மூன்று மாதங்களில் நாட்டின் கடன் 685. 6 கோடி டொலர்களால் உயர்வு

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் உள்நாட்டு கடன் அதிகரிப்பால் நாட்டின் மொத்த கடன் 685. 3 கோடி டொலர்களால் அதிகரித்துள்ளது என்று திறைசேரியின் பகுப்பாய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் நாட்டின் மொத்த பொதுக்கடன் 8 ஆயிரத்து 470. 3 கோடி டொலர்களில் இருந்து 9 ஆயிரத்து 156. 1 கோடி டொலர்களாக அதிகரித்துள்ளது.

கருவூல உண்டியல்கள், கருவூல பத்திரங்கள், பாதுகாப்பு அமைச்சின் கடன் கணக்கு, ஓய்வூதிய பணிக்கொடை போன்ற பல வடிவங்களில் அரசாங்கம் மேலும் கடன் வாங்கியதால் உள்நாட்டுக் கடன் கடந்த ஆண்டு டிசெம்பரில் 4 ஆயிரத்து 12 கோடி டொலர்களில் இருந்து மார்ச் மாதத்துக்குள் 4ஆயிரத்து 689 கோடி டொலர்களாக உயர்ந்தது.

இந்த ஆண்டு மார்ச் இறுதியில் அரசின் மொத்த வெளிநாட்டுக் கடன் 3 ஆயிரத்து 609 கோடி டொலர்களாக இருந்தது. முக்கிய கடனாளிகளான உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் ஆயிரம் கோடி டொலர்கள், பாரிஸ் கிளப் நாடுகளிடம் 454 கோடி டொலர்கள், பாரிஸ் கிளப் அல்லாத நாடுகளிடம் 678 கோடி டொலர்கள் மற்றும் வணிகக் கடன்கள் ஆயிரத்து 470 கோடி டொலர் கடன் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது. அத்துடன், வெளிநாட்டு கடன்களில் 70 வீதம் நிலையான வட்டி வீதத்தையும் 29 வீதம் தளம்பல் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Posted in Uncategorized

கடன் மறுசீரமைப்புக்கான அடுத்தகட்ட சமிக்ஞை எதனையும் இதுவரையில் சீனா வெளியிடவில்லை

இந்தியா, ஜப்பான் மற்றும் இறையாண்மைக் கடனாளர்களின் பாரிஸ் கிளப் ஆகியவற்றின் நிதித் தலைவர்கள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் கலந்துரையாடலுக்காக கூட்டு மாநாட்டை நடத்தியுள்ளனர்.

இந்த மாநாட்டின் ஊடாக இலங்கையின் கடன் பிரச்சினைகளை எவ்வாறு சிறந்த முறையில் கையாள்வது என்பது தொடர்பில் சீனாவிற்கும் ஏனைய கடன் வழங்குநர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

அத்துடன், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கையின் கடன் பேச்சுக்களில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இதில் சீனா பங்கேற்றிருக்கவில்லை.

‘இலங்கை இன்னும் ஆழமான கடன் நெருக்கடியில் உள்ளது.அதன் நெருக்கடியில் இருந்து இலங்கை விரைவாக வெளிவருவதற்கு விரைவான கடன் மறுசீரமைப்பு விரைவாக தேவைப்படுகிறது’ என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி நிர்வாக இயக்குனர் கென்ஜி ஒகாமுரா கூறினார்.

‘அனைத்து உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களும் பங்கேற்கும் பேச்சுவார்த்தைகள் விரைவாக முன்னேற்றம் காணும் என்று நாங்கள் நம்புகிறோம்.’ என்றும் அவர் தமது எதிர்பார்ப்பினை வெளியிட்டார்.

சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் முதல் இலங்கைக்கு கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல் கொடுப்பனவுக்கான மதிப்பாய்வின் மூலம் இரண்டாவது தவணைக்கு முன்னதாக கடன் மறுசீரமைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஒகாமுரா மேலும் கூறினார்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்குவதற்கான பரந்த வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியால் நடத்தப்பட்ட வட்டமேசைக் கலந்துரையாடலின்போது சீனாவும் முக்கிய கோரிக்கைகளில் சிலவற்றை மென்மையாக்க ஒப்புக்கொண்ட பின்னரே இந்த மாநாடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறுசீரமைப்பு விவாதங்களில் சீனா பங்கேற்க விரும்புவதாக இலங்கையின் முக்கியஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சீனா எந்தவொரு இடத்தலும் பகிரங்கமான கலந்துரையாடலுக்கு தயாரான கருத்தினை வெளியிடவில்லை.

கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மெதுவான முன்னேற்றம் காரணமாக அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை மற்றும் சாம்பியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பேச்சுவார்த்தைகளில் சீனாவின் வகிபாகம் பற்றிய கவலைகள் பொதுவாக நீடித்துக்கொண்டே இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் இலங்கை சீனாவுடன் ஒரு தனியான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்களை முன்னெடுப்பது பொருத்தமான நகர்வதாக அமையாது என்றும் இந்தச் செயற்பாடு ஏனைய கடன்வழங்குநர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார்.

‘வொஷிங்டனில் நடந்த சந்திப்புகளில், இலங்கையின் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தாங்கள் இன்னும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்’ என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் பதிவுகள் மூலம் தெரிவித்ததது.

ஆனாலும், அதற்காக அடுத்தகட்ட நகர்வுகளை சீனா எவ்விதாக முன்னெடுக்கப்போகின்றது என்பது சம்பந்தமாக எந்தவொரு சமிக்ஞையையும் சீனா வெளியிடவில்லை.

இவ்வாறான பின்னணியில் இலங்கைக்கு அண்மையில் சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் வென்க் யூபோ, பிறீமியர் சூகோ போன்ற உயர்மட்டக்குழுவினர்கள் சொற்ப இடைவெளியில் விஜயம் செய்துள்ளனர்.

ஆனால், குறித்த விஜயங்களின்போது ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அதேபோன்று இலங்கையின் கரையோர மாவட்டங்களில் உள்ள வறுமைக்கு உட்பட்வர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

ஆனால், குறித்த குழுவினர்கள் கடன் மறுசீரமைப்பு குறித்து எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. மாறாக, பொதுப்படையில், இலங்கையின் மேம்பாட்டிற்கு உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலைமையானது, சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை தற்போது வரையில் அறிந்து கொள்ள முடியாத சூழலையே ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில், அதன் மொத்த வெளிநாட்டுக்கடனில் 12சதவீதத்தினை சீனாவுக்கே செலுத்த வேண்டிய நிலைமையில் உள்ளது.

குறிப்பாக, சீனாவிடமிருந்து கடன்களைப் பெற்று நிறுவப்பட்ட மத்தல விமான நிலையம், தாமரைக்கோபுரம் போன்றன எவ்விதமான வருமானங்களையும் பெற்றுக்கொடுக்காத நிலையில் வெள்ளையானைகளாக உருவெடுத்துள்ளன.

இவ்வாறான நிலையில் சீனாவின் கடனை மீளச் செலுத்துவதற்கு இலங்கைக்கு தற்போதைய நெருக்கடியான நிலையில் வழிகளில் எதுவும் இல்லாத சூழலே நீடிக்கின்றது.

நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கை விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (புதன்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்கின்றார்.

இதன்போது இதுவரையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அவர் கலந்துரையாட உள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்

இந்த சந்திப்பில் அவர் ஜனாதிபதி, மத்திய வங்கி அதிகாரிகள், சபாநாயகர் உள்ளிட்ட மேலும் சில தரப்பினரையும் சந்திக்க உள்ளார்.

அத்துடன் ஒக்டோபரில், இலங்கை தொடர்பான முதலாவது மீளாய்வு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களையும் , சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் வழங்குவார் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு மேலும் கடன் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக 350 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கை அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கிலும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும்  வகையில் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து கவலையடைவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளது

சர்வதேச நாணயநிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளது என இந்தியவெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை செய்துள்ளது என வலியுறுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகள் வளைகுடாநாடுகள் தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய விஸ்தரிக்கப்பட்ட அயலை உருவாக்குவது குறித்து பிரதமர் மோடி அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைகழகமொன்றில் மோடியின் இந்தியா எழுச்சிபெறும் சக்தி என்ற கருப்பொருளில் உரையாற்றுகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புகளும் அண்டை நாடுகளில் இந்தியா பற்றிய பார்வையும் மாற்றமடைந்துள்ளன இலங்கையில் கடந்த வருடத்தில் என்ன இடம்பெற்ற விடயங்களை விட வேறு எதுவும் வியத்தகு விதத்தில் இதனை வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடந்த வருடம் பெரும்பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் நாங்கள் உதவினோம் எனவும் தெரிவித்துள்ள ஜெய்சங்கர் சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு உதவியதை விட நாங்கள் அதிகளவு உதவியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

உங்களில் எவரேனும் இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்டிருந்தால் இந்த உதவியால் இந்தியா குறித்து மாற்றமடைந்துள்ள கருத்தினை அவதானிக்கமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இன்று பெரிய இலட்சியம் மிக்க செல்வாக்கு மிக்க இந்தியாவிற்காக முயற்சிக்கின்றோம் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கள் அயல்களை விஸ்தரிக்க முயல்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்த விஸ்தரிக்கப்பட்ட அயல் எவ்வாறானதாகயிருக்கவேண்டும் என்பது குறித்தும் ஆராய்கின்றோம்,அது இந்து சமுத்திரத்தில் உள்ள தீவுகளாக இருக்கலாம்,தென்கிழக்காசியா வளைகுடாவில் உள்ள நாடுகளாகயிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியஅரபு இராச்சியம் சவுதிஅரேபியா ஆகிய நாடுகளுடான உறவுகள் பெருமளவு மாறியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் அயலை பற்றிய மிகவும் சுருக்கப்பட்ட பார்வையிலிருந்து நாங்கள் இலட்சியம் மிக்க பார்வையை நோக்கிமாறியுள்ளோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கிய கடனுக்கான கால அவகாசத்தை நீடித்தது பங்களாதேஷ்

இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை பங்களாதேஷ் அரசாங்கம் மேலும் நீடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 06 மாதங்களுக்கு நீடிக்க பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கடனுக்கான முதல் தவணையை ஓகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டம்பர் மாதத்திலும் செலுத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இந்த ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி, பங்களாதேஷ் மத்திய வங்கி, இலங்கைக்கு வழங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்தது.

மஹிந்த ராஜபக்சவின் பங்களாதேஷ் விஜயத்தின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டு நாணய மாற்று ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை பங்களாதேஷ் வழங்கியது.

பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ஆசிய கிளியரிங் அசோசியேஷன் பொறிமுறைக்கு வெளியே நடைபெறும் முதல் நாணய பரிமாற்றம் இதுவாகும்.

ஆசிய கிளியரிங் அசோசியேஷன் என்பது பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, ஈரான், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலதீவுகளை உள்ளடக்கிய ஒரு ஏற்பாடா குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தை இலக்கினை ஆரம்பிக்கவுள்ளது – பாரிஸ் கிளப்

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தை இலக்கினை ஆரம்பிக்கவுள்ளதாக பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், ஜப்பான், இந்திய நிதி அமைச்சர்கள் மற்றும் இலங்கையின் தலைவர், பிரதிநிதிகள், கடன் வழங்குநர்கள் என பலரும் கலந்துக்கொண்டு இந்த பேச்சுவார்த்தை தளத்தினை அமைத்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை(12.04.2023) பாரிஸ் கிளப் தெரிவித்திருந்தது.

இதற்கமைய கடன் வழங்கும் குழுக்கள் எதிர்கால கடன் நிவாரண ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் பற்றியும் பேசப்பட்டு வருகின்றது.இதேவேளை நியாயமான சுமை பகிர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் மறுசீரமைப்பின் ஒப்பீடு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க விரும்புவதாக பாரிஸ் கிளப் அறிவித்துள்ளது.

மேலும் இச்செயற்பாட்டில் பொதுத்துறை கடன் வழங்குநர்களும் வரவேற்கப்படுகிறார்கள் என பாரிஸ் கிளப் அழைப்பு விடுத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கையின் கடன் சுமையை கடன் வழங்கிய அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்

இலங்கையின் கடன் விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு சீனாவின் நிதியமைப்புகளிற்கு சீனா தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங்வென்பின் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அதன் கடன்சுமைகளை குறைப்பதற்கும் பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்கும் சர்வதேச நிதிஅமைப்புகளுடன் இணைந்து சீனா செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் நியாயமான சுமை என்ற அடிப்படையில் வர்த்தக மற்றும் பன்னாட்டு கடன்கொடுப்பனவாளர்கள் தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை ரூபாவிலான கடனை உள்ளடக்க மத்திய வங்கி விருப்பம்

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை ரூபாவிலான கடனையும் உள்ளடக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கடன் வழங்குநர்களின் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பினை பெறுவதற்கான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இதனை கருதி மத்திய வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை மத்திய வங்கியிடம் காணப்படுகின்ற திறைசேரி உண்டியல்கள் மாத்திரமே பரிசீலிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கமும் அதன் ஆலோசகர்களும் பிரதான திறைசேரி பத்திரங்களை வைத்திருப்பவர்களுடன் ஆலோசனைகளை நடத்துவார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மொத்த திறைசேரி உண்டியல் பங்குகளில் மத்திய வங்கி 62.4 சதவீதத்தை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாணய நிதியத்திடம் கடன் வாங்கி இந்தியாவிடம் பெற்ற கடனின் ஒரு பகுதியை செலுத்திய இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட கடனில் ஒரு பகுதி இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கடன் தொகையில் 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தற்போது செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட 330 மில்லியன் டொலர்கள், நிதி அமைச்சின் பிரதிச் செயலாளரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி இந்தியாவின் கடனுக்கான செலுத்தப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.