ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் முதலிட இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி ஆர்வம்!

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வத்தினைவெளியிட்டுள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தனது ஜியோபிளாட்போர்ம் நிறுவனத்தின் ஊடாக தொலைத்தொடர்பு வர்த்தகத்திற்குள் ஆழமாக கால்பதிக்க எண்ணியுள்ள முகேஸ் அம்பானி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வத்தினைவெளியிட்டுள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது.

சமீபத்தைய நிதி நெருக்கடிகாரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்காக அதிகாரிகள் பல நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் நஸ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் தொடர்பில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொமின் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக நவம்பர் பத்தாம் திகதிக்குள் இலங்கை விண்ணப்பங்களை கோரிய நிலையில் முகேஸ் அம்பானியின் ஜியோபிளட்போர்ம் இது குறித்து ஆர்வம் வெளியிட்டுள்ளது.

ஜனவரி 12ம் திகதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கைஅரசாங்கம் ஸ்ரீலங்கா டெலிகொமின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வம் வெளியிட்டுள்ளவர்களில் ஜியோபிளாட்போர்மும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலீடு செய்வதன்மூலம் ரிலையன்சின் ஜியோ உலகளாவிய தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தலாம் என நம்புகின்றது .

தற்போது ஜியோ இந்திய சந்தையில் முன்னணியில் காணப்படுகின்றது.

இலங்கையில் 200 Shell எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

அமெரிக்காவின் RM Parks Inc நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் விநியோகஸ்தரான RM Parks Inc., Shell PLC தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது

“RM Parks Inc. மற்றும் Shell இணைந்து 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை செயல்படுத்தவுள்ள நிலையில் EV சார்ஜிங் வசதிகளுடன் கூடிய மினி-சூப்பர் மார்கெட்டுகளின் சேவைகளை வழங்கவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதில் நிபுணத்துவ அறிவை வழங்க வியட்நாம் இணக்கம்

முன்மொழியப்பட்டுள்ள புதிய முதலீட்டு சட்டமூலத்தை வரைவதில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதில் நிபுணத்துவ அறிவை வழங்க வியட்நாம் இணக்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கலாநிதி புய் வான் கிம் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வியட்நாமின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னர் அந்த நாடு அடைந்த விரைவான பொருளாதார வளர்ச்சியை பிரதமர் இதன்போது பாராட்டினார்.

வெளிநாட்டு முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்ப்பதற்காக வியட்நாம் பின்பற்றிய புதிய வழிமுறைகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கை விரைவில் புதிய வெளிநாட்டு முதலீட்டுச் சட்டமூலத்தை வரைய திட்டமிட்டுள்ளதால், அதற்காக வியட்நாமின் நிபுணத்துவ அறிவை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

பிரதமரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கலாநிதி புய் வான் கிம், இலங்கையை வியட்நாம் ஒரு சிறப்பான நட்பு நாடாகக் கருதுவதாகவும், இருதரப்பு வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் கலாசார உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பெரும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

வியட்நாமின் அரிசி மையமாக அறியப்படும் அரிசி மற்றும் பிற விவசாயப் பொருட்களுக்கு பெயர் பெற்ற வின் லாங் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தனக்கு மாகாண மட்டத்தில் ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும், இதனால் இலங்கையின் மாகாணங்கள் பரஸ்பர நன்மைகளைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

வர்த்தகம், சுற்றுலா, கைத்தொழில், விவசாயம், கலாசாரம், கல்வி, முதலீடு மற்றும் சுற்றுலா வர்த்தகம் உள்ளிட்ட வணிக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் வியட்நாம் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.

தூதுக்குழுவின் தலைவரான கலாநிதி புய் வான் கிம், வியட்நாம் அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சருக்கு நிகரான அதிகாரங்களைக் கொண்ட வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி  உயர்பீடத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஆவார்.

இந்த உயர்மட்ட தூதுக்குழுவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் மத்திய வெளியுறவு ஆணைக்குழு அதிகாரிகள் உள்ளிட்ட சிரேஷ்ட வியட்நாமிய அரச அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

Posted in Uncategorized

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளைப் பெற மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குங்கள் – சுரேஷ் பிரேமஷ்சந்திரன்

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளைக் கோரிநிற்கும் ஜனாதிபதி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முழுமையாக வழங்குவதற்கு முன்வரவேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்ற போர்வையிலேயே மாகாணசபைகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அரசியல் சாசனத்திற்கான பதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

மகிந்த ராஜபக்சவிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவரை பதின்மூன்றாவது திருத்தத்திற்கு மேலதிகமாகச் சென்று அதிகாரங்களை வழங்குவோம் என்றும் மாகாணசபைகளை சரியான முறைகளில் நடைமுறைப்படுத்துவோம் என்றும் ஐ.நா. செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் இந்திய தலைவர்களுக்கும் பல்வேறுபட்ட உறுதிமொழிகளைக் கொடுத்தபொழுதிலும்கூட கடந்த ஐந்து வருடங்களாக மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில்கூட மாகாணசபைகள் இயங்குமா என்ற கேள்வியும் எழக்கூடிய சூழ்நிலை இன்று தோன்றியிருக்கின்றது.

ஜனாதிபதியும் ஆளும் கட்சியினரும் அடுத்த வருடத்தை தேர்தல் ஆண்டாக குறிப்பாக பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறுமென்று கூறிவருகின்றனர்.

ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெறாத மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்பொழுது நடைபெறும் என்பது குறித்து எவ்வித அறிவித்தல்களும் இல்லை. இது உலக நாடுகளையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும்.

இப்பொழுது புதிய வரவு- செலவுத்திட்டத்திற்கான பிரேரணைகளை முன்மொழிந்த ஜனாதிபதி அவர்கள் நாட்டில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க புலம்பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதுடன் தனியார் மற்றும் தனி நிறுவனங்களும் மாகாணசபைகளும் புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியுமென்றும் கூறியுள்ளார்.

இன்றைய சூழலில் பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்கள் ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் வாழ்கின்றனர் என்பதும் பொருளாதாரத்தில் கனிசமான முன்னேற்றத்தைக் கொண்டவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள் என்பதும் வெளிப்படையான விடயமாகும்.

தாம் பிறந்து வளர்ந்த வடக்கு-கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய அவர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவ்வாறு தாம் விரும்பிய வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு முதலீடுகளைக் கொண்டுவருதவற்கு மாகாணசபைகளுக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இதுவரை கிடையாது.

ஆகவேதான் இலங்கை திவாலான நாடாக அறிவிக்கப்பட்ட காலத்திலும்கூட, இலங்கையைப் பொருளாதார ரீதியாக மீட்சியடைய வைக்க வேண்டுமாக இருந்தால், சர்வதேச முதலீடுகளை இலங்கை உள்வாங்க தேவை இருப்பதாகவும் அதில் புலம்பெயர் மக்களின் கனிசமாக இருக்க முடியுமென்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு வந்துள்ளது.

அவ்வாறு புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீடுகளை உள்வாங்குவதாக இருந்தால், சர்வதேச முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்க வேண்டுமென்பது முதன்மையானது.

அதுமாத்திரமல்லாமல், ஜனாதிபதி கூறுவது போன்று, பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான நிலங்களைப் பகிர்ந்தளிப்பது தொடக்கம், முதலீடு செய்ய முன்வருபவர்களுக்கான சகல சலுகைகளையும் வழஙகக்கூடிய அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு இருந்தாக வேண்டும்.

ஜனாதிபதி தொடர்ச்சியாக புலம்பெயர் மக்களின் முதலீடுகளைக் கோரி நிற்கின்றார். ஆனால் புலம்பெயர் தமிழ் மக்கள் தமது முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான அதிகாரங்களை ஆக்கபூர்வமான வகையில் மாகாணங்களுக்குக் கொடுப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவது மாத்திரம் போதாது. மாறாக, பொருளாதார நலன்களை மேம்படுத்துவதற்கு சர்வதேச முதலீடுகளை உள்வாங்குவதற்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். குறிப்பாக மாகாணங்களுக்கு அத்தகைய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகள் என்று சொல்கின்றபொழுது வெறுமனே பல்கலைக்கழகங்களில் மாத்திரமல்லாமல், சர்வதேச தரம் வாய்ந்த வைத்தியசாலைகள், விவசாயம் மற்றும் கடல் வளங்களை உள்ளடக்கிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான வலுவான திட்டங்கள் உற்பத்திசார் தொழிற்சாலைகள் போன்றவற்றைச் செயற்படுத்துவதற்கும் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வேண்டும்.

இவை நடைபெற வேண்டுமாயின் உடனடியாக மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

எல்லா மாகாணசபைத் தேர்தல்களையும் நடாத்துவதில் நெருக்கடிகள் காணப்படுமாயின், குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்களாவது நடாத்தப்படவேண்டும்.

பொருளாதாரத்தை வளப்படுத்த, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஒரு தார்மீக சமுதாயம் ஒன்றை உருவாக்கக்கூடிய வகையில் முடிவெடுத்து செயற்படக்கூடிய அதிகராங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவேண்டும்.

இவற்றை விடுத்து வெற்று வார்த்தைகளும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் முடிவுகளுக்கு அடங்கிப் போவதுமாக இருந்தால் இந்த நாட்டில் எதனையும் சாதிக்க முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான நிலையத்தையும் வெளிநாட்டு முதலீட்டாளரிடம் கையளிக்க முன்மொழிவுகள் கோரப்படுவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

விமான நிலையத்தின் நிர்வாக விவகாரங்களை முதலீட்டாளரிடம் எவ்வாறு ஒப்படைப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகள் 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

முதலீடுகளுக்கு துரிதமாக அனுமதி வழங்க பொருளாதார ஆணைக்குழு – ஜனாதிபதி

உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் முதலீடுகளுக்கான அனுமதியை துரிதமாக பெற்றுக்கொடுக்க பொருளாதார ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி பெறுவதற்கு நீண்ட காலம் செல்வது சிக்கலானது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் நாடு பாரியளவு வருமானத்தை இழந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

கண்டி, ஹந்தானையில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயத்தை நேற்று(திங்கட்கிழமை) திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு பதிலாக பொருளாதார ஆணைக்குழுவொன்றை நியமித்து ஒரே நிறுவனத்தினால் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “இன்று இந்த இடத்திற்கு வந்தபோது எனக்கு இன்னுமொரு பறவைகள் பூங்கா நினைவுக்கு வந்தது.

ஆறாம் பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் இவ்வாறான பறவைகள் பூங்காவொன்று   அமைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பறவைகள் தீவில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன நாடாளுமன்றத்தை நிறுவியுள்ளார்.

இப்போது அன்றிருந்த பறவைகள் அங்கு  இல்லாத போதும்  வெவ்வேறு வகையான பறவைகள் உள்ளன. காகங்களும் உள்ளன.

இந்த பறவைகள்  பூங்காவை நிர்மாணிப்பதில் சுமார் 20 வருடகாலங்கள் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்ததாக கோட்டேகொட குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ  கோட்டேகொட இந்த சர்வதேச பறவைகள்  பூங்காவை இன்று நாட்டுக்கு  சமர்ப்பித்துள்ளார்.

சிங்கப்பூரின் ஜூரோன் பறவைகள் பூங்காவை மாதிரியாகக் கொண்டு  இந்த சர்வதேச பறவைகள்  பூங்காவை உருவாக்கியதாக அவர் கூறினார். இதன் மூலம் கண்டி நகரின் சுற்றுலா மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ஜூரோன் நகரம் முதலீட்டு வலயமாகத்தான் முன்னேற்றப்பட்டது. புதிய பொருளாதாரப் பயணத்துடன் இலங்கை முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்ததன் பின்னர், அவர்களது வர்த்தகங்களுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு 10 வருடங்கள்  செல்கிறது. இந்தநிலையை மாற்ற வேண்டும்.

புதிய பொருளாதார திட்டத்தின் கீழ் உற்பத்தி, ஏற்றுமதி பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்  துறைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

ஒரு முதலீட்டாளர் இலங்கைக்கு வந்து முதலீடு செய்ய 10 வருடங்கள் எடுத்துக் கொண்டால் அதன் மூலம் பொருளாதாரத்திற்கு நன்மை கிடைக்காது.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மூன்று மாத குறுகிய காலப்பகுதியில் பெரிய கொழும்பு பொருளாதார திட்டத்தை நிறைவேற்றி  அதனை ஆரம்பித்து வைத்ததால், அதன் பொருளாதார நன்மை இலங்கைக்கு கிடைத்தது.

ஜனாதிபதி பிரேமதாசவின் 200 ஆடைக் கைத்தொழில் வேலைத்திட்டம் மூன்று வாரங்களில் அங்கீகரிக்கப்பட்டது. இவ்வாறு முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்காவிட்டால் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது.

முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை என்பவற்றுக்குப்  பதிலாக, பொருளாதார ஆணைக்குழுவை  நியமித்து, ஒரே  நிறுவனத்தால் முதலீடுகளுக்கு  அனுமதி  அளிக்கும் முறையை கொண்டு வர வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பு அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும். அதன்படி, எதிர்காலத்தில் அதை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

மேலும், நமது நாட்டின் சுற்றுலாத் துறைக்கு மதிப்பை வழங்கி, இந்த பறவைகள்  பூங்காவை நாட்டிற்கு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜப்பான் அவதானம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர்.

ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் சடோஷி புஜிமரு உள்ளிட்ட ஜப்பானிய வர்த்தகர்கள் குழு நேற்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா, சுரங்கக் கைத்தொழில், தொழிலாளர் பயிற்சி உட்பட இலங்கையிலுள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்களின் கீழ், புதிய மற்றும் வளர்ந்து வரும் கைத்தொழில்களுக்கு ஏற்றவாறு நாட்டை மாற்றியமைக்கும் வகையில் இலங்கையின் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் சர்வதேச அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.