எமது நிலையை இன்னும் ஸ்திரப்படுத்தி எம்மை சமஷ்டியை நோக்கி எடுத்துச் செல்ல வல்லதே தமிழ் பொது வேட்பாளர் என்ற பதவிநிலை என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதில் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவரிடத்தில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்த வேண்டும் என்று நீங்கள் கூறிவருவது ஏன்? அதனால் ஏற்படும் நன்மைகள் யாவை? ஏன் அதைச் சிலர் எதிர்க்கின்றார்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அவ்வினாவிற்கு அவர் அளித்துள்ள பதிலில்,
தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்நிறுத்த வேண்டும் என்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 2011 அளவில் இருந்து கூறி வந்தவர் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்கள். அக்கோரிக்கை அப்பொழுது தமிழ் மக்களால் ஆழமாகச் சிந்திக்கப்படவில்லை. நண்பர் சிவாஜிலிங்கம் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் நின்றிருந்தாலும் தமிழ் மக்களின் ஒரு பிரதிநிதியாக தமிழ் மக்களால் அரங்கேற்றப்படவில்லை.
ஆனால் 2009இன் பின்னரான வடகிழக்கு அரசியற் களம், மத்திய அரசாங்கம் வடகிழக்கு தமிழ் மக்கள் விடயத்தில் நடந்து கொண்டுவந்த விதம், நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்ட விதம், முதலமைச்சராக நான் பெற்றுக்கொண்ட அனுபவம், இவையாவும் என்னைச் சிந்திக்க வைத்தன.
உதாரணத்திற்கு 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் அவரின் அழைப்பின் பேரில் சுமந்திரன் அவர்களும் முதலமைச்சராக அப்போதிருந்த நானும் சந்தித்தோம். எமது மாகாணசபை சார்பான நடைமுறைக் கோரிக்கைகள் யாவை என்று அவர் கேட்டிருந்தார். நாம் அவற்றை எழுத்தில் இட்டு அவரிடம் கையளித்தோம்.
சுமார் பத்து பன்னிரண்டு விடயங்களைக் கோரியிருந்தோம். எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்த்து எமக்கு அவற்றை நாம் கோரியவாறு நல்குவதாக அவரும் அவரின் செயலாளரான லலித்வீரதுங்கவிடம் பொறுப்பெடுத்தனர். நாமும் மகிழ்வுடன் விடைபெற்றுக் கொண்டோம். ஆனால் நாம் கோரிய எதுவும் வழங்கப்படவில்லை. உதாரணத்திற்கு அப்போதிருந்த சிங்கள இராணுவ ஆளுநரை மாற்றி ஒரு தமிழ்ப் பேசும் சிவில் சமூக பிரமுகரை அந்த இடத்திற்கு நியமிக்கும்படி கோரியிருந்தோம்.
அப்போதிருந்தவரின் காலம் ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்றும் அதன் பின்னர் எமது கோரிக்கை கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்றும் கூறியிருந்தார். நாம் ஜூலை வரை காத்திருந்தோம். திரும்பவும் அதே இராணுவ அலுவலரை ஜனாதிபதி மஹிந்த ஆளுநராக நியமித்தார். இவ்வாறு எமது கோரிக்கைகளுக்கு நேர்மாறாகவே மத்திய அரசாங்கம் நடந்து வந்து கொண்டிருப்பதை அவதானித்தேன்.
இந்நாட்டில் ஒரு இனவழியாட்சி நடைபெற்று வருவதை நான் அவதானித்தேன்.
இந்நிலையில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தும், மற்றும் வெளிக் கொண்டுவரும் ஒரு களமாக தமிழ் பொது வேட்பாளர் நிலையை நாம் மாற்றலாம். முக்கியமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது மக்கள் தீர்ப்பை சர்வதேச வழி நடத்தல் ஊடாகப்பெற எத்தனிக்கின்றார்கள் என்ற கருத்தை ஊரறிய நாடறிய உலகறிய பறை சாற்ற தமிழ் பொது வேட்பாளர் உதவி புரிவார். வடகிழக்கு தமிழ் மக்களின் மனோநிலை என்ன என்பதை வெளிக் கொண்டு வர மக்கள் தீர்ப்பானது உதவும். அதனை சர்வதேசம் நடத்த வேண்டும் என்ற கருத்தை வெளிக் கொண்டுவர தமிழ் பொது வேட்பாளர் உதவுவார்.
அவருக்குத் தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களிப்பதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலை எம்சார்பில் திசை மாற்றலாம். சிங்கள வேட்பாளர்கள் எவ்வெந்தக் கருத்துக்களை மக்கள் முன்வைத்தாலும் தமிழ் மக்களின் கருத்துக்கள், அபிலாசைகள், குறிக்கோள்கள், எதிர்பார்ப்புக்கள் இவை தான் என்ற கொள்கை விளக்க அறிவிப்பை உலகறியச் செய்யலாம். எமது கொள்கை விளக்க உரைகள் தமிழ் மக்கள் பரந்து வாழும் நாடுகளில் எல்லாம் ஒளி, ஒலி மூலமாக எதிரொலிக்கும். வடகிழக்கினுள் சிறைபட்டிருக்கும் எமது சிந்தனைகள் உலகெங்கிலும் சிதறடித்துப் பறக்க தமிழ் பொது வேட்பாளர் உதவி புரிவார்.
தமிழ் பொது வேட்பாளர் தேர்தலில் வெல்ல போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை. போட்டி முடிவு அவருக்கு முக்கியமல்ல. போட்டியில் கலந்து கொண்டு மக்களை ஒன்றிணைப்பதே அவரின் கடமையாகும். இன்னாரை ஒரு பொது வேட்பாளராகத் தமிழர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற உண்மையே சிங்கள வேட்பாளர்கள் தமிழர்களுக்கு எது எதனைத் தருவார்கள் என்ற அவர்களின் உள்ளக் கிடக்கைகளை வெளிக் கொண்டு வர உதவும். அவற்றை வைத்துப் பேரம்பேச நாம் முனையக்கூடாது.
அவர்களின் இரட்டை வேடம் வெளிக்கொண்டுவரப்படலாம். ஆனால் பொதுவேட்பாளரின் பங்கு யாவர்க்கும் எமது நிலைப்பாட்டையும் எதிர்பார்ப்புக்களையும் இந்தத் தேர்தலைத் தளமாக வைத்துத் தெரியப்படுத்துதலேயாகும்.
எமக்கு பிரிவினையோ சமஷ்டி கிடைக்கும் வரையில் அல்லது எமது பிரதேசங்கள் பிறிதொரு நாட்டின் ஆட்சிக்குக் கீழ் வரும் வரையில் என்றும் இருக்கும். அப்படி வந்தாலும் நாம் அங்கும் சமஷ்டியையே கேட்போம். பொது வேட்பாளரை நிறுத்துவதால் எமது சமஷ்டி கோரிக்கை அடிபட்டுப் போகும் என்பது சுமந்திரனின் சட்டத்தரணி மூளையில் உதித்திருக்கும் ஒரு கற்பனைப்பிராந்தி.
உண்மையில் எமது நிலையை இன்னும் ஸ்திரப்படுத்தி எம்மை சமஷ்டியை நோக்கி எடுத்துச் செல்ல வல்லதே தமிழ் பொது வேட்பாளர் என்ற பதவிநிலை. வட கிழக்கு மக்களின் மக்கள் தீர்ப்பைப் பெற சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என்று கோருவது எவ்வாறு சமஷ்டியை கோரிக்கையை வலுவற்றதாக்கும்?
நாம் சமஷ்டியைக் கோரி தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தவில்லையே! நாம் எமது குறைகளை, நிலைகளை, நிர்ப்பந்தங்களை அகில உலகிற்கும் எடுத்துரைக்க உள்ளோம். “சமஷ்டியை தா” என்று தமிழ் பொது வேட்பாளர் கேட்கப் போவதாக யார் சுமந்திரனுக்குக் கூறினார்களோ நான் அறியேன்.
அடுத்து அவர் அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளே இதனை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம் என்றுள்ளார்.
ஒரு சமூகத்தின் சமூக சேவையாளர்கள் , செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகளுக்கு வாக்குகள் வழங்கும் மக்களிடையே இருந்து வருகின்றவர்கள். அவர்கள் அன்னியர்கள் அல்ல. சுமந்திரன் மனதிலே ஒரு தப்பபிப்பிராயம் குடிகொண்டுள்ளது. ஒருவர் எப்பாடுபட்டாவது பாராளுமன்ற உறுப்பினராக வந்தால் அதன் பின் மக்களுக்குப் பேச இடமில்லை என்று நினைக்கின்றார்.
சுமந்திர அக்கருத்துப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வென்றுவிட்டால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு தான் தோன்றித்தனமாய் நடந்து கொள்ளலாம் என்பதேயாகும்.
இன்று மக்களும் தமிழ் அரசியல்த் தலைவர்களும் சேர்ந்தே பொது தமிழ் வேட்பாளரை முன்நிறுத்த முன் வந்துள்ளார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. மத்திய அரசில் பதவி வகிக்கும் ஒருவருக்கு ஒத்திசைக்க எண்ணி தமது மக்களைப் புறக்கணிக்க முன்வருவோரை தமிழ்ச் சமூகம் மன்னிக்காது. மக்கள் சார்பில் இந்த செயற்பாட்டில் ஈடுபடுவதாக இருந்தால் சுமந்திரன் எம்முடன் சேர்ந்து பயணிக்கட்டும். இல்லையேல் ஒதுங்கியிருக்கட்டும். சிங்கள வேட்பாளர்கள் நலன் கருதி தமிழ் மக்களின் நலன்களை விற்காது இருக்குமாறு அன்புடன் அவரைக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.