மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று பிற்பகல் நல்லூர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைந்த கட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், சைவ மகா சபையினர், மதத்தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய இளவரசி யாழ். நூலகத்திற்கு விஜயம்

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜ்ஜிய உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய ரோயல் இளவரசி மற்றும் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (11) மதியம் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கண்ட அதிதிகள் யாழ்ப்பாண நூலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.

மலையக தியாகிகளின் நினைவுதினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு

மலையக தியாகிகளின் நினைவுதினம் புதன்கிழமை (10) யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் நடைபெற்றது.

மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவைகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த உறவைகளையும் நினைவுகூர்ந்து இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உரைகள் ஆற்றப்பட்டன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

3400 ஆண்டு பழமையான நாக மனித எச்சங்கள் யாழ். வேலணையில் கண்டுபிடிப்பு

யாழ். குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது. இத் தரவுகளைக் கொண்ட தொல்லியல் மையம் வேலணை தீவின் சுற்றுலாத் தலமான கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ் ஆய்வுத் தொடர்ச்சி 2009 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் கரையோர வளங்களின் வரலாற்றுப் பயன்பாடு மற்றும் குறிப்பாக கடல் ஓடுகள் தொடர்பான பயன்பாட்டுப் போக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ் அகழ்வாய்வில் வேட்டையாடி உணவாக உட்கொள்ளப்பட்ட விலங்குகளின் எச்சங்கள், கருவிகள் மற்றும் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டதற்கான சான்றுகள் மற்றும் ஏராளமான தொல்பொருட்கள் காணப்படுகின்றன. இத்தகைய எச்சங்கள் இலங்கையில் தெற்கு கடற்கரையிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய மிக அண்மித்த சான்று மாந்தையில் கி.மு.1600க்கு முற்பட்டவை கிடைக்கப்பெற்றிருந்தது. தற்போது நடைபெற்று முடிந்த இவ் அகழ்வாராய்ச்சியில் இருந்து கிடைத்த தொல்பொருள் சான்றுகளின் காலப் பகுப்பாய்வினை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தை இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்நோக்கி நகர்த்தியுள்ளது.

இவ்வகழ்வாய்வினை இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் மற்றும் பாரம்பரிய முகாமைத்துவத் துறையின் மூத்த விரிவுரையாளர் திலங்க சிறிவர்தன அவர்களுடன் இணைந்து Groningen Institute of Archaeology of the University of Groningen in the Netherlands நிறுவனத்துடன் இணைந்து இந்திகா ஜெயசேகர, ஜனினா நோனிஸ் அத்துடன் தொல்லியல் மற்றும் பாரம்பரிய கற்கைகள் நிறுவகத்தின் நதீரா திஸாநாயக்க மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொல்லியல் துறை மாணவர்களான டக்சினி, கனுஸ்டன், சுசாந்தி ஆகியோர் இவ் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

ஜனாதிபதி பூநகரி பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயம்

வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (05) பிற்பகல் பூநகரி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட பூநகரி நகர அபிவிருத்தித் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பூநகரி நகர அபிவிருத்திக்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, உரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தித் திட்டங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூநகரி கோட்டையை பார்வையிட்டார்.

மேலும், பூநகரி பிரதேசத்தில் இயங்கிவரும் உயர்தர முந்திரி உற்பத்தி நிறுவனமான “வன்னி கெசு” முந்திரி உற்பத்தி நிறுவனத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்து அதன் செயற்பாடுகளையும் அவதானித்தார்.

இயந்திரவியல் பொறியாளரான யுவதி ஒருவரால் நடத்தப்படும் இந்த கைத்தொழில் நிறுவனம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் இங்கு அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுவதோடு, கஜு சுத்தப்படுத்தலில் இருந்து அதன் இறுதி செயற்பாடு வரையில் பயன்படுத்தப்படும் அனைத்து இயந்திரங்களும் குறித்த யுவதியால் தயாரிக்கப்பட்டிருக்கின்றமை சிறப்பம்சமாகும்.

இந்த தொழில் நிறுவனமானது தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி, இது நாட்டின் ஏனைய இளைஞர் யுவதிகளுக்கும் முன்னுதாரணமாகும் என்றும் குறிப்பிட்டார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இக்கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டனர்.

பொன்னாவெளி சுண்ணக்கல் விவகாரத்தில் புவியியல் போராசிரியர்கள் மௌனம் காக்கக் கூடாது – சபா.குகதாஸ் கோரிக்கை.

பொன்னாவெளி சுண்ணக்கல் விவகாரத்தில் புவியியல் போராசிரியர்கள் மௌனம் காக்கக் கூடாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச பொன்னாவெளி பகுதியை மையமாக கொண்டு சுண்ணாம்புக்கல் அகழ்வதற்கும் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அகழ்வுப் பணி நடைபெற்றது. பின்னர் வனவளத் திணைக்களம் தலையிட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் மக்கள் ஐந்து மாதங்களை கடந்து போராடுகின்றனர்.

சுண்ணக்கல் அகழ்வு தொடர்பாக தடுப்பதற்கு அரசியல்வாதிகள் மக்களுடன் நின்று ஊடகங்களுக்கு அறிக்கை விடுவது மட்டும் தான் நடைபெறுகிறது.

ஆனால் இதனை தடுப்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் மற்றும் புவியியல் சார்பான விளக்கங்கள் உரிய நிபுணர்கள் அல்லது விரிவுரையாளர்கள் போன்ற தரப்பால் இதுவரை அரசாங்கத்தை நோக்கியோ அல்லது பொதுவாகவோ முன் வைக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட புவியியல் சார்பு கல்விமான்கள் மௌனம் காப்பது நல்லதல்ல. புவியியல் ரீதியாக யாழ்ப்பாண பாறை அமைப்பு மயோசின் கால சுண்ணக்கல் வகைக்குரியதாகும்.

அத்துடன் இளமடிப்பு பாறை வகைக்கு உரியதாகவும் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் பாரிய அகழ்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டால் மிகப் பெரிய பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

இதனை மையமாக கொண்டு புவியியல் பேராசிரியர்கள் இவை தொடர்பான கருத்துக்களை வெளியிட வேண்டும் காப்பிரேட் கம்பனிகளினால் உலகில் பல இடங்கள் பாலை வனங்களாகவும் மக்கள் வாழ முடியாத பிரதேசங்களாகவும் மாறி வருவதை போன்று எதிர் காலத்திலும் பொன்னாவெளி பிரதேசம் மாறிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண மட்டத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 13வது திருத்தத்தின் அதிகாரங்கள் போதுமானவை – ஜனாதிபதி

அதிகாரப் பகிர்வு பற்றி கதைப்பதுபோன்று, அந்த அதிகாரங்களை தமது மாகாணங்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். நாம் அரசியல் ரீதியாக அதிகாரப்பகிர்வு பற்றி பேசுகிறோம். சட்டத்தால் இந்த அதிகாரங்கள் அனைத்தையும் வழங்கலாம். ஆனால் உங்களின் மாகாணத்தை அபிவிருத்தி செய்ய போதிய பணம் இல்லை என்றால் அதன் பெறுமதி என்ன என்று நாம் கண்டறிய வேண்டும்.

அதிகாரப் பகிர்வு குறித்து நாம் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் இன்றைய நிலவரப்படி மேல் மாகாணத்தால் மாத்திரமே தனது சொந்த செலவை செய்ய முடிகிறது. அதன்படி, எனைய அனைத்து மாகாணங்களும் மேல் மாகாணத்துடன் இணைகின்றன. எனவே, தமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய, தங்கள் சொந்த மாகாணங்களுக்குள் வலுவாக இருக்க வேண்டும்.

உங்கள் மாகாணத்தில் ஒரு வெளிநாட்டு மொழிப் பாடசாலையை நிறுவ விரும்பினால், அதற்கு அரசாங்கம் ஏன் பணம் வழங்க வேண்டும்? அதற்கான கேள்வி மற்றும் தேவை இருந்தால், நீங்கள் அதை எளிதாக ஆரம்பிக்க முடியும். மாணவர்கள் கல்வியைத் தொடர தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்குகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் கல்வி இப்படித்தான் செயல்படுகிறது. இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீர் செய்யத்தான் என்னால் முடியும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற “Zee Tamil” சரி கம ப “little champs 2023” போட்டியில் மகுடம் சூடிய கில்மிஷா உதயசீலன் சிறுமி தனது குடும்பத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

14 வயதான கில்மிஷா உதயசீலன் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் என்பதோடு, இலங்கை சிறுமியொருவர் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றி வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கில்மிஷா உதயசீலன் சிறுமி நாட்டுக்கு தேடித்தந்த புகழுக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, அவரது கல்வி செயற்பாடுகள் மற்றும் இசை வாழ்விலும் வெற்றிபெற ஆசிகளை தெரிவித்தார்.

இதன்போது கில்மிஷா ஜனாதிபதி முன்னிலையில் பாடல் ஒன்றையும் பாடினார்.

கில்மிஷாவை நேரில் சந்தித்து வாழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் பாடகி உதயசீலன் கில்மிஷாவையும் அவர்களது உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதில் அமைச்சர்களான கடற்றொழில் அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஊடகத்துறை அமைச்சர் பந்துலகுணவர்த்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

மீள்குடியேற்றும் பணிகள் அடுத்த வருடத்தினுள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் – ஜனாதிபதி ரணில்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

அதன்படி இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள பிரச்சினை தொடர முடியாது எனவும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வட மாகாணத்திற்கு 4 நாட்கள் விஜயமாக சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் பொருளாதார வளர்ச்சிக்கான மூலோபாயம் இறந்த உடலுக்கு ஓட்சிசன் கொடுப்பது போன்றது – சபா.குகதாஸ்

ஜனாதிபதியின் பொருளாதார வளர்ச்சிக்கான மூலோபாயம் இலங்கையை பொறுத்தவரை இறந்த உடலுக்கு ஓட்சிசன் கொடுப்பதாகவே அமையும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீழ்ந்து போன இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அடிப்படை மூலோபாய விடையங்கள் சிலவற்றை கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடந்த உள்நாட்டு இறைவரி தொடர்பான கலந்துரையாடலில் முன்வைத்து உரையாற்றினார்.

ஜனாதிபதி கூறிய மூலோபாயம் ஒன்று வெளிநாடுகளுடன் வர்த்தக உடனபடிக்கைகளை மேற் கொள்ளுதல் குறிப்பாக இந்தியா, சீனா, தாய்வான் , ஜப்பான் போன்ற நாடுகளிடம் எதிர்காலத்தில் உடன்படிக்கைகளை கைச்சாத்திடுதல் இரண்டாவது ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக உறவை விரிவுபடுத்தல் மூன்றாவது நாட்டின் அனைத்து துறைகளையும் டிஐிற்றல் மயப்படுத்தல் அதற்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை விரிவாக்கம் செய்தல் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் ஜனாதிபதி கூறிய மூலோபாயம் இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்பதற்கானது அல்ல இவை அரசியல் அமைதி உடைய , ஊழல் அற்ற ஆட்சியாளர்களை கொண்ட நாடுகளுக்கோ பொருத்தமான மூலோபாயங்கள் மாறாக இலங்கையை பொறுத்தவரை இறந்த உடலுக்கு ஓட்சிசன் கொடுப்பதாகவே அமையும்.

இலங்கையின் பொருளாதாரம் தற்போது தலைகீழாக கிடக்கின்றது அதனை நிமிர்த்தி இருத்த முதல் கட்டம் ரணில் விக்கிரமசிங்க செய்ய வேண்டிய அடிப்படை மூலோபாயம் முதலாவது இனப்பிர்ச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு இரண்டாவது ஊழல் வாதிகளின் ஊழல் பணங்களை நாட்டின் திறைசேரிக்கு கொண்டு வருதல் மூன்றாவது ஊழல்வாதிகளை தண்டித்தல் தடுப்பதற்கான சட்டங்களை சட்ட ஓட்டை இன்றி நடைமுறைப்படுத்தல் எனவே இவ்வாறான மூலோபாயங்களே வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்தக் கூடிய அடிப்படைகள்.

மேலும் வரிகளை அதிகரித்து சொந்த மக்களை கருவறுத்து உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்காது தொடர்ச்சியான கடன்களை பெற்றுக் கொண்டு சந்தர்ப்பவாத கால எல்லைகளை கூறி அந்நியச் செலாவணி வருமானத்தை பெற்றுக் கொள்ளாமல் பொருளாதாரம் பற்றி கதைப்பது தேர்தல் இலக்குகள் மட்டுமே இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.