்கின்றது. குறிப்பாக அடுத்த வருடம் நடுப்பகுதியில் வரட்சி ஏற்படலாம் அவ்வாறு ஏற்பட்டால் எமக்கு மேலதிகமாக 420 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றுது.

சாதாரண மழைவீழ்ச்சி கிடைத்தால் எமக்கு 352 பில்லியன் ரூபாவரை தேவைப்படும்.  அவ்வாறு இல்லாமல் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றால் 295 பில்லியன் ரூபா வரை தேவைப்படுகின்றது. இந்த தொகையை நாங்கள் எவ்வாறு தேடிக்கொள்வது?. இது தான் பிரச்சினை.

அத்துடன் அரசாங்கத்துக்கும் வருமானம் இல்லை. பணம் அச்சிட்டால் ரூபா வீழ்ச்சியடையும். வரி அதிகரித்தால் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும். அப்போதும் பிரச்சினைதான். அப்படியானால் கட்டணம் அதிகரிக்கப்படவேண்டும்.

இது பிரச்சினைக்குரிய விடயம் என்பதை நான் அறிவேன். மின் துண்டிப்புக்கு செல்ல முடியும். ஆனால் அடுத்து மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருப்பதால் மின் துண்டிப்பை நிறுத்தவேண்டி இருக்கின்றது. மின் கட்டணம் அதிகரிக்க யாரும் விரும்பப்போவதில்லை.

இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் சுமையும் எமக்கு தெரியும். இதனைத்தவிர எமக்கு இருக்கும் மாற்று வழி என்ன? நாங்கள் பொருளாதாரத்தை மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தாக்கிப்பிடித்துக்கொண்டு, தற்போது சீனாவுடன் கலந்துரையாடி முடிவுக்கு வரும்போது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லாம்.

நாங்கள் நட்டத்தை காட்டி வருமானத்தை காட்டாவிட்டால் வெளிநாட்டுகளிடமிருந்து உதவிகள் கிடைக்கப்போவதில்லை. அதனால் விருப்பம் இல்லாவிட்டாலும் இதனை செய்யவேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம்.

சில சந்தர்ப்பங்களில் நாங்கள் நாடு என்ற ரீதியில் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்கவேண்டி இருக்கின்றது. அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

நாங்கள் எப்போதும் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்க தவறியதாலே நாங்கள் இந்த நிலையில் இருக்கின்றோம். 2013க்கு பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படவி்ல்லை. அதற்கு நாங்கள் அனைவரும் பொறுப்பக்கூற வேண்டும். வேறு நாடுகள் கடினமான தீர்மானங்களை எடுத்தன. ஆனால் நாங்கள் அதில் இருந்து தப்பிச்சென்றோம். இப்போது என்ன செய்வது என எங்களிடம் கேட்கின்றனர்.

அத்துடன் 2001இல் நான் பிரதமராகியதுடன் ஜப்பானுடன் இருந்த நுரைச்சோலை நிலக்கறி திட்டத்தை நிறுத்தினேன். அதற்கு நிதி பிரச்சினை ஏற்படுவதால் 6மாதத்துக்கு நிறுத்தினேன். ஆனால் எமது அரசாங்கம் தோல்வியடைந்தவுடன் மீண்டும் இந்த இடத்தில்தான் அதனை போடவேண்டும் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அவர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுச்சென்றுள்ளனர். அதேபோன்று 2002இல் நாங்கள் உலக வங்கியின் உதவியை பெற்றுக்கொண்டு, மின்சக்தி தொடர்பில் எமக்கு அறிக்கை ஒன்றை தந்தார்கள். அந்த அறிக்கையை பெற்றுக்கொண்டு, தற்போது இருக்கும் மின்சாரம் தொடர்பான சட்டமூலத்தை கருஜயசூரிய கொண்டுவந்தார்.

ஆனால் நாங்கள் தேர்தலில் தோலியடைந்ததுடன் அந்த சட்டமூலத்தை செயற்படுத்தவில்லை. 2007 சட்டமூலத்தை கொண்டுவருமாறு தெரிவித்தனர். அப்போது நாங்கள எந்த மின்சார உற்பத்தி நிலையத்தையும் ஏற்படுத்தவில்லை. அதனால் அதன் பிரகாரம் செயற்பட முடியாமல் போனது.

பின்னர் 2017, 2018,2019 காலத்தில் நாங்கள் இந்தியா, ஜப்பானுடன் கலந்துரையாடி எல்..என்.ஜி. மின் உற்பத்திய நிலையங்கள் 2 பெற்றுக்கொண்டோம்.

தேர்தல் முடிந்து எமது அரசாங்கம் சென்ற பின்னர், இவர்கள் என்ன செய்தார்கள். அந்த ஒப்பந்தத்தை இரத்துச்செய்யாமல், அமெரிக்காவின் நியுபோட்ரஸுக்கு வழங்கினார்கள். அதன் பின்னர் நியுபாேட்ரஸுக்கு விருப்பம் இல்லாமல் அதனை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வழங்கினார்கள். தற்போது ஒரே பூமியில் இந்தியா, ஜப்பான், சீனா, பாக்கிஸ்தான், அமெரிக்கா அனைத்து நாடுகளும் இருக்கின்றன.

ரஷ்யா மாத்திரமே இல்லை. உலக யுத்தம் ஒன்று ஏற்படாததுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. ஒரே இடத்தை அனைத்து நாடுகளுக்கும் கொடுத்துவிட்டு தற்போது பிரச்சினையை தீர்க்குமாறு என்னிடம் தெரிவிக்கின்றனர். இறுதியில் எல்.என்.ஜியும் இல்லை எதுவும் இல்லை.

நாடாளுமன்றில் பாதீட்டு அலுவலகம் ஒன்றை நிறுவ தீர்மானம்

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைவு ஆசிரியருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கான சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்தின் போது, வரைவுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்து, வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்படி, பிரதமர் இது தொடர்பான ஆரம்ப சட்டமூலம் குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதுடன், கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் அமைச்சரவையின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்திற்கொண்டு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்ட வரைவு ஆசிரியருக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

2023 ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளிக்கவில்லை. இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கலந்துகொள்ளவில்லை.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஷ்வரன் வாக்களிப்பில் நடுநிலை வகித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை ஜனாதிபதியும், நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (நவ 14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பித்தார்.

நவம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று (22) வரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. இந்நிலையில் இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு மீதான விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடம்பெற்றது.

இந்நிலையில், இதன் மீதான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2023 ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

Posted in Uncategorized