அநுராதபுரத்தில் இருந்து தேரர்கள் புனிதப் பொருட்களுடன் வவுனியாவுக்கு பாதயாத்திரை

ருவென்வெலிசாய விகாரையில் இருந்து வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த  தேரர்கள்  பாதயாத்திரை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ஆம் திகதி கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாதயாத்திரையானது இன்று (30) காலை வவுனியா கண்டி வீதியில் உள்ள விகாரையை வந்தடைந்தது.

அங்கிருந்து வவுனியாவில் தமிழர் பகுதியைக் கையகப்படுத்தி குடியேற்றம் செய்யப்பட்ட காலபோகஸ்வேவ பகுதியில் உள்ள சபுமல்கஸ்கட விகாரையை சென்றடையவுள்ளது.

குறித்த பாத யாத்திரையில் 50 இற்கு மேற்பட்ட பௌத்த தேரர்கள்,  மறைந்த பௌத்த தேரர்களின் கேசம், பற்சின்னம் உள்ளிட்ட புனிதப் பொருட்களுடன் சென்று அதனை அங்கு பார்வைக்கு வைப்பதுடன், எதிர்வரும் போயா தினத்தன்று விசேட பூஜை நிகழ்வையும் நடத்தவுள்ளனர்.

வடக்கு கிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைவது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கவலை

இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைவது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் சபையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து அண்ணாமலை உரையாற்றியுள்ளார்.

பிரிட்டனின் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்தஇந்த நிகழ்வில் இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுகுறித்து அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைவடைந்துள்ளமை  எனக்கு கரிசனை அளிக்கின்றது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த போக்கு கவலையளிக்கும் விடயம் ஏனென்றால் எதிர்வரும் காலங்களில்  இந்த பகுதிகளில் இந்துக்களின் கலாச்சாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கில் பௌத்த தொல்பொருள் கட்டிடங்கள் உருவாகிவருவது குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

பலஆயிரங்களாக இலங்கையின்வடக்குகிழக்கு தனிப்பட்ட கலாச்சாரம் அடையாளம் ஆகியவற்றை பேணிவந்துள்ளன,என தெரிவித்துள்ள அண்ணாமலை புதிதாக பௌத்ததொல்பொருள் கட்டிடங்கள் இந்த பகுதியில் உருவாகிவருவது ஈழத்தமிழர்களிற்கும் பௌத்தர்களிற்கும் இடையில் முறுகலை உருவாக்கியுள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தசாப்தங்களில் நிரந்தரதீர்வை காண்பதற்கும் அமைதியை ஏற்படுத்துவதற்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதுஅவசியம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை எழுதியுள்ளது.

துணைவேந்தர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம், அனைத்துப் பீடங்களுக்குமான மாணவர் ஒன்றியங்களுக்கும் அனுப்பபட்டுள்ளது

அக்கடிதத்தில், “எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பலமொனதொரு திரளாக எழுவதற்கும் தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்தில் தவிர்க்க முடியாத குரலாக ஒலிப்பதற்கும், பல்கலைக்கழக அறிவுசார் பலமான பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களான உங்கள் அனைவரதும் நேரடியான மற்றும் மறைமுகமான பங்களிப்புக்களும் ஆதரவுகளுமே காரணமாகும்.

இருப்பினும் சில விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தவும் அறியத்தருவதற்குமானதொரு சூழல் தற்போது எழுந்திருக்கின்றமையால் அதனை இந்தக் கடிதம் வாயிலாக அறியத்தருகின்றோம்.

1. தமிழ் மக்களின் கூட்டு உணர்வுகளோடு தொடர்புடைய தினங்களில் களியாட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களிற்கு ஒப்புதல் வழங்குவதனையும் அவற்றினை முன்னெடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதனையும் தவிர்க்குமாறும், அன்றைய தினங்களில் பல்கலைக்கழக நாட்காட்டியில் நிகழ்வுகள் இடம்பெறாமையை உறுதி செய்யுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

அண்மையில்க் கூட தமிழ் மக்களின் உணர்வுகளைப் உதாசீனப்படுத்தி அவமதிக்கும் விதத்தில் நிகழ்வொன்று இராணுவப் பிரசன்னத்தோடு இடம்பெற்றிருந்தது, அது தமிழ் மக்களின் ஆறாத மனங்களை மேலும் புண்படுத்தியிருந்ததோடு, பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திட்டமிட்டு இடம்பெறும் மறைமுகமான சிங்களமயமாக்க முயற்சிகளால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாமையை உறுதி செய்யுமாறு வேண்டுகின்றோம்.

பல்கலைக்கழக நுழைவு என்னும் எந்தப் புள்ளியில் இனப்பிரச்சினை ஆரம்பமாகியதோ அதே புள்ளியில் மீண்டும் வந்து நிற்கின்றோமா? என்று எண்ணத் தோணுகின்றது.

தமிழ் மக்களின் உரிமைப் பயணத்தில் பலமான குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் குரலை நசுக்கும் விதமாக பெரும்பாண்மையின மாணவர்கள் திட்டமிட்ட வகையில் உள்நுழைக்கப்பட்டு வருகின்றார்கள் என்பது யாவரும் அறிந்ததே.

இவ்வாறானதொரு சூழலில் அவர்கள் பெரும்பாண்மையினைக் கைப்பற்றுவதன் ஊடாக தமிழ் மாணவர்களுக்குரிய தலைமைத்துவ வாய்ப்புக்கள் யாவும் சனநாயகம் என்ற போர்வையில் பறிக்கப்படுவதற்கான சூழல் எழுந்துள்ளது.

இதனால் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களுக்கென்றிருக்கும் இறுதியான ஒரேயொரு வாய்ப்பாகவிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இழக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்றது.

தாயகத்தில் இடம்பெறும் பௌத்த – சிங்களமயமாக்கலுக்கு எதிராக யாழ் பல்கலைச் சமூகம் போராடி வருகையில், எமது விரிவுரையாளர்களே பல்கலையினுள் சிங்களமயமாக்கலை முன்னெடுக்கும் சூழல் உருவாகுமேயானால் அது ஒரு முரணான செயலாகும்.

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே எமக்கு அநீதி இழைக்கப்படுகிறது, எவரேனும் நீதி தாருங்கள்” என்னும் கையறு நிலைக்கு எமது தமிழ் மாணவர்களை தள்ளிவிட வேண்டாம் என்றும், இவை பொதுவெளியில் மக்கள் மன்றத்திற்குச் செல்ல முன்னர் அவ்வாறான தமிழர் விரோத முயற்சிகளை தடுத்து நிறுத்துமாறும் வேண்டிக் கொள்கிறோம்” என்றுள்ளது.

வடக்கு, கிழக்கில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்க கோரி மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம்

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்கு அவசர வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு எல்லாவல மேதானந்த தேரர் மகாநாயக்க தேரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு எல்லாவல மேதானந்த தேரர் கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.

பெளத்த ஆலயங்களில் விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன – விலங்கு நல அமைப்பு கவலை

இலங்கையின் அளுத்கம கந்தே விகாரை முத்துராஜவை ( யானை) தீவிரபௌத்தனாக மாற்றுவதற்கு தன்னால் முடிந்தளவிற்கு முயற்சி செய்தது என தெரிவித்துள்ள ரார்ஸ்ரீலங்கா அமைப்பு இதன் விளைவாக கால்முறிந்தது அதன் கால்பாதங்கள் பாதிக்கப்பட்டன காயங்கள் ஏற்பட்டன நூற்றுக்கணக்கான தாக்கப்பட்ட காயங்கள் – சங்கிலிகள் போன்றவற்றால் ஏற்பட்டவை காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

இது ஒரு சம்பவமே எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற 90க்கும் மேற்பட்ட யானைகள் பௌத்தஆலயங்களில் துன்பத்தில் சிக்குண்டுள்ளன,இந்த ஆலயங்களின் செல்வந்த அதிகாரம் மிக்க முதலாளிகள் அவற்றை திருவிழாக்களின்போது ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

முத்துராஜ என அழைக்கப்படும் சக்சுக்ரின் தனது கூட்டில் காணப்படுகின்றார் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் தனது பௌத்த இராஜதந்திரியை தாய்லாந்து மீளப்பெறுகின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

யானைகளை பௌத்த ஆலய உற்சவங்களின் போது ஊர்வலமாக அழைத்துச்செல்வதை நிறுத்தவதற்கு இது ஒரு சிறந்த காரணம் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ள அந்த அமைப்பு தாய்லாந்து மக்களின் அழுத்தம் காரணமாகவே சக்சுக்ரின் ஆலயத்திலிருந்து அகற்றப்பட்டது ஆனால் ஏனைய ஐந்து யானைகளின் நிலைமை என்ன குறிப்பாக மியன்மாரை சேர்ந்த ஐந்து யானைகளின் நிலைமை என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

Posted in Uncategorized

குருந்தூர்மலை விவகாரம்: அடையாள தூண்களை அகற்ற எவருக்கும் உரிமை இல்லை – சரத் வீரசேகர

குருந்தூர் மலையில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் மற்றும் அடையாளமிட நடப்பட்ட துண்களை அகற்ற எவருக்கும் உரிமை இல்லை. பேச்சு மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண தயாராக உள்ளோம். பலவந்தமான முறையில் எவருக்கும் இடமளிக்க முடியாது – என்று கூறியிருக்கிறார் சரத் வீரசேகர எம். பி.

நேற்று மஹகர பகுதியில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் நாடு முழுவதும் பௌத்த சின்னங்கள் மற்றும் மரபுரிமைகள் காணப்படுகின்றன. வடக்கு – கிழக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகளை அடிப்படையாக கொண்டு எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை அந்த மாகாணங்களின் அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளின் அனுசரனையுடன் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன. குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மற்றும் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட விடயம் பொய் என்பதை தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுர மானதுங்க தெளிவுபடுத்தவில்லை. குருந்தூர் மலையில் தமிழர்கள் விவசாயம் செய்தனர் என்று தமிழ்த் தரப்பு குறிப்பிட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது – என்றும் கூறினார்

மக்கள் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத போதும் வட,கிழக்கு அரசியல்வாதிகளே மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள் – பொதுஜன பெரமுன

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத சிறந்த தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். அரசியல் இலாபத்தைக் கருத்தில் கொண்டு தொல்பொருள் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க இடமளிக்க முடியாது என்று பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

குருந்தூர்மலை விகாரைக்காக காணிகள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பு தொடர்பில் அண்மைநாட்களாக பலத்த விமர்சனங்கள் தென்னிலங்கையில் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை பெரமுன கடசியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்.

இதன்போது ஜனாதிபதிக்கு தாம் கூறியவை என்று சாகர காரியவசம் கூறிய விடயங்கள் வருமாறு, பௌத்த மதத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அந்த பொறுப்பில் இருந்து எவரும் விலக முடியாது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் சின்னங்களை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் அரசியல் செய்கிறார்கள்.

சாதாரண மக்கள் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். குறுகிய அரசியல் இலாபத்தை முன்னிலைப்படுத்தி தொல்பொருள் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க இடமளிக்க முடியாது.

குருந்தூர் மலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்பதை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்துகிறோம். குருந்தூர் மலை விவகாரத்தில் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய செயல்படுவது அத்தியாவசியமானது – என்றார்.

குருந்தூர் காணிகள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களை நாடுவோம் – பெளத்த தேரர்கள் எச்சரிக்கை

தொல்லியல் என குறிப்பிட்டுக் கொண்டு பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்த கூடாது. குருந்தூர் விகாரைக்கு சொந்தமான காணிகளை அடையாளப்படுத்தி விட்டு சாதாரண மக்களுக்கு சொந்தமான காணிகளை உரியவர்களுக்கு வழங்கலாம் ஆகவே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அளவீடு செய்யப்பட்டுள்ள நடுகை தூண்களை அகற்றுமாறு ஜனாதிபதி குறிப்பிட்ட கருத்துக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி தொல்பொருள் மரபுரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். குருந்தூர் விகாரை விவகாரத்தை மகாநாயகரிடம் கொண்டு செல்வோம் என பௌத்த மத தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குருந்தூர் விகாரையின் விகாராதிபதி – கல்கமுவே சத்தபோதி தேரர்

குருந்தூர் மலை விகாரை மற்றும் காணி ஆகிய விடயங்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதிக்கும், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தற்போது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இதன் பெறுபேறாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த அனுர மனதுங்க பதவி விலகியுள்ளார்.

குருந்தூர் மலைக்கு சொந்தமான காணி அதிகம் அநுராதபுரம் மகா விகாரையை காட்டிலுல் குருந்தூர் விகாரைக்கு நிலப்பரப்பு அதிகம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரை நோக்கி நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மகா விகாரையின் நிலப்பரப்பு 100 ஏக்கர் கூட இல்லை அவ்வாறு இருக்கையில் குருந்தூர் விகாரையின் காணி எவ்வாறு அதிகரிக்க கூடும் என ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மகா விகாரை புத்தசாசனத்தின் ஆரம்பத்தை அடிப்படையாக கொண்டுள்ளதால் அதனை மகா விகாரை என்று குறிப்பிடுகிறோம்.

மகா விகாரைக்கு 2000 ஏக்கர் நிலப்பரப்பு சொந்தமாக உள்ளது. அபயகிரி விகாரை, இசுறுமுனி விகாரை மற்றும் ஆகிய புனித விகாரைகளை உள்ளடக்கியுள்ளது.

மிகிந்தலை விகாரை 500 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இந்த காரணிகளை அடிப்படையாக கொண்டே மகா விகாரையின் நிலப்பரப்பு அதிகம் என்று குறிப்பிடப்படுகிறது. இதனை ஜனாதிபதி,தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

குருந்தூர் மலையில் தமிழர்களுக்கு சொந்தமான காணி காணப்படுமாயின் அவற்றை விடுவிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டு காலமாக தமிழர்கள் விவசாயம் செய்த காணிகளை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு குருந்தூர் விகாரைக்கு சொந்தமான காணி அளவிடப்பட்டு 1933 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.78 ஏக்கர் நிலப்பரப்பு வர்த்தமானி ஊடாக குறுந்தூர் விகாரைக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

குருந்தூர் மலையில் பௌத்த தொல்பொருள் சின்னங்கள் காணப்படுவதால் அதனை ஆயவு செய்வதற்காகவே மேலதிகமாக 223 ஏக்கர் காணி தொல்பொருள் பாதுகாப்பு பகுதியாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டது.

தமிழர்களின் காணிகளை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தப்படவில்லை. வன அழிப்பு ஊடாக குருந்தூர் மலைக்கு சொந்தமான காணிகள் அழிக்கப்பட்டுள்ளன.

தமிழ் பிரிவினைவாதிகளின் கருத்துகளுக்கு கவனம் செலுத்தாமல் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

மக்கள் பேரவை –ஓமல்பே சோபித தேரர்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் மரபுரிமைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட கூடாது. குருந்தூர் விகாரை மற்றும் குருந்தூர் மலையில் உள்ள பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்றார்.

தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் – கஸ்ஸப்ப தேரர்

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க பதவி விலகியமை தவறானது. ஜனாதிபதியின் சட்டவிரோத கட்டளைக்கு எதிராக போராடியிருக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தொல்பொருள் திணைக்கள பணிப்பாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியம் இராசமாணிக்கத்தை தொல்பொருள் மற்றும் மரபுரிமைகள் அமைச்சராக நியமிக்க வேண்டும். இதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த மரபுரிமைகள் பாதுகாக்கப்படும்.

குருந்தூர் மலைக்கு சொந்தமான காணிகளை அரசியல் நோக்கத்துகாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயம் தொடர்பில் வெகுவிரைவில் மகாநாயக்க தேரர்களை நாடுவோம் என்றார்.

பூர்வீக தொல்லியல் இடங்களை அடையாளங் காணமுற்பட்டால் பல இடங்களில் பல ஆலயங்களை அமைக்க வேண்டி வரும்

அரசியல்வாதிகள் மதக் குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அரசியல்லாபம் தேடுவதாக சர்வமத தலைவர்கள் தெரிவித்தனர்.

தேசிய சர்வமத போரவையால் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த,எஸ். சிவலோகநாத குருக்கள் கருத்து தெரிவிக்கையில், “ஒருசில சுயநலம் கொண்ட மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் நல்லிணக்கத்தினை குழப்பக்கூடிய விடயங்களை பெரிதாக்கி வருகின்றனர். இது மிகப்பெரும் கவலைதரும் விடயம். சில அரசியல்வாதிகளும் இந்த மத குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் தேடுகின்றனர்.

வடக்கில் அரசாங்கத்திற்கு சார்பான தொல்பொருள் திணைக்களத்திற்கு கூறக்கூடிய விடயம் பூர்வீக தொல்லியல் இடங்கள் என தெரிவித்தால் இந்து சமயத்திலும் பல இடங்கள் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அதேபோல் பௌத்த மதத்திலும் உள்ளது.

அவற்றையெல்லாம் கூறப்போனால் பல இடங்களில் பல ஆலயங்களை அமைக்க வேண்டி வரும். நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். அவை தற்போதுள்ள மத நல்லிணக்கத்திற்கு குரோதமாகவே அமையும். எனவே தொல்லியல் திணைக்களம் இவ்வாறான விடயங்களை கைவிடுதல் வேண்டும். தற்போதுள்ள சம நிலையை பேணி பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது  யாழ் மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை பி. ஜெபரட்ணம் கருத்து தெரிவிக்கையில், “மத நல்லிணக்கத்திற்கு எமது நாட்டில் முன் எப்போதும் இல்லாதவாறு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

மற்ற மதங்களை மதிக்காத அன்பு செய்யாத ஏற்றுக்கொள்ளதா தன்மை எமது நாட்டில் தலைவிரித்தாடுகின்ற நிலை இருப்பது போல் தோன்றுகின்றது.

இதனால் பல்வேறு இடங்களில் பல்வேறு பிரச்சனைகளால் மதங்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட வாய்ப்பாக அமைகின்றது. இந்த நேரத்தில் நாம் எங்கள் மதத்தை எவ்வாறு மதிக்கின்றோமோ அதேபோல் ஏனைய மதங்களையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் எமது நாட்டில் பல இன மக்கள் ஒன்றாக வாழ்கின்றோம். இருந்தபோதிலும் மக்களிடையே வேற்றுமைகளை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் திணிக்கப்படுகின்றன.

அதாவது ஒரு இனம் வாழும் இடத்தில் அந்த இனத்திற்கு தேவையில்லாத அந்த இனத்திற்கு ஒவ்வாத மற்றோர் இனத்திற்கு தேவையான ஒரு விடயத்தினை செய்கின்றபோது மக்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட காரணமாகிவிடுகின்றது. ஆகவே ஒவ்வாரு இனத்தவரும் வசிக்கும் இடங்கள் மதிக்கப்பட வேண்டும்.

அவர்களுடைய கலாசார சமய விழுமிங்கள் மதிக்கப்பட்டு செயற்பாடுகள் இடம்பெறம்போது இவ்வாறான பிரிவினைகள் எற்படுவதனை தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் பௌத்த, கிறிஸ்தவ, சைவ, இஸ்லாமிய மத குருமார் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறி மலையில் ஏணிப்படி வைத்தமைக்காக தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து கோவில் நிர்வாகம் விடுதலை

வவுனியா வெடுக்குநாறிமலையில் ஏணிப்படி பொருத்தியமை தொடர்பாக நெடுங்கேணி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்றையதினம் வவுனியா நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கை தொடர்ந்து நடாத்துவதற்கு போதிய சான்றுகள் இன்மையால் குறித்த வழக்கில் இருந்து ஆலயப்பூசகர் மற்றும் நிர்வாகத்தினர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி திருஅருள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆலயத்தில் மரத்திலான ஏணிப்படி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனை சீரமைத்து ஏணிப்படி ஒன்று அமைக்கப்பட்டமை தொடர்பாக வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஏணிப்படியை சீரமைத்தமைக்கான சான்றுகள் இல்லை என அரச சட்டவாதிகளால் இன்றையதினம் நீதிமன்றிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த மூன்று பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர் என்றார்