மஹிந்தவை போன்று எம்மை விலைக்கு வாங்க முடியாது – அனுரகுமார

மஹிந்த ராஜபக்ஷவை விலைக்கு வாங்கியதை போன்று  உலக நாடுகளால் எங்களை விலைக்கு வாங்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று (11) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் இந்தியப் பயணத்தால் எதிர்க்கட்சி முகாம்கள் வியப்படைந்துள்ளதாகக் தெரிவித்த அனுரகுமார எதிர்வரும் காலங்களில் மேலும் ஆச்சரியமான நிகழ்வுகள் வெளிவர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு சகாப்தம் ஆரம்பித்துள்ளதாகவும், மேலும் மேலும் ஆச்சரியங்கள் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

மகிந்த – சந்திரிகா, மைத்திரிபால – மகிந்த, ரணில் – சந்திரிகா போன்ற அரசியல் எதிரிகள் கூட ஒரே மேடைக்கு வரவுள்ள நிலையில் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கு எதிராக பல்வேறு கூட்டணிகள் களமிறங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுடனான தனிப்பட்ட போட்டியின் காரணமாக சஜித் அந்த முகாமில் சேரவில்லை.

இல்லையேல் அவரும் அதே முகாமில் இணைந்திருப்பார்.

மஹிந்த ராஜபக்ஷவை விலைக்கு வாங்கியதை போன்று எங்களை உலக நாடுகளால் விலைக்கு வாங்க முடியாது.

இந்திய விஜயத்தின் போது பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டன.

நாட்டின் தேசிய வளங்களைத் தாரைவார்க்க ஒத்துழைப்பு வழங்குவதாக நாங்கள் குறிப்பிடவில்லை.   என்றார்.

புதிய இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ நியமனம்

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதேவேளை விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்திருந்த நிலையிலேயே தற்போது அந்த இராஜாங்க அமைச்சுப் பதவியை ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் முதுகெலும்பு இருந்தால் தேர்தலில் மக்கள் முன் வாருங்கள்” – சஜித் சவால்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முதுகெலும்பு இருந்தால் தேர்தலை நடத்தி மக்கள் முன் வருமாறு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (30) கொழும்பில் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது;

“இன்று ஒரு வரலாற்று தருணம். இந்த நாட்டை அழித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அகற்றிய மாபெரும் ஜனநாயகப் புரட்சியை ஆரம்பித்தவர்கள் நாங்கள். இப்போது நாட்டை ஆளும் ரணில் ராஜபக்ச அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்க முடியாது. இந்த அரசாங்கம் மக்களைக் கொல்லாமல் மக்களைக் கொன்று மிக மனிதாபிமானமற்ற அழுத்தத்தை மக்கள் மீது செலுத்தி நாட்டில் உள்ள இருநூற்றி இருபது இலட்சம் பேரை பட்டினியில் இடும் கேவலமான அரசாகும்.

உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் வாக்களித்து மக்கள் முன் வாருங்கள் – ஜனாதிபதி ரணிலுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ‘மாற்றத்தை ஏற்படுத்தும் ஓர் ஆண்டு’. அத்துடன் நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு பயப்படவில்லை என்று கூறுகிறோம். இது வெறும் ஆரம்பம் தான். எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம், எங்களுக்கு தேர்தல் வேண்டும். நாங்கள் மக்களின் ஆசியுடன் ஆட்சிக்கு வருகிறோம், தலைகளை மாற்றும் விளையாட்டினாலோ அல்லது முரட்டு ராஜபக்சவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அல்ல. மக்களின் ஆசியால் ஆட்சிக்கு வருகிறோம். இன்று இந்த அரசாங்கம் மக்களை கண்டு அஞ்சுகிறது. இது வெறும் ஆரம்பம் தான். இன்று காலை இந்த அரசாங்கத்தின் குண்டர்கள் சென்று தடை உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் நாங்கள் சட்டத்தை மீறவில்லை. இன்று இந்த இடத்திற்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகளை இந்த அரசாங்கம் அப்பட்டமாக மீறியது.

நான் ரணிலுக்கும் மகிந்தவுக்கும் சொல்கிறேன் உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் முன்வாருங்கள். இந்த நாட்டை வங்குரோத்து செய்தவர்கள் எமது அரசாங்கத்தில் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறுகின்றோம். மக்களுக்கு நீதி வழங்குவோம். நாட்டை திவாலாக்கியது யார் என்பதை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரச அதிகாரம் பெறுவதற்கு முன்னரே அந்த முடிவை எடுத்தோம். அந்த முடிவின் மூலம் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களிடமிருந்து இழப்பீடு பெறுவதற்கு தேவையான சட்ட ஆதரவை வழங்கி எங்கள் கடமையை நிறைவேற்றுவோம்.

இன்றைய தாக்குதல் சட்டவிரோதமானது என்று பொலிஸாரிடம் கூறுகின்றோம். இன்று இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியவர்கள் தயாராக இருக்க வேண்டும். நாங்கள் நிச்சயமாக உங்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வோம் நாங்கள் அரசியல் அயோக்கியர்கள் அல்ல. எமது வலது பாதத்தை முன் வைத்து மக்கள் சக்தியால் ஒவ்வொரு கிராமத்தையும் பலப்படுத்தி இந்த சட்டவிரோத அரசை வீட்டுக்கு அனுப்புவோம். இன்று ரணிலை நினைத்து வெட்கப்படுகிறோம். தடை உத்தரவு போடுவது நமக்கு வெட்கமாக இல்லையா? இன்று நான் சொல்கிறேன், நமது அரசாங்கத்தின் கீழ், இந்த மாளிகைகள் அனைத்தும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்”. என மேலும் தெரிவித்தார்.

ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் – மனோகணேசன்

ராஜபக்ஷர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்ஷர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம். கோட்டாபய ராஜபக்ஷ போனாலும், அவரது பாவத்தின் நிழல் போகவில்லை. சட்டப்படி கோட்டாபய ராஜபக்ஷ 16 ஆம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இந்த அரசு நடக்கிறது. அந்த பாவத்தில் எமக்கு பங்கு வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

நாட்டில் உருவாகிவரும் புதிய கூட்டணிகளிடமிருந்து தமது அணியை நோக்கி வரும் அழைப்புகள் பற்றி, தென்கொழும்பு கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

நேற்று முதல் நாள் அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணி நண்பர்கள் என்னுடன் பேசிய போது தெளிவாக ஒன்றை சொன்னேன். ஒரு கையால் ராஜபக்ஷர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம் என்று சொன்னேன். நாம் இன்று இருக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற இடத்தில் நாம் செளக்கியமாகவே இருக்கிறோம் எனவும் சொன்னேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணி நினைத்து இருந்தால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகிய அடுத்த நாளே அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால், அதை நாம் செய்யவில்லை. ஏனென்றால் பேரினவாதம், ஊழல் ஆகிய இரண்டு பேரழிவுகளுக்கும் ஏகபோக உரிமையாளர்களான ராஜபக்ஷர்களுடன் கலப்பு கல்யாணம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் இல்லை. எங்கள் இந்த கொள்கை நிலைப்பாடு காரணமாகத்தான் நாம் இன்று ராஜபக்ஷ ஆதரவு ரணில் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை.

இன்று இந்த ராஜபக்ஷ ஆதரவு ரணில் அரசில் அங்கம் வகிப்பவர்கள், தாம் ஏதோ வெட்டி முறித்து விட்டதாக தப்பு கணக்கு போட்டு விடக்கூடாது. நாம் அங்கே கொள்கை நிலைப்பாடு காரணமாக இல்லை. ஆகவேதான் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். அதுதான் உண்மை. சட்டப்படி கோட்டாபய ராஜபக்ஷ 16ம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இன்றுவரை இந்த அரசு தொடர்கிறது. அந்த பாவத்தின் நிழலில் அங்கமான உங்களுக்கு பாவத்தின் சம்பளம் அடுத்த தேர்தலில் கிடைக்கும்.

16ம் திகதி நவம்பர் 2019 முதல் இன்றுவரை, நான்கு வருடங்கள், இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. கடந்த நான்கு வருடங்களாக இந்த அரசாங்கத்தின் பதவிகளில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளிடம், நீங்கள் இதுவரை வெட்டி முறித்த சாதனைகளை முடியுமானால் பட்டியல் இடுங்கள் என பகிரங்க சவால் விடுகிறேன். அபிவிருத்தி செய்ய நிதி இல்லை என்பீர்கள். சரி, அபிவிருத்தியை விடுங்கள். அரச நிர்வாகரீதியாக தமிழ் மக்கள் தொடர்பில் நீங்கள் அமைச்சர்களாக, துணை அமைச்சர்களாக, அரசாங்க எம்பிகளாக இதுவரை என்ன செய்து கிழித்துள்ளீர்கள் என பகிரங்கமாக சொல்லுங்கள்? வேண்டுமானால், நாம் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளையும், இன்று நீங்கள் இந்த நான்கு ஆண்டுகளில் செய்ய தவறிய சீர்கேடுகளையும் நான் பகிரங்கமாக பட்டியல் இடுகிறேன்.

எனவேதான், இந்த புதிய, பழைய பாவங்களின் கூட்டணியில் நாம் இல்லை. நாங்கள் சோரமும் போகவில்லை. பாவமும் செய்யவில்லை. ஆகவே இந்த பாவத்தின் சம்பளம் எமக்கு கிடையாது. எனவே தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற முற்போக்கு அரசியல் இயக்கம், அடுத்து வரும் புதிய அரசாங்கத்தில், புதிய பலத்துடன், நேர்மையாக அங்கம் வகிக்கும் என்றார்.

வீதி விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் பலி

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரும் மேலும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட மெய்ப்பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாகச் செயற்படுகின்றது – சஜித் பிரேமதாச

யுத்த வெற்றியை காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டுவருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹொரவ்பதானையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” யுத்த வெற்றியை காரணம் காட்டியே சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் அவர்கள் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டு நாட்டை அழித்தனர். ஆனால் இன்று பயங்கரவாதிகளை பாதுகாக்கும் ஜனாதிபதியின் நிழலில் ஒழுந்து கொண்டு ராஜபக்ச குடும்பம் சுகபோகங்களை அனுபவித்து வருருகின்றனர். மல உரங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழித்ததோடு அதிக விலைக்கு நனோ உரங்களை இறக்குமதி செய்து விவசாயத்தை அழித்தனர்.

எனவே இந்த திருட்டு கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி, திருடப்பட்ட பணத்தை மீண்டும் எமது நாட்டிற்கு நாம் கொண்டு வருவோம். தற்போதைய ரணில் ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக விவசாயிகள், மீனவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அரச ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் என சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.அவர்களை மீட்டு, அனைவருக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் பொது மக்கள் யுகத்தை உருவாக்கத் தயாராக இருக்கின்றோம்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொண்ட தலைவர் நானே – போர் வெற்றிக் கோஷம் எழுப்பிய மஹிந்த

“தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொள்ள எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியும் முன்வரவில்லை. ஆனால், நான்தான் அவரை நேருக்கு நேர் எதிர்கொண்டேன்.”– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

“எனது ஆட்சிக் காலத்தின் பின்னரான காலப்பகுதியில், இலங்கையை ஆட்சி செய்த வேறு எந்தவொரு ஜனாதிபதியும் போரை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையைக் கடந்த 2005 ஆம் ஆண்டு நான் ஏற்றுக்கொள்ளும் போதும் எமது கட்சி மீது பலர் சேறு பூசினார்கள். எனினும், நாடு இரண்டாகப் பிளவுபடுவதைத் தடுக்குமாறு மாத்திரமே அன்று மக்கள் எம்மிடம் கோரினார்கள்.

முப்பது வருட ஆயுதப் போரில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை எந்தவொரு ஜனாதிபதியாலும் எதிர்கொள்ள முடியவில்லை.சில ஜனாதிபதிகள் போரை நிறுத்துமாறு கோரி பிரபாகரனுக்கு ஆயுதங்களையும் வழங்கினார்கள்.

அந்த ஜனாதிபதி யார் என்று நான் கூற மாட்டேன். இவ்வாறான போரை எனக்குப் பின்னர் வந்த இலங்கையின் மற்ற ஜனாதிபதிகள் எதிர்நோக்கும் நிலையை நாம் உருவாக்கவில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களும் சமாதானமாக வாழக்கூடிய நிலையை நாம் ஏற்படுத்தினோம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த போது, குழந்தைகளாக இருந்தவர்கள், தற்போது போர் என்றால் என்ன என்று தெரியாத வாழ்க்கையை வாழ்கின்றார்கள்.

எனினும், மக்களை ஏமாற்றி தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகச் செயற்படும் தரப்பினர் இன்றும் இருக்கின்றார்கள்.இவ்வாறானவர்கள் சர்வதேசத்தின் வலைகளில் சிக்கி எமது சொந்த நாட்டைப் பாதிப்படைய செய்கின்றார்கள்.

எமது கட்சியின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட பொருளாதார நிலை குறித்து தற்போதும் பலர் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.எம்மைக் குற்றவாளிகளாக வெளிக்காட்டும் முயற்சிகளில் பலர் ஈடுபடுகின்றார்கள்.

2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நாம் நாட்டின் பொருளாதாரத்தை 6 வீதத்தால் வளர்ச்சியடையச் செய்திருந்தோம்.இந்தநிலையில், இலங்கையைச் சரியான பாதையில் கொண்டு செல்ல சரியானதொரு அரசியல் வழிநடத்தல் தேவை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகக் குறுகிய காலத்தில் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை நாட்டை யாருடைய சொந்தத் தேவைக்காகவும் பிளவுபட நாம் இடமளிக்க மாட்டோம்.அனைத்து சவால்களையும் எதிர்நோக்கக்கூடிய ஒரே நாடு இலங்கை என்பதை சொல்வதில் நான் பெருமிதம் கொள்கின்றேன்.

எமக்குள்ள மக்கள் ஆணையுடன் எதிர்வரும் நாள்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் நாம் போட்டியிடுவோம். பாரிய வெற்றியையும் அடைவோம். எமது வெற்றிப் பயணத்தில் பங்கேற்க பல அரசியல் கட்சிகள் ஆர்வமாகக் காத்திருக்கின்றன.” – என்றார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மஹிந்த ராஜபக்‌ஷ நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதன்போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயரை காமினி லொகுகே முன்மொழிந்தார். அதனை ஜோன்ஸ்டன்  பெர்ணான்டோ  வழிமொழிந்தார்.

நாமலின் திருமண நிகழ்விற்கான ரூ.27 இலட்சம் மின் கட்டணம் செலுத்தப்படவில்லை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்தின் போது, இலங்கை மின்சாரச சபை வழங்கிய சேவைக்கான ரூ.27 இலட்சம் மின் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

ஜே.வி.பி.யின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நளின் ஹேவகே இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவரால் கோரப்பட்ட வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே இலங்கை மின்சார சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை ஜூலை 26ஆம் திகதி கேட்டிருந்ததாகவும், மின்சார சபை இன்று தகவல் வழங்கியதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெட்டியவில் உள்ள வீடொன்றில் இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொள்வார் எனவும் பாதுகாப்பு விளக்குகளை பொருத்துமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தற்காலிகமாக மின்சாரம் வழங்கப்பட்டு, பாதுகாப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு, பின்னர் உபகரணங்களை அகற்றியதாகவும், இதற்காக 2,682,246 ரூபா செலவிட வேண்டியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

செலவிடப்பட்ட தொகை தொடர்பான மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் தொகை வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக மிஹிந்தலை விகாரையில் மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைப் போன்று மெதமுலன வீட்டிலும் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டுமென நளின் ஹேவகே தெரிவித்தார்.

மஹிந்த விற்க முடியாத குப்பையாகி விட்டார் – ஐக்கிய மக்கள் சக்தி

மஹிந்த ராஜபக்ஷ என்பவர் விற்க முடியாத குப்பைக் கூடமாகிவிட்டார். இனியும் இவரை வைத்து அரசியல் செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்லுமாறு நான் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு சவால் விடுக்கின்றேன்.

நாம் தேர்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. நாளை தேர்தல் நடந்தால்கூட நாம் முகம் கொடுக்கத் தயாராகவே உள்ளோம்.

மக்கள் இன்று போராட்டங்களில் ஈடுபடுவதில்லை தான். ஏனெனில், வீதிகளில் இறங்கி போராடுவதற்கு பதிலாக தங்களின் வருமானத்தை உயர்த்தும் வழிகளை பார்க்கலாம் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், மக்களிடம் உள்ள கோபம் அப்படியே தான் உள்ளது என்பதை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது. தற்போது சிலர், ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்ததாக வரும் என்று கூறுகிறார்கள்.

கூறும் அவர்களுக்கே தெரியும், பொதுத் தேர்தல் ஒன்று தான் அடுத்து நடைபெறும் என்று. மஹிந்த ராஜபக்ஷ என்பவர் விற்க முடியாத குப்பைக் கூடமாகிவிட்டார்.

இனியும் இவரை வைத்து அரசியல் செய்ய முடியாது. ஜனாதிபதியும் விரைவில் வீழ்ந்துவிடுவார். எனவே, தைரியம் இருந்தால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாராகுங்கள்.

ஏனெனில், இப்போது மக்கள் தொடர்பாக கவலைப்படும் ஆளும் தரப்பினர், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாதத் தீர்மானத்தின்போது அவருக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள்.

மக்களை பாதுகாக்க யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது இறுதியில் தெரியவரும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.