கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டுப் பிரஜையை நாடு கடத்த நடவடிக்கை

கடவுச்சீட்டு மோசடி செய்ததாக குறிப்பிடப்படும் சீன நாட்டு பிரஜையை நாடு கடத்த உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், திணைக்கள மட்டத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்தார்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

கடந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்த சீன நாட்டுப் பிரஜை கடவுச்சீட்டு மோசடி செய்தார் என குறிப்பிடப்படும் விவகாரம் தொடர்பில் உரிய விசாரணை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள சீன தூதரகத்துடன் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நேரடியாக தொடர்புகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த சீன பிரஜையை நாடு கடத்த உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவரை நாட்டுக்குள் அனுமதித்தமை தொடர்பில் திணைக்கள மட்டத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் திணைக்களத்தினால் எவருக்கும் பயணத் தடை விதிக்க முடியாது.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஒரு நபர் வெளிநாடு செல்வதற்கு விமானச் சீட்டு பெற்றுக்கொள்ளும்போது அதனை திணைக்களம் அறிந்துகொள்ளும் தொழில்நுட்ப வசதி அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

சீனாவுக்கு கறுவா,கடலுணவுகள், இரத்தினக்கற்கள் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான 12ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங் ஆகியோரின் தலைமையில் இந்த ஆலோசனைகள் இடம்பெற்றன.

இருதரப்பு ஒத்துழைப்பு, பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு, தற்போதைய பொருளாதார மீட்பு செயல்முறை, வாழ்வாதார உதவி, நிதியுதவி, மக்களிடையே பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பலதரப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு தசாப்தங்களில் சீனாவின் புதிய அபிவிருத்தி முன்னுதாரணத்திற்கும், நவீனமயமாக்கலுக்கும் சீனாவின் பாதை மற்றும் மில்லியன் கணக்கான சீன குடிமக்களை வறுமையில் இருந்து வெற்றிகரமாக உயர்த்தியதற்கும் இட்டுச் செல்லும் சீனாவின் உயர்மட்ட அபிவிருத்திகள் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்ததாக சீனாவின் துணை அமைச்சர் சன் வெய்டாங் தெரிவித்தார்.

சவாலான காலக்கட்டத்தில் இலங்கைக்கு சீனா வழங்கிய உதவிகளை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பாராட்டியதுடன், சீனாவுக்கான இலங்கையின் ஏற்றுமதியை குறிப்பாக இலங்கை கறுவா , கடல் உணவு, பழங்கள், காய்கறிகள் மற்றும் இரத்தினக் கற்கள் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கு சீனாவின் ஆதரவை கோரியிருந்தார்.

மேலும் அவர் இலங்கையின் பொருளாதார மீட்சியை விளக்கியதுடன் சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதை வரவேற்றார்.

இரு நாட்டு மக்களின் பரஸ்பர நன்மைக்காக இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இலங்கையும் சீனாவும் இந்த ஆலோசனைகளின் போது உறுதியளித்தன.

Posted in Uncategorized

சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இவர் இலங்கையின் வெளிவிவகார செயலாளருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான 12ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணைத் தலைமை தாங்குவதற்காகவே இலங்கை வந்துள்ளார்.

இந்த ஆலோசனைகள் நேற்று (29.05.2023) ஆரம்பித்துள்ள நிலையில் ஜூன் 01 வரை நடைபெறவுள்ளன.

இரு நாடுகளும் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார ஒத்துழைப்பை உள்ளடக்கிய இருதரப்பு உறவுகளின் நிலையை மதிப்பிடுவதற்கு இந்த கலந்துரையாடல் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, சீன வெளிவிவகார பிரதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரை சந்திக்க உள்ளார்.

Posted in Uncategorized

சீன குற்றக்குழுக்களின் கேந்திர நிலையமாக இலங்கை மாறும் அபாயம்

அண்மையில் இலங்கையில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகளை அளுத்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸ் அறிக்கைகளின்படி, சந்தேக நபர்கள் பல மாதங்களாக இணையம் ஊடாக பல்வேறு நாடுகளில் உள்ள தனிநபர்களிடமிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை சட்டவிரோதமாக பெற்றுள்ளனர்.

அளுத்கம, களுஅமோதர பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் குறித்த குழுவினர் தங்கியிருந்ததாகவும், பல்வேறு தூதரகங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டபோது, சீனப் பிரஜைகள் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இணையவழி மோசடிக்காக சீன நாட்டவர்கள் வேறொரு நாட்டில் தடுத்து வைக்கப்படுவது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். அதிகரித்து வரும் இந்த பிரச்சினையை சமாளிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் அதிகாரிகள் முனைப்புடன் செயற்பட வேண்டும். இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் ஒழிக்கப்படுவதை உறுதி செய்வது அவசியம், இது அனைவருக்கும் பாதுகாப்பான இணையச் சூழலுக்கு வழிவகுக்கும்.

முன்னதாக, காத்மாண்டுவின் வௌ;வேறு பகுதிகளில் இதேபோன்ற நடவடிக்கைகளுக்காக 122 சீன பிரஜைகளை கைது செய்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இணையவழி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது சீன நபர்களை நேபாள பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இலங்கையில் கைது செய்யப்பட்டவர்களிடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிராகரம், இந்த முறை, சந்தேக நபர்களுக்கு எதிராக இணையவழி மோசடி வழக்கைத் தொடர வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

சந்தேக நபர்கள் வாட்ஸ்அப் மூலம் மக்களை கவர்ந்திழுக்கும் சலுகைகளை வழங்குவார்கள், பின்னர் டெலிகிராம் மூலம் இணையவழி வகுப்புகளில் சேருவதற்கு அழைத்து அவர்களை நம்ப வைப்பார்கள் என்று பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளர்.

இந்த மோசடித் திட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் சுமார் 4.7 மில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு குறித்த பாதிக்கப்பட்ட நபரை 30சதவீதத்திற்கு மேல் நிகர லாபம் தரும் இணையவழி வணிகத்தில் முதலீடு செய்வதாகக் கூறியே ஏமாற்றியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுபோன்ற இணையவழி மோசடி சம்பவங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிச் சுமை மட்டுமல்ல, உலகளாவிய இணையப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

எனவே, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை செயற்படுத்துவதும் அவசியம். குற்றவாளிகளுக்கு எதிராக அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுப்பது மற்றும் அவர்களின் குற்றங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்கப்படுவதை உறுதி செய்வதும் முக்கியமாகின்றது.

சந்தேகநபர்களான சீனப்பிரஜைகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மோசடி செய்து, மில்லியன் கணக்கான மக்களை ஏமாற்றி, இலங்கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத சூதாட்டம் போன்ற சீனப் பிரஜைகளை உள்ளடக்கிய குற்றச் செயல்கள் உள்நாட்டில் அதிகரித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் சீன முதலீடுகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளாக உள்வரும் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக அதிகளவான சீன பிரஜைகள் காணப்படுகின்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்றாலும், சிறுபான்மையினர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, அண்மைய ஆண்டுகளில் பலரை கைது செய்து வருகிறது.

எவ்வாறாயினும், சீன நிதியுதவி திட்டங்களில் பணியாற்றுவதற்காக சீன குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவது தவறான முன்னுதாரணமாகின்றது. மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. வெளிநாட்டுப் பிரஜைகளின் குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்த போதிலும், அது தொடர்ந்து கரிசனை செலுத்த வேண்டியதாக உள்ளது.

சீன நிறுவனங்கள் தங்கள் திட்டங்களுக்கு உதவ மலிவான தொழிலாளர்களை தேடுவது இந்த போக்குக்கு ஒரு காரணமாக இருக்கலாம். குறைந்த கூலிக்கு வேலை செய்ய தயாராக இருக்கும் சீன குற்றவாளிகளை கொண்டு வருவதன் மூலம், இந்த நிறுவனங்கள் தொழிலாளர் செலவில் பணத்தை சேமிக்க முடியும்.

எவ்வாறாயினும், இந்த நடைமுறை நெறிமுறையற்றது மட்டுமல்ல, இது இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவே இலங்கையில் சீனக் குற்றவாளிகளின் ஊடுருவலுக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம்.

இந்தப் போக்கின் பின்னணியில் உள்ள காரணங்கள் எதுவாக இருந்தாலும், சீனக் குற்றவாளிகள் இலங்கையில் இருப்பது கவலைக்குரியது என்பது தெளிவாகிறது. இந்த நபர்கள் இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம், மேலும் அவர்கள் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் பங்களிக்கலாம். அதுமட்டுமன்றி இலங்கையை குற்றச்செயல்களின் கேந்திரமாகக் கூட மாற்றலாம்.

சீனத் தூதரகத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

சீனத் தூதரகத்தின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு களுவன்கேணி கடற்தொழிலாளர் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

 

வடக்கு – கிழக்கு மீனவர்களுக்கு விரைவில் சீனாவின் மண்ணெண்ணெய் – கடற்றொழில் அமைச்சர்

சீன அரசாங்கத்தினால் கடத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மண்ணெண்ணை விரைவில் வடக்கு கிழக்கில் உள்ள ஏழு கடை தொழில் மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை முழுவதுமான கடற்தொழில் அமைச்சர் என்ற வகையில் மீனவ மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிவேன். மீனவ மக்களின் வாழ்வாதாரம் அன்றாட தொழில் நடவடிக்கை வீட்டு வசதிகள் என்பவற்றை மேம்படுத்தும் முகமாக சீன அரசாங்கம் சுமார் 1500 மில்லியன் ரூபாக்களுக்கான செயற் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

அதன் ஆரம்ப நடவடிக்கையாக இலங்கையில் உள்ள 15 கடற் தொழில் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 27 ஆயிரம் படகு உரிமையாளர்களுக்கு, ஒருவருக்கு 150 லீட்டர் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 75 லீட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதோடு இரண்டாம் கட்டமாக எஞ்சியவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

வட மாகாணத்தில் உள்ள நான்கு கடற் தொழில் மாவட்டங்களுக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று கடற்தொழில் மாவட்டங்களுக்கும் விரைவில் மண்ணெண்ணை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் கடற் தொழிலாளர்களுக்கான வீடு மற்றும் கடற்தொழிலாளர்களுக்கான வலைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

அது மட்டுமல்லாது எரிபொருள் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு பற்றியில் இயங்கக்கூடிய படகினை சம்பிரதாயபூர்வமாக கடலில் இறக்கியுள்ளோம்.

எரிபொருளிலும் பார்க்க பற்றியில் இயங்குப் படகு இலாபகரமானதாகவும் சூழலுக்கு மாசு இல்லாத தொழில் நுட்பமாக கருதும் நிலையில் அதனை இலங்கையில் விரிவுபடுத்துவதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆகவே ஜப்பான் அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கமும் கடற் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு முன் வந்துள்ள நிலையில் விரைவில் அதற்குரிய செயல்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சீன நிறுவனம் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் கைச்சாத்து

உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைக்கு அமைய, இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பாக இந்த நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சினோபெக் ஃப்யூயல் ஒயில் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சீனா, சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முடித்துள்ள நிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக அதிபர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

போலிக்கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்காவில் கைதான சீன பிரஜைகள் இராஜாங்க அமைச்சரின் தலையீட்டில் விடுதலை

போலி கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட சீன பயணியை இராஜாங்க அருந்திக பெர்ணாண்டோ தலையிட்டு விடுதலை செய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலிகடவுச்சீட்டுடன் சீன பயணியொருவரும் அவரது இரு நண்பர்களும் கொழும்பு விமானநிலையத்திற்குள் நுழைய முயற்சி செய்ததாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்த வேளை அவர்கள் அடாவடியான விதத்தில் நடந்துகொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகள் அவர்களை நாடு கடத்துவதற்காக தடுத்துவைத்திருந்தவேளை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தலையிட்டு விடுவித்துள்ளார்.

18ம் திகதி கொழும்பு விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்த சீன பயணிகள் வேறு நாட்டொன்றின் கடவுச்சீட்டை கையளித்துள்ளனர் அவை போலியான கடவுச்சீட்டுகள் என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் விடயத்தில் தலையிட்ட இராஜாங்க அமைச்சர் போலி கடவுச்சீட்டுடன் கைதுசெய்யப்பட்டவர் ஒரு முதலீட்டாளர் என தெரிவித்து அவரை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இரண்டு சீன பிரஜைகளும் ஒரு எகிப்திய பிரஜையும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முதலீட்டாளர்கள் போலிகடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டமை குறித்து அதிகாரிகள் ஆச்சரியம் வெளியிட்டனர்.

கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவ சீனா கிழக்கு பல்கலையுடன் ஒப்பந்தம்

கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவுவதற்கு கிழக்கு பல்கலைக்கழகத்துடன் யுனான் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

அண்மையில் இந்த இரு பல்கலைக்கழகங்களும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே ஆசிரியர் உறுப்பினர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள், கூட்டு ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள், கன்பூசியஸ் நிறுவனம் நிறுவுதல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் முழுவதிலும் உள்ள பல்கலைக் கழகங்களில் சீனா கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவி வருகின்றது.

இந்த நிறுவனத்தை உளவு நடவடிக்கைக்காக அந்த நாடு பயன்படுத்துகிறது என்று சர்ச்சை கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் சீனாவின் யுனான் மாகாண ஆளுநரால் புத்தகப் பைகள் வழங்கி வைப்பு

திருகோணமலைக்கு இன்று வெள்ளிக்கிழமை (19) விஜயம் செய்த சீன நாட்டின் யுனான் மாகாண ஆளுநர் “சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து அன்பளிப்பு” என்ற தொனிப்பொருளின் கீழ் திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 30 மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி வைத்தார்.

இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர், வித்தியாலய அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.